2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

13ஆவது திருத்தம்: அரசாங்கத்தின் சிறு கட்சிகளின் எதிர்ப்பு நிலையானதா?

Menaka Mookandi   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்ய முடியாது என்பது இப்போது தெட்டத்தெளிவாக தெரிகிறது. முடியுமாக இருந்தால் அரசாங்கத்தின் தலைவர்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யாது மாகாண சபைகளிடமிருந்து இரண்டு அதிகாரங்களை மட்டும் பறிக்க சட்டம் கொண்டுவர முற்பட்டு இருக்க மாட்டார்கள்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது அடிப்படையிலேயே அதிகார பரவலாக்கத்திற்கு எதிரான கட்சியாகும். 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதும் அக்கட்சி அதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியது. அதிகார பரவலாக்கலை மனப்பூர்வமாக ஆதரிக்கும் சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கிய காலத்தில் மட்டுமே அக்கட்சி அதிகாரப் பரவலாக்கலை ஆதரித்தது.

அந்தப் பின்னணியில் தான் சில மாதங்களுக்கு முன்னர் 'திவிநெகும' சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை அடுத்து அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என கோஷமெழுப்பினர்.

இவை அனைத்தும் சுட்டிக்காட்டுவது என்னவெனின், அரசாங்கம் முடியுமென்றால் மாகாணசபை முறையை ரத்துச் செய்யும் என்பதே. ஆனால் அரசாங்கத்தின் தலைவர்களால் அதனை செய்ய முடியாது. தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகளே அதற்குக் காரணமாக இருப்பதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில கூறிய போதிலும் சர்வதேச நிலைமைகளே இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது. உள்நாட்டுக் காரணி இரண்டாந்தர தடையாகவே இருக்கிறது.

குறிப்பாக இந்தியா மாகாண சபைகளை ரத்துச் செய்வது ஒரு புறமிருக்க அவற்றின் அதிகாரங்களை குறைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களில் இப்போதைக்கு கை வைக்காமல் இருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மாகாண சபை முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிய போதிலும் இந்திய எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. அதன் பின்னர் அவர்கள் தாம் பயங்கர அதிகாரங்களாக கருதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்யுமாறு கோரிய போதிலும் அரசாங்கம் அதனையும் செய்யவில்லை.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அம்மாகாண சபை தனித் தமிழ் நாடாக பிரிந்துவிடும் என இவர்கள் கூறி வருகின்றார்கள். அவர்கள் மட்டுமல்ல, அரச அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறு கூறுகிறார். ஆனால் இப்போது வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் மாகாண சபைகளுக்கு அவ்வதிகாரங்கள் இருக்கும் நிலையிலேயே அது நடைபெறப்போகிறது.

ஆனால் அதற்காக மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும். அல்லது அவற்றின் அதிகாரங்களை பறிக்க வேண்டும் என்று கூச்சலிடும் இக்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை. உண்ணாவிரதங்களை நடத்தவுமில்;லை. அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டது என்று கூறவுமில்லை.

இந்த விடயத்தில் அரசாங்கம் அல்லாத மற்றவர்கள் தமது கருத்துக்களுக்கு இணங்காவிட்டால் அவர்களை புலிகள் என்பார்கள். துரோகிகள் என்பார்கள். பிரிவினைவாதிகள் என்பார்கள். ஆனால் அரசாங்கத்தை அவர்கள் அவ்வாறு கூறுவதில்லை. ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருக்க தான் விரும்புகிறார்கள்.

அரசாங்கத்திற்கு மாகாண சபைகளை ரத்துச் செய்ய முடியாததற்கு கம்மன்பில கூறுவதைப் போல் உள்ளூர் காரணமொன்றும் இருக்கிறது. மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் தமது கட்சிக்காரர்களின், குறிப்பாக உறவினர்களின்; எதிர்காலம் பாழாய்ப்போய்விடும் என்ற பயமே அந்தக் காரணமாகும்.

தற்போது வட மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளிலும் அதிகாரத்தில் இருப்பது ஆளும் ஐ.ம.சு. கூட்டணியே. அவற்றின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகோதரர்கள், மனைவிமார்கள், பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவினர்களே. எனவே மாகாணசபை முறையை ரத்துச் செய்ய பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரும்புவார்கள் என்று நம்ப முடியாது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் சஷிந்திர ராஜபக்ஷவே ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருக்கிறார். எனவே சபாநாயகரும் இப்போதைக்கு மாகாணசபை முறையை ரத்துச் செய்ய விரும்பாவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் மூத்த சகோதரர் என்பதால் ஜனாதிபதியும் ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தொடர்ந்தும் தமது குடும்பத்திடமே வைத்திருக்க விரும்ப மாட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே  அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் இப்போதைக்கு மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றே அரசாங்கத்தில் பலர்; விரும்புவார்கள். ஆனால் பட்டம் பதவிகபளை தம்மிடமும் தமது உறவினர்களிடமும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மாகாணசபை முறையை விரும்பினாலும் மாகாண சபைகளுக்கு கூடுதலான அதிகாரம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

எனவே தான் திஸ்ஸ வித்தாரண குழுவின் அறிக்கையும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் தூக்கியெறியப்பட்டன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வெறும் மாகாணசபை கட்டமைப்பு மட்டுமே. அதன் மூலம் கிடைக்கும் சம்பளம், வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகள் மட்டுமே.

அரசாங்கத்தில் உள்ள சில சிறுபான்மை கட்சிகளும் மாகாண சபைகளின் அதிகாரங்களை பாதுகாக்க முன்வந்திருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இந்த தைரியம் எங்கிருந்து கிடைத்தது? முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட இக்கட்சிகள் அதிகாரத்தை வெகுவாக மையப்படுத்தும் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபைகளின் அதிகாரங்களை புறக்கணிப்பதாக அவர்களே கூறிய திவிநெகும சட்டத்தையும் ஆதரித்து வாக்களித்தர்கள்.

நிர்ப்பந்தமே அதற்குக் காரணமாக இருந்தது. எனவே இப்போதும் 'வாக்களி இல்லாவிட்டால் வெளியேறு' என்று ஜனாதிபதி கூறும் நிலை வந்தால் முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டீ.பி, தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் அனேகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறிக்கவும் ஆதரவு வழங்கக்கூடும்.

முதலாவதாக அரசாங்கம் அருகருகே உள்ள மாகாண சபைகளுக்கு இணைவதற்கு இருக்கும் அதிகாரத்தையே ரத்துச் செய்யப் போகிறது. அந்த விடயத்தில் இவற்றில் சில கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கவும் கூடும். ஏனெனில் இணைப்பு என்பது அதிகாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதென்ற அதிகார பரவலாக்கலின் குறிக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக இருக்கிறது. அதேவேளை தமிழீழத்தை மனதில் வைத்தே ஆரம்ப காலத்தில் தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்று கோரினர்.

ஆனால், அதற்கு அடுத்ததாக ஒருங்கியல் பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சில மாகாண சபைகளை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கான திருத்தம் வரப் போகிறது. அதனை முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டீ.பி போன்ற கட்சிகள் இப்போதைக்கு எதிர்க்கின்றன. தேசிய காங்கிரஸ் எதையும் காதில் கேட்கக்கூடிய வகையில் கூறவில்லை. எதிர்க்கும் கட்சிகளும் ஜனாதிபதி அதட்டினால் மாறலாம்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறிக்கும் சட்டம் இப்போதைக்கு வராது. சிலவேளை ஒருபோதும் வராது. அது வந்தாலும் இக்கட்சிகளின் நிலைமை இதேபோல் அதட்டினால் ஆதரவு என்பதாகத் தான் இருக்கும் என ஊகிக்கலாம். பொன்சேகாவிற்கு நடந்த கதி நினைவில் இருக்கும்வரை இவர்களில் எவரும் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதில்லை.

அதிகார பரவலாக்கல் தொடர்பான தற்போதைய சர்ச்சை இன்று சில அரசியல் கட்சிகளை தாழ்ந்த நிலைக்கு தள்ளியிருப்பதை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தையும் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமையும் தொடர்புபடுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸம்மில் கடந்த வியாழக்கிழமை கருத்து வெளியிட்டதன் மூலம் தெரிகிறது.

ஷமாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணி உட்பட சில கட்சிகள் சட்டத் திருத்தங்களை கொண்டு வரமுன் இவ்வளவு பாரதூரமான சந்தேகங்கள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவர்களுக்கு இருக்கவில்லை என்பதே விந்தையான விடயமாகும்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு ஹக்கீம் விரும்பியிருந்தால் அவர்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்காது போலும். வந்து இருந்தாலும் அதனை கூறியிருக்க மாட்டார்கள் என்பதைத் தான் முஸம்மில் கூறுகிறார் போலும். இது தமது கருத்தை ஏற்காதவர்களை தண்டிக்க முனையும் மனப்பான்மையே தவிர வேறொன்றுமல்ல. இது கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க முடியாத பலவீனத்தின் வெளிப்பாடே.

மாகாண சபைகளின் அதிகாரங்களை ரத்துச் செய்வதை எதிர்ப்பதன் மூலம் ஹக்கீம், பிரிவினைவாதத்தை ஆதரிப்பதாகவும் அஷ்ரப் பிரிவனைவாதத்தை எதிர்த்தவர் என்றும் முஸம்மில் கூறுகிறர். அதாவது அஷ்ரப், மாகாணங்களிடம் இருந்து அதிகாரங்களை பறிக்க விரும்பியவர் என்பதே இதன் அர்த்தமாகும்;. இது ஒன்றில் அறியாமை, அல்லது மக்கள் கடந்த காலத்தை மறந்திருபார்கள்; என்ற எண்ணமே அல்லாது வேறொன்றும் அல்ல.

2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமஷ்டி அரசியலமைப்பு நகலொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதும் கூட அஷ்ரப் தான் அன்று முழு நாளும் அதற்கு ஆதரவாக அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் வாதாடினார். 1986ஆம் ஆண்டு அஷ்ரப் சமர்ப்பித்த முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது அரசியல் கோரிக்கையும் முஸ்லிம் மாகாண சபையே.
 
அதேவேளை அஷ்ரபின் மறைவை அடுத்து அவரது மரணத்திற்குக் காரணமாகவிருந்த விமான விபத்தைப் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஹக்கீமின் தலைமையில் மு.கா. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்திடம் பலமுறை கோரியும் அவ்வரசாங்கம் அதனை நிராகரித்தது. கடைசி காலத்தில் அஷ்ரபுக்கும் ஸ்ரீ.ல.சு.கவுக்கும் இடையில் நல்ல உறவு இல்லாதிருந்தமையினால் அவர் இறந்தால் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் எனறு ஸ்ரீ.ல.சு.க. நினைத்ததோ தெரியாது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .