2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சூடானில் ஊடகவியலாளர்கள் வேலைநிறுத்தம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில், பாணின் விலை அதிகரிப்பால் வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரணிக் குழுக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சூடானிய ஊடகவியலாளர்கள் வலையமைப்பொன்று இன்று முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளது.

இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து, தலைநகர் கார்டூமிலும் வேறு சில நகரங்களிலும் கோபமடைந்த மக்கள் வீதிக்கு வந்த நிலையில், அதை அடக்க முற்பட்டபோது குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கெதிராக நேற்று முதல் மூன்று நாள் பணிப்பகிஷ்பரிப்பை பிரகடனப்படுத்துவதாக பேச்சுச் சுதந்திரத்தை வலியுறுத்தும் குறித்த சூடானிய ஊடகவியலாளர்கள் வலையமைப்புத் தெரிவித்துள்ளது.

மோதல்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்மர் கொல்லப்பட்டதாக சூடனிய அதிகாரிகள் தெரிவிக்கின்ற நிலையில், 37 பேர் இறந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகின்றது.

இந்நிலையில், மோதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் 88 பேர் காயமடைந்துள்ளதாகவும் சூடானிய ஜனாதிபதி ஓமர் அல்-பஷிரின் அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள பிரபலமான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கார்டூமின் சில பகுதிகளில் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ந்தும் நேற்று  தரையிறக்கப்பட்டுள்ளபோதும் இவ்வாரத்தின் முதலாவது நாளாக புதிதாக ஆர்ப்பாட்டங்களெதுவும் இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும், அடுத்த சில நாட்களுக்கு வீதிகளுக்கு வருமாறு செயற்பாட்டாளர்களும் எதிரணிக் குழுக்களும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அரசாங்கத்தை அகற்றுவதன் மூலம் வெற்றி அடையப்படும் வரை ஆர்ப்பாட்டங்களை தொடருமாறு சூடானிய மக்களுக்கு வலியுறுத்துவதாக சூடானிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து, குறித்த கட்சியின் சில அங்கத்தவர்கள் பாதுகாப்பு முகவர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X