2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய நாடாளுமன்றத்தை முடக்கும் "கோல்கேட்"; பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவாரா?

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றம் பிரதான எதிர்கட்சி பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) "நாடாளுமன்ற முடக்க" அறிவிப்பால் கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை அமைச்சர் பொறுப்பை வகித்த காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதில் தனியாருக்கு 1.81 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்ற இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை (சி.ஏ.ஜி) இந்திய அரசியலை புரட்டிப் போட்டிருக்கிறது. அரசின் வரவு செலவுகளை ஒடிட் செய்யும் அரசியல் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. "பிரதமர் பதவிக்குரிய கண்ணியம் காக்க வேண்டும் என்பதால் அமைதி காக்கிறேன். நான் அவர்களுடன் ஏட்டிக்குப் போட்டி பேசத் தயாராக இல்லை" என்று பிரதமர் அறிவித்திருப்பது இன்னும் பா.ஜ.க.விற்கு எரிச்சலையூட்டியிருக்கிறது. "பிரதமர் பதவி விலக வேண்டும்", "நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும்", "சுதந்திரமான ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பா.ஜ.க. போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியே இன்னும் பிரதமரை நேரடியாக ஆதரித்துப் பேசவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள், முலயாம் சிங் யாதவ் போன்றோரும் பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை. இப்படியொரு திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறது இந்திய நாடாளுமன்றத்தின் முடக்கம்.

கோல்கேட்- 1993 முதல் 2004 வரை
"கோல்கேட்" பின்னணி என்ன? நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கு 1993ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சரியான கொள்கை ஏதும் மத்திய அரசிடம் இல்லை. ஆனால் 1993ஆம் ஆண்டுக்கும் பிறகு ஒருமுறை நடைமுறைக்கு வந்தது. அதன்படி "ஸ்கீரினிங் கமிட்டி" ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் தலைவராக மத்திய அரசில் உள்ள நிலக்கரித்துறை செயலாளர் இருப்பார். அவருக்குத் துணையாக நிலக்கரித்துறை சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் எல்லாம் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த கமிட்டிதான் யார் யாருக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்வது என்ற முடிவு எடுத்து அறிவிக்கும். தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யவே இந்த வழி. பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் நிலக்கரித்துறை அமைச்சகமே நேரடியாக ஒதுக்கீடு செய்யலாம். "ஸ்கீரினிங் கமிட்டி" ரூட்டிற்கு வர வேண்டிய தேவையில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஒரு கொள்கையை அறிவிக்கிறது. அதுதான் "2012ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மின்சாரம்" என்ற கொள்கை. இதை அமுல்படுத்த "ஸ்கீரினிங் கமிட்டி" முறை சரிவராது என்று கருதி, "இனி நிலக்கரிச்சுரங்க பிளாக்குகள் ஒதுக்கீடு செய்வது பொது ஏலத்தின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும்" என்று விரும்புகிறது மத்திய அரசு. இப்படி மத்திய அரசு நினைத்து ஓர் அறிவிப்பை வெளியிட்டது முதல் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (2004 முதல் 2009) பதவியிருந்த காலகட்டத்தில்தான். அதாவது 28.6.2004 அன்று அப்படியொரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இது 2012 வரை அமுலுக்கு வரவில்லை. அதனால் தனியாருக்கு 1.81லட்சம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் சி.ஏ.ஜி.யின் அறிக்கை.

கோல்கேட்- பிரதமர் அலுவலக எதிர்ப்பு
சம்பந்தப்பட்ட நிலக்கரித்துறை செயலாளர் இந்த அரசு அறிவிப்பை கொள்கை முடிவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கிறார். அதற்கான அலுவலக குறிப்பை 16.7.2004ஆம் திகதி அனுப்பினார். இதுதான் "கோல்கேட்" போராட்டத்தின் ஆரம்பம். அந்த அலுவலகக் குறிப்பில், "நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தனியாருக்கு குருட்டு அதிர்ஷ்டம் போல் கிடைக்கும் லாபத்தை தடுக்க வேண்டும். அதற்கு பொது ஏல முறையை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்" என்கிறார். இந்த குறிப்பின் மீது எடுத்த எடுப்பில், "நிலக்கரிச் சுரங்கங்களை பொது ஏலம் விடுவதில் பல அசௌகரியங்கள் இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டும்" என்று பி.எம்.ஓ. (பிரதமர் அலுவலகம்) அலுவலகத்தில் குறிப்பு எழுதுகிறார்கள். அத்துடன் அக்கோப்பு நிலக்கரித்துறை இணை அமைச்சருக்கு வருக்கிறது. அவரோ, "லேபர் யூனியன்களும், மற்றவர்களும் கடுமையாக எதிர்ப்பதால் 2000ஆம் வருடத்தில் ராஜ்ய சபையில் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) தாக்கல் செய்யப்பட்ட "நிலக்கரி சுரங்கங்கள் (தேசிய மயமாக்கல்) திருத்த மசோதா" இன்னும் நிறைவேறாமல் கிடப்பில் கிடக்கிறது. ஸ்கீரினிங் கமிட்டி மூலம் ஒதுக்கீடு செய்வது வெளிப்படையான முறையல்ல என்பது மட்டுமே பொது ஏல முறைக்குச் செல்வதற்கு ஒரே காரணமாக இருக்க முடியாது" என்று குறிப்பு எழுதி 4.10.2004 அன்று முட்டுக் கட்டை போடுகிறார். இணை அமைச்சரின் இக்குறிப்பு பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதன்படி இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒன்று தற்போதுள்ள "ஸ்கீரினிங் கமிட்டி" மூலமாகவே நிலக்கரி சுரங்க பிளாக்குகளை ஒதுக்கீடு செய்வது. அதற்கு "கட்-ஆப்" திகதியாக 28.6.2004 வைத்துக் கொள்வது என்பது ஒரு முடிவு. பொது ஏலம் பற்றிய கொள்கை முடிவை எடுத்து அதன் அடிப்படையில் 28.6.2004இற்குப் பிறகு நிலக்கரி சுரங்க பிளாக்குகள் ஒதுக்கீடு கேட்டு வந்த மனுக்கள் மீது முடிவு எடுப்பது என்பது இரண்டாவது முடிவு. இதற்கான "அமைச்சரவைக் குறிப்பும்" (கேபினெட் நோட்) தயாரிக்கப்படுகிறது. இந்தக் கோப்பு சம்பந்தப்பட்ட நிலக்கரித்துறை அமைச்சருக்குப் போகிறது. அப்போது பிரதமரே அப்பொறுப்பை வைத்திருந்ததால் அவர்தான் துறை அமைச்சராகிறார். ஆனால் அவரோ, "நிலக்கரித்துறை இணை அமைச்சர் 4.10.2004 அன்று எழுதிய கருத்தில் எனக்கு முழு உடன்பாடு (கம்ப்ளீட் அக்ரிமென்ட்) உண்டு. ஆகவே பொது ஏலம் விடுவது குறித்த தற்போதைய பிரேரணை குறித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை" என்று கைவிரித்து விட்டார்.

கோல் கேட்- இணை அமைச்சரின் எதிர்ப்பு
ஆனால் நிலக்கரித்துறை செயலாளர் விடவில்லை. மீண்டும் பொது ஏல முறை வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அதில் அவர், "ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள "கட்-ஆப்" திகதி (28.6.2004)இற்குள் வந்த மனுக்கள் எல்லாம் மார்ச் 2005இற்குள் முடிவு செய்யப்பட்டு விடும். அதன் பிறகு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கேட்டு மனுக்கள் குவியத் தொடங்கும். அப்போது நமக்கு அவற்றை பரிசீலித்து முடிவு எடுப்பது சிரமமாக இருக்கும். ஆகவே புது கொள்கையை (பொது ஏலம் விடுவது) உடனடியாக கொண்டு வருவதே சிறந்தது" என்று கூறுகிறார். மீண்டும் அதன் படி "அமைச்சரவை குறிப்பை" அபிவிருத்தி செய்து (அப்டேட்) அனுப்புங்கள் என்று பிரதமர் அலுவலகம் ஆணையிடுகிறது. இதற்கும் இணை அமைச்சர் மறுத்து பேசுகிறார். "பவர் யுடிலிட்டீஸ் இதை எதிர்க்கும். ஆகவே இந்த கொள்கையை கடைப்பிடிப்பது சிரமம்" என்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடக்கிறது. அக்கூட்டத்தில் பொது ஏலக் கொள்கை மீண்டும் திசை மாறுகிறது. "நிலக்கரி சுரங்கங்கள் (தேசியமயமாக்கல்) சட்டம் 1973ஐ திருத்துவதற்கு கால அவகாசம் தேவை. அதுவரை ஏற்கனவே உள்ள ஸ்கீரினிங் கமிட்டி முறையே தொடரட்டும்" என்று 2005 ஜூலை 25ஆம் திகதி கூறி விட்டார்கள். இந்த முடிவை அமுல்படுத்த "அவசர நடவடிக்கை" எடுங்கள் என்று பிரதமர் அலுலகமே சம்பந்தப்பட்ட நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுகிறது. பொது ஏலம் என்ற கொள்கை முடிவை அமல்படுத்த ஒரு வருட காலம் இப்படி உருண்டோடியது.

கோல்கேட்- அமைச்சகத்தை எச்சரித்த பிரதமர்
இந்நிலையில் 2006 பெப்ரவரி 7ஆம் திகதி நிலக்கரித்துறைச் செயலாளர் இணை அமைச்சர் மூலமாக தன் அமைச்சருக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். அதில், "கேபினெட் நோட்டை விரைந்து தயாரிக்கும் படி பிரதமர் அலுவலகத்திலிருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள்" என்று கூறுகிறார். ஆனால் அப்படிப்பட்ட குறிப்பை நிலக்கரித்துறை அமைச்சர் (அப்போது பிரதமர்) ஒரு மாதம் கழித்து அதாவது மார்ச் 7ஆம் திகதி பார்க்கிறார். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை "இறுதிக்குறிப்பு" தயாரிக்கப்பட்டு, அதை நிலக்கரித்துறை செயலாளர் அப்ரூவ் பண்ணி கேபினெட் செகரட்டரியேட்டிற்கு அனுப்பி வைத்தார். உடனே பிரதமர் அலுவலகம் ஒரு கூட்டம் போடுகிறது. அதில் மீண்டும் விடயத்தை திசை திருப்புகிறார்கள். பொது ஏலமே வரக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவது போல் இந்த முயற்சி இருந்தது. அதாவது அக்கூட்டத்தில், "மைன்ஸ் அன்ட் மினரல்ஸ் (டெவலப்மென்ட் அன்ட் ரெகுலேஷன்) சட்டம் 1957" (எம்.எம்.டி.ஆர்.ஆக்ட்)யையே திருத்தி, அனைத்து மினரல்களையுமே பொது ஏலம் மூலமே அலாட் பண்ண வேண்டும் என்று முடிவு செய்வோம்" என்று புத்தம் புதிய யோசனையை விதைக்கிறார்கள். இப்படி முடிவு எடுக்கப்பட்டது 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி. ஆனால் இதிலும் குறுக்குச்சால் ஓட்டினார் நிலக்கரித்துறை இணை அமைச்சர். "இந்த சட்டத்தை திருத்தும் முடிவை மீண்டுமொருமுறை பரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் மாநிலங்கள் இதை எதிர்க்கும். மத்திய- மாநில அரசு உறவில் இது ஒருபெரிய விவகாரமாகவே மாறி விடும்" என்கிறார். அந்தக்குறிப்புடன் சென்ற கோப்பில் நிலக்கரித்துறை அமைச்சர் (பிரதமர் மன்மோகன்சிங்), "இணை அமைச்சர் சொல்வது சரிதான். கூட்டாட்சித் தத்துவத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தும் ஆலோசனைகளை நிலக்கரித்துறை அமைச்சகம் வழங்குவதை தவிர்க்க வேண்டும்" என்று எச்சரிக்கை விடும் பாணியில் குறிப்பு எழுதுகிறார். இப்படி நிலக்கரிச் சுரங்கங்களை பொது ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்ய மூன்றாவதாக எடுக்கப்பட்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டது. இந்த முடிவு 27.4.2006 அன்று எடுக்கப்பட்டது.

கோல்கேட்- அமைச்சகங்களின் திருவிளையாடல்
ஏறக்குறைய இரண்டரை வருடம் "பொது ஏல முறை" கொண்டு வருவது பற்றிய கொள்கை முடிவு "குளிரூட்டும் பெட்டியில்" போடப்பட்டது. அதற்கு காரணம் சட்ட அமைச்சகத்திற்கும், நிலக்கரித்துறை மற்றும் சுரங்கத்துறை போன்றவற்றிற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர். எம்.எம்.டி.ஆர். சட்டத்தில் திருத்தத்தை எப்படிக் கொண்டு வருவது என்று சட்ட அமைச்சகத்திடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டிருந்தது. ஜூன் 2004இலேயே கேட்டு விட்டார்கள். சட்ட அமைச்சகம் இரு வருடங்கள் தூங்கிவிட்டு, 28.7.2006 அன்று, "நிர்வாக உத்தரவுகளை திருத்தியே பொது ஏலமுறையைக் கொண்டு வரலாம்" என்று கூறியது. ஆனால், மீண்டும் "விளக்கம்" என்ற போர்வையில் ஒரு கடிதத்தை சட்ட அமைச்சகத்திற்கு எழுதி "மறு அப்பிராயம்" கேட்டது. அதன் மீது நடவடிக்கை எடுத்த சட்டத்துறை அமைச்சகம் இரண்டே நாளில் அதாவது 30.8.2006 அன்று, "உங்கள் உத்தரவுக்கு மேலும் வலு சேர்க்க வேண்டுமென்றால் பொது ஏல முறையைக் கொண்டு வர எம்.எம்.டி.ஆர். சட்டத்தில் திருத்தம் கொண்டு வாருங்கள்" என்று ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனைப்படி அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவே இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டது சுரங்கத்துறை அமைச்சகம். அதாவது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 17.10.2008 அன்றுதான் அறிமுகம் செய்யப்பட்டது.

கோல்கேட்- மசோதா சட்டமான கதை
இந்திய நாடாளுமன்றத்திற்கு வந்த அந்த மசோதா உடனடியாக நிறைவேறியதா? இல்லவே இல்லை! நாடாளுமன்றத்தில் "நிலக்கரி மற்றும் இரும்பு"க்கான "செலக்ட் கமிட்டிக்கு" அனுப்பப்பட்டது. (பல்வேறு வகையான கருத்துக்கள் உள்ள ஒரு முக்கியமான மசோதாவில் இதுமாதிரி செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி அதன் கருத்தைப் பெறுவது ஒரு நாடாளுமன்ற நடைமுறை) அந்த கமிட்டி 19.2.2009 அன்று தனது பரிந்துரைகளைக் கொடுத்தது. உடனே இணை அமைச்சர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அதில் சுரங்கங்கள் தொடர்பான மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு 2010ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி இந்த திருத்த மசோதாவினை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை சுரங்கத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது நிறைவேறி, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி அரசிதழ் (கெஜட்) மூலம் அறிவிக்கப்படுகிறது. இதை "கெஜட் நோட்டிபிகேஷன்" என்று சொல்வார்கள். இந்த அறிவிப்பு வந்தவுடன் சம்பந்தப்பட்ட சட்ட திருத்தம் அமுலுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். அதாவது நிலக்கரிச் சுரங்கங்கள் மட்டுமல்ல, மற்ற மினரல்ஸும் பொது ஏலம் மூலமே விட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு அமுலுக்கு வந்தது. ஆனால் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று ஆலோசிக்க இரு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள். அதற்காக நிலக்கரித்துறை செயலாளர் சில கூட்டங்களை நடத்தி ஆலோசனை செய்தார். நிலக்கரி சுரங்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களையும் அழைத்துப் பேசினார். இது ஒன்றரை வருடங்கள் ஆனது.

இந்நிலையில் இறுதியாக 2012 பெப்ரவரி 2ஆம் திகதி நிலக்கரிச் சுரங்கங்களை பொது ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்வது என்ற கொள்கை முடிவு சட்ட வடிவம் பெற்ற நடைமுறைக்கு வந்தது. "பொது ஏலம் விட வேண்டும்" என்று 2004இல் மத்திய அரசு செய்த அறிவிப்பை சட்டமாக்கி, செயல்வடிவம் பெறச் செய்வதற்கு 8 வருடங்கள் ஆனது. இந்த காலகட்டத்தில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கத்தால் 1.81 லட்சம் கோடி ரூபாய் தனியாருக்கு லாபம் என்று கூறியிருக்கிறது சி.ஏ.ஜி. அதே நேரத்தில் இந்த தொகை முழுவதும் அரசுக்கு நஷ்டமா? சி.ஏ.ஜி.யே தனது அறிக்கையில், "நிலக்கரி சுரங்கங்களை பொது ஏலம் மூலம் விட்டிருந்தால், தனியாருக்குப் போன இந்த லாபத்தில் ஒரு பகுதி அரசின் கஜானாவிற்கு வந்திருக்கும்" என்றுதான் கூறியிருக்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக 1.81 லட்சம் கோடி ரூபாயும் அரசுக்கு நஷ்டம் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்கேட்- 2ஜி அலைக்கற்றை- ஓர் ஒப்பீடு
ஆனால் இந்திய நாட்டை உலுக்கிய இரு "நஷ்டக் கணக்குகளை" அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற சி.ஏ.ஜி. கொடுத்திருக்கிறது. ஒன்று 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு. அதில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறியது. இப்போது "கோல்கேட்". இதில் தனியாருக்கு 1.81 லட்சம் கோடி ரூபாய் லாபம் அடைய வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறது. இந்த இரண்டுமே இயற்கை வளங்கள் தொடர்புடையது. ஆனால் இந்த இரு விவகாரத்தில் முக்கியமானது 2-ஜி அலைக்கற்றை ஊழலில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் அமைச்சராக அ.ராஜா சிக்கி திஹார் ஜெயிலுக்குப் போனார். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போதும் எதிர்கட்சிகள் இப்படித்தான் நாடாளுமன்றத்தை முடக்கின. இப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சித் தலைவரும், பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங் மீதே எதிர்கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறது. "ராஜாவுக்கு ஒரு நீதி. உங்களுக்கு ஒரு நீதியா?" என்று தி.மு.க. கேட்கவில்லை. இந்த முறை பா.ஜ.க. கேட்கிறது. "அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்" என்று ராஜாவிற்கு அன்று அட்வைஸ் பண்ணினார் பிரதமர் மன்மோகன்சிங். இன்று கோல்கேட் விவகாரத்தில் அந்த அட்வைஸே தானே கடைப்பிடிக்கத் தவறிவிட்டார். 2-ஜி அலைக்கற்றை பெற்ற பல நிறுவனங்கள் தொடங்காமலேயே இருந்தன. அதே போல் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்ற பல நிறுவனங்களும் பணியை தொடங்கமலேயே இருக்கின்றன. பொது ஏலம் மூலம் விட வேண்டும் என்று நிலக்கரித்துறை செயலாளர் மீண்டும், மீண்டும் அலுவலகக் குறிப்பு, அமைச்சரவைக் குறிப்புகளைக் கொடுத்தாலும், அதில் எல்லாமே புதுப்புது ஆலோசனைகளை வழங்கி பொது ஏலம் என்ற முடிவை காலம் தாழ்த்தினார் நிலக்கரித்துறையை கையில் வைத்திருந்த பிரதமர். பொது ஏலம் என்ற கொள்கை முடிவை எடுப்பதற்கு 8 வருட காலம் எடுத்துக் கொண்டார் பிரதமர் என்பதுதான் இதில் முக்கிய குற்றச்சாட்டாக அமைந்துள்ளது. 28.6.2004 என்ற "கட்-ஆப்" திகதி 2012 வரை தொடர்ந்தது ஆச்சர்யத்திலும் பெரும் ஆச்சர்யம்.

கோல்கேட்- இனி என்ன?
கோல்கேட் புகார் எழுந்தவுடன், "வெறும் அலாட்மென்ட்தான் செய்திருக்கிறோம். நிலக்கரி வெட்டியே எடுக்கவில்லை. பிறகு எங்கிருந்து நஷ்டம்" என்றார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். "பா.ஜ.க. ஆட்சியில் கொள்கையே இல்லாமல் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒரு கொள்கை கொண்டு வரப்பட்டது" என்றார் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல். "சிஏ.ஜி.க்கு அரசியல் விருப்பம் ஏதோ இருக்கிறது. கணக்குகளை ஒடிட் செய்ய வேண்டுமே தவிர, கொள்கை முடிவை ஒடிட் செய்யக்கூடாது" என்று கடுமையாக தாக்கினார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய சிங். ஆனால் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை தன் தம்பி டைரக்டராக இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்குமாறு காங்கிரஸ் அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கடிதம் எழுதியதும், அதை பிரதமர் மன்மோகன்சிங்கே நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்ததும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில் "அரசியல் தட்பவெட்பம்" மிகவும் சூடாகவே, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி களத்தில் இறங்கினார். பா.ஜ.க. நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜுவிடம் பேசி "சமரசம்" செய்ய விரும்பினார். அதனால் "பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற கோஷத்தை கைவிட்டு, "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும். சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார் சுஸ்மா. இதற்கு அக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பிவிட்டது. "பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்தக் கோரிக்கையை கைவிட மாட்டோம்" என்று கறாராக அறிவித்து இருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவரான அருண்ஜேட்லி. இதற்கு அத்வானியும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆகவே கடந்த 8 நாட்களாக இருந்த நாடாளுமன்ற முடக்கம் விலக்கிக் கொள்ளப்படும் என்று நிலவிய சூழ்நிலை மீண்டும் சீர்கெட்டு நிற்கிறது. இதற்கிடையில் "நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள்" என்று பிரதமரிடம் சொல்லாமல் சொல்லி விட்டு, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டார். இந்த ஒட்டு மொத்த கோல்கேட் விவகாரத்திலும் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் "எங்கள் பிரதமர் நேர்மையானவர். அவர் மீதே குற்றம் சாட்டுகிறீர்களா?'' என்று இதுவரை சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ ஆதரித்துப் பேசவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. பிரதமர் மன்மோகன்சிங் எத்தனை நாளைக்கு இந்த விவகாரத்தில் "விசுவாமித்திரர்" போல் இருப்பார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் உடனே வருமா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும். ஆனால் பிரதமரின் இமேஜ் இந்த "கோல்கேட்" விவகாரத்தால் பெருமளவு சரிந்திருக்கிறது என்பதே உண்மை!

You May Also Like

  Comments - 0

  • shivaji Tuesday, 04 September 2012 05:18 AM

    கோல்கேட் கட்டுரை மிகவும் தெளிவாக உள்ளது. பாவம் மன்மோகன் சிங். அம்மா மகன் அரசியலுக்கு பலி கடாவாகிவிட்டார். பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சிங் பாய்ந்தால் காங்கிரஸ் கதி அதோ கதி தான். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதி கிடைக்குமா என்ற நிலையில், காங்கிரஸ் குடும்பத்தின் எதிர்காலம்??????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X