2025 மே 19, திங்கட்கிழமை

தமிழக அரசின் பிடியிலிருந்து "மதுரை ஆதீனம்" தப்பிக்குமா?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


"போராடும் குணத்துடன் கூடிய ஆன்மீகவாதியாக நித்யானந்தா இருக்கிறார். அதனால்தான் அவரை மதுரை ஆதீனத்தின் 293ஆவது இளைய சன்னிதானமாக நியமிக்கிறேன்" என்று சென்ற மே மாதம் 6ஆம் திகதி அறிவித்தார் மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர். அதே மூத்த ஆதீனம் இப்போது, "இளைய மடாதிபதி நீக்கம் இறைவனின் அருள்" என்று கூறி, நித்தியானந்தாவை நீக்கியுள்ளார். இந்த அதிரடி நீக்கம் “செக்ஸ்” புகாருக்கு உள்ளான நித்யானந்தாவின் சீடர்களை அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது. உடனே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு மதுரை ஆதீனத்திலிருந்து நித்தியானந்தாவின் மடம் இருக்கும் திருவண்ணாமலைக்கு பறந்துவிட்டார்கள். செக்ஸ் புகாரில் சிக்கி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளிலும், பொலிஸார் முன்பும் ஆஜராகிக் கொண்டிருக்கும் நித்யானந்தாவை முதலில் புகழ்பெற்ற மதுரை ஆதீனத்திற்கு நியமித்ததன் பின்னணி என்ன என்று இன்றுவரை தெரியவில்லை என்றே ஆதீனத்திற்கு நெருக்கமானவர்கள் புலம்புகிறார்கள்.

மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தா நியமிக்கப்பட்ட பிறகு பெரும் போராட்டங்கள் வெடித்தன. நித்தியின் சீடர்கள் "அராஜகவாதிகள்" போல் காட்சியளித்தார்கள். மதுரை ஆதீனத்திற்குள் இருந்த அவர்களை வெளியேற்றச் சென்ற போராட்டக்காரர்கள் மீது செருப்புகளைக் கூட தூக்கி வீசினார்கள். பொலிஸ் மீதும் அதுமாதிரியொரு தாக்குதல் நடந்தது. ஆனாலும் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாததால் நித்தியானந்தாவின் சீடர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அமைதி காத்தனர். குறிப்பாக மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் (மதுரை ஆதீன மடம் இருக்கும் பகுதி) நித்தியானந்தா மீதும் அவரது சீடர்கள் மீதும் பல புகார்கள் குவிந்தாலும், நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நித்யானந்தாவிற்கு தலைவலி வந்தது மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் வடிவில்தான். மதுரை ஆதீனத்திற்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த கோயிலுக்கு மதுரை ஆதீனம் சென்றால் அம்மனின் கருவறைக்கே சென்று தரிசிக்கும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப்போனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தில் கூட ஒரு காலத்தில் மதுரை ஆதீனத்திற்கு முழு பங்கு உண்டு. இந்நிலையில் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன் மூத்த மடாதிபதிக்கு கிடைக்கும் மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதன் பிறகு தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. நித்தியானந்தா - மீனாட்சி அம்மன் கோயிலிலும் உரிமை கொண்டாடுவதை தமிழக அரசின் சார்பில் கோயில்களை பராமரிக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதேவேளையில், மதுரை மாவட்டத்திற்கு வந்த ஆட்சி தலைவர் (கலெக்டர்) தன் சீடர் என்று ஒரு வில்லங்கப் பேட்டியை நித்யானந்தா கொடுத்தார். அது மட்டுமின்றி, "எனக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு உண்டு" என்ற ரீதியிலும் பத்திரிகைகளில் செய்திகளை கசியவிட்டார். அது முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. "மடாதிபதிகளுக்குள் பிரச்சினை. அதில் அரசு தலையிட வேண்டாம்" என்ற எண்ணத்தில் இருந்த முதல்வருக்கு நித்தியானந்தாவின் பேட்டிகள், நடவடிக்கைகள் எல்லாம் கோபத்தை ஏற்படுத்தியது. ஆகவே நித்யானந்தாவிற்கும் மற்ற மடாதிபதிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான போராட்டம், நித்யானந்தாவிற்கும் தமிழக அரசுக்குமான போராட்டமாக உருவெடுத்தது. "மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் மனு கொடுத்த போது அமைதியாக இருந்த, இந்து சமய அறநிலையத்துறை நித்யானந்தாவிற்கு கோப்புகளை பரிசீலிக்கத் தொடங்கியது.

இதுபோன்ற காலகட்டத்தில் மீண்டும் நித்யானந்தா மீது செக்ஸ் புகார் கிளம்பியது. அது கர்நாடக மாநில பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் "ஜீவன் முக்தி என்ற பெயரில் என்னை 40 முறைக்கு மேல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் நித்தியானந்தா" என்று முன்னாள் சீடர் ஆர்த்தி ராவின் பரபரப்பு பேட்டிகள் வெளிவந்தன. இவர் அமெரிக்காவில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தியானந்தா முதலில் கைதான சூழ்நிலையிலும் இதுபோன்ற புகார்கள் வெளிவந்தன. ஆனால் நித்தியானந்தாவிற்கோ, "இந்த ஆர்த்தி ராவை வைத்துத்தான் தானும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பதுபோல் வீடியோ படம் எடுத்து விட்டார்கள்" என்று நினைத்தார். அதனால் சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே ஆர்த்தி ராவ் மீது பெங்களூரில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் "ப்ரைவேட் கம்ப்ளையின்ட்" கொடுத்தார். அது மட்டுமின்றி, சென்னை சிட்டி பொலிஸ், சி.பி.சி.ஐ.டி (தமிழகத்தில் பெரும் குற்றங்களை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு) மற்றும் வாரணாசி பொலிஸ் போன்ற இடங்களிலும் ஆர்த்தி ராவ் மீது அடுத்தடுத்த புகார்களை தன் சீடர்கள் மூலம் கொடுத்தார். நித்தியின் வழக்கில் இந்த ஆர்த்தி ராவ் முக்கிய சாட்சி என்பதாலேயே இப்படிச் செய்தார் என்று வழக்கறிஞர் வட்டாரத்தில் ஒரு பேச்சும் நிலவுகிறது. மதுரை இளைய மடாதிபதியான பிறகு தமிழகத்தில் வெளிவந்த "ஆர்த்தி ராவின் வாக்குமூலங்கள்" பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. "இவ்வளவும் செய்துவிட்டு புகழ்பெற்ற மடத்திற்கு நித்தியானந்தா இளைய மடாதிபதியா?" என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஒரு "பப்ளிக் ஒபீனியன்" உருவானது.

இந்த "பப்ளிக் ஒபீனியன்" உச்சகட்டத்திற்கு போகவே, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இந்த நியமனம் தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கில், "இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதி கிருஷ்ணன் நீதிபதிகள் முன்பு தெரிவித்தார். அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அதன் ஆணையர் தனபால், "மதுரை ஆதீனம் (மூத்த ஆதீனம்) மடாதிபதியாக நியமிக்க தகுதியற்றவர் (நித்தியானந்தாவை நியமித்ததன் மூலம்) ஆகிறார். ஆகவே அவரை நீக்க வேண்டும். புதிய மடாதிபதி தேர்வு செய்யப்படும்வரை மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறினார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகின்ற 29ஆம் திகதி நடக்கிறது. அன்றைய தினம் மதுரை ஆதீனத்தின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை பற்றி கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைதிகாத்த தமிழக அரசும், அதன் கீழ் உள்ள இந்து சமய அறநிலையத்துறையும் திடீரென்று புயலாக மாறி இப்படியொரு அதிரடி நிலைப்பாட்டை நீதிமன்றம் முன்பு எடுத்ததும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆடிப்போனார். அதிர்ச்சியில் உறைந்து போன அவர் "முதலுக்கே மோசம் வந்துவிடப் போகிறது" என்று பதறினார். உடனே தனது வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினார். நித்தியானந்தாவிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, "எனக்கு நெருக்கடிகள் அதிகமாகிறது. ஆகவே இந்த தருணத்தில் நீங்களும் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாராம். இதற்கிடையில், அரசாங்கத்தில் தனக்கு வேண்டியவர்கள் மூலம் சமரச தூது விட்டார். "நித்தியானந்தாவை நீக்கி விடுகிறேன். மடத்தின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் ப்ளீஸ்" என்று கெஞ்சல் கோரிக்கை வைத்திருக்கிறார். இதுபோன்ற நெருக்கடியில்தான் "மதுரை இளைய சன்னிதானம் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இளைய மடாதிபதி நீக்கம் என்பது இறைவன் அருள்" என்று அறிவித்துள்ளார். சென்ற ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மதுரை ஆதீனத்தில் தடபுடலாக நடைபெற்ற பட்டாபிஷேகம் (நித்தியானந்தாவை இளைய சன்னிதானமாக அறிவித்தது) ஒக்டோபர் 19ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆறு மாத காலத்தில் மதுரை இளைய சன்னிதானம் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு நித்தியானந்தா போட்ட ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு கட்டத்தில், "மதுரை ஆதீனம் கோர்ட்டிற்கே வர வேண்டியதில்லை. அந்த பாதுகாப்பு மடாதிபதிக்கு இருக்கிறது" என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் பதவி நீக்கம் என்று தகவல் கிடைத்தவுடன் பத்திரிகையாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, "இந்த பொறுப்பு தானாக வந்தது. தானாகப் போய் விட்டது. இதில் எனக்கு எந்தவித மனவருத்தமும் இல்லை" என்று அறிவித்தார். அதன் பிறகு நித்தியானந்தா அச்சத்தில் இருப்பதாக தகவல். பெங்களூரில் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நித்தியானந்தா மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் தமிழகத்திலும் மதுரை விளக்குத்தூண் பொலிஸ் நிலையத்தில் புகார்கள் இருக்கின்றன. அந்தப் புகார்கள் தூசு தட்டி எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் நித்தியானந்தா "சைலண்டாக" இருப்பதாக தகவல்.

ஆனால், மதுரை ஆதீனம் என்ற மடம் அரசின் கையில் போகாமல் தப்பிக்குமா என்பது வருகின்ற 29ஆம் திகதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதுதான் தெரிய வரும். தன் பதவியையும், தனது மடத்தையும் காப்பாற்றவுமே நித்தியானந்தாவை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர். அவரது பேட்டியிலேயே, "நித்தியானந்தா நீக்கம் என்பது சூழ்நிலை காரணமாக எடுத்த முடிவே தவிர, எனது விருப்பத்தினால் எடுத்த முடிவு அல்ல" என்று ஒரு "நிபந்தனை" யுடன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே நித்தியானந்தா நீக்கம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், மடத்தின் நிர்வாகத்தை கைப்பற்றுவோம் என்ற அரசின் நிலைப்பாட்டையும் சமாளிக்க கையாண்ட யுக்தியாகவே காட்சியளிக்கிறது. ஆகவே வழக்கு மடத்திற்கு சாதகமாக அமைந்தால், மீண்டும் நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக வருவதற்கு முயற்சிக்கலாம் என்ற அச்சம் இந்த நியமனத்தை எதிர்த்து முதலில் போராடிய தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 12 மடாதிபதிகள் மனதிலும் இருக்கிறது. இந்த சந்தேகம் அரசுக்கும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால்தான், "என்னை நீக்கியதால் வருத்தமில்லை" என்று நித்தியானந்தா கூறியிருந்தாலும், "சில நெருக்கடிகளால் அதை அவர் செய்திருக்கிறார்" என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இதுபோன்ற குழப்பமான பேட்டிகளால் நித்தியானந்தாவை நீக்கிய பிறகும் மதுரை ஆதீனம் எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்காமல் கூட போகலாம். அதனால் மதுரை ஆதீனம் தரப்பில் இந்து அமைப்புகளை தொடர்பு கொண்டு, "இந்த மடம் 1400 வருடத்திற்கும் மேலான பழமை மிக்க மடம். இதை அரசு எடுத்துக் கொண்டு போகும் சூழ்நிலைக்கு விட்டு விடாதீர்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதன் ஓர் அங்கமாக இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் "மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பொறுப்பிலிருந்து நித்தியானந்தாவை நீக்கியதை வரவேற்கிறோம்" என்று அறிவித்து விட்டு அவரே, "பாரம்பரியமிக்க மதுரை ஆதீனத்தின் மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும். மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று வதந்திகள் பரவியுள்ளது. மடத்தில் குளறுபடிகள் நடந்திருந்தால் அது சரி செய்யப்பட வேண்டும். அதற்காக மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக் கொள்வது இந்து மதத்திற்குச் செய்யும் இடையூறு ஆகும். இதில் தமிழக அரசு அவசரப்படாமல், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை ஆதீனத்தைக் காப்பாற்ற அருணகிரிநாதர் எடுக்கும் முயற்சிகள் கைகூடுமா?- இதுதான் இப்போது மடாதிபதிகள் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. "விருப்பப்பட்டு நித்தியானந்தாவை நான் நீக்கவில்லை" என்பது போலவே நீதிமன்றத்திலும் மதுரை ஆதீனத்தின் சார்பில் மனு தாக்கல் செய்தால், மதுரை ஆதீனம் அரசு வசம் போவதை தடுக்க முடியாது என்பதே அந்தக் கேள்விக்கு கிடைத்துள்ள பதில். தமிழக அரசுக்கும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கும் இடையில் அரங்கேறியுள்ள புதிய காட்சிகள் மிகப் பழமையான மதுரை ஆதீனத்திற்கு தீர்வா? சோதனையா?- வருகின்ற 29ஆம் திகதி நடக்கப்போகும் வழக்கு விசாரணைக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X