2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதல்வர் ஜெயலலிதாவின் ஓராண்டு சாதனை; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு போதுமானதா?

A.P.Mathan   / 2012 மே 14 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனி பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 150 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. "நிதி நெருக்கடியில் தமிழகத்தை தி.மு.க. அரசு தத்தளிக்க வைத்து விட்டது" என்று குற்றம் சாட்டியது. அதை சீர்திருத்துகிறோம் என்று கூறி சில நிதிநிலை சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அரசு நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டால் காவல்துறையில் பெரும் மாற்றங்களை செய்து நிலஅபகரிப்பு புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தி.மு.க.வினரே அந்த புகார்களில் சிக்கினார்கள். இதன் மூலம் காவல்துறையில் இருப்போர் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கே செயல்படுவார்கள் என்று முதல்வர் திரும்பத் திரும்ப அறிக்கை விட்டார். "சட்டத்தின் ஆட்சி" என்பது இந்த முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் அ.தி.மு.க.வின் முழக்கமாகவே இருந்து வந்தது.

முதல் மூன்று மாதங்களில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டார்கள். ஒரே துறைக்கு மூன்று நான்கு பேர் மாறினார்கள். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைத் தடுக்கவே சசிகலா உள்ளிட்ட அவரது சொந்தங்களை வெளியே அனுப்பினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்பட்டது. இப்போது சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்து விட்டார். அவரது கணவர் எம்.நடராஜனும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார். அதேபோல் சசிகலாவின் உறவினர்களான திவாகரன், இராவணன் ஆகியோரும் ஜாமினில் வெளியே வந்து விட்டார்கள். அந்த வகையில் கடந்த ஒரு வருட கால ஆட்சியில் சசிகலாவின் உறவினர்களான இராவணன், திவாகரன், பன்னீர்செல்வம் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி) ஆகியோரின் நிர்வாக தலையீடுகளை தடுத்தது ஒரு முக்கிய சாதனை என்றே தலைமைச் செயலக அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். இப்போது முதல்வர் என்ற ஓர் அதிகார மையத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டிய சூழ்நிலை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி, அமைச்சர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுவும் கூட சட்டத்தின் ஆட்சியே நடக்கும் என்ற முழக்கத்தின் ஒரு பகுதியே!

ஐந்து அல்லது ஆறு முறை அமைச்சரவை மாற்றங்களை செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா தனக்கு என்று சரியான குழுவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அதிலும் கூட சில மாற்றங்கள் எந்த நேரமும் வரலாம், சில அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்று இப்போது பேசிக் கொண்டாலும், அமைச்சர்கள் தங்கள் துறையின் விடயங்கள் பற்றி அதிகாரிகளுடன் சுதந்திரமாக விவாதித்து முடிவு செய்யலாம் என்ற சுமூகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றால் போல் இரண்டு முறை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்வாக விடயங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சென்ற தி.மு.க. ஆட்சியில் முதல்வர் அலுவலகத்தில் இருந்த செயலாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் ஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட்டு பணி புரிந்தார்கள். ஓய்வுபெற்ற அதிகாரிகள் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாலும், அதை சிரமேற்கொண்டு எடுத்துச் செய்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதை போக்க, அ.தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் யாரையும் முதல்வர் தனது செயலாளர்களாக வைத்துக் கொள்ளவில்லை. இப்போதுதான் ஓய்வு பெற்ற வெங்கட்ராமன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஐந்து வருடம் ஒப்பந்த அடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் நியமித்திருக்கிறார். ஆனால் மற்ற அனைவரும் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே. ஆகவே நிர்வாக சீரமைப்பில் ஓய்வு பெற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அது இந்த ஒரு வருடத்தில் வித்தியாசமான சாதனை என்று சொல்லலாம்.

தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தும் முதல்வர் ஜெயலலிதா "விஷன்-2023" என்ற தொழிற்கொள்கையை அறிவித்துள்ளார். வெளிநாட்டு மூலதனம், உள்நாட்டு கட்டமைப்புகள் விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட அந்த தொழிற்கொள்கை அனைத்து தொழிலதிபர்களாலும் வெகுவாக பாராட்டப்படுகிறது. அ.தி.மு.க. அரசின் முதல் ஓராண்டில் உருவான முத்தான திட்டம் இது என்றே அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பேசுகிறார்கள். இதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் போலிஸி 2012, தமிழ்நாடு பையோடெக்னாலஜி போலிஸி 2012, தமிழ்நாடு ஏரோ ஸ்பேஸ் இன்டஸ்ட்ரியல் போலிஸி 2012, தமிழ்நாடு ஓட்டோமொபைல்ஸ் அன்ட் ஓட்டோ காம்பனென்ட்ஸ் இன்டஸ்ட்ரியல் போலிஸி 2012 மற்றும் தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு நில எடுப்பு போலிஸி 2012 ஆகிய ஐந்து முக்கிய கொள்கை முடிவுகளை விரைவில் அறிவிப்பதாக இந்த ஓராண்டு நிறைவில் சட்டமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு தொழிற்கொள்கைகளை அறிவிக்கும் முயற்சியில் அ.தி.மு.க. அரசு முதல் வருடத்தில் ஈடுபட்டிருக்கிறது சிறப்பானதொரு அம்சம். அதே நேரத்தில் இலவசத் திட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள், இன்னொரு புறம் ஏழை எளிய மக்களும் பயன் பெறும் வகையில் இலவசத் திட்டங்கள் என்று ஆட்சி சக்கரம் ஓராண்டைக் கடந்து நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஓராண்டு காலத்தில் இரண்டு இடைத் தேர்தல்கள் வந்து விட்டன. மூன்றாவதாக புதுக்கோட்டை இடைத் தேர்தலும் நடைபெறப் போகிறது. முன்பு நடைபெற்ற திருச்சி, மற்றும் சங்கரன்கோயில் இடைத் தேர்தல்களில் பெரிய அளவு தேர்தல் முறைகேடுகளுக்கு வித்திடாமல் அத்தொகுதிகளில் வெற்றி பெற அ.தி.மு.க. அரசு முயற்சி செய்திருக்கிறது என்பதை மறந்து விட முடியாது. தேர்தல் முறைகேடுகள் செய்யும் கட்சி என்று தி.மு.க. மீது குற்றம் சாட்டி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.விற்கு அந்த கட்டாயம் இருந்தது புரிந்து கொள்ளக்கூடியதே. அதேபோல் தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகள், வன்முறைகள் என்று தலைவிரித்தாடின. ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாக்குகளையே அவர் வாக்கு சாவடிக்குள் போவதற்குள் போட்டு விட்டார்கள் என்று குற்றச்சாட்டு கிளம்பியது. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாகியிருக்கும் இப்ராஹிம் கலிபுல்லா அப்போது இதைக் கண்டித்து 99 வார்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அப்போது தமிழக தேர்தல் ஆணையராக இருந்த சந்திரசேகரனை கடுமையாக சாடியும் தீர்ப்பளித்தார். ஆனால் இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வன்முறைகள் இல்லை. தேர்தல் முறைகேடுகளும் இல்லை. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்த்து தி.மு.க.வினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் "தேர்தலை ரத்து செய்யக் கோரி" வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முருகேசன், சசீதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தமிழக தேர்தல் ஆணையராக இருக்கும் சோ.அய்யர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டியதோடு மட்டுமின்றி, "உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றது என்பதற்கு உங்களிடம் அடிப்படை ஆதாரமே இல்லை" என்று சம்மட்டி அடிபோல் தீர்ப்பளித்து தி.மு.க.வினரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தியது பற்றி உயர்நீதிமன்றமே அளித்த சான்றிதழ் அ.தி.மு.க. அரசின் மிக முக்கியமான ஓராண்டு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் போட்டிருப்பது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற முனைவது, செம்மொழி பூங்காவை பராமரிக்காமல் போட்டிருப்பது, சமச்சீர் கல்வியை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் கையால் குட்டு வாங்கியது, மக்கள் நலப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த மறுப்பது எல்லாம் ஒருபுறம் தி.மு.க.வின் மீது பழிவாங்கும் நடவடிக்கை என்ற தோற்றத்தை அரசின் மீது உருவாக்கியுள்ளது. அதேபோல் நிதி நெருக்கடியில் தமிழகம் இருக்கிறது என்றாலும், கடலூரை தாக்கிய "தானே" புயல் நிவாரண நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் வேகம் மற்ற அதிகாரிகளையும் பிரமிக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். மோசமான அழிவை ஏற்படுத்திய அந்த புயல் தாக்கத்தில் இருந்து கடலூரை வெகு விரைவில் காப்பாற்றியது தமிழக அரசு என்ற பெயர் அம்மாவட்ட மக்கள் மத்தியில் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போல் பதிவாகி விட்டது. மின்கட்டணம் உயர்வு, பஸ்கட்டணம் உயர்வு, பால் கட்டண உயர்வு போன்றவை மக்களை மிரட்டினாலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் அராஜகம், அத்துமீறல் எல்லாமே மேல்மட்டத்தில் நடக்கும் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதத்தில் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியிலேயே பரவலாக இருக்கிறது. அ.தி.மு.க. அரசு ஓராண்டு கடந்து வந்த பாதை "முன்னேற்றப்பாதையாக" இருந்தாலும், இது மட்டுமே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிக்க உதவாது என்பதை கிரவுண்ட் லெவலில் உள்ள மக்கள் உணர்வு பிரதிபலிக்கிறது.

கடந்த ஓராண்டில் அ.தி.மு.க.வுடன் தோழமையாக இருந்த தே.மு.தி.க. விலகிச் சென்று விட்டது. "இனி அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை" என்றே அறிவித்து விட்டார் விஜயகாந்த். மீதியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அ.தி.மு.க.வுடன் அனுசரணையாக இல்லை. அரசியல் ரீதியாக கூட்டணிக் கட்சிகளை இந்த ஒருவருடத்திற்குள்ளாகவே இழந்தது அ.தி.மு.க.வின் எதிர்கால தேர்தல் வெற்றிக்கு நல்லதல்ல. இப்படியொரு சூழ்நிலையில், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலவரம். வருகின்ற 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் சபதமாகவே இருக்கிறது. அதை அ.தி.மு.க.வின் பொதுக்குழு உள்ளிட்ட பல்வேறு கட்சி மேடைகளில் வெளிப்படையாகவே பேசி வருகிறார் அவர். கூட்டணிக் கட்சிகளும் இல்லாத நிலையில், அப்படியொரு சாதனையை நிகழ்த்த கடந்த ஓராண்டில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டதை விட மேலும் அதிகமான வேகம் நிர்வாகத்தில் வேண்டும். நலத்திட்டங்கள், கட்டுமானப் பணிகள், பல்வேறு நீர்பாசனத் திட்டங்கள், மின்திட்டங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நிறைவேற்றப்பட்டு, "எங்கள் அரசு இதுவரை இருந்த அரசுகளை விட சிறந்த பெர்பார்மன்ஸ் காட்டும் அரசு" என்பதை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கடமை அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், அதற்கு தலைமை ஏற்று இருக்கின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இருக்கிறது. அந்த அதி தீவிர செயல்திட்டம் மட்டுமே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கமும், முதல்வர் ஜெயலலிதா பக்கமும் டெல்லியில் ஆட்சி அமைப்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X