Super User / 2011 ஏப்ரல் 18 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்யன்)
போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்பட்டு விட்டது..jpg)
அதன் பிரதி உடனடியாகவே நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில் சுமார் 120 பக்கங்கள் நிபுணர்கள் குழுவின் விசாரணை பற்றிய அறிக்கை இடம்பெற்றுள்ளது. ஏனைய பக்கங்களில் பல்வேறு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 20 ஆவது பக்கத்தில் இருந்து 51வது பக்கம் வரை மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள், போர்க்குற்றங்கள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 31 ஆம் திகதியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், அது ஊடகங்களுக்கு கசிந்துள்ளதால் ஐ.நா பொதுச்செயலரின் செயலகம் குழப்பமடைந்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் அது குறித்த இலங்கை அரசின் கருத்தையும் இணைத்தே வெளியிட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் திட்டமிட்டிருந்தார். அந்த முயற்சி குழம்பி விட்டது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளியாகியுள்ளது. அதில் அரசதரப்பு மீது 5 குற்றச்சாட்டுகளும் விடுதலைப் புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளதான ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் அல்லது மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பித்து மேல் நடவடிக்கை எடுக்கலாம்.
அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் சிக்கல்களை எதிர்கொள்ளப் போகிறவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
ஏனென்றால் புலிகளின் தலைமையை முற்றாக அழித்து விட்டதாக அரசாங்கம் கூறுகிறது. வெளிநாடுகளில் இயங்கியவர்கள் கூட இப்போது தம்மை வெளிப்படுத்திக கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
எனவே ஆறு குற்றச்சாட்டுகள் புலிகள் மீது இருந்தாலும் அதையிட்டு அவர்களோ, அவர்களைச் சார்ந்துள்ளவர்களோ கவலைப்படப் போவதில்லை.
இப்போது பிரச்சினைக்குள் சிக்கியுள்ள தரப்புகள் இரண்டு மட்டும் தான். ஒன்று இலங்கை அரசாங்கம். மற்றது ஐ.நா.
இலங்கை அரசு மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால், அதை எதிர்கொள்வது, முறியடிப்பது, தப்பித்துக் கொள்வது என்று இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறியுள்ளதாக குற்றச்சாட்டு இருப்பதால் அதற்குப் பொறுப்பானவர்களும் இப்போது சிக்கலில் மாட்டிக் கொள்ளவுள்ளனர்.
இந்த விவகாரம் வரும் போது போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரமும் அதனோடு தொடர்புடைய ஐ.நா அதிகாரிகளின் பொறுப்பின்மையும் வெளிப்படுத்தப்படலாம்.
ஐ.நா விவகாரம் இப்போது ஒருபுறத்தில் இருக்க, இந்த அறிக்கை வெளியான கையோடு அதற்கெதிரான போரை இலங்கை அரசு தொடங்கி விட்டது. உடனடியாகவே அது பொய்யானது, குறைபாடுடையது என்று நிராகரித்தது அரசாங்கம்.
அரசாங்கம், இந்த அறிக்கையை முறிடியக்க இப்போது பலமுனைகளில் இருந்து காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டது.
முதலாவது உள்நாட்டில் எதிர்ப்புகளை தெரிவிப்பது. முன்னரைப் போல வீதிகளில் மக்களை இறக்கி விட்டுப் போராட்டங்களை நடத்த அரசாங்கம் இம்முறை முனையவில்லை.
மே தினத்தை இந்த அறிக்கைக்கு எதிரான நாளாக பயன்படுத்திக் கொள்ளவும், தனது பலத்தை ஐ.நாவுக்கு காட்டவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில் மக்கள் தம்முடன் தான் இருக்கின்றனர் என்று காட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கின்ற முயற்சி இது. இது ஒரு வகையில் ஐ.நாவுடன் முட்டி மோதிப் பார்க்கின்ற விவகாரமாகவே கருதப்படும்.
அடுத்து திட்டமிட்டபடி எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. முக்கிய தலைவர்களிடம் சாட்சியங்கள் பெறப்படவில்லை. சாட்சியங்களைத் தொகுக்கும் பணி நடக்கிறது.
அதற்கு மேலும் காலஅவகாசம் தேவை என்றும், அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில்- திடீரென அந்த அறிக்கை குறிப்பிட்ட காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்று நிபுணர்கள் குழு நிராகரித்துள்ள நிலையில், இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் எந்தளவுக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.
ஏற்கனவே அதன் விசாரணைகள் குறித்து கேள்வி எழுகின்ற நிலையில், இப்போது அவசரமாக இந்த அறிக்கையை ஆணைக்குழு தயார் செய்தால் அதுவும் கூட குறைபாடுகள் நிறைந்த அறிக்கை என்று சர்வதேசம் விவரிக்க வசதியாகி விடும். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கை பயன்மிக்கதாக அமையுமா என்பது சந்தேகம் தான்.
அடுத்து போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான வெள்ளை அறிக்கை ஒன்றையும் அரசாங்கம் தயாரிக்கவுள்ளது. அதில் போர் பற்றிய விபரங்களை வெளியிடவும் உள்ளது.
வெள்ளை அறிக்கை என்பது உண்மைகளை வெளிப்படுத்தும் ஒன்றாகும். எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கும் அரசாங்கம், வெள்ளை அறிக்கையில் எந்தளவு உண்மைகளை வெளிப்படுத்தப் போகிறது என்று கேள்வி எழுகிறது.
இந்தநிலையில் உள்ளக ரீதியாக நிபுணர்கள் குழுவை எதிர்க்க முறியடிக்க எடுக்கப்படும் அரசாங்கத்தின் முயற்சிகள் செயற்திறன் வாய்ந்தவையாக அமையுமா என்ற சந்தேகம் இப்போதே வலுப்பெற்றுள்ளது.
இரண்டாவது கட்டமாக, தமக்கு ஆதரவான அணியொன்றை வெளிநாடுகளில் உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா. மலேஷியா, போன்ற நாடுகளுக்கும் அணிசேரா நாடுகளுக்கும் தூதுக்குழுகளை அனுப்பி தமது பக்கம் சாய்ப்பதற்கு முயற்சிகள் செய்யப் போகிறது.
அதைவிட சீனா, ரஷ்யாவின் பாதுகாப்பைத் தேடவும் இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது. பாதுகாப்புச் சபையிலோ, மனித உரிமைகள் பேரவையிலோ இந்தப் பிரச்சினை விவாதத்துக்கு வந்தால், இந்த இரு நாடுகளினதும் வீட்டோ அதிகாரம் தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறது இலங்கை அரசு.
எத்தனை நாடுகளை இலங்கை அரசு தனது பக்கம் இழுக்க முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் சீனாவையும், ரஷ்யாவையும் துணைக்கு அழைப்பதில் இலங்கைக்கு அவ்வளவு சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
அப்படியானதொரு நிலை வந்தால் நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஐ.நா பொதுச்செயலரால் நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அது மேற்குலக நாடுகளுக்கும் ஒரு சவாலாக அமைந்து விடும்.
அதேவேளை, இன்னொரு விடயம் அரங்கேறுவதைக் காணமுடிகிறது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் இலங்கை அரசின் தரப்புகள் இது பக்கச்சார்பானது என்றும், புலிகளின் கருத்துக்களை மட்டும் உள்ளடக்கியது என்றும் விமர்சித்து வருகின்றன. இலங்கை அரசும் தமது கருத்துகளை அது உள்ளடக்கவில்லை என்று கூறியுள்ளது.
நிபுணர்கள் குழுவை நிராகரித்த அரசாங்கம் அதனை சுதந்திரமான முறையில் இங்கு வந்து விசாரிக்க அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு சாட்சியங்களை அனுப்பவும் இல்லை. அதையெல்லாம் செய்த பின்னர் இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்தால், அவ்வறிக்கையை பக்கச் சார்பானதாக கருதலாம்.
ஆனால் நிபுணர்கள் குழுவை புறக்கணித்து விட்டு- அதன் விசாரணைகளைத் தடுத்து விட்டு புலிகள் பக்கம் சார்ந்திருப்பதாக கூறுவதில் அர்த்தம் இல்லை.
அடுத்து போரில் எந்த மீறல்களும் நடக்கவில்லை என்று உறுதியாக கூறும் அரசாங்கம் அதை சுதந்திரமான முறையில் விசாரிக்க இடமளித்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது.
ஐ.நா நிபுணர்கள் குழுவை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தவறுகளை இழைத்து விட்டது. இப்போது பல்வேறு தரப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து மேல் நடவடிக்கைகளைத் தடுக்க முனைகிறது.
இப்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் மீது குற்றம்சாட்டும் அறிக்கை உலகம் முழுவதும் போய்விட்டது. அது இலங்கையின் பெயரை கெடுத்து விட்டது.
எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் துணையுடன் முறியடித்தாலும் கூட, இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள 'கறை'யை அரசாங்கத்தால் போக்குவது கடினம்.
2 hours ago
5 hours ago
9 hours ago
MAHSMALI Tuesday, 19 April 2011 02:08 PM
I don't thing anything going to happened against Sri Lanaka. Because, World poltics will play big role in this matter. just like to show the world UN done somthing but we can't do anything against veto country. YOU SEE ISRAEL , It'S BELONGS TO AMERICA AND WESTERN PUPPETS. SAME LAW WILL APPLY TO SRI LANKA BY RUSSIA AND CHINA. I FEEL SORRY TO MY FELLOW TAMILIAN.
Reply : 0 0
Alga Friday, 22 April 2011 04:25 PM
Dear Mahs, but we cant go to Europian countries, if we goes, will be arrested and no further funds form unions. so lets die. ha ha
Reply : 0 0
xlntgson Friday, 22 April 2011 08:17 PM
mahe, சரிதான், ஆனால் நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று இருந்தால் நல்லிணக்கமும் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற கட்டத்தில் இந்த அறிக்கையின் பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தீர்வு சமாதானம் என்று போக அந்த வீட்டோ நாடுகள் உதவி செய்தால் நல்லது, புதை குழிகளைத் தோண்டி இதற்கு முன் என்ன நடந்து விட்டது? இந்தியாவை சங்கடத்துக்குள்ளாக்கும் முயற்சியாகவே எனக்கு தோன்றுகிறது!
இந்தியா ஏன் மௌனம் என்று ஒருவர், இந்தியா தலையிட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ஒருவர், நுனிவால் 'சிண்டு' முடிய ஆரம்பித்துவிட்டனர்!
Reply : 0 0
Nalliah Thayabharan Sunday, 24 April 2011 06:12 AM
முள்ளிவாய்க்காலில் முற்றுகையில், பல்லாயிரக்கணக்கான பணயக் கைதிகளை கைகழுவி, அவர்களின் காலைவாரி, அவர்களின் படுகொலைகளுக்கு பாத்திரவாளிகளான ஐ நா வின், காலங்கடந்த காத்திரமற்ற இந்த அறிக்கையினால், சீனா, ரஷ்சியா இருக்கும்வரை இலங்கை அரசின் மீது எந்தவித நடவடிக்கையும் நடைமுறையில் ஐ நா வினால் நடைமுறைப்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனிதக் கேடயங்களாக படுகொலைசெய்யப்படுவதில் இருந்து காப்பாற்றாமல் ஐ நா கைவிட்டு விட்டு இப்போது இந்த அறிக்கை மூலம் இலங்கை அரசு மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்காது குற்றங்களை சுமத்தி விட்டு ஐ நா தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago