2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

துருக்கியில் 100 படையினருக்குத் தடுப்பு

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மதகுருவான ஃபெதுல்லா குலெனின் வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணினர் என்ற குற்றச்சாட்டில், துருக்கியின் வழக்குத் தொடுநர்கள், 100 படையினரைத் தடுத்துவைக்க உத்தரவிட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முயற்சியோடு இது தொடர்புபட்டது என, துருக்கி அரச ஊடகம், நேற்று (07) அறிக்கையிட்டது.

மதபோதகர் குலெனின் வலையமைப்புடன் தொலைபேசி மூலமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் ஓர் அங்கமாகவே, இவர்களின் தடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களைத் தடுத்துவைக்கும் பணிகள், தொடர்ந்து வருகின்றன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016ஆம் ஆண்டு ஜூலை மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி மூலமான ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டோர் எனச் சந்தேகிக்கப்படுவோர் மீது, ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தச் சதியின் பின்னால், மதபோதகர் குலெனின் வலையமைப்புக் காணப்படுகிறது என, துருக்கி குற்றஞ்சாட்டுகிறது.

இந்நிலையில், இது தொடர்பில் 77,000 பேர், வழக்கு விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும் வரையில் சிறைகளில் வாடுகின்றனர். மேலதிகமாக, சிவில் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஏனையோர் என 150,000 பேர், அவர்களது பணியிலிருந்து நீக்கப்பட்டோ அல்லது இடைவிலக்கப்பட்டோ காணப்படுகின்றனர். இந்நடவடிக்கைகள், இன்னமும் தொடர்கின்றன.

இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, துருக்கியில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை, மனித உரிமை அமைப்புகள் பலமாகக் கண்டித்தாலும், துருக்கி, தனது நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X