2025 மே 19, திங்கட்கிழமை

100 கோடி ரூபா செலவழித்து நிறைவேற்றிக் கொள்ள, திவிநெகும சட்டத்தில் என்ன தான் இருக்கிறது?

A.P.Mathan   / 2012 நவம்பர் 05 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மே ரட்டே மினிஸ்ஸூ, தனிகர கெலின்னே பிஸ்ஸு ' என்று ஆரம்பிக்கப்படும் ஒரு சிங்கள பாடல் இருக்கின்றது. இந்நாட்டு மக்கள் பைத்தியக்காரத் தனமாகவே நடந்து கொள்கிறார்கள் என்பதே அந்த பாடல் வரியின் பொருளாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் முக்கிய தலைவர் ஒருவர் இந்த பாடலை விமர்சித்து இருந்தார். இது இலங்கை மக்கள் தம்மையே இழிவு படுத்திக்கொள்ளும் பாடல் என அவர் கூறினார். அவர் நாட்டில் வகிக்கும் அந்தஸ்த்தின் காரணமாகவோ என்னவோ அதன் பின்னர் அந்த பாடலை எந்தவோரு இலத்திரனியல் ஊடகத்திலும் கேட்கக் கூடியதாக இல்லை.

ஆனால், இன்று நாட்டின் அரசியல் களத்தில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தப் பாடல் அவ்வளவு மோசமானதாகவும் கருத முடியாது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மக்களின் பிரச்சினைகள் முக்கியமில்லை. எல்லோருக்கும் ஆளும் கட்சியிலோ அல்லது எதிர்க் கட்சியிலோ தமக்கு இருக்கும் பதவிகள், பட்டங்கள் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்வது தான் முக்கியமானதாக இருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். சர்வாதிகாரம் என அவர்களே வர்ணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விட தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகள் தான் அவர்களுக்கு பாரிய பிரச்சினைகளாக தெரிகின்றன. அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாட்டின் மிகவும் முக்கியமான பிரச்சினையாக அவர்களே கூறும் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தை வற்புறுத்துவதை விட தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயம் முக்கியமானதாக இருக்கிறது.

எனவே அக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகள் அந்த விடயத்தில் தர்க்கித்துக் கொண்டும் காலத்தை கடத்திக் கொண்டும் இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்தாலும் அதன் உறுப்புக் கட்சிகள் தெடர்ந்தும் தனித் தனி கட்சிகளாக இருக்கவே போகின்றன என்ற உண்மையை அக் கட்சிகளின் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை போலும்.

திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக நாட்டில் உருவாகியிருக்கும் நிலைமை மேற்படி பாடலை மேலும் எமக்கு ஞாபகம் ஊட்டிக் கொண்டே இருக்கிறது. நன்றாக இந்த சட்ட மூலத்தை படித்துப் பார்த்தால் தமிழ் கடசிகளும் இடதுசாரி கட்சிகளும் ஏன் இதனை இவ்வளவு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் அரசாங்கம் இதனை நிறைவேற்றிக் கொள்ள ஏன் இவ்வளவு வெறியோடு செயற்பட வேண்டும் என்றும் கேட்கத் தோன்றுகிறது.

இந்தச் சட்ட மூலத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீண்டும் சுவீகரித்துக் கொள்ளப் போவதாக தமிழ் மற்றும் இடதுசாரி கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இச் சட்ட மூலத்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பதிக்கப்படும் வகையில் மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளப் போவதாக வாதிட முடியாது.

உதாரணமாக, வறுமை ஒழிப்புக்காக திவிநெகும திணைக்களம் செயற்படும் என இச்சட்ட மூலத்தில் கூறப்படுகிறது. வறுமை ஒழிப்பானது அரசியலமைப்பின் படி மாகாண சபைகளின் பொறுப்புக்களில் ஒன்றாகும். இது மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதாகும் என தமிழ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வாதிடுகின்றன.

வறுமை ஒழிப்பானது அரசியலமைப்பின் மாகாண சபை பட்டியலில் உள்ள ஒரு விடயம் தான். ஆனால் திவிநெகும சட்ட மூலத்தின் மூலமானது மத்திய அரசாங்கம் வறுமை ஒழிப்பிற்காக செயற்படுவதனால் சிறுபான்மை மக்கள் எவ்வாறு பாதிக்கப்படப் போகிறார்கள்?

அதேவேளை, பெறுபேறுகள் எவ்வாறாக இருப்பினும் வர்த்தக அமைச்சு வறுமை ஒழிப்புக்காகவென செயற்படவில்லையா? அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தின் நோக்கங்களில் வறுமை ஒழிப்பும் ஒன்று அல்லவா? அதுவும் அதிகார பரவலாக்கலுக்கு முரணானதா?

மாகாண சபைகளின் அதிகாரங்களுடன் தொடர்புடைய திவிநெகும சட்ட மூலத்தில் உள்ள மற்றொரு விடயம் தான் உணவுப் பாதுகாப்பு என்ற விடயம். இதுவும் மாகாண சபைகளின் அதிகாரங்களுடன் தொடர்புடையதாக இருந்த போதிலும் மேலும் பல சட்டங்கள் மூலம் மத்திய அரசாங்கமும் உணவு பாதுகாப்பு பணியில் ஈடுபட சட்டம் இடம் கொடுத்து இருக்கிறது. இதனால் அதிகார பரவலாக்கல் முறைக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது.

இவற்றைப் போல் அபிவிருத்திக்கு தேவையான பௌதிக மற்றும் சமூக உட்கட்டமைப்பை ஏற்படுத்தல், சமூக பாதுகாப்பு வலைப் பின்னலை ஏற்படுத்துதல் போன்றவை தான் மாகாண சபை அதிகாரங்களுடன் மோதும் விடயங்களாக திவிநெகும சட்ட மூலத்தில் உள்ளன. சட்டத்தின் கண்ணோட்டத்தில் இவை மாகாண சபைகளின் அதிகாரங்களை மீறுவதாக வாதிடலாம். ஆனால் இவை ஏனைய பல சட்டங்களிலும் வருடாந்தம் சமர்ப்பிக்கப்படும் தேசிய வரவு செலவு திட்டத்திலும் உள்ளவையே தவிர சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் விடயங்கள் அல்ல.

அதேவேளை உத்தேச திவிநெகும திணைக்களத்தில் இணைக்கப்படவிருக்கும் சமுர்த்தி அதிகார சபை, தக்ஸின அதிகார சபை மற்றும் உடரட்ட அதிகார சபை ஆகியவை ஏற்கனவே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த அதிகார சபைகளிடம் உள்ள மேற்படி அதிகாரங்களையே திவிநெகும திணைக்களத்திடம் வழங்கப்படவிருக்கிறது.

எனவே தமிழ் கடசிகளும் இடதுசாரி கட்சிகளும் அரசாங்கம் திவிநெகும சட்ட மூலத்தின் மூலம் ஏதோ தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக போர் பிரகடனப்படுத்திதைப்போல் அதனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கனங்கட்டிக் கொண்டு செயற்படுவது வெறும் அரசியல் நோக்கம் கொண்ட செயலே.

ஆனால் திவிநெகும சட்டத்தின் படி திவிநெகும திணைக்களம் எந்தவொரு நபரையும் அழைத்து அவரது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சொத்து விவரங்களை பற்றிய விவரங்களை கோரலாம். அவர் அவற்றை வழங்காதிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது அதிகார பரவலாக்கல் முறையோடு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அது தனிப்பட்டவர்களின் பொருளாதார சுதந்திரத்தை பாரதூரமாக பாதிக்கும் விடயமாகும்.

அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியிலுள்ள அரசியல் கட்சிகள் அர்த்தமற்ற வகையில் அதிகார பரவலாக்கல் பாதிக்கப்படப்போவதாக வாதிட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதேபோல் இந்தச் சட்ட மூலத்தால் அரசாங்கம் சொல்வதைப் போல் நாட்டு மக்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, அபிவிருத்திக்கு தேவையான பௌதிக மற்றும் சமூக உட்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப் பின்னலை ஏற்படுத்துதல் போன்ற அலங்கார வார்த்தைகளைக் கொண்ட எத்தனையோ சட்டங்களை நாடாளுமன்றம் கடந்த பல தசாப்தங்களாக நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் நாட்டில் வறுமை ஒழிக்கப்படவில்லை.

எனவே அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை நறைவேற்றிக்கொள்ள ஏன் இவ்வளவு அவதிப் படுகிறது என்பது விளங்கவில்லை. சமுர்த்தி வங்கிகளில் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபா பணத்தை அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்றும் எதிர்க் கட்சிகள் வாதிடுகின்றன. அதுவும் சரியான வாதமாக தெரியவில்லை.

சமுர்த்தி வங்கிகளில் இருக்கும் பணத்தை அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான் இந்த சட்டத்தின் நோக்கம் என்றால் இந்த சட்டம் இல்லாமலேயே அது நடைபெறுகிறது. சமுர்த்தி அதிகார சபை ஏற்கனவே அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் தான் இருக்கிறது. அதனை யாரால் தான் தடுக்க முடியும்;?

அவ்வாறு இருக்க, கர்வத்தோடும் அகம்பாவத்தோடும் பிடிவாதத்தோடும் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிப்பது வேடிக்கையாகவும் இருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினை உயர் நீதிமன்றத்துடனான மோதலாகவும் மாறியிருக்கிறது.

திவிநெகும சட்ட மூலத்தை திருத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்றால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தயார் என அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். சர்வஜன வாக்கெடுப்பு நடந்தால் அரசாங்கம் எவ்வாறோ வெற்றி பெறும். அது நியாயமாக நடக்குமா என்பது வேறு விடயம்.

ஆனால் தற்போதைய நிலையில் நாடளாவிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தேர்தல் திணைக்களத்திற்கு குறைந்தது 100 கோடி ரூபாவாவது தேவைப்படும். (கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக அதை விட கூடுதலான தொகை பணம் செலவிடப்பட்டது.) 100 கோடி ரூபா செலவழித்து நறைவேற்றிக்கொள்ள திவிநெகும சட்டத்தில் என்ன தான் இருக்கிறது?

You May Also Like

  Comments - 0

  • jeevesh Tuesday, 06 November 2012 12:53 AM

    100 கோடி போனால் 1000 கோடி வரும்...இதெல்லாம் அரசியலில சாதாரணமப்பா......

    Reply : 0       0

    jeyarajah Tuesday, 06 November 2012 05:42 AM

    இது நூறு கோடியை விட அதிகமாகவே செலவாகும். இந்த செலவீனங்களில் இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணையையும் கருத்தில்கொள்ள வேண்டும். இது ஒரு எல்லை இல்லாத செலவீனமாக கருத வேண்டும். இலங்கையின் ஜனநாயக விம்பம் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். டெயிலி மிரர் காட்டூன் இதனை நன்கு பிரதிபலிக்கின்றது.

    Reply : 0       0

    komesh Tuesday, 06 November 2012 06:21 AM

    முஸ்லீம் காங்கிரஸ்குள் இருக்கும் பிரச்சினை இவருக்கு தெரியவில்லையா?

    Reply : 0       0

    meenavan Wednesday, 07 November 2012 07:53 AM

    பொது நிதியை விரயம் செய்யும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஏதேனும் சட்டமூலம்....முயல் கொம்பு கிடைக்கும் ஆனால் அது கிடையாது.

    Reply : 0       0

    manithan Wednesday, 07 November 2012 12:50 PM

    அரசாங்கம் இவ்வளவு துள்ளுவது ஏனென்று புரியவில்லையா? ஏற்கனவே பொதுமக்களின் பணத்தைக் கையாடுவதாகக் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது உள்ளனவே. எமது நாட்டைச் சேர்ந்த செல்வந்தர் பலர் வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளமை ஏனென்று தெரியாதா? சிறிதளவு பணம் வைத்திருந்தாலும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி மக்களின் பணத்தைப் பிடுங்க முயல்கிறது இக்கேடு கெட்ட அரசாங்கம். திவிநெகுமவின் மூலம் மக்களின் சொத்து விபரங்களை அறிந்து கொண்டால், மக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். இதுதான் ஏற்கனவே வேறுமாதிரி நடந்து கொண்டுதான் இருந்தாலும், அரசாங்கத்தில் இருப்போரும் அதன் ஆதரவாளர்களும் இதன் மூலம் தமக்கு வேண்டியவற்றைக் கொள்ளையடிக்க சட்டப்படி வழி செய்துகொள்ளப் பார்க்கின்றனர். உகண்டாவில் இடி அமீனின் ஆட்சி இதைவிட மேலென நினைக்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X