2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அலிக்கம்பை வனக்குறவர்: கவனிக்கப்படாத சமூகம்!

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 12:44 - 11     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

வனக் குறவர்கள் - இலங்கையில் கவனிக்கப்படாத ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், வரலாற்றின் மிக நீண்ட காலப் புள்ளியிலிருந்து இவர்கள் இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களே - இலங்கையில் இப்போது வாழும் வனக் குறவர்கள் என்று கூறப்படுகிறது.

குறவர்கள் எப்போதும் காட்டிலும், காட்டை அண்டிய பிரதேசங்களிலுமே வாழ்கின்றனர். பாம்பு பிடித்தல், உடும்பு பிடித்தல், நாய்களைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடுவதில் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். மீன்பிடித்தல், சேனைப் பயிர்ச் செய்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வனக் குறவர்கள் காட்டில் வாழ்வதற்கான காரணம் பற்றிய ஐதீகக் கதையொன்று உள்ளது. இலங்கை மன்னன் தேவநம்பியதீசன் பௌத்த மதத்தைத் தழுவிய பிறகு - மிருகங்களைக் கொல்வதையும், மாமிசம் புசிப்பதையும் தடைசெய்தாராம். ஆனாலும், மன்னனின் உத்தரவை மீறி இந்தச் சமூகத்தினர் ரகசியமாக மாமிசம் புசித்தனராம். இது மன்னன் தேவநம்பியதீசனுக்கு தெரிய வரவே - இவர்களை எச்சரித்து கண்காணாத இடத்துக்குச் சென்று விடுங்கள் என்று உத்தரவிட்டாராம். மன்னனின் உத்தரவுக்குப் பயந்த இவர்கள் - காட்டுப் பகுதிகளுக்குச் சென்று மன்னனின் கண்களில் படாமல் தனித்து வாழத் தொடங்கினார்களாம். இதுதான் வனக் குறவர்கள் பற்றிய ஐதீகக் கதையாகும்.

மேற்படி கதையின்படி, காடுகளில் தனித்து வாழத்தொடங்கியவர்களில் ஒரு பகுதினரே அலிக்கம்பை வனக் குறவர்களாவர்!

ஆரம்ப காலத்தில் மாந்தை, மன்னார், புத்தளம் போன்ற பகுதிகளில் இவர்கள் கூட்டங் கூட்டமாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அநுராதபுரம், பொலநறுவை போன்ற பிரதேசங்களிலும் இவர்கள் வசித்துள்ளார்கள். இன்றும் - அநுராதபுரம், தம்புத்தேகம, குடாகம, கலேவெல, பொலநறுவை போன்ற பகுதிகளில் அளிக்கம்பை வனக் குறவர்களின் உறவினர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த வனக் குறவர்கள், சேனநாயக்க சமுத்திரத் திட்டம் உருவாக்கப்பட்டபோது இடம்பெயரத் தொடங்கினார்கள். ஏனெனில் இத்திட்டத்தி;ன் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, மீண்டும் காடுகளை நோக்கி இவர்கள் இடம்பெயரத் தொடங்கினார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களே இந்த - அலிக்கம்பை வனக் குறவர்கள்! 1942ஆம் ஆண்டு முதல் இவர்கள் அலிக்கம்பைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அலிக்கம்பையிலுள்ள குறவர்களின் தாய்மொழி - தெலுங்கு அல்லது தெலுங்கு போன்றதொரு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழையும் இவர்கள் மிக நன்றாகப் பேசுகின்றனர். இருந்தபோதும், இவர்கள் தமக்கிடையில் அவர்களுடைய தாய் மொழியிலேயே உரையாடிக் கொள்கின்றார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், இவர்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவமில்லை!

அடிப்படையில் வனக் குறவர்களுக்கு சமயம் அல்லது மதம் என்று எதுவுமில்லை! ஆனால், அலிக்கம்பையிலுள்ள இவர்கள் 1950ஆம் ஆண்டுகளில் சிறிது சிறிதாக கிறிஸ்தவ மதத்தில் இணைந்து – அந்த மதத்தின் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். இவ்வாறு இவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இணையக் காரணமாக இருந்தவர், அப்போது கிழக்கு மாகாணத்தில் பணிபுரிந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை குக் என்பராவார்!

நாடோடிகளாக அலைந்து திரிந்த அலிக்கம்பை வனக் குறவர்களின் வாழ்க்கை முறையை அருட்தந்தை குக் மாற்றினார். இந்த மக்களுக்குத் தேவையான பல அடிப்படை வசதிகளை அவர் செய்து கொடுத்தார். இவர்களை நிரந்தரமாக – அலிக்கம்பையில் வசிக்கப் பழக்கினார்.

அந்தவகையில், அலிக்கம்பை வனக் குறவர்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியவராக அருட்தந்தை குக் அவர்களைக் கூறலாம். இந்த மக்களும் - அருட்தந்தை அவர்களை இன்னும் ஞாபகம் வைத்துப் பேசுகின்றார்கள்.

அலிக்கம்பையில் இப்போது 265 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தச் சனத்தொகை 849 ஆகும்.

நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் இவர்களையும் விட்டு வைக்கவில்லை. 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, இவர்கள் திருக்கோயில் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு 11 வருடங்கள் முகாம்களில் வாழ்ந்தனர். அதன்பிறகு
2001ஆம் ஆண்டளவிலேயே இவர்கள் மீண்டும் தமது வாழ்விடமான அலிக்கம்பைக்குத் திரும்பினார்கள்.  

எது எவ்வாறிருந்த போதும், அலிக்கம்பை வனக் குறவர்களின் வாழ்க்கை முறையில் இப்போது நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இவர்கள் தமது அடிப்படை விடயங்களை மாற்ற அல்லது இழக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுடைய கலாசாரத்தில் 60 வீதமானவையே இப்போது இவர்களிடம் எஞ்சியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் காரணங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது, இந்த சமூகத்தின் இளைஞர், யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள கல்வி அறிவாகும்!

குறவர்களின் கலாசாரத்தில் இரண்டு விடயங்கள் பின்னிப் பிணைந்தவை. ஒன்று பாம்பாட்டுதல் மற்றையது குறி சொல்லுதல்! வயிற்றுப் பிழைப்புக்காக இவர்கள் இந்த விடயங்களை தொழிலாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது – அலிக்கம்பைக் குறவர்களிடமிருந்து பாம்பாட்டுதலும் குறி சொல்லுதலும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டதென்றே கூற வேண்டியுள்ளது.

அலிக்கம்பையில் பாம்பாட்டுபவர்கள் இருவர் மட்டுமே இப்போது உள்ளதாக அந்தக் கிராமத்தவர்கள் கூறுகின்றார்கள். நாம் இங்கு வந்தபோது, அந்தப் பாம்பாட்டுபவர்களைச் சந்திக்க முடியவில்லை. தொழிலுக்காக வெளியே சென்றிருந்தார்கள். ஆனால், நாய்களுடன் வேட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் சிலரை நமது கமராவுக்குள் பதிவு செய்ய முடிந்தது! முன்னரெல்லாம், வேட்டைக்கு நடந்து சென்று வரும் இவர்கள், இப்போது – தமது வாகனத்தில் சென்று வருவதைக் காண ஆச்சரியமாக இருந்தது!

அலிக்கம்பையிலுள்ள முதிய வனக்குரவர்களின் பெயர்கள் விநோதமானவை! ரங்கன் இரண்டு பன்றி தூக்கியன், ஜடல் சின்னப்பு வெடிக்காரன், புலிக்கடியன் கருப்பையா, வெங்கிட்டன் குள்ளன், செலம்பன் கொச்சிக்காயன், ரேடியோ தும்பன், கல்கட்டி தும்மக்கா, கொச்சிக்காயன் மல்லி என்று அவர்களின் பெயர்கள் விநோதமானவை! ஆனால், இப்போதுள்ள இளையவர்கள் நமக்குத் தெரிந்த சாதாரணமான பெயர்களைக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஜெகன், விமல், தாசியஸ் என்று அந்தப் பெயர்கள் நமக்குப் பழக்கப்பட்டவை!

இந்த அலிக்கம்பைக் கிராமம் - ஆலயடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்டது. அக்கரைப்பற்றிலிருந்து அலிக்கம்பைக்கு சுமார் 14 கிலோமீற்றர் பயணிக்க வேண்டும். அலிக்கம்பை ஓர் ஒதுக்குப் புறமான பகுதி. இங்கு மின்சாரம், நல்ல குடிநீர், வைத்தியசாலை, தபால் அலுவலகம் என்று எதுவுமே இல்லை! இவர்களின் வீடுகள் மிகவும் சிறியவை. குடிசை வாழ்வு மிகவும் பரிதாபகரமானது. ஆனால், அண்மைக் காலமாக இங்கு பாதை வசதிகள் ஓரளவு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இவைகளெல்லாம் ஒரு புறமிருக்க, சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அலிக்கம்பை வனக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே - ஆலயடிவேம்பு பிரதேசசபையின் உதவித் தவிசாளராக இருக்கிறார். இவர் பெயர் ஜெகன்! துடிப்புள்ள இளைஞன். அலிக்கம்பை மக்களின் வாழ்வில் மாற்றங்கள் வரவேண்டுமென்று நிறையவே ஆசைப்படுகின்றார்.

அலிக்கம்பையில் 1981ஆம் ஆண்டு 'தேவகிராமம்' எனும் மாதிரிக் கிராமமொன்று அமைக்கப்பட்டது. 95 வீடுகள் மற்றும் ஏனைய பல வசதிகளுடன் உருவான இந்த மாதிரிக் கிராமமானது, அலிக்கம்பை வனக்குறவர் வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்தியதொரு விடயமாகக் கருதப்படுகிறது.

குறவர் இனப் பெண்கள் தமது ஆபரணங்களாக மணிமாலைகளையே விரும்பி அணிவார்கள். காதுகளில் செம்பாலான தோடுகளை அணிவார்கள். ஆனால், நாம் அலிக்கம்பை சென்றபோது, ஒருசில முதிய பெண்கள் மட்டுமே இவ்வாறான ஆபரணங்களோடு இருந்ததை அவதானிக்க முடிந்தது.

அலிக்கம்பை கிராமத்தில் நம்மைச் சந்தித்த மக்கள் - அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் பற்றி நம்மிடம் நிறையவே பேசினார்கள். இதில் இளைஞர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட ஒரு விடயம் உணர்வுபூர்வமானது. அதாவது, 'குறவர்கள்' எனும் சொல்லால் பிற சமூகத்தவர்கள் தம்மை அழைப்பதைத் தவிர்க்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அந்த வார்த்தை தங்களை இழிவுபடுத்துவதாகவும், அதற்குப் பதிலாக 'இலங்கைத் தமிழர்' அல்லது 'இலங்கைத் தெலுங்கர்' எனும் சொற்களைப் பயன்படுத்தி தம்மை அழைக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

நாம் கூட 'குறவர்' எனும் வார்த்தையினையே இப்போது பயன்படுத்துகின்றோம். காரணம், அவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அதனால் புழக்கத்திலுள்ள சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.

ஆனால், அவர்களை வேறு சொல்லால் அழைக்க அவர்கள் விரும்பும் போது, அதை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

இன்னுமொரு முறை நாம் அலிக்கம்பை செல்லும் போது – அந்த மக்களின் வாழ்வில் ஒரு வசந்தத்தைக் காண ஆசைப்படுகின்றோம்!


  Comments - 11

  • Elangovan Wednesday, 09 February 2011 06:32 PM

    வாழ்த்துக்கள்......இது போன்ற தரம்மிக்கதான ஆக்கங்களை ஆராய்ந்து எழுதக்கூடிய அவா உங்களுக்கு வந்தமைக்கு...இது போன்ற தரமான சமூகம் சார்ந்த ஆக்கங்கள் தொடர வேண்டும்...உங்கள் பணி உயரட்டும்.....நன்றி...அருமையான ஒரு தேடல்....உங்கள் தேடல்...தீவிரமாகட்டும்.....

    Reply : 0       0

    Welitara Wednesday, 09 February 2011 09:09 PM

    அருமையான கட்டுரை.

    Reply : 0       0

    K.Ponnuthurai Wednesday, 09 February 2011 10:55 PM

    நல்ல அருமையான ஒரு சமூகத்தின் தேடல் முயற்சி வாழ்த்துகள்.
    =பொன்னுத்துரை=

    Reply : 0       0

    ilmrizvi@yahoo.com Sunday, 13 February 2011 06:48 PM

    இலங்கையில் இப்படி ஒரு சமுகம் இருக்கின்றது என்பதை உலகுக்கு எடுத்து கட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். இப்படியான முயற்சிகள் தொடரட்டும்.

    Reply : 0       0

    EKSaar Monday, 14 February 2011 05:25 AM

    மப்ரூக்,
    உங்களின் மீதிருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் கட்டுரை.. வாழ்த்துக்கள்.. இன்னும் எதிர்பார்க்கிறேன்..

    Reply : 0       0

    Jeyapragash Thursday, 17 February 2011 03:38 AM

    மிகச் சிறப்பான கட்டுரை....
    பாராட்டுக்கள் மப்ரூக்

    Reply : 0       0

    ruthra Friday, 18 February 2011 07:07 PM

    இந்த மக்களின் வாழ்விலும் புதிய மாற்றங்கள் ஏற்படவேண்டும். இந்த சமூகத்தினரிடமிருந்தும் பல திறமையானவர்கள் வெளிவரவேண்டும். நல்லதொரு தேடல் முயற்சி..

    Reply : 0       0

    Hijas Tuesday, 22 February 2011 05:10 AM

    நல்லதொரு பதிவு மேலும் இது போன்ற விடயங்களை எதிர்பார்க்கின்றோம்.....
    http://pottuvil.info/web

    Reply : 0       0

    t sothilingam Friday, 22 April 2011 08:38 AM

    நல்ல கட்டுரை. நன்றி

    Reply : 0       0

    பரமானந்தம் Tuesday, 18 March 2014 08:20 AM

    இவர்களை நான் திருமலையில் அதிகமாகக் கண்டுள்ளேன். மூதூர் வாகரை பகுதியிலும் இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர். அருமையான ஆய்வது, வாழ்துக்கள்...

    Reply : 0       0

    Razzak Sunday, 24 March 2019 09:35 AM

    அவர்களி Drகூட இருக்கிறார்கள் என்பது இன்னும் ஒர் அதிசயம்

    0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .