2025 மே 16, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப் கைதாகி 57 நிமிடத்தில் விடுதலை

Editorial   / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் (Stormy Daniels)க்கு பெருந்தொகையில் பணம் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைதாகி விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் (Stormy Daniels) பரபரப்பு தகவல் ஒன்றை வௌியிட்டார்.  

தனக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான இரகசிய உறவு தொடர்பில் ஸ்டார்மி டேனியல்ஸ் வௌிப்படுத்தினார். எனினும், அதை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். 

எவ்வாறாயினும், இந்த வௌிப்படுத்தல் காரணமாக ஜனாதிபதித்  தேர்தலில் ட்ரம்ப்க்கு பின்னடைவு ஏற்பட்டது. 

இதையடுத்து, இவ்விவகாரத்தைப் பற்றி ஸ்டார்மி வாய்த்திறக்காமல் இருப்பதற்காக,   , ட்ரம்ப்  தனது சட்டத்தரணி மைக்கேல் கோஹன் (Michael D Cohen) மூலம்   பணம் கொடுத்துள்ளார்.  அந்த பெருந்தொகை பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

எனினும், அந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு- செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. 

அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவைக் காட்டுவது சட்ட விரோதம் என்பதால், ட்ரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, நியூயோர்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) வழக்கு விசாரணை ஆரம்பமானது.  

நீதிமன்றத்தில் ஆஜராக, புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் ட்ரம்ப் நீயூயோர்க்குக்கு சென்றிருந்தார். 

நீதிமன்றில் சரணடைந்த ட்ரம்ப், அமெரிக்க சட்ட விதிகளின் படி முதலில் கைது செய்யப்பட்டார். அவர் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு, கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் விசாரணை ஆரம்பமானது.  நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே ட்ரம்ப் பதில் அளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது, அதை திட்டவட்டமாக மறுத்தார். தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார்.  சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றில் இருந்த ட்ரம்ப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

நீதிமன்றத்தில் இருந்து வௌியேறிய அவர், தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,

'இந்த வழக்கு நாட்டிற்கு பெரும் அவமானம். அமெரிக்காவில் இதுபோன்று நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.  நான் நிரபராதி. நம் நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம் நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான். அமெரிக்க நீதி அமைப்பு தற்போது சட்டமற்றதாக இருக்கிறது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கவே இந்த போலி வழக்கு போடப்பட்டது,' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .