Super User / 2011 ஜூன் 29 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}


அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கையின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மாற்றுவதே பிரதான இலக்கு என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சமூக விஞ்ஞான துறை தலைவராகவும் பின்னர் வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றி உப வேந்தராக நியமிக்கப்பட்டார்.
இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதற் தடவையாக விரிவுரையாளராக இருந்து உப வேந்தராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளவதற்காக புலமைப்பரிசில் பெற்று 1982ஆம் ஆண்டு ரஷ்யா சென்ற கலாநிதி இஸ்மாயில், உக்ரேன் நாட்டின் தலைநகரான கியூவிலுள்ள கியூ சர்வதேச பல்கலைக்கழகத்தில் பொருளியலும் பொது நிதியும் எனும் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று வர்த்தக முகாமைத்துவம், கலை, அரபு மொழியும் இஸ்லாமிய நாகரீகமும் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியன உள்ளன.
உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயிலுடனான நேர்காணலின் முழு விபரம் பின்வருமாறு:
கேள்வி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வாறுள்ளன?
பதில்: எமது பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 10 ஆண்டு திட்டமொன்றை முன்வைத்துள்ளோம். இத்திட்டத்தை அரசாங்கத்தின் பங்களிப்பின் ஊடாக முன்னெடுக்கவுள்ளோம். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், பௌதீக வளங்கள் மற்றும் மாணவர்களின் ஆளுமை விருத்தி என்பவற்றை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இதற்கான 12 மில்லியன் குவைத் தினாரினை இலகு கடன் அடிப்படையில் வழங்க குவைத் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 2,000 மாணவர்கள் கற்கும் இப்பல்கலைகழகத்தில் 2020ஆம் ஆண்டளவில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமூகங்களிலிருந்தும் 6,000 – 7,000 வரையாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம். இதன் ஒரு கட்டமாக 2015ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை 4,000 வரை அதிகரிக்கவுள்ளோம்.
இதற்கு மேலதிகமாக சுமார் 200 – 300 வரையான அரசாங்கத்தினால் புலமை பரிசில் வழங்கப்படவுள்ள வெளிநாட்டு மாணவர்களையும், பணம் செலுத்தி கற்க தயாராகவுள்ள வெளிநாட்டு மாணவர்களையும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

கேள்வி: வெளிநாட்டு மாணவர்களை இணைத்து கொள்வதன் மூலம் உள்நாட்டு மாணவர்களின் அனுமதி வீதம் குறையும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டுகின்றதே. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: இதனை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையில் 5 சதவீதமே வெளிநாட்டு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.
உதாரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ கற்கை நெறிக்காக 500 உள்நாட்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்களாயின் அவர்களின் 5 சதவீதத்திற்கிணங்க 25 வெளிநாட்டு மாணவர்களே குறித்த கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுவர். எனினும் அரச உடமையாற்ற (தனியார்) பல்கலைக்கழகங்களில் இதனை விட அதிக எண்ணிக்கையான வெளிநாட்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் இலங்கை மாணவர்களுக்கு ஒரு போதும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. இலங்கை மாணவர்களின் கல்வித் தரத்தினையும் வெளிநாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தினையும் இவர்களின் வருகையால் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
அது மாத்திரமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலங்கை மாணவர்களுக்கும் இடையிலான சமய, கலாசார விழுமியங்கள் போன்றவற்றிலான வேறுபாட்டையும் இல்லாமல் செய்யமுடியும்.

கேள்வி: 10 வருட திட்டத்துக்குள் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
பதில்: பல கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். எனினும் இதற்கான நிதி வசதியினையும் அனுமதியினையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே வழங்க வேண்டும்.
எனினும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த மாதம் எங்களது பல்கலைக்கழகத்திற்கு உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க விஜயம் செய்த போது பொறியியல் பீடத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கியதுடன் அதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் தெரிவித்தார்.
எமது பல்கலைக்கழகத்திலுள்ள அனைத்து கற்கை நெறிகளையும் ஆங்கில மொழிக்கு மாற்றி எமது பல்கலைக்கழகத்தில் ஆங்கில புரட்சியை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்கு மருவத்து பீடம் என்று இல்லாமல் மருத்துவ விஞ்ஞான பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம். இதன் மூலம் தாதி கற்கை நெறி முதல் மருத்துவம் வரையான அனைத்து கற்கை நெறிகளையும் எமது பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்க முடியும்.
இக்கற்கை நெறிகளை ஆரம்பிக்க முன்னர் எமது பிரதேசத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் போதனா வைத்தியசாலையின் தரத்திற்கு மாற்ற வேண்டியுள்ளது. இதன் மூலமே மாணவர்களுக்கு தேவையான சிறந்த பயிற்சியினை வழங்க முடியும்.
இதற்காகவேண்டி தனியார் துறையினரின் பங்களிப்புடன் சுகாதார மற்றும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியுடனும் மேற்கொள்ளவுள்ளோம். இதற்கு மேலதிகமாக எமது பிரதேசத்தின் சிறப்புத் தன்மைக்கு அமைய விவசாய விஞ்ஞானம், உணவு உற்பத்தி, தகவல் தொழிநுட்பம் மற்று கடல் சார்ந்த கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இவற்றுக்கான திட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் பூர்த்தி செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு வழங்கப்படும்.

கேள்வி: புதிதாக ஆரம்பிக்கப்படும் கற்கைநெறிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நடைபெறுமா? அல்லது வேறு இடங்களில் முன்னெடுக்கப்படுமா?
பதில்: இனிவரும் காலங்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்து கற்கை நெறிகளும் பீடங்களும் ஒலுவில் வளாகத்திலேயே நடைபெறும். அதற்கு தேவையான இட வசதி இங்கு உண்டு.
முன்னொரு காலத்தில் காடுகளாகவும் பன்றிகள் உறங்கிய இடமாகவும் இருந்த இந்த பிரதேசத்தை தற்போது சுத்தம் செய்துள்ளோம். முன்னர் 80 ஏக்கர்களாகவிருந்த பல்கலைக்கழகம் தற்போது சுமார் 200 ஏக்கர்களைக் கொண்டுள்ளது. இதனால் தேவையான அனைத்து கற்கைகளையும் இங்கேயே ஆரம்பிக்க முடியும்.
கேள்வி: பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் பாரிய பிரச்சினையாக இன்று மாறியுள்ளது. இதனால் சில பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எனினும் இந்த போரட்டத்திற்கு மத்தியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் சீராக இடம்பெறுகின்றன. இது எவ்வாறு சாத்தியமாகியது?
பதில்: எமது பல்கலைக்கழகம் அரசாங்கத்திற்கு சார்பாகவோ தொழிற்சங்கத்திற்கு சார்பாகவோ செயற்படாமல் நடுநிலையாக செயற்படுகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும்.
ஏனெனில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிரதேசத்தின் கல்வி, பொருளாதாரம் போன்ற பல துறைகள் சுமார் 30 வருடங்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தொழிற்சங்க போரட்டத்தில் ஈடுபட்டு எமது
பல்கலைக்கழகத்தை பின்னடைவுக்குள் தள்ள இங்குள்ள விரிவுரையாளர்கள் விரும்பாமையும் ஒரு காரணமாகும்.
எமது பல்கலைக்கழகத்திலுள்ள விரிவுரையாளர்களுக்கு சம்பளத்திற்கு மேலாக பல கொடுப்பனவுகளையும் சலுகைகளையும் நாங்கள் வழங்குகின்றோம்.
கேள்வி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள விரிவுரையாளர்களின் நிலை எவ்வாறு காணப்படுகின்றது?
பதில்: இங்குள்ள விரிவுரையாளர்கள் பெரும்பாலானோர் சிறந்த கல்வி தரத்தையும் ஆளுமையையும் கொண்டவர்களாவுள்ளனர். இவர்களின் கல்வி தரத்தை கலாநிதி வரை உயர்த்துவதற்காக அரசாங்கம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் அனுசரணையுடன் புலமைப்பரிசில் வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பவுள்ளோம்.
இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்த சுமார் 70 – 80 வரையான விரிவுரையாளர்கள் இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். இவர்களின் ஊடாக எமது மாணவர்களின் கல்வி தரத்தை இன்னும் அதிகரிக்க முடியும்.
இவ்வாறான பயிற்சிநெறிகளை விரிவுரையாளர்களுடன் மாத்திரம் நிறுத்தி விடாமல் கல்வி சாரா ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளோம். இவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளியேயும் பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.
பல்கலைக்கழகத்திலுள்ள கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகிய இரு பிரிவினரதும் ஆற்றல்களை விரிவுபடுத்துவதன் மூலமே பல்கலைக்கழகத்தினதும் மாணவர்களினதும் தரத்தினை சர்வதேச தரத்திற்கு அதிகரிக்க முடியும்.

கேள்வி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் புத்தர் சிலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: தற்போது பல்கலைக்கழகத்தில் மூன்று தொகுதி சிங்கள மாணவர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை அடுத்த வருடங்களில் இன்னும் அதிகரிக்கவுள்ளது. இதனால் தங்களின் வணக்க வழிபாடுகளுக்காக புத்தர் சிலை அமைக்க இடம் தருமாறு அனுமதி கோரினர். இதற்கிணங்வே பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இப்பல்கலைக்கழகம் முஸ்லிம் பிரதேசத்தில் அமைந்திருப்பதனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இது தேசிய பல்கலைக்கழகமாகும்.
இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் முஸ்லிம்களுக்கு தொழுகை அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் இங்கு புத்தர் சிலை அமைக்க முடியாது. சிலரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் புத்தர் சிலை அமைப்பதை பெரிதுபடுத்துகின்றனர்.
ஆனால் நாங்கள் புத்தர் சிலையுடன் நின்று விடாமல் பல்லைக்கழக வளவிற்குள் ஒரு சிறிய பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தி இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயம், முஸ்லிம் பள்ளிவாசல் என்பவற்றையும் அமைக்கவுள்ளோம். இதன் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்க முடியும்.

கேள்வி: இப்பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ற பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
பதில்: இதற்காகவேண்டி மாணவர்களின் கல்வி தரத்தையும் விரிவுரையாளர்களின் தரத்தையும் அதிகரித்தால் போதாது. சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் எமது பல்கலைக்கழகத்தை மாற்ற வேண்டும்.
இதற்காக எமது பல்கலைக்கழகத்தின் விடுதி முதல் மைதானம் வரையான அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எமது 10ஆண்டு திட்டதினுள் வகுத்துள்ளோம்.
இதற்கு மேலதிகமாக பல்வேறு தலைப்புகளில் ஆய்வு மாநாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் இடம்பெற்ற ஆய்வு மாநாடாகும். இதில் பல வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டனர்.
யுத்தத்துக்கு பின்னரான சூழ்நிலையில் வெளிநாட்டவர்கள் எமது பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்வதற்கு ஆர்வம் தெரிவிக்கின்றனர். இதனால் இவ்வாறான சர்வதேச ஆய்வு மாநாடுகளை நடத்துவதனூடாக அதிக வெளிநாட்டவர்களை எமது பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்க முடியும். இதனால் எமது பல்கலைக்கழகமும் பிரதேசமும் அபிவிருத்தியடையும்.
இதற்கமைய சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகமாக மாற்றியமைப்பதுடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கையின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களுக்குள் ஒன்றாக வருவதே எமது பிரதான இலக்காகும்.
நேர்காணல்: றிப்தி அலி
படங்கள்: எஸ்.எம்.எம்.ரம்ஸான்

.jpg)


.jpg)
2 hours ago
5 hours ago
9 hours ago
a.m. sahan Wednesday, 10 August 2011 05:00 PM
இன்சால்லாஹ் இந்த திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்.............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago