2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய அரசை மிரட்டும் 61

Menaka Mookandi   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பார்த்தபடியே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு 'ஹைவோல்ட்டேஜ்' மின்சாரம் போல் ஆகிக்கொண்டிருக்கிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை 'வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தின் மூலம்' பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தேசிய அளவில் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை இடதுசாரிகளும் வரிந்து கட்டிக் கொண்டு கையிலெடுத்துள்ளார்கள்.

வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் என்றால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு திருகுவலியாக மாறிவிடும். ஏனென்றால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விலகிய பிறகுஇ காங்கிரஸின் மிகப்பெரிய இரண்டாவது கூட்டணிக் கட்சி 18 எம்.பி.க்களை வைத்திருக்கும் தி.மு.க.தான். இதை விட்டால், கூட்டணிக்கு வெளியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசை ஆதரிக்கும் கட்சிகள் இரண்டு. அதில் 22 எம்.பி.க்களைக் கொண்ட முலயாம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும், 21 எம்.பி.க்களைக் கொண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அடக்கம்.

இந்த 61 எம்.பி.க்கள்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் உயிர் மூச்சை பிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய பாராளுமன்றத்தில் தனிப்பெரும் பெரும்பான்மைக்கு 272 எம்.பி.க்கள் தேவை என்ற நிலையில் 206 எம்.பி.க்களை மட்டும் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் இந்த மூன்று கட்சிகளின் ஆதரவை ஏதோ 'கிள்ளுக் கீரைகள்' போல் கருத முடியாது என்ற 'சக்கர வியூகத்தில்' சிக்கிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு புறம் முலக்யம் சிங்கிற்கு விருந்து கொடுக்கிறார். இன்னொரு புறம் மாயாவதிக்கு விருந்து கொடுக்கிறார்கள். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, சுஸ்மா சுவராஜ் போன்றரைக் கூட அழைத்து டின்னர் கொடுத்து இந்த அந்நிய முதலீடு விவகாரம் பற்றி விவாதித்து விட்டார் மன்மோகன்சிங்.

இதுவரை திரும்பிப் பார்க்காமல் இருந்த தி.மு.க. பக்கமும் அடுத்தடுத்து காங்கிரஸ் அமைச்சர்கள் ஓடோடி வருகிறார்கள். கடந்த பதினைந்து தினங்களுக்குள் இரு மத்திய அமைச்சர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை வந்து சந்தித்து விட்டுச் சென்று விட்டார்கள். முதலில் வந்தவர் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இவர் 'அரசு தூதுவராக' வந்தார் என்றே சொல்ல வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த விஷயத்தை விரிவாக தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் அவர் பேசினாலும், வாக்கெடுப்பில் தி.மு.க. ஆதரிக்கும் என்ற உறுதிமொழியை அவரால் பெற முடியவில்லை.

2 - ஜி அலைக்கற்றை விவகாரத்தில் காங்கிரஸும் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை கார்னர் பண்ணியதே காரணம் என்று அக்கட்சி நினைப்பது ஒரு புறமிருக்க, '2-ஜி விவகாரத்தில்' நிதியமைச்சர் சிதம்பரத்தை காப்பாற்றிய காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியின் அமைச்சராக இருந்த ராஜா, தன் மகளும் ராஜ்யசபை எம்.பி.யுமான கனிமொழி ஆகியோரை திகார் சிறைச்சாலையில்அடைத்தது என்பதை தி.மு.க. தலைமை உறுதியாக நம்புவதே காரணம்.

'அரசு தூதுவராக' வந்த சிதம்பரத்தின் சமரசம் எடுபடவில்லை. இருவரது சந்திப்பும் 'எட்டிக்காய்' போல் இருந்தது என்பதே அரசியல் வட்டாரப் பேச்சு. பிரதமர் மன்மோகன்சிங் சார்பில் வந்த அரசு தூதுவரின் முயற்சி பலிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சியே களத்திற்கு வந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் குழு விவகாரங்களை கவனிக்கும் குலாம் நபி ஆசாத் (இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்) 25ஆம் திகதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தியின் 'கட்சி தூதுவராக' சென்னை வந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து 90 நிமிடங்களில் பேசினார். அதாவது மாலை 3.55க்கு ஆரம்பமான  பேச்சுவார்த்தை 5.15க்குத்தான் முடிந்தது. இந்த பேச்சுவார்த்தையில் குலாம் நபி ஆசாத்துடன் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு போன்றோர் அந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ராஜ்ய சபை எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் கட்சி தூதுவராக வந்த குலாம் நபி ஆசாத் ஆகிய மூவரும்தான் இந்த தீவிர ஆலோசனையில் பங்கேற்றவர்கள். தி.மு.க.வின் இரு முக்கிய முன்னாள் அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோர் இறந்த துக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு குலாம் நபி ஆசாத்துடன் 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதிலிருந்தே 'குலாம் நபி ஆசாத் விஜயம்' எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புலப்படும்.

2 - ஜி அலைக்கற்றை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எப்படி தி.மு.க.வை கைவிட்டது, அ.தி.மு.க. அரசுக்கு சாதகமாக எப்படி மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இன்றைக்கும் செயல்பட்டு வருகிறார்கள் போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டதாம். அதவும் குறிப்பாக சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதித்தது குறித்து வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால், இந்திய அரசு எதுமாதிரியான தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையும் குலாம் நபி ஆசாத் எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தி.மு.க.வின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற சூழ்நிலையில் முன்னாள் இந்திய கணக்காயக் குழு சீனியர் அதிகாரி ஆர்.பி. சிங் அளித்துள்ள பேட்டி அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆர்.பி.சிங் சொன்னது புதிய விஷயமல்ல. இரு வருடங்களுக்கு முன்பு 2 - ஜி அலைக்கற்றை விவகாரம் சந்திக்கு வந்த போதே, 'தலைமை கணக்காயர் சொல்வது போல் நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய் அல்ல.

வெறும் 2400 கோடி ரூபாய்மட்டுமே' என்று அறிவித்தார் ஆர்.பி. சிங். ஆனால் அதை அன்று காங்கிரஸ் கட்சி வெகு பாரதூரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று தி.மு.க.வின் ஆதரவு பாராளுமன்றத்தில் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆர்.பி. சிங்கின் பேட்டி பற்றி காரசாரமாக கருத்துச் சொல்கிறது காங்கிரஸ் கட்சி.

'2 - ஜி விவகாரத்தில் பா.ஜ.க.வின் சாயம் வெளுத்து விட்டது' என்று இதுவரை இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்த சோனியாவே கருத்துக் கூறிவிட்டார். அவர் இதுவரை '2 - ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தது' என்பதைத்தான் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுதான் ஆர்.பி.சிங் கொடுத்த பேட்டிக்கு சாதகமான அர்த்தம் கற்பிக்கும் வகையில் சோனியா காந்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, இந்திய செய்தித்துறை அமைச்சராக இருக்கும் மனீஸ் திவாரி, 'ஆர்.பி. சிங் சொன்ன 2400 கோடி ரூபாய் நஷ்டம் எப்படி சி.ஏ.ஜி கையெழுத்திடும் போது 1.76 லட்சம் கோடியானது? இதை இந்திய தலைமை கணக்காயர் வெளிப்படையாக விவாதிக்க முன் வர வேண்டும்' என்றும், 'இதை வைத்து அரசியல் செய்த பா.ஜ.க. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் அதிரடிக் கருத்தை வெளியிட்டார்.

ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் மட்டும் ஆர்.பி.சிங் பேட்டி பற்றி இதுவரை மவுனமாகவே இருக்கிறார். இப்படி 2 - ஜி விவகாரத்தில் தி.மு.க.விற்கு பாஸிட்டிவான மேகம் படர்ந்திருக்கின்ற நிலையில், 'கட்சி தூதுவராக' குலாம் நபி ஆசாத் சென்னை வந்தார். ஆனாலும் இதுவரை அந்நிய முதலீட்டு விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிடி கொடுக்கவில்லை என்பதே தி.மு.க. வட்டாரத்தின் கருத்து. குலாம் நபி ஆசாத் போனவுடன், 'குலாம் நபி ஆசாத் ஆதரவு கேட்டார். இன்னும் நான் எந்த கமிட்மென்டும் கொடுக்கவில்லை' என்று இதை வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

இந்த விஷயத்தில் காங்கிரஸை ஆதரிக்கும் முடிவை இரகசியமாக வைத்துக் கொள்ளவே தி.மு.க. விரும்புகிறது. 2 - ஜி அலைக்கற்றை விவகாரத்தில் 'பாராளுமன்ற கணக்குக் குழுத் (பி.ஏ.சி) தலைவர் முரளி மனோகர் ஜோசி இந்திய தலைமை கணக்காயரை நிர்பந்தம் (நஷ்டம் 1.76 லட்சம் கோடி என்று அறிக்கைக் கொடுக்கச் சொல்லி) கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு, சி.ஏ.ஜி.யின் முன்னாள் அதிகாரி ஆர்.பி. சிங்கின் பேட்டி உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் தி.மு.க. தரப்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களையும் பாராளுமன்றத்தில் பதிவு செய்ய தி.மு.க. இந்த தருணத்தில் விரும்புகிறது.

தி.மு.க. மீது விழுந்த பலியை துடைக்க அது உதவும் என்பது அக்கட்சியின் கணக்கு. இது ஒரு புறமிருக்க மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டச் சொல்லுகிறது தி.மு.க. அக்கூட்டத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றிய மீண்டும் ஒரு விவாதம் நடத்தி ஒரு முடிவு எடுக்க வேண்டும்' என்று கருதுகிறது தி.மு.க. தலைமை.

ஆகவே முதலில் பாராளுமன்றத்தில் 2 - ஜி பற்றிய விவாதம். பிறகு சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றிய தீர்மானம் வாக்கெடுப்புடன் வந்தால் அதை ஆதரிப்பதா வேண்டாமா என்று முடிவு எடுப்பது என்ற இரு லகான்களை பிடித்துக் கொண்டு சவாரி செய்கிறது தி.மு.க. தலைமை. தி.மு.க.வின் இந்த எண்ணத்திற்கு தீணி போடும் வகையில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி, '2 - ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து தி.மு.க. தீர்மானம் கொண்டு வந்தால் அது பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

முறைப்படி பார்த்தால் இந்த கருத்தைச் சொல்லும் அதிகாரம் படைத்தவர்கள் தீர்மானம் அவைக்குள் வரும் போது இந்திய பாராளுமன்ற சபாநாயகர். இன்னொருவர் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர். ஆனால் இந்த இரு பொறுப்புகளிலும் இல்லாத நாராயணசாமி இந்தக் கருத்தை சொல்வதிலிருந்து தி.மு.க.வின் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ் காட்டும் அவசரத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

அதேபோல் கருணாநிதியை சந்தித்து விட்டுவெளியில் வந்த குலாம் நபி ஆசாத்தும், 'இன்னொரு முறை கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை கூட்டச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அதை செய்வோம்' என்ற ரீதியில் அறிவித்து விட்டு டெல்லிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். நிதியமைச்சர் சிதம்பரம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தது 'எட்டிக்காய்' (கசப்பு மிகுந்தது) என்றால் இப்போது குலாம் நபி ஆசாத் சந்தித்து இருப்பது 'அத்திக்காய்' (உவர்ப்பு மிகுந்தது). ஆனால் 'இனிப்புச் செய்தி' ஏதும் இல்லை என்பதே தி.மு.க. வட்டாரத்தில் நிலவும் பேச்சு.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை இப்போது '61' என்ற எண் மிரட்டுகிறது. அதாவது பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடிக் கட்சி, தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை இது. பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடிக் கட்சிக்கும் உத்தரபிரதேச பாலிடிக்ஸ் முக்கியம். அதே போல் தி.மு.க.விற்கு தமிழக பாலிடிக்ஸ் முக்கியம். ஏற்கனவே தமிழக அரசியல் நிலவரத்தில் இங்குள்ள ஆளும் அ.தி.மு.க. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

'எக்காரணத்தைக் கொண்டும் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன்' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டார். இது போன்ற நிலையில், தி.மு.க. எந்த அளவிற்கு இந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கு கை கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியே. திங்கள் கிழமை காலையில் கூட பாராளுமன்றக் குழுத் தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவிற்கு என்ன மாதிரியான நிலைப்பாட்டை டெல்லியில் எடுக்க வேண்டும் என்ற தகவல் இல்லை என்பதே நிலவரம். ஆனால் அந்த எம்.பிக்கள் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறார்கள். 'எங்கள் தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரிடமிருந்து ஒரு 'ப்ராமிஸ்' கேட்கிறார்.

அதாவது உறுதிமொழி. அந்த உறுதிமொழிக்கு உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே தி.மு.க. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டு தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தால் தன் நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு ஆதரவாக எடுக்கும். அது இல்லாமல் எங்கள் தலைவர் எதுவும் செய்யமாட்டார். அதிலும் குறிப்பாக கலைஞருடன் குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடைபெற்ற 90 நிமிடமும் கனிமொழி எம்.பி. உடனிருந்தது 'தி.மு.க.- காங்கிரஸ் உறவில்' எந்தப் பிரச்சினை 'முள்ளாக இருக்கிறது' என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.' என்கிறார்கள். ஆம்! தி.மு.க. தலைவர் கருணாநிதி இப்போது சோனியா, மன்மோகன்சிங் ஆகியோரின் 'உறுதிமொழிக்காக' காத்திருக்கிறார் என்பதே புதிய நிலவரம்.

சோனியா காந்தி தரப்பிலிருந்து தி.மு.க. தலைமை எதிர்பார்த்த உறுதிமொழி கிடைத்திருக்கிறது என்றே தி.மு.க. வட்டாரச் செய்தி. குறிப்பாக புது கோரிக்கையாக "2-ஜி விவகாரத்தில் முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரி ஆர்.பி.சிங் பேட்டி, பா.ஜ.க. தலைவரும் நாடாளுமன்ற கணக்குக் குழு தலைவருமான முரளி மனோகர் ஜோசியின் தலையீடு போன்றவை குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும்" என்று ஒரு கோரிக்கையை தி.மு.க. வைத்திருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கைப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், "ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக எப்.டி.ஐ. விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிப்போம்" என்று அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், "கூட்டணிக் கட்சிகள் எங்களுடன் இருக்கின்றன. நாடாளுமன்ற சபாநாயகர் எடுக்கும் முடிவுப்படி வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தையும் சந்திப்போம்" என்று அறிவித்துள்ளார். அதேபோல் இதுநாள்வரை வாய் திறக்காமல் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், "எப்.டி.ஐ. விவகாரத்தில் நாங்கள் ஓட்டெடுப்பிற்கு தயார்" என்று தி.மு.க.வின் அறிவிப்பிற்குப் பிறகு கூறியிருக்கிறார். மாயாவதியும், முலயாம் சிங் யாதவும் சேர்ந்து 43 எம்.பி.க்கள். அவர்கள் மத்திய அரசுக்கு எப்.டி.ஐ. விவகாரத்தில் ஆதரவு கொடுக்கும் மனநிலைக்கு வந்த பிறகு, 18 எம்.பி.க்கள் உள்ள நாம் மட்டும் எதிர்த்து வாக்களித்தாலும் தீர்மானம் வெற்றி பெற்று விடும். பிறகு தமிழகத்திலும் சரி, டெல்லியிலும் சரி தி.மு.க.விற்கு பெரும் தலைவலியாக மாறிவிடும் என்று கருதியே இறுதியில் தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருக்கிறது. ஆனால் "எங்கள் சொல்லையும் நீங்கள் கேட்டாக வேண்டும்" என்ற நிர்ப்பந்தத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தி இந்த முடிவை அறிவித்துள்ளது தி.மு.க. எப்படியிருந்தாலும், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசுக்கு இந்த 61 எம்.பி.க்களை சமாளிப்பது நித்யகண்டம் பூரண ஆயுசுதான்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X