2025 மே 19, திங்கட்கிழமை

எல்.ரி.ரி.ஈ தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகள் தயாராக இருந்தன: கே.பி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 29 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கடந்தவார தொடர்ச்சி)

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்ட செவ்வியின் தமிழாக்கம் - பகுதி 3)

போரின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச ஆதரவுடன் கூடிய ஒரு பெரும்படியான திட்டம் ஒன்றை தயாரித்திருந்தேன். நோர்வேயின் அனுசரணையுடன் அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ.க்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் புலிகள் இயக்கத் தலைவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஆசிய நாடொன்றும் இரு ஆபிரிக்க நாடுகள் உட்பட மூன்று நாடுகள் தயாராக இருந்தன என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசத் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்தார்.

இந்த செவ்வியின் முழு விபரம் வருமாறு,


கேள்வி: அவர் கூற முனைந்தது என்ன? ஆயுத ஒப்படைப்பு ஒன்றையா?


பதில்:
அதையேதான். முதலில் எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை கீழே போட சம்மதிக்குமாயின் மட்டுமே, நோர்வேயோ அல்லது வேறு நாடுகளோ கொழும்பிடம் யுத்த நிறுத்தம் ஒன்றை கேட்க முடியும் என ஹட்ரெம் எம்மிடம் கூறினார். இராணுவம் வெல்லப் போவது நிச்சயம் என்பதால் புலிகளுக்கு வேறு தெரிவு இல்லை என ஹட்ரெம் கூறினார்.

எனவே, நாம் உயிரிழப்புகளை ஆகவும் குறைந்தளவுக்கு கொண்டுவர விரும்பினால் ஆயுதங்களை கீழே  போட சம்மதிக்க வேண்டும். எல்.ரி.ரி.ஈ. அவ்வாறு செய்வதற்கு மனதார சம்மதிக்குமாயிருந்தால் பின்னர் அமெரிக்கா, இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் உதவியுடன் இலங்கையிடம் ஒரு யுத்த நிறுத்தத்தைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

'எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை கீழே போட சம்மதிக்காவிடின் யுத்தம் தொடர்ந்து நடந்து குறுகிய காலத்தில் முடிந்துவிடும். அது எல்.ரி.ரி.ஈ.யின் முடிவாகவும் இருக்கும்' என அவர் இரத்தின சுருக்கமாகக் கூறினார்.  நாம் எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு அவரது பதிலை பெறுவோம் என நாம் அவரிடம் கூறினோம். இவ்வாறான தொனியில் ஹற்ரெம் உடனான கூட்டம் முடிவுற்றது.

யதார்த்தம்

கேள்வி: பின்னர் என்ன நடந்தது?

பதில்:
நாங்கள் யாவரும் குழம்பிப்போனோம். ஆனால் ஹற்ரெம் கூறியதே யதார்த்தம் என நான் உணர்ந்தேன். பின்னர் கூட்டத்தின் விபரத்தை வன்னிக்கு தெரிவித்தோம். ஆனால் அங்கிருந்து கிடைத்த பதில் ஏமாற்றமளித்தது. அவர்கள் ஆயுதங்களை கீழே போடுவதை நிராகரித்தனர். எல்.ரி.ரி.ஈ.யிலிருந்து விட்டுக்கொடுப்பு ஏதுமின்றி ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவர நாம் முயல வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

கேள்வி: எனவே நோர்வேயின் முன்மொழிவுகளை எல்.ரி.ரி.ஈ. நிராகரித்தது என உருத்திரகுமாரன் கூறியது உண்மைதானா?

பதில்:
ஆம், அது இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் உண்மையானது. பின்னர் வேறு விடயங்களும் நடந்திருந்தன. ஹற்ரெம்முடன் நாம் பேசிய நேரம் முழுவதும் அவர் அங்கிருக்கவில்லை. அவருக்கு விபரங்கள் முழுவதும் தெரியாது.

கேள்வி: அந்த நேரத்தில் அல்லது அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி உருத்திரகுமாரன் அறியாதிருந்தார் என நீங்கள் கூறுகின்றீர்களா?

பதில்
: அவருக்கு சகல விபரமும் தெரியாது. ஆனால் பின்னர் என்ன நடந்தது என்பதன் அடிப்படை விடயங்களை அவர் அறிவார். எனவே அவ்வாறான விடயங்களை மறுப்பதும் சொல்ஹெய்ம் உண்மை பேசவில்லை என்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் வகையில் அவர் பேசுவதும் பிழையானது. சொல்ஹெய்ம் கூறியது உண்மை. உண்மை பேசாதவர் உருத்திரகுமாரனே.

கேள்வி: உருத்திரகுமாரன் கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் நடந்த பேச்சுக்களில் அதிகமானவற்றை தவறவிட்டார் என நீங்கள் கூறினீர்கள். ஏன் அப்படி நடந்தது?

பதில்: அவர் கூட்டத்திற்கு தாமதமாகவே வந்தார். அது ஒரு வேடிக்கைக் கதை. (பலத்த சிரிப்பு) உருத்திரா, நியூயோர்க்கில் ஒரு விமானச்சீட்டை வாங்கி விமானத்தில் ஏறினார். அதற்கான செலவை நோர்வே பின்னர் கொடுத்தது. நான் தலைநகரம் வரும்படி அவரிடம் கூறியிருந்தேன். நான் தலைநகரமென கோலாலம்பூரை தான் கருதினேன்.

அவர் நான் தாய்லாந்தில் இருப்பதாக விளங்கிக்கொண்டு பாங்கொக்குக்கு போய்விட்டார். நான், வேறு ஆளை அனுப்பி உருத்திரா, கோலாலம்பூர் வந்து சேர உதவ வேண்டியிருந்தது. இதனால்தான் அவர் ஹில்டன் ஹோட்டலில் நடந்த கலந்துரையாடலில் பெரும்பகுதியை தவறவிட்டார்.

முன்மொழிவுகள்

கேள்வி: அப்படியானால் பெப்ரவரி 2009இல் நோர்வே அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் நல்ல முடிவுகளை தரவில்லை. 2010இல் நான் உங்களை விபரமாக பேட்டி கண்டபோது நீங்கள் பிரபாகரனுக்கு அனுப்பி அவர் நிராகரித்த ஒரு யுத்த நிறுத்த திட்டம் பற்றி எனக்கு கூறினீர்கள். உங்களது அந்த 16 பக்க முன்மொழிவை பிரபாகரன் மூன்று சொற்களில் நிராகரித்ததாக அப்போது கூறினீர்கள். எனவே பெப்ரவரி 2009 கூட்டத்தின் பின்னரும் புதிதான சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும். இதைப் பற்றி மேலும் விபரமாக கூறமுடியுமா?

பதில்: 
நீங்கள் கூறுவது சரியே. உண்மையில் நடந்தது என்னவெனில் தலைமைத்துவம் ஒஸ்லோவின் முன்மொழிவுகளை நிராகரித்த பின்னரும் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் எனது முயற்சிகளை நான் நிறுத்தவில்லை. நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து சென்றுகொண்டிருந்தது.

நான் ஏதாவது செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். எனவே நான் நோர்வேயுடனும் சர்வதேச சமுதாயத்தின் வேறு முக்கிய அங்கத்தவர்களுடனும் மேலும் மேலும் கூடிக்கலந்து செயற்பட்டேன்.

இது வாழ்வா சாவா என்ற மாதிரியாக இருந்தது. நான் எப்படியோ மக்களையும் இயக்கத்தையும் தலைமைத்துவத்தையும் காப்பாற்றவென ஒரு யுத்தநிறுத்த திட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே என் வசமிருந்த அற்பசொற்ப நிதியை வைத்துக்கொண்டு என்னை ஒத்த சிந்தனையுள்ள ஆட்களின் உதவியோடு நான் எனது வேலையைத் தொடர்ந்தேன்.

சர்வதேச அரசியல் தலைவர்கள், உயர் பணிக்குழு ஆட்சியினர், இராஜதந்திரிகள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்குவோர் ஆகியோருடன் நான் தொடர்பில் இருந்தேன். அவர்களில் சிலருடன் நான் நேரடியாக தொடர்புகொண்டேன். செல்வாக்குள்ள ஆட்கள் எனது சார்பில் வேறு சிலருடன்  தொடர்புகொண்டனர்.

மார்ச்சின் பிற்பகுதியில் சர்வதேச ஆதரவுடன் கூடிய ஒரு பெரும்படியான திட்டம் ஒன்றை தயாரித்திருந்தேன். ஒரு குறித்த இடத்தில் களஞ்சியப்படுத்துவதன் மூலம் எல்.ரி.ரி.ஈ. தனது ஆயுதங்களை களைய வேண்டும். இதற்கு 'பூட்டி அப்புறப்படுத்தல்' என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது ஆயுதங்கள் குறிப்பாக கனரக ஆயுதங்களை குறித்த இடங்களில் களஞ்சியப்படுத்தி பூட்டிவிடுதல் என்பதை இது குறித்தது.

அவை ஐ.நா.வின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன் பின் மோதல் தவிர்ப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு மக்களை ஆயுதப்பிரயோகம் இல்லாத குறிப்பிட்ட வலயங்களில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்படும். நோர்வேயின் அனுசரணையுடன் அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ.க்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவும் ஒழுங்கு இருந்தது.
 
தேவை ஏற்படின் பெரும்படியாக 25 தொடக்கம் 50 வரையான உயர்மட்ட எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள் தமது குடும்பத்துடன் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.  நடுத்தர தலைவர்கள் மற்றும் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்பீட்டளவில் குறைந்த தண்டனை வழங்கப்படுவர். கீழ்மட்ட கனிஸ்ட போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

நான் எல்.ரி.ரி.ஈ தலைவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இடம்கொடுக்க மூன்று நாடுகளை சம்மதிக்கவும் வைத்திருந்தேன். அவற்றில் ஒன்று ஆசிய நாடாகவும் இரண்டு ஆபிரிக்க நாடுகளாகவும் இருந்தன.

இந்த திட்டத்தை நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் அடங்கிய மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. இந்தியாவுக்கும் இது பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. தேவையேற்படின் வெளியேற்றுவதற்காக தனது கப்பல் தொகுதியை அனுப்ப அமெரிக்கா தயாராக இருந்தது.
 
நான் இந்த திட்டத்தின் மாதிரியை எழுதி மார்ச் 2009இன் பிற்பகுதியில் பிரபாகரனின் அங்கீகாரத்துக்காக அனுப்பினேன். அவர் 'சரி தொடருங்கள்' என கூறியிருப்பாரேயானால் நான் அதை தெளிவாக வரையறுத்து அதை செயற்படுத்தும் வேலையை ஆரம்பித்திருப்பேன். 

ஆனால், நான் இந்த விபரங்களை 16 பக்க மகஜராக தொலைநகல் மூலம் அனுப்பியபோது அவர் அந்த 16 பக்கங்களையும் 'இதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்ற மூன்றே சொற்களில் நிராகரித்தார். எனவே அதை நான் கைவிட வேண்டியிருந்தது.

இதையும் விட மோசமானது என்னவெனில் தான் வெளிநாட்டுக் கப்பல்களை காணுவாராயிருந்தால் அவை மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படும் என வாய்மொழிமூல செய்தியொன்றை அனுப்பியிருந்ததுதான்.

தொடர்பாடல்

கேள்வி: இந்த சமயத்தில் நான் சில விடயங்களை அறிய விரும்புகின்றேன். நீங்கள் எல்.ரி.ரி.ஈ. தலைவருடன் எவ்வாறு தொடர்பு கொண்டீர்கள்?

பதில்:
ஒரு கட்டத்தில் நாங்கள் செய்மதி தொலைபேசிகளை பயன்படுத்தினோம். ஆனால், பின்னர் அவரது பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் ஓர் இடைத்தரகரை பயன்படுத்தினோம். நான் வேலு (குமாரவேல்) என்பவருடன் பேசி வந்தேன். அவர் எனது செய்திகளை தலைவரிடம் நேரில் சென்று கூறுவார். அதன் பின் தலைவரின் பதில்களை எனக்கு நேரடியாக தெரியப்படுத்துவார். அவ்வாறே தலைவர் வேலுவை அழைத்து எனக்குத் தர வேண்டிய செய்திகளை அவரிடம் கூறுவார்.

பின்னர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் (பாலசிங்கம் மகேந்திரன்) மற்றும் கடற்புலித் தலைவர் சூசை ஆகியோரும் எனக்கும் தலைவருக்கும் இடையிலான தொடர்பாடல் ஊடகமாக செயற்பட்டனர்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபை இதில் தொடர்புபட்டதைப் பற்றி ஒரு கேள்வி. இது எந்த மட்டத்தில் இருந்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் யார்?

பதில்:
நோர்வே அதிகாரிகளே ஐக்கிய நாடுகளுடன் இந்த விடயங்களை கையாண்டனர். ஆனால் சேர் ஜோன் ஹோம்ஸ், விஜே நம்பியார், தம்ரட் சாமுவெல் போன்ற ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுடன் நான் நேரில் தொடர்பில் இருந்தேன்.

கேள்வி: ஐக்கிய நாடுகளின் தென் ஆசிய விடயங்களுக்கான சிரேஷ்ட அரசியல் அலுவல்கள் அதிகாரியாக தம்ரட் சாமுவெல் அப்போது இருந்தார்தானே?

பதில்:
ஆம், அவர் எரித்ரியா நாட்டவர்.

கேள்வி: எல்.ரீ.ரி.ஈ இராணுவ ரீதியில் செய்வதறியாது அந்தரப்பட்டு கொண்டிருந்த வேளையில் ஏன் பிரபாகரன் உங்கள் திட்டத்தை நிராகரித்தார் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அவருக்கு உண்மையான களநிலைவரம் தெரியவில்லையா? அவரின் யோசனை எவ்வாறு இருந்தது?

பதில்:
அவர் ஏன் விடாப்பிடியாக இருந்தார் என்பதை நான் பின்னர் உணர்ந்துகொண்டேன். அவர் தீபனின் தலைமையில் இராணுவத்தின் மீது பாரிய தாக்குதலை நடத்த திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்.

ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு பாரிய இராணுவ வெற்றி நிலைமையை தலைகீழாக்கி இராணுவத்தை உசாரிழக்க செய்யும் என பிரபாகரன் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.


கேள்வி: அது ஒரு தவறான கணிப்பாக இருந்தது என்பது தெரிகின்றது. எல்.ரி.ரி.ஈ பெரிதாக பேசப்படும் ஒரு தாக்குதலை நடத்தியிருந்தாலும் கூட இராணுவ ரீதியில் நிலைமையில் பின்னடைவு ஏற்பட முடியாதளவிற்கு ஒட்டு மொத்த நிலைமை வெகுவாக மாறியிருந்ததே.  இந்த கட்டத்தில் ஒரு தோல்வி காரணமாக இராணுவம் சோர்ந்து போகும் என்பது சந்தேகமே. இதைவிட எல்.ரி.ரி.ஈ.யின் ஆயுத விநியோகமும் கடற்படையினால் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஓர் இராணுவ வெற்றியை நிலை பெற செய்ய அவரால் எப்படி முடியும்?

பதில்:
நீங்கள் கூறுவது சரியே. நானும் அவ்வாறு தான் நினைக்கின்றேன். ஆனால் பிரபாகரனின் தன்னம்பிக்கைக்கு அதுவே காரணமாக இருந்தது. ஆனால், ஆனந்தபுரத்தில் இராணுவம் முந்திக்கொண்டு எல்.ரி.ரி.யை அடைப்புக்குள் கொண்டு வந்துவிட்டது. ஏராளமான போராளிகளும் தீபன் உட்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். அத்தோடு நிலைமை முற்றாக மாறியது.

ஆனந்தபுரம் யுத்தம் பற்றி நீங்களும் விபரமாக எழுதியது எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அந்த யுத்தம் போரின் தீர்க்கமான கட்டமென நீங்கள் கூறியிருந்தீர்கள்.

கேள்வி: ஆம், ஆனந்தபுரம் யுத்தம் ஏப்ரல் 3ஆம், 4ஆம் திகதிகளில் நடந்தது. அதன் பின் ஏப்ரல் நடுப்பகுதியில் எல்.ரி.ரி.ஈ. கட்டுப்பாட்டு பகுதிகளான புதுமாத்தளன், பொக்கணை பகுதியிலிருந்த 100,000இற்கும் மேற்பட்ட சிவிலியன்களை அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு வருவதில் இராணுவம் வெற்றி கண்டது. ஆனந்தபுரம் பேரிடியின் பின் பிரபாகரன் முழுதாக கதிகலங்கி போனார் என நான் கேள்விப்பட்டேன்... அது சரியா?

பதில்:
அது சரி. அதன் பின் தலைவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. சகலதும் தறிகெட்டுப் போயின.

சொல்ஹெய்ம்

கேள்வி: ஆனால் நீங்கள் உங்கள் முயற்சிகளை தொடர்ந்தீர்கள். பின்னர் என்ன நடந்தது?

பதில்:
நிலைமை மோசமடைந்து கொண்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ.யின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதவாறு நெருங்கி கொண்டிருகின்றது என்பதை நான் அறிந்துகொண்டேன். இந்த நிலைமையில்தான் இன்னுமொரு பரும்படியான திட்டம் வரையப்பட்டது.

கேள்வி: அது என்ன?

பதில்:
அண்மையில் பீ.பீ.சி.யில் எரிக் சொல்ஹெய்ம் கூறியது இதைப்பற்றி தான். இதன்படி ஒரு தற்காலிக யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தவிருந்தது. ஐக்கிய நாடுகள் அதிகாரிகளினதும் நான்கு இணைத்தலைமை நாடுகளினதும் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே) பிரதிநிதிகளினதும் இந்திய அவதானிப்பாளர்களினதும் கப்பல் அல்லது கப்பல்கள் வடக்குக்கு செல்லும். அவர்கள் போர் வலயத்திலுள்ள புலி போராளிகளையும் சிவிலியன்களையும் கணக்கெடுத்து படம் பிடித்துக்கொள்வர்.

அதன் பின் இவர்கள் உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு இலங்கை பாதுகாப்பு படைகளால் கொண்டு செல்லப்படுவர். எல்.ரி.ரி.ஈ தனது ஆயுதங்களை பூட்டி வைத்து விட்டு அவற்றை ஐக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கும். சரணடையும் போராளிகள் மார்ச்சில் கூறப்பட்ட வகையில் நடத்தப்படுவர்.

உயர் மட்ட தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் ஒரு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு மேற்பார்வையின் கீழ் வைக்கப்படுவர். நடுமட்ட போராளிகள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இலேசான தண்டனை வழங்கப்படுவர். ஏனைய யாவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்பதே திட்டம்.

கேள்வி: ஆனால், பிரபாகரனும் புலானாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கர்) ஆகியோர் இதில் சேர்க்கப்படவில்லை. அப்படித்தானே?

பதில்:
இல்லை. இத்திட்டத்தின்படி அவர்களும் வெளிநாடொன்றுக்கு கொண்டு செல்லப்படவிருந்தனர். அவர்களுக்கு இவ்வாறான நன்மை கொடுக்கப்படாதிருந்தால் அவர்கள் இதற்கு சம்மதித்திருக்க மாட்டார்கள் இல்லையா?

கேள்வி: ஆனால் எரிக் சொல்ஹெய்ம் வேறு மாதிரி கூறியிருந்தாரே?

பதில்:
எரிக் வேறுமாதிரி கூறியுள்ளார் என்பது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் அது சரியல்ல. திட்டத்தில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கேள்வி: அப்படியென்றால் ஏன் சொல்ஹெய்ம் வேறுவிதமாக கூறுகின்றார்? மூலத்திட்டம் திருத்தப்பட்டிருக்கலாமா? சில சமயம் இவர்கள் ராஜீவ் கொலை நிமிர்த்தம் தேடப்பட்டவர்களாக இருந்ததால் இருவரையும் விலக்கும் படி இந்தியா கோரியதா?

பதில்:
இருக்கலாம். ஆனால் எனக்கு உண்மையாகவே தெரியாது. இது எனக்கும் புதிராகவே உள்ளது.

பிரபாகரன்

கேள்வி: ஆக, பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் இதனால் நன்மை கிடைக்காதிருந்தால் அவர்கள் சம்மதித்திருக்கமாட்டார்கள். அப்படியாயின் அந்த திட்டம் அதோகதிதான்?

பதில்:
இல்லை, அந்த காரணத்தினால் அதன் கதி அவ்வாறாகவில்லை. உண்மையென்னவென்றால் அத்திட்டம் முன்னெடுக்கப்படவே இல்லை. தலைவர் என்னை அதை முன்னெடுக்க அனுமதிக்காதபடியால் அந்த திட்டம் ஒருபோதும் எல்.ரி.ரி.ஈ. உயர் மட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

கேள்வி: இந்த விடயம் தொடர்பாக நீங்கள் ஒஸ்லோவுக்கு போக இருந்தீர்கள் என சொல்ஹெய்ம் கூறியது அதை பற்றித் தானா? என்ன நடந்தது? தயவுசெய்து இதை விளக்க முடியுமா?

பதில்
: இந்த திட்டத்தை நாங்கள் தயாரித்திருந்தபோது எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனின் சம்மதத்தையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டியிருந்தது. அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. சர்வதேச சமுதாயம் இதை முன்னெடுக்க எல்.ரி.ரி.ஈ.யின் உடன்பாடு அவசியமாக இருந்தது. இந்த நிலையில் நான் வன்னிக்கு போய் பிரபாகரனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என உணர்ந்தேன்.

கேள்வி: ஏன் உங்களுக்கு இப்படி யோசனை வந்தது?

பதில்:
என்னவென்றால் பாலா அண்ணையும் (எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்) நானும் பிரேமதாஸாவின் (ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ) காலத்தில் இதை வெற்றிகரமாக செய்திருந்தோம்.

கேள்வி: அப்படியானால் 1989இல் என்ன நடந்தது?
 
பதில்:
அப்போது இந்திய இராணுவத்திற்கும் எல்.ரி.ரி.ஈ.ற்கும் இடையில் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸா இந்தியாவின் தலையீட்டை விரும்பவில்லை. நாங்கள் இடையில் உள்ளவர்களை கொண்டு கதைவிட்டுப் பார்த்த போது எமக்கு சாதகமான பதில் கிடைத்தது.

ஆனால் நாம் இந்தியாவிற்கு தெரியாமல் விடயங்களை முடிக்க வேண்டியிருந்தது. எனவே, பாங்கொக்கில் உள்ள சென்றல் ஹோட்டலில் ஓர் இரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அமைச்சரவை அமைச்சரான ஏ.ஸி.எஸ்.ஹமீட், பிரேமாதஸாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான பிரதிநிதியாக அமைதியாக வந்து பாலா அண்ணையும் என்னையும் சந்தித்தார்.

பிரபாகரனின் ஆதரவை பெறுவதற்கு வன்னிக்கு போய் விடயங்களை அவருக்கு நேரில் விளங்கப்படுத்த வேண்டும் என ஹமீட் ஊடாக பிரேமதாஸாவுக்கு கூறினோம். இதற்கு கொழும்பு சம்மதித்து நாம் வன்னிக்கு போய் தலைவரை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்தது. இவ்வாறுதான் அக்காலத்தில் விடயங்கள் நடந்தன. இந்த விதமாக திரும்பவும் நான் நேரில் போய் தலைவரை சந்திக்க விரும்புவதாக கூறினேன்.

கேள்வி: நீங்கள் வன்னிக்கு எப்படி போயிருப்பீர்கள்?

பதில்:
அது பிரச்சினையாகத் தான் இருந்தது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்று உத்தியோகபூர்வ வழிகளில் நோர்வே அல்லது ஐ.நா பாதுகாப்புடன் செல்வது ஒரு வழி. அடுத்த வழி ஆபத்துக்கு முகங்கொடுத்துக் கொண்டு மாலைதீவிலிருந்து ஸீபிளேனில் வன்னிக்கு போவது.

இரணைமடு


கேள்வி: அன்ரன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் 2002இல் இரணைமடு குளத்தில் இறங்கியது போல?

பதில்:
அப்படியே தான். நேரடியாக பேசுவதன் மூலம் செயன்முறையை இறுதி செய்ய வேண்டும் என நோர்வே விரும்பியது. நான் பிரபாகரனை சந்திக்க வன்னிக்கு போக முன் ஒஸ்லோவிற்கு போவதற்குரிய ஒழுங்குகளை சொல்ஹெய்ம் செய்துகொண்டிருந்தார்.

கேள்வி: அதன் பின்?

பதில்:
அதன் பின் இவ்வாறான யோசனைக்கு சாதகமாக பிரபாகரன் இல்லை என்பது எனக்கு சூசகமாக தெரிவிக்கப்பட்டது. என்னை வரவேண்டாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஆகவே முழு விடயமும் கைவிடப்பட்டதாக நான் சொல்ஹெய்மிற்கு அறிவித்தேன். நான் ஒஸ்லோ போகவில்லை. இது நடந்தது 2009 எப்ரல் பின்பகுதியில். 
 
கேள்வி: பிரபாகரனின் தீர்மானம் பற்றி யார் உங்களுக்கு அறிவித்தார்?

பதில்:
நான் முன்பு உங்களுக்கு கூறிய வழமையான வழியில் தான்.

கேள்வி: இவ்வாறு பரிதவித்து கொண்டிருந்த நிலையிலும் பிரபாகரன் மறுத்தது ஏன் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்:
அவரது அடங்கிப் போகாத மனோபாவம் மற்றும் சமரசம் செய்யாத போராளியாக இருந்து வந்த நீண்ட வரலாறு. அவர் வரலாற்றில் தனது இடம் பற்றி யோசிப்பவராக இருந்தார். சமரசம் செய்தவராகவோ சரணடைந்தவராகவோ தான் வரலாற்றில் பதியப்படுவதை அவர் விரும்பவில்லை.

அவர் மேற்கு நாடுகள் பற்றி சந்தேகம் கொண்டிருந்தார். அவர்களின் வாக்குறுதிகளை அவர் நம்பவில்லை. இன்னுமொரு காரணமும் இருந்தது. என நான் நினைக்கின்றேன்.

தமிழ் நாட்டு பேர்வழிகளான வைகோ, நெடுமாறன் போன்றோர் மே நடுப்பகுதியில் நடக்கவிருந்த தேர்தலில் பாரதீய ஜனதாக கட்சி மத்திய அரசாங்கத்தை பிடிக்கும் எனவும் தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றுவார் எனவும் கூறி அதன் பின் நிலைமை மாறும் என்ற பிழையான நம்பிக்கையை கொடுத்து வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இதன் பின்னும் உங்கள் முயற்சிகள் நின்று போகவில்லை. அப்படியில்லையா?

பதில்:
இல்லை, அவை நின்று போகவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி என்னுடன் தொடர்புகொண்டு தனது குடும்பத்தை பாதுகாப்பான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்டார். சிறிய விமானம் ஒன்று அங்கு போய் பிரபாகரனின் குடும்பத்தை ஏற்றிக்கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை நான் செய்தேன். அதற்கான செலவு 3.5 மில்லியன் டொலராகும்.
 
என்னிடம் அந்தளவுக்கு பணம் இருக்கவில்லை. நான் பலமுறை கேட்டபோதும் வெளிநாட்டு நிதிக்கு பொறுப்பாக இருந்த நெடியவன் பணம் தர மறுத்துவிட்டார். மே மாத நடுப்பகுதியில் விடயங்கள் மோசமடைந்தன. சூசை மற்றும் நடேசன் போன்றவர்களினால் ஏதாவது செய்து யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவரும்படி நான் கேட்கப்பட்டேன்.

அவர்கள் ஆயுதங்களை கைவிடுவது பற்றியும் அறிவிக்கும்படி எனக்கு கூறினர். அப்போது நான் பைத்தியம் பிடித்தவன் போல இருந்தேன். நித்திரையில்லை. நீரழிவு நோய் இருந்தும் நேரத்திற்கு சாப்பாடு இல்லை. நான் முயன்றுகொண்டே இருந்தேன்.

நான் 'ஆயுதங்களை நிசப்தித்தல்' ஒன்றையும் கூட அறிவித்தேன். இது நாம் ஆயுதங்களை கீழே போடுகின்றோம் என்பதை பூசி மெழுகி சொல்வதாக இருந்தது. ஆனால் எல்லாமே மிகவும் காலம் பிந்தியவையாக இருந்தன. 

துயரம்

கேள்வி: எல்லாம் எப்படி முடிந்தன என நாம் எல்லோரும் அறிவோம். எனக்கு உங்கள் வேதனையையும் மனமுறிவையும் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிரபாகரன் உங்கள் திட்டத்துக்கு உடன்பட்டிருந்தாலும் கூட தீர்க்கமான ஒரு வெற்றியின் விளிம்பில் இராணுவம் இருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சம்மதித்திருக்குமா?

பதில்:
பிரபாகரன் உடன்படுவாராயின் நான்கு கூட்டு தலைமைகளும் ஐ.நாவும் கொழும்பை படிய வைக்கலாம் என நோர்வே அதிகாரிகள் நம்பினர். இதிலுள்ள முக்கிய விடயம் என்னவென்றால் இலங்கை அராசாங்கம் தன் இயல்பை காட்டும் நிலைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதாகும். அவர்களிடம் இந்த திட்டம் பற்றி கூறப்பட்டிருக்கலாம். எல்.ரி.ரி.ஈ எக்காலத்திலும் உடன்படவில்லையாதலால் அது அவர்களிடம் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவில்லை.

கேள்வி: ஆகவே இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த முடியாது. எல்.ரி.ரி.யும் குறிப்பாக அதன் தலைவரும் அவரின் சமரசமும் செய்யாத விடாப்பிடித் தனத்தால் இந்த நிலைமைக்கு பங்களிப்பு செய்தனர். புலிகள் கூடுதலான பொறுப்புணர்வோடு நடத்திருப்பார்களேயானால் தமது உயிர்களை மட்டுமன்றி பல சிவிலியன்களின் உயிர்களையும் காப்பாற்றக் கூடியதாக இருந்திருக்கும்.

பதில்:
ஆம், இதுவே எனது துயரம். இது தமிழர் துன்பியல். முன்னாள் எல்.ரி.ரி.ஈ தலைவர் என்ற ரீதியில் இந்த சுமையோடு நான் வாழ்கின்றேன்.

கேள்வி: ஆம், நீங்கள் மனித இனத்துக்கு சேவை புரிவதன் மூலம் பிராயச்சித்தம் செய்ய முயல்கின்றீர்கள். நீங்கள் இப்போது செய்துகொண்டிருப்பவை பற்றி நாம் பேச வேண்டும்.

பதில்:
நான் அந்த விடயங்களை பேச உண்மையாக விரும்புகின்றேன்.

(தொடரும்)

பேட்டி கண்டவர்: டி.பி.எஸ்.ஜெயராஜ்

தமிழ்மொழியாக்கம்: கிருஷ்ணராஜா

படங்கள்: சமந்த பெரேரா

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X