2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழகத்தில் தீவிரமாகும் "பெற்றோல் அரசியல்"

A.P.Mathan   / 2012 மே 28 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் "பெற்றோல் அரசியல்" களைகட்டியிருக்கிறது. ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாய் 50 காசுகளுக்கு மேல் அதிரடியாக உயர்த்தப்பட்டது நடுத்தர மக்களை வாட்டி வதைக்கின்ற அதேவேளையில் அரசியல் கட்சிகளுக்கு தங்கள் போராட்ட யுக்திகளை வகுத்துக் கொள்ளவும் வழி வகுத்துள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸுடன் கசப்புணர்வுடன் இருக்கும் திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஐந்து கிலோ மீற்றர் நடந்து சென்று பெற்றோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி முடித்து விட்டார். மேற்கு வங்கத்தில் இப்படியென்றால், தமிழகத்திலோ காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க. 30ஆம் திகதி மிகப்பெரும் போரட்டத்தை நடத்துகிறது. அதில் ஜூன் மூன்றாம் திகதி 89 வயதில் அடியெடுத்து வைக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்கிறார். அது தவிர, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகிய முக்கிய தலைவர்களும் ஆங்காங்கே இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். மம்தாவின் போராட்டத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி, "முடிந்தால் மத்திய அரசை விட்டு விலக்கட்டுமே" என்ற ரீதியில் கருத்துச் சொன்னாலும், தமிழகத்தில் தி.மு.க.வின் போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி மௌனமாகவே இருக்கிறது. அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மட்டும் ஒரு டிவி பேட்டியில் "எங்களுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன" என்று மட்டும் லைட்டர் வெயினில் பேசியிருக்கிறார்.

மத்திய அரசில் பங்கேற்றுக் கொண்டே அந்த அரசின் முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தி.மு.க.விற்கு புதிதல்ல. முன்பு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பங்கேற்ற போது பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். அந்த பொடா சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று தி.மு.க. மத்திய அரசியில் இருந்து கொண்டே வற்புறுத்தி வந்தது. அக்கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் 2003ஆம் வருடம் இதே மாதிரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக பொடா சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியது தி.மு.க. அந்த போராட்டம் குறித்து கருத்துச் சொன்ன அப்போது பா.ஜ.க. அகில இந்திய தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு, "இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது" என்று பதிலளித்தார். உடனே அந்த வார்த்தையை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. - தன் உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தைக் கூட்டி, அக்கட்சிக்கு மத்திய அரசில் இருந்த இரு அமைச்சர்களையும் வாபஸ் பெற்றுக் கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. அந்த பாணியில் இப்போது பெற்றோல் விலை உயர்வை கண்டித்து மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக மே-30ஆம் திகதி போராட்டம் நடத்துகிறது. ஏற்கனவே வெங்கய்யா நாயுடு போல் ஏதாவது இந்த போராட்டம் பற்றி கருத்துச் சொல்லி இருக்கின்ற கூட்டணியை இப்போதைக்கு இழந்து விடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வின் போராட்டம் பற்றி டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை. அதே நேரத்தில் தி.மு.க.வும் இதை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டும் காட்டிக் கொள்ளாமல், மாநில அரசின் பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றிற்கு எதிரான போராட்டமாகவும் காட்டிக் கொண்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க.விற்கு முன்பே போராட்டத்தை நடத்துகிறது அ.தி.மு.க. அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மே-29ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசின் பெற்றோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில் "மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியோ, மத்திய அரசை வலியுறுத்தி இந்த பெற்றோல் விலை உயர்வை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், பெற்றோல் விலையைக் குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்" என்று தி.மு.க.வை சாடியிருக்கிறார். இந்த போராட்டத்தின் கையோடு முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பொலிஸாரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்படி நிறுத்தப்படாவிட்டால் தமிழக பொலிஸாரை அணையின் பாதுகாப்பு நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆகவே பெற்றோல் விலை உயர்வு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, மண்ணெண்ணெய் தமிழகத்திற்கு குறைத்து ஒதுக்கீடு என்று பல்வேறு தமிழக பிரச்சினைகளை முன் வைத்து மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை கடுமையாக சாடி வருகிறார் தமிழக முதல்வர். விலைவாசி உயர்வு மாநில அரசு காரணம் இல்லையென்றும், இதற்கெல்லாம் காஙகிரஸுடன் மத்திய அரசில் பங்கேற்கும் தி.மு.க.தான் காரணம் என்பதும் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்பதே அ.தி.மு.க. தலைமையின் வியூகம். இதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ,மத்திய அரசு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் "அன் பொப்புலர்" ஆகிவிடக்கூடாது எனபதற்காகவே பெற்றோல் விலை உயர்வு போராட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியே நேரடியாக கலந்து கொள்கிறார்.

மத்திய அரசுக்கு எதிரான அறிக்கைகள் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. தொடர்ந்து உறவை நீடிப்பதில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழக நலனுக்காக போராடுவது என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகே அப்படியொரு போராட்டத்தை நடத்துவது தி.மு.க.விற்கு "அரசியல் தர்மமாக" இருக்க முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வரும் அளவிற்கு அ.தி.மு.க.தலைமையின் அணுகுமுறை இருக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் "பெற்றோல் விலை உயர்வுக்காக போராடவேண்டும் என்றால் முதலில் தி.மு.க. மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் காங்கிரஸுக்கும், தி.மு.க.விற்கும் நடைபெறும் பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்து தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே, தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அப்படியொரு சூழ்நிலை வந்தால், அதை பயன்படுத்திக்கொள்ள தமிழகத்தில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தயாராக இருக்கும் என்பது ஒரு புறமிருக்க, பா.ஜ.க.வும் கூட அதற்கான முயற்சியில் ஈடுபடலாம் என்றே தெரிகிறது. ஏனென்றால் சென்ற 24 மற்றும் 25 திகதிகளில் மும்பையில் நடந்து முடிந்த பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுவில் பேசிய அக்கட்சி தலைவர் நிதின் கட்கரி, "ஊழல் என்பதில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஓர் அளவுகோல். காங்கிரஸ் ஊழல் என்றால் வேறு ஓர் அளவுகோல் என்ற ரீதியில் செயல்படுகிறது" என்று பேசியுள்ளார். 2-ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா கைது செய்யப்பட்டதையும், அதே புகார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது வந்தும் அவரை காப்பாற்றுவதையும் சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஐஸ் வைக்கவே இப்படி பேசியிருக்கிறார் நிதின் கட்கரி. அது மட்டுமின்றி, "எங்களுக்கு எப்போதுமே மாநில கட்சிகளுக்கும் தேசிய பார்வை உண்டு என்பதில் நம்பிக்கை உண்டு. ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்த வேண்டும்" என்று கருத்துக் கூறியிருக்கிறார். ஊழலில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்ற பா.ஜ.க. தலைவரின் கருத்து தி.மு.க. முன்னணித் தலைவர்கள் மத்தியிலேயே பரபரப்பாக விவாதிக்கப்படுதிறது. ஏனென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தி.மு.க.விலகினால், எதிர்காலத்தில் அக்கட்சியின் தயவை ஏதோ ஒரு விதத்தில் பெறுவதற்கு இப்போதே பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இந்த வகையிலும் பெற்றோல் விலை உயர்வை எதிர்த்து தி.மு.க. நடத்தும் போராட்டமும் சரி, காங்கிரஸை எதிர்த்து அ.தி.மு.க. தலைமை விடுக்கும் அறிக்கைகளும் சரி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளில் யாருடன் நெருக்கமாவது என்ற முடிவை எடுக்க இதுபோன்ற போராட்டங்கள் முன்னோடிகளாக இருக்கும். அதனால்தான் பெற்றோல் விலை உயர்வை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற 29ஆம் திகதி அ.தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. மத்திய அரசிலேயே பங்கேற்கும் தி.மு.க. மத்திய- மாநில அரசுகளை எதிர்த்து இப்போராட்டத்தை 30ஆம் திகதி நடத்துகிறது. இந்த இரு கட்சிகளின் "பெற்றோல் அரசியல்" உள்ளிட்ட, பல்வேறு போராட்டங்களின் ஒரே நோக்கம் இப்போது தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரண்டில் யாருடன் பயணிப்பது என்பதற்கான களத்தை தயார் செய்வதற்கே! ஆனால் போராட்டங்களின் வழி வகைகள்தான் வெவ்வேறானவை!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X