Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 ஜனவரி 10 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழலுக்கு எதிராகப் போராடிய அன்னா ஹசாரே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் வலுவான லோக்பால் அமைக்க மறுக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இதற்கிடையில் அவருடைய குழுவில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் - இணையத்தளம் மூலம் "இனி இந்தப் போராட்டத்தை எந்த திசையில் வழி நடத்திச் செல்ல வேண்டும்?" என்று ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார்.
அன்னா ஹசாரே தரப்பில் வலுவான லோக்பால் வேண்டும் என்று கூறினாலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் லோக்சபாவில் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் அடங்கிய அவை) நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதா வலுவானதே என்ற ரீதியில் வாதம் செய்கின்றது. ஆனால் பா.ஜ.க. (பாரதீய ஜனதா கட்சி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டு விடும் என்று கருதி லோக்பால் மசோதாவை ராஜ்ய சபையில் ஓட்டெடுப்பிற்கு விடாமல் திரும்ப எடுத்துக் கொண்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இந்நிலையில் அரசு கொண்டு வந்து ஓர் அவையில் மட்டும் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா அதிகாரமிக்கதா என்ற விவாதம் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரம் போலவே நாடு முழுவதும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் "அன்னா ஹசாரே குழு பரிந்துரைத்த ஜான்லோக்பால் காந்தியத் தன்மை அற்றது. ஒருவர் கையில் அதிகாரங்களைக் குவிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று குறை கூறியுள்ளார்.
அரசு கொண்டுவந்த லோக்பால் மசோதா அதிகாரமற்றது என்று கூறுகிறார்களே ஏன் என்ற கேள்வி எழுகிறது. லோக்பாலுக்கு தலைவர் நியமிப்பதிலேயே இந்த பிரச்சினை எழுகிறது. லோக்பால் தலைவராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது அந்த நீதிமன்றத்தின் வேறு ஒரு நீதிபதியிருப்பார் என்று அறிவிக்கிறது. ஆனால் இந்த தலைவரை தேர்வு செய்யும் முறையில் அரசின் கையே ஓங்கியிருப்பது போல் லோக்பால் உருவாக்கப்பட்டுள்ளது. லோக்பால் தலைவரை தேர்வு செய்வதற்கு பிரதமர் தலைமையில் ஒரு தேர்வுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது வேறு ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படும் "பிரபல சட்டநிபுணர்" என்று ஐவர் குழு அது. இக்குழுவில் உள்ள ஐந்து பேரில் மூன்று பேர் அரசுக்கு வேண்டியவர்களாக இருப்பார்கள் என்பதால் லோக்பால் தலைவர் நியமனமே அரசின் விருப்பப்படியே நடக்கும் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இப்படி அமைக்கப்பட்ட லோக்பால் எப்படிச் செயல்படும் என்பது இன்னொரு கேள்வி. ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு செயலாளர் இருப்பார். ஆனால் இவர் மத்திய அரசு அனுப்பும் அதிகாரிகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. லோக்பாலுக்கு வரும் ஊழல் புகார்களை விசாரிக்க "விசாரணை இயக்குநர்" ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். இவரும் மத்திய அரசு அனுப்பும் கூடுதல் செயலாளர்கள் பட்டியலில் இருந்தே தேர்வு செய்யப்பட வேண்டும். இதேபோல் விசாரித்த ஊழல் புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய "பிராஸிக்யூஷன் விங்" ஒன்றை லோக்பால் அமைத்துக் கொள்ளலாம். அதற்கும் மத்திய அரசு அனுப்பும் பெயர் பட்டியலில் இருந்தே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆக- தலைவர், விசாரணை இயக்குநர், வழக்கை தொடுக்க நியமிக்கப்படும் அதிகாரி அனைவருமே மத்திய அரசு கொடுக்கும் அதிகாரிகளின் பட்டியலில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று லோக்பால் மசோதா கூறுகிறது. அதனால்தான் லோக்பால் அமைப்பு அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்குமாறு மசோதா வந்திருக்கிறது என்று அன்னா ஹசாரே குழு பிரசாரம் செய்கிறது.
பிரதமருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க முடியுமா என்பது பரபரப்பான விவாதமாக இருந்தது. இந்த கருத்தின் அடிப்படையில் மத்திய அரசுக்கும், அன்னா ஹசாரே குழுவிற்கும் இடையில் கருத்து யுத்தம் தொடங்கியது. இதன் விளைவாக பிரதமரையும் விசாரிக்கலாம் என்று ஒரு பிரிவை லோக்பால் மசோதாவில் கொண்டு வந்தார்கள். ஆனால் அதிலோ பிரதமருக்கு "அசாத்தியமான பாதுகாப்புகள்" தென்பட்டன. லோக்பாலில் மொத்தமாக தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள். அவர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள், அதாவது ஏழு உறுப்பினர்கள் சம்மதித்தால் மட்டுமே பிரதமருக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க முடியும். லோக்பால் உறுப்பினர்களில் உள்ள நான்கு நீதித்துறை உறுப்பினர்கள் தவிர, மீதமுள்ள ஐந்து பேர் (தலைவர் உள்பட) மத்திய அரசின் விருப்பப்படியே உறுப்பினர்களானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்படி பிரதமருக்கு எதிரான விசாரணைக்கு சம்மதிப்பார்கள் என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. அதே சமயத்தில் நாடாளுமன்றம் மூலமே மாநிலங்களில் அமைக்கப்படவுள்ள "லோக் அயுக்தா" அமைப்பில் இப்படிப்பட்ட பாதுகாப்புகள் ஏதும் முதலமைச்சருக்கு இல்லை. அவருக்கு எதிரான ஊழல் புகாரை எப்படி வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இதை மனதில் வைத்தே "லோக்அயுக்தா" அமைக்க மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முயற்சிப்பது "கூட்டாட்சி தத்துவத்திற்கு" எதிரானது என்று மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் கிளப்புகிறார்கள்.
பிரதமரை விசாரிக்க இத்தனை கட்டுப்பாடுகள். மத்திய அரசில் உள்ள அதிகாரிகளையாவது லோக்பால் சுதந்திரமாக விசாரிக்க முடியுமா என்று பார்த்தால், அதிலும் ஏகப்பட்ட தடைகள். இவர்களுக்கு எதிராக லோக்பால் ஊழல் விசாரணை செய்யும் போது சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களை அந்த இடத்திலிருந்து மாற்றுங்கள் என்றோ, சஸ்பென்ட் பண்ணுங்கள் என்றோ பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். ஆனால் லோக்பால் பரிந்துரையை தனது வீட்டோ அதிகாரம் மூலம், "அதெல்லாம் சஸ்பென்ட் பண்ணவோ, மாற்றவோ முடியாது" என்று மத்திய அரசு மறுத்து விடலாம். அதற்கும் லோக்பால் விதிகளில் வழி இருக்கிறது. அது மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களில் ஏ, பி, சி, டி என்று நான்கு வகை அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் ஏ, பி என்ற பட்டியலில் உள்ள அதிகாரிகள் (உயரதிகாரிகள்) பற்றிய ஊழல் புகார்களில் லோக்பாலுக்கு இறுதி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் சி, டி என்ற பட்டியலில் இருக்கும் (கீழ் மட்ட அரசு ஊழியர்கள்) மீது மட்டும் நடவடிக்கை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இடைக்காலமாக ஊழல் அரசியல்வாதி அல்லது அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் மட்டும் லோக்பாலுக்கு இருக்கிறது. ஆகவே லோக்பால் அமைப்பும், அதன் விசாரணைகளும் மத்திய அரசின் ஒட்டு மொத்தக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
1966ஆம் வருடத்தில் ஊழலை ஒழிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதை அமைப்பதற்கு 45 வருடங்களாக பல்வேறு கட்டங்களில் போராடி இப்போது லோக்சபாவில் மட்டும் இந்த லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்ய சபைக்கு வந்து விவாதம் நடைபெற்ற பிறகு, வாக்கெடுப்பிற்கு விடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க சபதமெடுத்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இப்படியொரு "நொண்டிக்கால் லோக்பாலை" கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த நேரத்தில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வந்திருக்கிறது. அன்னா ஹசாரேயும் உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். "அன்னா ஹசாரே" ஒரு பிரசார ஹீரோ என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருதின. அதிலும் குறிப்பாக ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்த காலகட்டத்தில் எல்லாம் அதற்கு கைகொடுத்த மாநிலம் உத்தரபிரதேச மாநிலம். அந்த மாநிலத்தின் தேர்தலும் நடக்கும் போது அன்னா ஹசாரே உடல்நலம் குன்றி, ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது - காங்கிரஸுக்கு தெம்பையும், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு பெரும் தர்ம சங்கடத்தையும் தோற்றுவித்து இருக்கிறது. தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு போவாரா அன்னா ஹசாரே என்பதுதான் அவருடன் இணைந்து நின்று இத்தனை மாதங்களாக போராடிய மக்கள் மனதில் இப்போது எழுந்துள்ள கேள்வி. அந்த கேள்விக்கு அன்னா ஹசாரே நேரடியாக பிரசாரம் செல்வாரா அல்லது இணையத்தளம் மூலம் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி பிறந்துள்ளது. ஏனென்றால் இணையத்தளம் மூலம் பிரசாரம் செய்தே ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் அன்னா ஹசாரே.
vimal udayar Saturday, 14 January 2012 04:02 PM
சோனியாவின் அரசு ஒரு செயல்படாத உலக மகா ஊழல் அரசு என்ற உண்மை உலகம் மிகத் தெளிவாக அறியும் என்பதால் அதனிடமிருந்து வலுவான லோக்பாலை யாரும் எதிர்பார்க்கவில்லை. நம்ம ஹீரோ அண்ணா ஹசாரே அவர்களின் தியாகம் வீண்போகாது . நிச்சயம் ஒரு நாள் நமது பாரத மாதாவுக்கு ஊழல் அரக்கனிடமிருந்து விடுதலை கிடைக்கும். கட்டுரை ஆசிரியரின் நேர்மையான கருதுக்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago