2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுகள் தொடர்பில் கேள்விகள்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டமை தொடர்பான கட்டணப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் ஆராய்ந்துவரும் ஆறுமுகசாமி ஆணைக்குழுவின் முன்னால், அவரது மருத்துவச் செலவுகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, தனியார் வைத்தியசாலையொன்றில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றமைக்காக, மிகுதியாக 44.56 இலட்சம் இந்திய ரூபாய், அவ்வைத்தியசாலைக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

குறித்த கட்டணப் பட்டியலை, நவம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில், குறித்த வைத்தியசாலை சமர்ப்பித்தது எனத் தெரிகிறது.

இதன்படி, 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் டிசெம்பர் 5ஆம் திகதி வரையிலான வைத்தியசாலைச் செலவு, 68.5 மில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமாகும். இதற்கான பணம், இரண்டு தடவைகளில் வழங்கப்பட்டுள்ளது. முதற்தடவை 41.13 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், அடுத்ததாக 60 மில்லியன் இந்திய ரூபாய்க்கும், காசாலைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவது தொகையை யார் வழங்கினர் என்பது வெளிப்படுத்தப்படாத போதிலும், இரண்டாவது தொகையை, ஜெயலலிதாவின் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செலுத்தியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க செலவாக, உணவு, குடிபானங்களை வழங்கியமைக்காக, 11.7 மில்லியன் இந்திய ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் ஜெயலலிதா இருந்தபோது, இட்லி உண்டார் என்றே செய்திகள் வெளியான நிலையில், இட்லிக்காக அவ்வளவு செலவா என, சமூக ஊடக வலையமைப்புகளில் கேலிகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இவ்வாறு செலவளிக்கப்பட்ட பணத்தில், சுமார் 5 மில்லியன் ரூபாய், வைத்தியசாலைக்கு வெளியே முகாமிட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காகச் செலவளிக்கப்பட்டது எனவும், 2.5 மில்லியன் இந்திய ரூபாய், பொலிஸாருக்கு உணவு வழங்குவதற்காகவும், 2 மில்லியன் இந்திய ரூபாய், முக்கியமான விருந்தினர்களுக்கான உணவுக்காகவும், மேலும் 2 மில்லியன் இந்திய ரூபாய், அரச அதிகாரிகளுக்கு உணவு வழங்குவதற்காகவும் செலவளிக்கப்பட்டது என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X