Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 ஜனவரி 10 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் பிரச்சினைக்கு இந்த பொங்கல் காலத்தில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் என்ற நிலையில், இந்த தை மாதத்திலாவது அவர்களுடைய பிரச்சினைகளில் இருந்து வழி பிறக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்வியே நம்பிக்கையாவது எப்போது என்பது தான் இப்போதைய கேள்வி, அல்லது நம்பிக்கை.
தமிழக மீனவர்களைப் பொறுத்த வரையில், இரண்டு வகையான பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். ஒன்று, தாங்கள் ஆண்டாண்டு காலமாக தொழில் செய்து வந்த கடற்பரப்பு, சுதந்திரத்திற்குப் பின் இரண்டு கட்டங்களாக இலங்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. இதில் முதல் கட்டம் சுதந்திரத்தை ஒட்டியது. இரண்டாம் கட்டம் என்பது, கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக இந்தியாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு கட்டங்களிலும் தமிழக மீனவர்களுக்கு தனியாக எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. அவ்வப்போது இருநாட்டு மீனவர்களிடையே நடுக்கடலில் கைகலப்பு ஏற்பட்டு வந்தது என்னவோ உண்மை. இது எழுபதுகள் வரையுள்ள காலகட்டத்தில் இருந்த நிலைமை.
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் இரண்டாவது பிரச்சினையே தற்போது அவர்களது வாழ்வாதாரத்தை பாதித்து, இல்லாதிருந்த இருநாட்டு எல்லைகளோடு ஒட்டிய முதல் பிரச்சினையும் முன்னே தள்ளியுள்ளது. எண்பதுகளில் இலங்கையில் இனப்போர் தோன்றிய காலம் தொட்டு இருநாட்டு மீனவர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கிய அந்நாட்டு கடற்படை, அவர்களை நடுக்கடலில் தாக்குவதாக புகார் எழுந்தது. அந்த தாக்குதல்களில் தமிழக மீனவர்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வப்போது புகார் எழுந்துள்ளது. இந்த நிலை இன்றுவரை தொடர்கிறது.
இது குறித்து, தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சி செய்துவந்துள்ள அரசாங்கங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து புகார் செய்து வந்துள்ளன. இருநாட்டு அரசு பிரதிநிதிகளும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். உலகில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் இருநாட்டு தலைவர்களும் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் மீனவர் பிரச்சினை அவர்களது பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம் பெறுகிறது. இப்போதும், இரு நாடுகளிடையேயான மீனவர் பிரச்சினை குறித்த 'இணை குழு' பொங்கல் காலத்தில் இலங்கை தலைநகரான கொழும்பில் கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதனை ஓட்டி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட்ட தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். அதிலும் மீனவர் பிரச்சினை முக்கிய இடம்பெறும். இதன் அடிப்படையில் தான் ஞானதேசிகன், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறியுள்ளார்.
மீனவர் பிரச்சினையில் இந்தியாவில் நிலையும் நிலைமையும் இதுவென்றால், இலங்கையின் நிலை என்ன, நிலைமை என்ன? ஒன்று, இனப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழ் மீனவர்கள் 'கடல் புலிகளின்' ஆதிக்கம் இருந்த காரணத்தினால் இலங்கை கடற்படையினரால் தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அப்போது பல்வேறு கட்டங்களிலும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களையும் மீறி அந்நாட்டு கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடித்து வந்துள்ளனர்.
போர் முடிந்த தற்போதைய சூழலில் அந்நாட்டு தமிழ் மீனவர்கள் மீண்டும் தொழில் செய்ய முயலும் போது, இந்திய மீனவர்களுடன் போட்டிபோடும் அளவிற்கு அவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இதனால் தங்களுக்கும் தங்களுடைய எதிர்கால சந்ததியினருக்கும் சேர வேண்டிய மீன் வளங்களை தமிழ்நாடு மீனவர்கள் அள்ளிக்கொண்டு போவதாக அவர்களது குற்றச்சாட்டு. இத்தகைய பிரச்சினைகள், இந்தியாவின் உள்ளேயே, தமிழக மற்றும் ஆந்திர மீனவர்கள் இடையே அடிக்கடி நிகழ்வதுண்டு. இலங்கையிலும் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடையே, இனப்பிரச்சினையின் மற்றொரு வடிகாலாகக் காணப்படுகிறது. இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழக சகோதரர்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை தமிழர் நலனுக்காக வாதாடும் அல்லது போராடும் தமிழக அரசியல்வாதிகள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.
பிரச்சினை இதோடு நின்றுவிடவில்லை. இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்யும் தமிழ்நாடு மீனவர்கள், அந்நாட்டு அரசால் தடைசெய்யப்பட்ட 'ட்ரோலர்' எனப்படும் படகுகளையும் மீன்வலைகளையும் பயன்படுத்துவதால், மீன் குஞ்சுகளையும் முட்டைகளையும் கூட விட்டுவைப்பதில்லை என்றும் அதனால் மீன் இன அபிவிருத்தியும், தங்களது எதிர்காலமும் கூட கேள்விக்குறி ஆகிவருவதாக இலங்கை தமிழ் மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார்கள். வேகமாக செல்லும் தமிழக மீனவர்களின் ட்ரோலர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளுக்கும் படகுகளுக்கும் சேதம்; விளைவிப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இனப்போர் காலத்தில் இலங்கை கடற்படையினர், விடுதலை புலிகளின் 'கடல் புலி' படகுகள் என்றோ அவர்களுக்கு ஆதரவாளர்கள் என்றோ தமிழக மீனவர்களை தாக்கிவந்ததாகக் கூறப்பட்டது. தற்போது, இலங்கை தமிழ் மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக அத்தகைய தாக்குதல் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. எங்கே, இலங்கை அரசு வாளவிருந்தால், விடுதலை புலிகளின் தற்போதைய ஆதரவாளர்கள், அந்நாட்டில் உள்ள தமிழ் மீனவர்களை அரசுக்கு எதிராக திருப்பிவிடுவார்களோ என்ற கவலை இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கிடையில், இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கியது குறித்த எந்தவொரு விவரத்தையும் உடனுக்குடன் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று இந்திய கடல் எல்லை பாதுகாப்பு படையினர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
இதுபோன்றே, கச்சதீவு பிரச்சினைக்கும் இரு பக்கங்கள் உண்டு. புதுடெல்லியில், நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் இருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் நலம் கருதி, இந்த தீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த அறுபதுகளில் கச்சதீவு இலங்கைக்கும், கன்னியாக்குமரிக்கு அப்பால் உள்ள 'வெட்ஜ் பாங்க்' எனப்படும் கடற்பகுதி இந்தியாவிற்கும் என்றும் இருநாட்டு அரசுகளும் முடிவு செய்தன. இதில் மீன் வளம் இந்திய பகுதியிலேயே அதிகமாக உள்ளது. தற்போது கன்னியாக்குமரி மாவட்ட மீனவர்களும், தென் இலங்கையின் சிங்கள மீனவர்களுமே தொழில் செய்து அதிக லாபம் அடைகிறார்கள். அதே சமயம், இராமேஸ்வரம் - நாகப்பட்டிணம் கடற்பகுதியிலும் சரி, அதனோடு ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளிலும் சரி, மீன் வளம் குறைந்தே காணப்படுகிறது. அந்த பகுதி மீனவர்கள் புதிய மீன்வளங்களை நோக்கி படையெடுக்க வேண்டியதும் அத்தியாவசியமாகிறது.
கச்சதீவு குறித்த வழக்கு ஒரு புறம் இருக்க, தமிழ்நாடு மீனவர்கள் என்னவோ, கச்சதீவு பகுதியில் மட்டுமோ அல்லது அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் மட்டுமோ செல்வதோடு நின்றுவிடுவதில்லை. இராமேஸ்வரம் மீனவர்கள், யாழ்பாணத்திற்கும் அப்பால் இலங்கையின் வடமேற்கு கடற்பகுதிக்குச் செல்வதாக கூறப்படுகிறது. அதுபோன்றே நாகப்பட்டிணம் மீனவர்கள், இலங்கையின் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைப் பகுதிக்கும் அப்பால் செல்கிறார்கள். சர்வதேச கடல்பகுதி சட்டதிட்டங்களுக்குட்பட்டு, அந்த பகுதிகளை தமிழக மீனவர்களின் வழமையாக கடல்பகுதி என்று உரிமை கொண்டாக முடியுமா என்பது சந்தேகமே.
இத்தனை பிரச்சினைகளுக்கும் பின்னணியில், இருநாட்டு மீனவர்களும் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னையில் கூடி பேசி, வருடத்தில் 72 நாட்கள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்யலாம் என்று ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால். அந்த ஒப்பந்த அடிப்படையில், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் எதனையும் பயன்படுத்த மாட்டார்கள் என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டது. கடந்த வருடம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளும் கொழும்பில் கூடி பேசியபோது இது குறித்த இலங்கையரின் கேள்விகளுக்கு தமிழக பிரதிநிதிகளால் நல்ல பதில் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
இன்றைய சூழ்நிலையில், இது அரசியல் பிரச்சினையோ, கச்சதீவிற்கு உரிமை கோரலோ அல்ல. இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த சமூகம் சார்ந்த பொருளாதார பிரச்சினை. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற்று, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் ஆட்சி நடைபெறுமேயானால், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே உருவாகிவரும் பிரச்சினைகளுக்கு இலங்கை தமிழர் மத்தியிலும் அரசியல் சாயம் பூசப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். தமிழகத்தின் 'போட்டா - போட்டி' திராவிட அரசியலைப் போன்றே அங்கும் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
மீனவர் பிரச்சினை என்பது இருநாட்டு அரசாங்கங்கள் சம்மந்தப்பட்ட விடயம் மட்டும் அல்ல. அல்லது, தமிழக மீனவர்களையும் இலங்கை அரசாங்கத்தையும் கடற்படையினரோடு மட்டும் சம்மந்தப்பட்டதும் அல்ல. அது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டும் கூட அல்ல. இரு நாடுகளிலும் உள்ள தமிழ் மீனவர்களையும், அதன் காரணமாக அரசியல் கட்சிகளையும் தொப்புள்கொடி உறவையுமே பிரிக்கவல்லது.
இந்த பின்னணியில், தற்போதைய பிரச்சினைக்கு இருநாட்டு மீனவர்களும் பயன்பெறும் விதத்தில் நல்லதொரு முடிவு உடனடியாக எட்டப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தமிழக அரசியல் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டிவரும். வாளாதிருக்கப் போகிறார்களா? அல்லது இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எதிராக 'அரசியல் வாள்' எடுக்கப்போகிறார்களா? அவர்கள் தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இது குறித்து இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago