Super User / 2011 மார்ச் 22 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
கடந்தவாரம் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் பெரும்பாலான கட்சிகளுக்கு அதிர்ச்சியான செய்தியையே சொல்லியுள்ளன.
இந்தத் தேர்தலில் தாமே வெற்றி பெற்றதாக பெரும்பாலான கட்சிகள் சொல்லிக் கொள்கின்றன.
ஏதாவது ஒரு வசதியான புள்ளிவிபரத்தையும் அவை பயன்படுத்திக் கொள்கின்றன..jpg)
இந்தத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாக வாய்ப்பில்லை என்றே முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 66.82 வீதமான வாக்காளர்கள் வாக்களித்திருப்பது முதலாவது அதிர்ச்சி.
இம்முறை 50 வீதம் வரையான வாக்குப்பதிவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதை மீறி பெருமளவானோர் வாக்களித்துள்ளனர்.
பிற்பகல் 2 மணி வரை 30 வீதமே பதிவான வாக்குகள், அடுத்த 2 மணி நேரத்தில் எப்படி 65 வீதத்தை எட்டியது என்று ஐ.தே.க சந்தேகம் கிளப்பியுள்ளது.
தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சுறுசுறுப்பாகவே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கிலும். கிழக்கிலும் தமிழ்ப் பகுதிகளில் தான் வாக்களிப்பு மந்தநிலையில் இருந்துள்ளது.
இதிலிருந்து அங்குள்ள மக்கள் வாக்களிப்பின் மீது ஆர்வம் கொள்ளும் நிலை இன்னமும் ஏற்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த மந்தநிலை கடந்த பல தேர்தல்களிலும் காணப்பட்டது தான்.
அதேவேளை, சிங்கள, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வாக்களிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாகவே இருந்துள்ளது.
இது முக்கியமானதொரு மாற்றமாக இருந்த போதும் - அதையிட்டு எந்தவொரு கட்சியும் நிம்மதி கொள்ள முடியாத நிலையே உள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச வளங்களை மிகத் தாராளமாகவே பயன்படுத்தியது. அதைத் தேர்தல் ஆணையாளர் தனது அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரம் தனது கையில் இருப்பதால் பாரிய வெற்றியை எதிர்பார்த்தது ஆளும்கட்சி.
ஐ.தே.க.வோ வேறு விதமாகக் கணக்குப் போட்டது. உள்ளூராட்சி சபைகளில் காணப்பட்ட நிர்வாகச் சீர்க்கேடுகளும். மோசடிகளும், விலைவாசி உயர்வு, பொருளாதாரத் தேக்கம் போன்றன காரணமாகவும் ஏற்பட்ட அரச வெறுப்பு நிலை தமக்குச் சாதகமாக மாறும் என்று அது கணக்குப் போட்டது.
ஆளும்கட்சியின் பின்னடைவு - தமக்கு வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை ஐ.தே.க.வுக்கு இருந்தது. அவர்களின் அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
அதேவேளை இனிமேல் கூட்டணி அமைப்பதில்லை - தனியே தான் போட்டியிடுவோம் என்று களமிறங்கிய ஜே.வி.பியின் எதிர்பார்ப்பும் பலிக்கவில்லை.
பொதுவாக, இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சியினது எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்பதே உண்மை.
அப்படியானால் யார் வெற்றி பெற்றது என்ற கேள்வி வருகிறதா?
உண்மை - உள்ளூராட்சித் தேர்தல் வெளிப்படுத்தியுள்ள செய்தி தான் இந்தக் கேள்விக்கான பதிலாக அமையப் போகிறது.
இலங்கையில் மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளுக்கே கடந்த 17ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியது.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால். கடந்த முறையைப் போன்று இந்த முறை எந்தவொரு சபையிலும் இழுபறி நிலை ஏற்படவில்லை.
கடந்தமுறை தேர்தலில் பல உள்ளூராட்சி சபைகளில் ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த போதும் அது பல சபைகளில் ஜே.வி.பியுடன் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டியிருந்தது.
ஆனால் இந்தமுறை அப்படியான கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை எங்கும் உருவாகவில்லை என்பது முக்கியமானது.
233 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 205 சபைகள் கிடைத்து பெரு வெற்றி என்றே கூறப்படுகிறது.
ஆனால் அதற்கும் அப்பால், இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் வாக்கு வங்கி உடையத் தொடங்கியுள்ளதை கவனிக்க வேண்டும் - அதுவே முக்கியமானது.
2006 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 46.45 வீதமான வாக்குகளையே பெற்றிருந்தது.
கடந்த வருடம் ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 58.77 வீத வாக்குகளையும், ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 60.33 வீத வாக்குகளையும் ஆளும்கட்சி பெற்றிருந்தது.
ஆளும்கட்சிக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த வாக்குகள், இம்முறை 55.65 வீதமாகக் குறைந்து விட்டது. கடந்த ஒருவருடத்தில் ஆளும்கட்சி 5 வீதமான வாக்குகளை இழந்துள்ளது. இது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகவே கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உள்ளூராட்சி சபைகளில் தேர்தல் நடைபெறாது போனாலும்- ஆளும்கட்சியைப் பொறுத்தவரை சகல பகுதிகளிலும் போட்டியிட்டிருந்தது.
எனவே ஏனைய உள்ளூராட்சிசபைகளில் இந்த வாக்களிப்பு வீதத்தில் பெரும் மாற்றம் இருக்கும் என்று கருத முடியாது.
ஆளும்கட்சியின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்கதொரு சரிவு தென்படுவதை எவரும் நிராகரிக்க முடியாது.
இந்தவகையில் பார்க்கும்போது, 205 உள்ளூராட்சி சபைகளை அது கைப்பற்றியிருந்தாலும்- அதைப் பெரியதொரு வெற்றியாக கருதமுடியாது.
சரிவைச் சந்திக்கும் வாக்கு வங்கியைக் காப்பாற்ற வேண்டிய முயற்சிகளில் இறங்க வேண்டிய கட்டத்தல் அது உள்ளது.
அடுத்து ஐதேகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் வெறும் 9 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்றியுள்ளது.
அதைவிடவும் அதிகமாக – 12 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் ஐதேக பின்தங்கி விட்டதாக கருத முடியாது. ஐ.தே.கவின் வாக்கு வங்கி உடைந்து போயுள்ளதா என்று பார்ப்பதே முக்கியமானது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் ஐதேகவின் வாக்கு வங்கி அவ்வளவாக சரிவைச் சந்திக்கவில்லை என்பதே உண்மை. அதன் பலம் மெல்ல உயர்ந்து வருவதாகவே தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஐ.தே.கவுக்கு 2006 உள்ளூராட்சித் தேர்தலில் நாடெங்கும் 33.11வீத வாக்குகள் கிடைத்தன. கடந்து ஆண்டு பொதுத்தேர்தலில் ஐதேகவுக்கு 29.34 வீதமான வாக்குகள் தான் கிடைத்தன.
ஆனால் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு 33.81 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது அந்தக் கட்சி ஆறுதல் அடையக் கூடியதொரு விடயமாகும்.
ஆனால் 9 உள்ளூராட்சி சபைகளையே ஐதேகவால் கைப்பற்றி முடிந்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த 18 சபைகளில் அது ஆட்சியை இழந்துள்ளது. இது ஐதேகவினரால் ஜீரணிக்க முடியாத விடயமாகவே இருக்கும்.
ஐ.தே.கவைப் பொறுத்தவரையில் 38 உள்ளூராட்சி சபைகளில் 2000 இற்கும் குறைவான வாக்குகளால் தான் ஆட்சி இழந்துள்ளது.
கொலன்ன பிரதேசசபையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும்இ ஹொரண நகரசபையில் 62 வாக்குகளால் தோல்வியைச் சந்தித்ததும் ஐதேகவின் உச்சகட்ட சோகமாகும்.
தங்காலை பிரதேசசபையை 100 வாக்குக்களால் ஐ.தே.க. இழந்துள்ளது. இது தவிர, தெரணியகல, மீரிகம, ஹற்றன் - டிக்கோயா, அப்புத்தளை, ஜாஎல, அம்பலாங்கொட போன்ற உள்ளூராட்சி சபைகளையும் ஐ.தே.க. நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தான் இழந்துள்ளது.
இந்தத் தேர்தல் ஐதேகவுக்குள் தலைமைத்துவ பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இழந்து போன வாக்கு வங்கியை ஓரளவுக்கு தன்பக்கம் திருப்புவதில் ஐதேக வெற்றி காணத் தொடங்கியுள்ளதற்காக மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
அதேவேளை இந்தத் தேர்தலில் மோசமான அடிவாங்கிய கட்சி என்றால் அது ஜே.வி.பி தான்.
திஸ்ஸமகராம பிரதேசசபையை 2002 தொடக்கம் அது தனது கையில் வைத்திருந்தது. ஆனால் இம்முறை அது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அங்கு 2006 இல் 44.13 வீதமான வாக்குகளைப் பெற்ற ஜே.வி.பிக்கு இம்முறை வெறும் 25.31 வீத வாக்குகளும் 2 ஆசனங்களுமே கிடைத்துள்ளன.
நாடளாவிய ரீதியில் ஜேவிபிக்கு வாக்குகள் குறைந்து விட்டன.
வழக்கம்போலவே இந்தத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
ஆனால் 2006 இல் 11.1 வீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜே.வி.பி, இம்முறை வெறும் 3.02 வீத வாக்குகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
எந்தவொரு சபைகளிலும் அதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இது ஜே.வி.பிக்கு மோசமானதொரு தேர்தலாக அமைந்தாலும் அதன் தலைவர்கள் தமது தோல்வியை ஏற்கத் தயாரில்லை..jpg)
ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு தமது தோல்வியை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள்.
அடுத்து தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
அம்பாறையில் ஆலையடிவேம்பு பிரதேசபையில் தமிழரசுக் கட்சிக்கு கடந்தமுறையை விடவும் கிட்டத்தட்ட 50 வீத வாக்குகள் குறைந்துள்ளன.
நாவிதன்வெளி பிரதேசசபையில் தமிழரசுக் கட்சி 2006 இல் 62.44 வீத வாக்குகளைப் பெற்றது.
ஆனால் இம்முறை 37.96 வீத வாக்குகளையே அது பெற்றுள்ளது. மட்டக்களப்பு-கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை விடவும் குறைவான வாக்குகளையே தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது.
திருகோணமலை நகரசபையில் 75.06 வீதத்தில் இருந்து 59.43 வீதமாகவும், கிண்ணியா நகரசபையில் 9.04 வீதத்தில் இருந்து 4.76 வீதமாகவும், மூதூர் பிரதேசசபையில் 41.35 வீதத்தில் இருந்து 30.11 வீதமாகவும், தமிழரசுக் கட்சியின் வாக்குப் பலம் சரிந்துள்ளது.
வடக்கில் மாந்தைகிழக்கு பிரதேசபையிலும், மன்னார், வவுனியாவில் 8 சபைகளிலும் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை அது இம்முறை பெறவில்லை.
இந்தவகையில் தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியதையிட்டு பெருமை கொள்ள முடியாது.
அடுத்து முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகளவு சபைகளில் தனித்தே போட்டியிட்ட போதும் 4 சபைகளையே அது கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ளது. அம்பாறையில் கடந்தமுறை பெற்ற வாக்குகளில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் முஸ்லிம் பிரதேசங்களிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்த்தளவுக்கு மக்கள் ஆதரவைப் பெறவில்லை.
ஆனாலும் 1.48 வீத வாக்குகளுடன் அது 50 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.
அதாவுல்லா தனது மகனுக்காகவே அக்கரைப்பற்று பிரதேசசபையை மாநகரசபையாக தரமுயர்த்தினார் என விமர்சிக்கப்பட்டது,
அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஆளும்கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நுவரெலிய பிரதேசசபையில் மட்டும் மலையக மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கில் போட்டியிட்டு 3 ஆசனங்களையே பெற முடிந்தது. ஆனாலும் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அந்தக் கட்சி கூறியிருக்கிறது.
பொதுவாக எந்தக் கட்சியுமே இந்தத் தேர்தலில் தாம் சந்தித்த சரிவை அல்லது தோல்வியை ஒப்புக் கொள்ளவும் இல்லை. அதை ஏற்கத் தயாராகவும் இல்லை.
எந்தக் கட்சியுமே இந்தத் தேர்தலையிட்டு முற்றிலும் திருப்தியடைய முடியாது. அது தான் உண்மை.
பெரும்பாலான கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது- இது தான் இந்தத் தேர்தலின் சிறப்பம்சம்.
43 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
8 hours ago