2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீனர்களின் சட்டவிரோத நடவடிக்கை: நேபாளம் கவலை

Freelancer   / 2022 மே 17 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன குற்றவாளிகளின் நுழைவாயிலாக நேபாளம் மாறி வருவதாகவும் சீன நாட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் நேபாளம் கவலையடைந்துள்ளது என்றும் அன்னபூர்ணா எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

குடிவரவுத் திணைக்களம் மற்றும் நேபாள பொலிஸாரை உள்ளடக்கிய கூட்டுக் குழு, காத்மண்டுவின் மஹராஜ்கஞ்சில் உள்ள ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது,  22 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த செய்தி நேபாளத்தின் முக்கிய செய்தி நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் பற்றிய விவரங்கள் இன்றுவரை தெளிவற்றதாகவே உள்ளன.

வீட்டில் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாகவும், 35 மடிக்கணினிகள், 675 அலைபேசிகள் மற்றும் நேபாள டெலிகொம் மற்றும் என்செல் நிறுவனங்களின் 760 சிம்களுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எல்லை தாண்டிய ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக அவர்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு உறுதியான ஆதாரம் இல்லாததால், விசாரணையில் அதிகாரிகளுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 22 பேரும் அடுத்தநாளே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க குடிவரவு திணைக்களம் அவர்களது கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. 

பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாராயண் பிரசாத் பட்டராய் தெரிவித்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் சீன நாட்டவர்கள் அதிகரித்து வருவது நேபாள அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2019 டிசெம்பரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும்122 சீனப் பிரஜைகளை கைதுசெய்து, இதே போன்ற உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .