2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரதமர் மே-க்கு மீண்டும் தோல்வி

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, தனது நாட்டு நாடாளுமன்றத்தில், மீண்டுமொரு தோல்வியைச் சந்தித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான அவரது திட்டம், எந்தளவுக்கு வெற்றிபெறுமென்ற கேள்வி, மீண்டும் பலமாக எழுப்பப்பட்டுள்ளது.

பிரெக்சிற் நடைமுறைக்கு வருவதற்கு இன்னமும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில், பிரதமரின் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம், நேற்று முன்தினம் (09) ஆரம்பமாகியிருந்தது. இது தொடர்பாக வாக்கெடுப்பு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பொன்றில், பிரதமருக்குத் தோல்வி கிடைத்து, பிரதமரின் பிரெக்சிற் திட்டம் தோல்வியடைந்தால், ஒப்பந்தமேதுமின்றி விலகுவதற்கு, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தை அவர் பெற வேண்டுமென்பது உருவாக்கப்பட்டது.

அவ்வாக்கெடுப்பு நடைபெற்ற 24 மணிநேரங்களுக்குள், மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, பிரதமரின் பிரெக்சிற் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், 3 நாள்களுக்குள் மாற்றுத் திட்டமொன்றைப் பிரதமர் சமர்ப்பிக்க வேண்டுமென, அதில் கோரப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பில், 308 வாக்குகள் ஆதரவாகவும், 297 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

பிரதமர் மே-இன் திட்டத்துக்குப் பரவலான எதிர்ப்புகள் காணப்படும் நிலையில், அவரது திட்டம் தோற்கடிக்கப்பட்டால், எந்தவித ஒப்பந்தங்களுமின்றி பிரெக்சிற்றை நடைமுறைப்படுத்துவது என்ற நோக்கம் தான், அரசாங்கத்திடம் காணப்பட்டது. ஆனால், இரண்டு நாள்களாக இடம்பெற்ற வாக்கெடுப்புகள், அரசாங்கத்தின் நோக்கத்துக்கு முட்டுக்கல்லைப் போட்டுள்ளன எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X