2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சிரிய அரசாங்கத்தை நாடுகின்றனர் குர்திஷ்கள்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடக்குப் பகுதியில் காணப்படும் தமது சுயாட்சிப் பிரதேசம் தொடர்பாக, சிரிய அரசாங்கத்துக்கும் தமக்குமிடையிலான ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்படுவது, தவிர்க்கப்பட முடியாத ஒன்று என, குர்திஷ் போராளிகள் தெரிவித்துள்ளனர். தங்களது சுயாட்சிப் பகுதியில், தமது படைகள் தொடர்ந்து காணப்பட வேண்டுமென, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிரியாவில், தொடர்ச்சியாக ஓரங்கப்பட்ட குர்திஷ்கள், 2011ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பித்த பின்னர், நாட்டின் சுமார் 30 சதவீதமான பகுதியைக் கைப்பற்றி, சுயாட்சிப் பிரதேசமாகப் பிரகடனம் செய்துள்ளனர்.

சிரியாவின் உள்நாட்டுப் போரில், சிரிய அரசாங்கத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கும் எதிராக, ஐக்கிய அமெரிக்க இராணுவக் கூட்டணியுடன் போரிட்ட அக்குழு, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

எனினும், சிரியாவிலிருந்து விலகுவதாக ஐ.அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அக்குழுவின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக, குர்திஷ்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் துருக்கி, இக்குழுவை அழித்துவிடுமென அஞ்சப்படுகிறது.

இந்நிலையிலேயே, சிரிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவ்வாயுதக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர், ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள், சிறந்த முறையில் அமைந்தன எனக் குறிப்பிட்டார்.

அதேபோல், இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சிரிய - துருக்கி எல்லையில், சிரிய அரசாங்கப் படைகள் நிறுத்தப்படும் சாத்தியக்கூறுகளையும் மறுக்க முடியாது என, அவர் குறிப்பிட்டார்.

“மத்திய அரசாங்கத்துடன், எமக்கு இன்னமும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதற்கு எமக்கு, சர்வதேச ஆதரவுடனான பேரம்பேசல்கள் தேவைப்படுகின்றன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X