-கே.சஞ்சயன்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம், தீவிரமாக இறங்கியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அதன் செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானித்து வருகின்ற எவருக்கும் இது ஒன்றும் எதிர்பார்க்கப்படாத செய்தியாக இருக்க முடியாது.
ஏனென்றால், 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும் அவசியமற்றவை என்ற கருத்தை இந்த அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளது. அதைவிட, மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது, வழங்கப்படமாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராக வேண்டிய கட்டம் நெருங்குகின்ற நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை இப்படியே விட்டுவைக்க அரசாங்கம் விரும்பவில்லை. அதேவேளை, அரசாங்கத்தினால் வெளிப்படையாக, 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது இந்தியா தான்.
1987இல் இந்திய - இலங்கை உடன்பாட்டுக்கு அமைய இந்த 13ஆவது திருத்தச்சட்டத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்திருந்தார். அதற்கு முற்றிலும் அடிப்படைக் காரணியாக இருந்தது இந்தியா தான்.
இப்போதும் இந்தியா, தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் நிலையான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறது.
அதாவது வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையாக 13ஆவது திருத்தமே அமைய வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியானதும் இறுதியானதுமான நிலைப்பாடாக உள்ளது. எனவே, இந்தியாவைப் பகைத்துக் கொண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வது முடியாத காரியமாக அரசாங்கத்துக்கு இருந்தது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் மிகத் தந்திரமாக, 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க அல்லது மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்குள் இழுப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து பார்த்தது.
தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட, எதிர்க்குரலை எழுப்பும் கட்சிகளின் கருத்துகளை அரசாங்கத்தினால் சுலபமாக முறியடித்திருக்க முடியும்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க மறுக்க, அதன்வழியே ஐதேகவும் செயற்பட, அரசாங்கத்தின் திட்டம் பிசுபிசுத்துப் போனது.
இந்தநிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தல் வந்து விட்டால், சிக்கலாகி விடும் என்றுணர்ந்த அரசாங்கம், 13ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்தியத் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த முயற்சி ஆரம்பத்திலேயே முடங்கியது.
இதையடுத்து, அரசாங்கத்தில் உள்ள ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி என்பன 13ஆவது திருத்தத்தை ஒழிக்க வலியுறுத்தி தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகின.
இத்தகைய சூழலில், அரசாங்கம் தானாகவே முன்வந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் வகையில், இரண்டு திருத்தங்களை செய்வதற்கு தயாராகியுள்ளது. இதுதொடர்பான யோசனை அரசாங்கத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் யோசனைப்படி, மாகாணங்களை இணைப்பதற்கான சட்டப் பிரிவை நீக்கவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பெரும்பான்மை மாகாணசபைகளின் அங்கீகாரமே போதும் என்று திருத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திருத்தங்களின் மூலம் அரசாங்கம் எந்த நேரத்திலும், காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிப்பது உள்ளிட்ட எல்லாவற்றையுமே செய்ய முடியும். அரசாங்கம் மிகத் தந்திரமான முறையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள முனைவதை அவதானிக்கலாம்.
நேரடியாக இந்தியாவைப் பகைத்துக்கொள்ளாமல், சிங்களத் தேசியவாதச் சிந்தனை கொண்ட கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில், அதேவேளை, 13ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்துவதே அரசின் திட்டம். அதாவது ஒரே கல்லில் மூன்று காய்களை வீழ்த்த முனைகிறது அரசாங்கம்.
ஆனால், 13ஆவது திருத்தத்தில் அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள திருத்தங்கள், அதனைப் பலவீனப்படுத்தும் என்பதை இந்தியா அறியாமல் போகாது. எனினும், இந்தியத் தரப்பில் இருந்து அது பற்றிய எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து, 13ஆவது திருத்தத்தைக் காக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது.
திமுக தலைவர் கருணாநிதி மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் 13ஆவது திருத்தத்தைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் கொழும்பின் முயற்சிகள் விடயத்தில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
அதேவேளை, 13ஆவது திருத்தம், முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அடுத்த என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
மாகாணசபைகளோ, 13ஆவது திருத்தமோ தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக இருக்க முடியாது என்று கூறினாலும், இருக்கின்ற ஆகக்குறைந்த ஓர் அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையும் பறிபோய் விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அவசர அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அழைப்பையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடெல்லிப் பயணத்தையோ இலங்கை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. ஏனென்றால், இந்தியாவின் அதிகாரபூர்வ கருத்து எதுவும் வெளியாகாத நிலையில், சத்தமின்றி கூட்டமைப்பு புதுடெல்லிக்கு அழைத்தது அரசாங்கத்துக்கு சங்கடத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தவே செய்யும்.
13ஆவது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தவோ, ஒழிக்கவோ போவதில்லை என்று ஒரு புறத்தில் வாக்குறுதி கொடுத்த அரசாங்கமே, இன்னொரு புறத்தில் அதன் பற்களைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவை சினங்கொள்ள வைக்கும் செயலாகவே இருக்கும்.
இந்தநிலையில் இந்தியாவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்திக்கவுள்ளதை அரசாங்கம் சந்தேக கண்கொண்டே பார்க்கும்.
13ஆவது திருத்தம் உள்ளிட்ட அரசியலமைப்பில் எந்தத் திருத்தத்தை மேற்கொள்வதாயினும், இனிமேல் தெரிவுக்குழு மூலமே மேற்கொள்ளப்படும் என்று அண்மையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அதற்கு முரணாகவே அரசாங்கம் இப்போது மீண்டும் தனக்கு வசதியான முறையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய முனைகிறது.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் வரும் செப்டெம்பருக்குள் நிறைவேறும் என்று அடித்துச் சொல்கிறது அரசாங்கம். 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்துவதன் மூலம் சிங்களத் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றி கண்டாலும், தமிழர் தரப்பின் அவநம்பிக்கைகளைச் சம்பாதிக்கவே நேரிடும். அது வடமாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதுடன், நல்லிணக்கத்துக்கு சவாலாகவும் அமையலாம்.
ஒருவேளை, அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மாகாணசபைக்கு போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்தால், அரசாங்கம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
ஏனென்றால் அத்தகைய முடிவு, இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்க எண்ணும் நாடுகளின் கனவில் மண்ணை அள்ளிப் போடுவதாக அமையும். அத்தகையதொரு நிலை உருவாவதற்கு இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ விரும்பமாட்டாது.
எனவே தான், அரசாங்கம் இப்போது 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பலவீனமாக்கும் நகர்வுகளில் இறங்கினாலும், அது எந்தளவுக்குச் சாத்தியமாகப் போகிறது என்பதும், அதை இந்தியா எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறது என்பதும் முக்கியமான கேள்விகளாக உள்ளன.