Freelancer / 2026 மார்ச் 03 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக் கிழமை வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட உயர்மட்டத் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் மட்டுமல்லாது அமெரிக்க இராணுவ தளங்கள் அமைந்துள்ள கட்டார் மற்றும் பஹ்ரைன் தலைநகரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதை அமெரிக்க வான் தடுப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கி அழித்து வருகின்றன. இதனால், டுபாய், டோஹா, அபுதாபி மற்றும் மனாமா உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றன. ஈரானின் தாக்குதல் நேற்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலம் பகுதிகளில் பல ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஈராக்கில், எர்பில் விமான நிலையத்துக்கு அருகே 2 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்ததாக ஏ.எப்.பி புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. பஹ்ரைனின் மனாமாவில் உள்ள விமான நிலையத்தில் ட்ரோன்கள் தாக்கியதில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன. தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரியாத்தில் உள்ள இந்த அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. (a)

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago