2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

திருமண நிகழ்ச்சியில் ‘ட்ரோன்’ தாக்குதல்: குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

Editorial   / 2026 ஏப்ரல் 10 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


 திருமண நிகழ்ச்சி ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்,    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் இடம்பெற்றுள்ளது.

சூடானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் பட்டாஹ் அல்-புர்ஹான் (Abdel Fattah al-Burhan) செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில், ஆட்சியின் துணைத் தலைவராகத் துணை ராணுவப்படையின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகாலோ (Mohamed Hamdan Dagalo) பதவி வகிக்கிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் ஒரு பிரிவான ‘அதிவிரைவு ஆதரவுப் படையினரை’ (RSF), ராணுவத்துடன் இணைக்க ஜெனரல் அல்-புர்ஹான் முயற்சி மேற்கொண்டார். இதற்குத் துணை ராணுவப் படையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் விளைவாக, ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் உள்நாட்டுப் போர் வெடித்தது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதலில், இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. தலைநகர் கார்டூமை (Khartoum) கடந்த மார்ச் மாதம் ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மோதல்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், சூடானின் டார்பர் (Darfur) மாகாணம், குடும் (Kutum) நகரில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் குறிவைத்துத் திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கொடூரமான ட்ரோன் தாக்குதலை ராணுவமே நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .