2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தலைமுடி வெட்ட தடைபோட்ட தலிபான்கள்

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கத்தேய நாடுகளின் செல்வாக்கைத் தவிர்ப்பதற்காக, ஆண்களின் தலைமுடியை வெட்ட வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன்களை  தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பறையில் மாணவிகள் பர்தா அணிய வேண்டும் என்று அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை தலிபான்கள் எச்சரித்தமையையும் உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

ஆண் அரச ஊழியர்கள் முழு தாடியுடன் வேலை செய்ய வேண்டும் அல்லது வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று தலிபான்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சு ஏற்கெனவே கோரியிருந்தது.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ், தலிபான்களின் கோரிக்கைக்கு இணங்காது, தாடியை கத்தரித்து அல்லது பொருத்தமான ஆடைகளை அணியாதமையால் பல்வேறு அரசாங்க அமைச்சுக்களின் ஊழியர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால், அவர்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பெண்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி திருமணங்களில் நேரடி இசை நிகழ்ச்சிகளைத் தடைசெய்த தலிபான்கள், ஆண்களும் பெண்களும் வெவ்வேறு மண்டபங்களில் திருமண நிகழ்வுகளைக் கொண்டாட வேண்டும் என்று ஆப்கானில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளருக்கு ஒக்டோபரில் உத்தரவிட்டதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஆடையகங்களில் காட்சிப் பொம்மைகளின் தலைகளைத் துண்டிக்குமாறு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் ஊடகங்களை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

ஷரியா சட்டத்தை மீறிய செயல் என்று கூறி, ஆடையகங்களில்  பயன்படுத்தப்படும் காட்சிப் பொம்மைகளை தலிபான்கள் ஒடுக்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களின் அறிகுறிகள் காபூல் தெருக்களில் மீண்டும் தோன்றத் தொடங்கியுள்ளன. 

ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி அலைவரிசை நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்களைக் காட்டுவதை நிறுத்துமாறு கோரி, தலிபான்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சு "மத வழிகாட்டுதல்களை" வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .