2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரெக்சிற்றைக் கட்டுப்படுத்த வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்கூடிய, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) நெருக்கடிக்கு வழியொன்றைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, பிரெக்சிற்றின் கட்டுப்பாட்டை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயிடமிருந்து நாளொன்றுக்கு எடுப்பதற்கு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வாக்களித்துள்ளனர்.

பிரதமர் தெரேசா மேயின் கன்சவேர்ட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஒலிவர் லெட்வினாலேயே குறித்த வாக்கெடுப்பு முன்மொழியப்பட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தான் இணங்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான போதுமானளவு ஆதரவை தான் கொண்டிருக்கவில்லை என பிரதமர் தெரேசா மே ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்தே குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக 329 வாக்குகள் கிடைத்திருந்ததுடன், எதிராக 302 வாக்குகள் கிடைத்திருந்தன.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் பிரெக்சிற் ஒப்பந்தமொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்க முடியுமோ என பல்வேறு பிரெக்சிற் தெரிவுகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்து இனங்காட்ட முடியும் என்பதுடன், அவ்வழியில் அரசாங்கத்தை செல்லுமாறு அழுத்தத்தை வழங்க முயலலாம்.

குறித்த நிலையானது, எந்தளவுக்கு தனது அதிகாரத்தை பிரதமர் தெரேசா மே இழந்திருக்கின்றார் என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளபோதும், இன்று இடம்பெறவுள்ள குறித்த இனம்காட்டும் வாக்கெடுப்புகளுக்கு அரசாங்கம் பணியாது என பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

இவ்வாறான நெருக்கடி நிலை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டிய நாளாக இருக்கின்ற எதிர்வரும் வெள்ளிக்கிழமையை தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X