Super User / 2011 ஜூன் 08 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே. சஞ்சயன்
இலங்கையின் இராஜதந்திரம் பலவீனமானது என்ற விமர்சனங்கள் அவ்வப்போது வெளியாகின்றபோதும், அதன் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
என்னதான் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், இலங்கை அரசு தனது இராஜதந்திர நகர்வுகளை முழுமூச்சோடு மேற்கொண்டு வருகிறது.
மேற்குலகைப் பகைத்துக் கொண்டதை இலங்கையின் இராஜதந்திர பலவீனங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம்.
ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள பலமான இராஜதந்திர உறவுகளின் பக்கத்தை யாராலும் மறந்து விட முடியாது.
இலங்கையின் பிரதான இராஜதந்திர பலமே இந்தியா தான். எல்லாவிதமான வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் இலங்கைக்கு கவசமாக இருப்பது இந்தியா தான் என்பதில் சந்தேகம் இல்லை.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போர்க்கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ , இதனைத் தெளிவாகக் கூறியிருந்தார்.
மற்றெல்லா நாடுகளும், பொருளாதார, அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில்தான் இருந்தன. இலங்கைக்குப் பாதுகாப்பு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய ஒரே நாடாக இந்தியா மட்டுமே இருந்தது. எனவே தான் அதனை முறையாக கையாண்டதாக அவர் பெருமிதப்பட்டிருந்தார்.
அதுமட்டுமன்றி, போர் பற்றிய சர்ச்சைகள் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், இந்தப் போருக்கு இந்தியா எவ்வாறு உதவியது என்ற விபரத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதன்மூலம் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் முக்கியமான பங்கை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளுக்குப் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது இலங்கை அரசாங்கத்துக்கு கவலை தருகின்ற ஒன்றாக இருந்த போதும், போருக்கு உதவிய நாடு என்ற வகையில் இந்தியா தம்மைக் கைவிட்டு விடாது என்ற நம்பிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு மிக அதிகமாகவே உள்ளது.
அதை நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உறுதிப்படுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
முன்னர் போருக்கும் இப்போது போருக்குப் பிந்திய சூழலிலும் இலங்கைக்கு உதவுகின்ற ஒரு நாடாகவே இந்தியா இருக்கிறது.
ஆனால், அதேவேளை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்து போவதையும் மறுக்க முடியாது. இந்த உரசல்கள் மிக மோசமான நிலையை எட்டவிடாமல் இராஜதந்திர முனைப்புகள் நடந்தேறுகின்றன.
கடந்த சில வாரங்களாக, அதாவது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் ஒருவித தேக்கம் காணப்படுகிறது.
ஐ.நாவின் அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு வெளியிடவில்லை என்ற அடிப்படையே இந்த உறவுத் தேக்கம் உருவாகக் காரணமாகும்.
அதேவேளை, கடந்தமாதம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் கூட, இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படக் காரணமாகியுள்ளது..jpg)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்த ஜெயலலிதாதான் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர்.
அவ்வப்போது, இலங்கை அரசுக்கு வெளிப்படையான எதிர்ப்பை வெளியிட்டாலும், மத்தியில் தமது கட்சிக்கோ, ஆட்சிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நெகிழ்வுப் போக்கை கையாண்ட கருணாநிதியின் ஆட்சி இப்போது இல்லை. கருணாநிதி ஆட்சி இலங்கை அரசுக்கு மறைமுகமான ஒரு பலமாகவே அமைந்திருந்தது.
ஆனால், ஜெயலலிதாவின் அணுகுமுறை வித்தியாசமானது. எடுக்கின்ற முடிவைத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்தும் குணவியல்பு கொண்டவர் ஜெயலலிதா.
இந்தநிலையில் தமிழ்நாட்டின் முதல்வராக அவர் பதவியேற்று மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு அவர் எத்தகைய தோற்றத்தைக் காண்பிக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது.
ஒரு பக்கத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இவர் மத்திய அரசைக் குழப்பி விட்டு விடுவாரா என்ற கலக்கம் இருக்கிறது. அதேவேளை தமிழர் தரப்புக்கோ அவரும் தம்மைக் கைவிட்டு விடுவாரா என்ற பயமும் இருந்தது.
இந்த நிலையில்தான் ஜெயலலிதாவுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கதை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது.
அரசியலில் யாரும், யாருக்கும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை என்று கூறுவார்கள். அதுபோலத் தான் இலங்கை அரசாங்கம் ஜெயலலிதாவையும் அரவணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியது.
ஒருபக்கத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இந்திய மத்திய அரசு தான் எமக்குத் தேவையே தவிர மாநில அரசுகள் தேவையும் இல்லை, அவற்றுடன் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டிய தேவையும் இல்லை என்று கூறியிருந்தார்.
அதேநேரத்தில் தான் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டு முதல்வருடன் இலங்கை அரசு இராஜதந்திர நெருக்கத்தை ஏற்படுத்த முனைவது அப்போதே வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
இப்போது வேறொரு முறையில் அவருடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளதாகத் தகவல்.
அண்மையில் ஜனாதிபதியின் வெளிவிவகார மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, ஜெயலலிதாவை சந்தித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரபூர்வமற்ற முறையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்தவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவுடன் இருந்த நெருக்தைக் கொண்டு மிலிந்த மொறகொட அதை சாதித்துள்ளார். விரைவிலேயே அதிகாரபூர்வ சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் நாயுடு அவருக்கு உறுதியளித்துள்ளாராம்.
தனிப்பட்ட சிறப்பு விமானம் ஒன்றில் ஹைதராபாத் சென்று வந்திருக்கிறார் மிலிந்த மொறகொட. இவரை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமித்த போது, அது ஒரு இராஜதந்திர முயற்சி என்றே கருதப்பட்டது.
ஆனால், அனைவரும் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள உறவுச் சிக்கலைத் தீர்ப்பதற்கே இவரைப் பயன்படுத்த மஹிந்த ராஜபக்ஷ முனையலாம் என்றே எதிர்பார்த்தனர்.
ஆனால் அவரை வைத்து இந்தியாவின் மீது வலையை வீசத் தொடங்கியுள்ளது அரசாங்கம். அதுவும் மத்திய அரசின் மீது அல்ல, தமிழ்நாடு அரசின் மீது தான் அதன் கவனம் திரும்பியுள்ளது.
மாநில அரசுகளுடன் இராஜதந்திர உறவுகள் ஒன்றும் தேவையில்லை என்ற கூறிய அரசின் சார்பில் தான் இந்தச் சந்திப்புக்கு சென்றுள்ளார் மிலிந்த மொறகொட.
இந்தச் சந்திப்பு அல்லது இனிவரும் சந்திப்புக்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் இடையில் மிலிந்த மொறகொடவினால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால், இலங்கை அரசாங்கம்முடியாதது என்று எதையும் கைவிடாமல் முயற்சிகளைத் தொடர்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
யாரையும் ஒதுக்கித் தள்ளி விடாமல் இராஜதந்திரத்தை பிரயோகிப்பது முக்கியமானதொன்று. எதிரிகளை சம்பாதிப்பது சுலபம். ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது தான் கடினம்.
இலங்கை அரசு பல நண்பர்களை இழந்து போயுள்ள நிலையில் ஜெயலலிதா போன்ற புதிய உறவுகளைத் தேடத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் தான் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். இத்தனை வேகமாக அவர் இதைச் செய்வார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இலங்கை அரசு எதிர்பார்க்கவில்லை.
இலங்கை அரசு அவருடன் ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்த உறவுக்கு இந்தத் தீர்மானம் பெரும் சவால் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்து இலங்கை அரசு என்ன செய்யப் போகிறது?
சீச்...சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று ஜெயல்லிதாவுடனான உறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு விடப் போகிறதா? அல்லது தனது இராஜதந்திரத்தை புதிய வழிமுறையில் பிரயோகிக்க முனையப் போகிறதா?
2 hours ago
5 hours ago
9 hours ago
Raheem Thursday, 09 June 2011 07:10 AM
ஜெயலலிதாவுக்கு என்ன கொம்பா? நாங்கள் ஒன்றும் இந்தியாவின் ஒரு மாநிலமோ மாவட்டமோ இல்லை.யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன செல்வி ஜே! இன்று என்னவாம் திடீர் பாசம். இதையெல்லாம் ஒரு நியூஸ் போடுகின்றீர்கள் நாங்களும் எ ம மாதிரி பார்கின்றோம்.
Reply : 0 0
xlntgson Thursday, 09 June 2011 08:47 PM
இந்தியக் கூட்டாட்சியில் வெளி விவகாரம் மாநில அரசுக்கு உட்பட்ட விடயம் அல்ல, எதையும் பேசலாம் கருணாநிதி போலவே பிறழ்ந்து பிறழ்ந்து !
Reply : 0 0
K.Ponnuthurai Friday, 10 June 2011 02:41 PM
வாழ்க ஜனநாயகம்
Reply : 0 0
Inpam Friday, 10 June 2011 11:27 PM
எது வந்தாலும் எதைக் கண்டாலும் எம்மவர் சும்மா கம் என்று இருப்பார்ல தைரியம்மா.
Reply : 0 0
mafas Monday, 13 June 2011 01:48 AM
என்னை பொறுத்த வரையில் எம் நாடு தமிழ் மக்கள் முன்னே இருந்ததை விட தற்பொழுது மிகவும் சந்தோசமாகவே வாழ்கிறார்கள்.
Reply : 0 0
Jeewan Monday, 13 June 2011 03:21 AM
ஆமாம் மபாஸ்,முஸ்லிம் மக்களும்தான். உதாரணமாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏராளமான காணிகள் வயற்காணிகள் இருந்தன. அதனால் அவற்றை பராமரிக்க முடியாமல் தொல்லை அனுபவித்தார்கள். இப்ப படிப்படியாக காணிகள் பறிபோவதால் அந்த தொல்லை இல்லை. அதிக முஸ்லிம் எம்.பிகள் இருந்ததால் எவரிடம் குறைகளை சொல்வதென தெரியாமல் மக்கள் தடுமாறினார்கள். இப்ப அதற்கும் ஆப்பு வைக்க முயற்சிக்கப்படுது. எதிர்காலத்திலே ஒன்றிரண்டு பேர் தெரிவாகுவதே சந்தேகமாகலாம். அப்ப பெரிய சந்தோசம் கிடைக்கும். இப்போது தமிழ் மக்களுக்கு கிடைத்தது போல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago