2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முத்தமிழ் விழா

A.P.Mathan   / 2013 ஜூலை 07 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனடாவிலிருந்து மூர்த்தி செல்லத்துரை
 
கனடாவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் நகரான ரொறண்டோ மாநகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FETNA) 26ஆவது ஆண்டு விழா, முத்தமிழ் விழாவாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுவரை முத்தினங்கள் நடைபெற்றன. 
 
ஆண்டு தோறும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் மாநாடு இம்முறை கனடாவில் இயங்கி வரும் தமிழர் நல அமைப்பான கனடா தமிழர் பேரவையின் வேண்டுகோளினால் முதன் முதலாக அமெரிக்காவுக்கு வெளியே ரொறண்டோ மாநகரில் 'சொணி' மண்டபத்திலும் 'நொவெட்டல்' ஹொட்டலிலும் நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து வந்த தமிழர்களும், கனடா வாழ் தமிழர்களும் பெருமளவில் கலந்து விழாவினை சிறப்பித்தனர். இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடகர் மனோ, நடிகை 'கலைவாணி' ஓவியா, விஜய் டி.வி. புகழ் ரொபோ சங்கர் உட்பட மற்றும் பல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர். தமிழ் கலை, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் விழாவாக இவ்விழா நடைபெற்றது. 
 
வருடா வருடம் விழாவில் தமிழுக்குத் தொண்டு செய்த ஒரு பெரியாரைக் கௌரவிப்பது வழக்கம். அதற்கேற்ப சர்வதேச ரீதியில் தமிழுக்குத் தொண்டாற்றிய அமரர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டினை முன்னிட்டு இவ்விழாவில் அவருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. அவரது சேவைகளைப் பற்றி அவரது மருமகனாகிய ராஜன் பிலிப் உரையாற்றினார்.
 
தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தன் இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இவ்விழாவினை ஒட்டி அவர் அனுப்பி வைத்த ஒளிப்பதிவின் மூலமான செய்தி திரையில் காண்பிக்கப்பட்டது. “இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இவ்விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக மனம் வருந்துவதோடு மாநாடு சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 
 
கூட்டணி எம்.பி. ஸ்ரீதரன் வருகை தந்து மாநாட்டில் உரையாற்றினார். 'ஈழத்தில் தமிழர்களின் நலன் கருதி 1987ஆம் ஆண்டு இந்திய அரசினால் முன்வைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்த சட்டத்தை தமக்குச் சாதகமாக மாற்றி அமைக்க ஸ்ரீலங்கா அரசு முயற்சித்து வருகின்றது. மாகாண சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாதோர் போட்டியிட முன்வரும்போது அதற்கு மாற்று வழியாக நாமும் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தோற்றுப்போன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாம் அதிலிருந்து வெற்றி பெற வேண்டும். வடக்கும் கிழக்கும் ஒன்றிணைக்கப்பட்டு நம்மை நாமே ஆளும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்களின் குரல் அடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இங்கு கனடாவில் வாழும் மூன்று லட்சம் பேரில் முன்னூறு பிரிவிருந்தாலும் யாவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். நீங்கள் ஒற்றுமையை இழந்துவிட்டால் நாம் எல்லாவற்றையுமே இழந்து விடுவோம்' என அவர் வலியுறுத்திப் பேசினார்.
 
கனடாவின் முதலாவது தமிழ் எம்.பி.யான ராதிகா உரையாற்றியபோது, “எமது உடன் பிறப்புக்களான ஈழத் தமிழ் மக்களின் நலனுக்காக நாமும் குரல் எழுப்பி வருகின்றோம். அதன் காரணமாகவே கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர், ஸ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் பொதுநல அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒரே முகமாகக் குரல் எழுப்பி தமிழ் மக்களின் நலனுக்கான முக்கிய தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
 
ஒன்ராறியோ மாகாண என்.டி.பி. கட்சித் தலைவர் நீதன் சான் உரையாற்றியபோது, “நாம் பல்வேறு குழுக்களாகப் பிளவு பட்டிருப்பதாக பிறர் குறை கூறி வருகின்றனர். ஆனால் பல்வேறு அமைப்புகளும் தமிழினத்தின் நலனுக்காக தனித் தனியாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன” என சுட்டிக் காட்டினார். 
 
பிரித்தானியாவில் 2008ஆம் ஆண்டு டொறத்தியினால் தயாரிக்கப்பட்டு, கலம் மெக்கெயாரினால் இயக்கப் பட்ட 'No Fire Zone' என்ற குறும் படமும் திரையிடப்பட்டது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அண்மையில் காலமான திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் நடித்த திரைப்படத்தின் ஒரு பகுதியும் காண்பிக்கப்பட்டது. அதிலே ஒரு கட்டத்தில் 'எம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை உயிரைத் தவிர' என அவர் கூறிய கட்டம் அடங்கி இருந்தது.

 
கனடாவில் 'Eye catch MultiMedia' வைச் சேர்ந்த இளைஞரான விஷ்ணு முரளியினால் தயாரிக்கப்பட்டு சங்காய் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு தெரிவு செய்யப்பட்ட 12 திரைப்படங்களில் ஒன்றான 'A Gun and A Ring' என்ற திரைப்படம் சம்பந்தமான ஊடகவியலாளர் மாநாடும் இடம்பெற்றது. திரைக் கதையினை எழுதிய லெனின் சிவம், திரைப்படத் தயாரிப்பாளர் விஷ்ணு முரளி, தொழில்நுட்ப முகாமையாளர் ரமேஷ், தமிழ், ஆங்கில ஊடகப் பொறுப்பாளர்களான கோவிந் திரு, குமரன் நடேஷ், ஒளிப்பதிவாளர் சுரேஷ் றொபின், நடிகர் கோபி திரு, நடிகை திருமதி செல்வஜோதி ரவீந்திரன், கனடா திரைப்பட மேம்பாட்டு இயக்க உறுப்பினரும் பத்திரிகையாளருமான விஷ்ணுவின் தந்தை முகுந்த முரளி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 
 
தமிழ் மக்களின் அவலங்களை மையமாகக் கொண்டு வேறு எவரிடம் இருந்தும் நிதியுதவி பெறாமல் இருவார காலத்தினுள் தயாரிக்கப்பட்ட தமது திரைப்படம் சிகரத்தை தொட்டுள்ளமை மன நிறைவினையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப் படத்தை செப்டெம்பர் மாதம் ரொறண்டோவில் காண்பிக்க உள்ளோம். பார்வையாளர்கள் கொடுக்கும் ஆதரவிலேயே தொடர்ந்தும் தரமான திரைப்படங்களை தயாரிக்கும் நடவடிக்கை தங்கியுள்ளது. அதற்கு ஊடகவியலாளர்களான உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நாம் மற்றுமொரு திரைப்படத்தினையும் தயாரித்துள்ளோம். அதனை விரைவில் இந்தியாவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என தயாரிப்பாளர் விஷ்ணு முரளி கூறினார்.
 
'அக்கினி' இசைக் குழுவினரின் ஆதரவில் இந்தியக் கலைஞர்களின் பாடல்களும், கனேடிய இளம் கலைஞர்களின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .