2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கலைப் பிரியர்களை வசீகரித்த முன்னாள் போராளிகளின் கைவண்ணங்கள்

Super User   / 2011 ஏப்ரல் 26 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்திஅலி, கெலும் பண்டார)

சிறுவனொருவன் பாடசாலைக்கு மிக சந்தோசமாக செல்கிறான், இடைநிலை வரை கல்வி கற்கின்றான், திடீரென அவன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்ட நடவடிக்கைகளுக்காக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுகிறான். இதனால் அவனின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. பின்னர் அவன்; தனது குடும்பத்துடன் இணைய ஆர்வங்கொள்கிறான்.

இது நாவலொன்றின் அல்லது சிறுகதையின் ஒரு பகுதியல்ல. தற்போது வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்படும்; தமிழீழ  விடுதலை புலிகள் இயக்க இளம் முன்னாள் போராளி ஒருவரின் வெளிப்பாடாகும்.

"புனர்வாழ்வின் ஊடாக மீள்சிந்தனை" எனும் தொனிப்பொருளில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பு கலாபவனத்தில் இடம்பெற்ற சித்திர கண்காட்சியின் போது முன்னாள் போராளிகளால் வரையப்பட்ட சித்திரங்கள் இது போன்ற பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிட்டன.

முன்னாள் போராளிகள் எதை தொலைத்தார்கள் என்பதையும் எதை அடைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் குறித்த சித்திரங்களின் ஊடாக அவர்கள் மிகவும் அழகாக வெளிப்படுத்தினர்.

யுத்தக் களத்திலிருந்து தனது கணவர் திரும்பி வருவதை நம்பிக்கையற்ற நிலையில் காத்துக்கொண்டிருக்கும் மனைவி மற்றும் கல்வி கற்கும் உரிமையை இழந்த சிறுவர்கள் போன்ற பல்வேறு ஒவியங்கள் இதன்போது கலைப் பிரியர்களை வசீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

காதல், குடும்ப வாழ்க்கை, இன ஒற்றுமை, சமூக இணக்கப்பாடு போன்றன முன்னாள் போராளிகளால் வரையப்பட்ட சித்திரங்களினூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இவை யுத்த காலத்தின் போது மறுக்கப்பட்டுள்ளன என்பது இந்த சித்திரங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

புனர்வாழ்வு செயற்பாடுகள் வேறுபட்ட ஐந்து தலைப்புக்களின் கீழ் இடம்பெறுகின்றன. இவற்றில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி என்பன முக்கியமானவை.

இவர்களுக்கு வழமையான கல்வி மற்றும் இழந்த கல்வியை மீளப்பெறல் ஆகியன புனர்வாழ்வு நிலையங்களில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்கு அவர்கள் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவருகின்றனர்.

இவர்களில் இரு முன்னாள் போராளிகள் மருத்துவப் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு இது பாரிய வெற்றியை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தால் இந்த நாடு குறித்த இரண்டு வைத்தியர்களையும் இழந்திருக்கும்.

இதற்கு மேலதிகமாக முன்னாள் போராளிகளுக்கு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மத, கலாசார, விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள், குடும்ப உறுவுகள், சமூக உளவியல் மற்றும் ஆன்மீகம் போன்ற விடயங்களில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சுமார் 11,000 போராளிகள் சரணடைந்ததுடன் கைதும் செய்யப்பட்டனர். இவர்களில் 6,000 பேர் இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு மீள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இந்த சித்திரக் கண்காட்சியை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் தலைமைச் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களால் மிகவும் அழகான முறையில் தேங்காய் சிரட்டைகளினால் தயாரிக்கப்பட்ட பேனா தாங்கிகள் போன்ற பல்வேறு வகையான கைப்பணிப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Pix By:Pradeep Dilrukshana


  Comments - 0

  • jayarani Sunday, 29 May 2011 08:41 PM

    எங்கே இந்த கண்காட்சி நடக்கிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .