2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திரிசங்கு நிலையில் அரசாங்கம்

Super User   / 2012 ஜனவரி 11 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே. சஞ்சயன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதில் தீவிரமாக இருந்த அரசாங்கம், போருக்குப் பிந்திய அரசியல் தீர்வில் அக்கறை காண்பிக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது.

போரில் வேகம் காட்டியபோதும், அதற்குப் பிந்திய காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் அரசாங்கம் வேகம் காட்டத் தவறியுள்ளது.

இப்போது அரசாங்கம் எதிர்கொள்கின்ற - வரும் காலத்தில் எதிர்கொள்ளப் போகின்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் இதுவே மூலகாரணம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகப் போகின்றன. போரை நடத்திக் கொண்டிருந்த போதும் அதை முடித்தவுடனும் அரசாங்கம் கொடுத்த  வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு இன்னமும் உறுதியான எந்த முயற்சிகளும் எடுக்கப்படாத நிலையே தொடர்கிறது.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கே அரசாங்கம் இன்னமும் முற்றுமுழுதாக தீர்வு காணவில்லை.

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் அனைவரையும் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் எத்தனையோ வாக்குறுதிகளையும் காலக்கெடுக்களையும் கொடுத்து விட்டது.

கடைசியாக 2011 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் அந்தக்கால எல்லையும் கடந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது.

இன்னமும் வவுனியா முகாம்களில் 7000 பேர் தங்கியுள்ளனர்.  ஆனால் பாதுகாப்புச்செயலர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பில் கடந்தவாரம் நடந்த கூட்டமொன்றில் பேசும்போது, 3000 பேரை மட்டும் தான் மீளக்குடியேற்ற வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.  மீள்குடியேற்றத்துக்காக கொடுத்த கடைசி வாக்குறுதியும் கூட அரசினால் நிறைவேற்ற முடியவில்லை.

அரசாங்கம் சொல்லும் இடம்பெயர்ந்தோரின் கணக்கு வெறுமனே இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்தவர்கள் தான். அதற்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் இதில் சேர்க்கப்படவில்லை

அரசியல்தீர்வு பற்றி இப்போது மிகவும் அழுத்தமாக வலியுறுத்தப்படுகின்ற போதும் அதனை  முன்கொண்டு செல்வதற்கான வழிகளை அரசாங்கம் சரியாகக் கையாளவில்லை என்றே கூறலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசிக் கொண்டே, நாடாளுமன்றத்தின் ஊடாக பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு தெரிவுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்தது.

அதேவேளை கூட்டமைப்புடனான பேச்சுக்களை ஏனோ தானோ என்ற நோக்கில் நடத்தத் தொடங்கியது. இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையில் ஆழமான நம்பிக்கையீனமும் ஏற்பட்டு விட்டது.  ஆனாலும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கிக் கொள்வது ஆபத்தானது என்பதால் இருதரப்பும் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் தான் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றியும் இப்போது கேள்விகள் எழும்பத் தொடங்கியுள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோது அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிக்க முடிவு செய்தது.

அந்த நல்லிணக்க ஆணைக்குழு 18 மாதங்கள் நடத்திய விசாரணைகளுக்குப் பின்னர், சமர்ப்பித்துள்ள அறிக்கை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் இது போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்குப் போதுமானதல்ல என்கின்றன.

அமெரிக்காவும் கூட இதையே தான் கூறியுள்ளது. இந்தியாவும் ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறது. உள்ளூரில் இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது.

எவ்வாறாயினும் அரசாங்கம் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை பலமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொடுத்திருந்தது.

இப்போது அனைவருக்கும் எழுந்துள்ள ஒரே கேள்வி நல்லி்ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துமா என்பது தான்.

ஏனென்றால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகப் போகின்றன. ஆனால் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

ஏற்கனவே சர்வதேச அளவில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட போது நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடைக்கால அறிக்கை ஒன்றை கோரியது.

அப்போது நல்லிணக்க ஆணைக்குழு முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை தாமதிக்கக் கூடாது, அவசரமாகச் செய்ய வேண்டியவை பற்றிய ஒரு அறிக்கையை தரவேண்டும் என்று ஆணைக்குழுவைக் கேட்டது அரசாங்கம்.

அதற்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவும் இடைக்கால அறிக்கை  ஒன்றைக் கொடுத்தது. ஆனால் அந்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் இன்னும் கூட நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளன.

இந்தக் கட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இத்தகைய எதிர்ப்புகளை சமாளிப்பது ஒன்றும் அரசாங்கத்திற்கு கடினமில்லை.

ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் எந்தவொரு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு- அரசாங்கம் இதுவரை எந்தமுடிவையும் எடுக்கவில்லை. முன்னதாக முழுஅறிக்கையும் வரும் வரை நல்லிணக்க முயற்சிகள் தாமதிக்கக் கூடாது என்று அவசரப்பட்ட அரசாங்கம், இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தவில்லை, முழு அறிக்கையின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகத் தெரியவில்லை.

அவ்வாறாயின்  இந்த ஆணைக்குழுவும் அதன் அறிக்கையும் வெறும் செல்லாக் காசாகி விடுமோ என்று தான் எண்ண வேண்டியுள்ளது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும், அது நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட போதும் அறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவந்தது. ஆனால்  இப்போது அந்த நிலை இல்லை என்றே கூறலாம்.

அண்மையில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அளித்திருந்த செவ்வி ஒன்றில், ஆணைக்குழுவின் அறிக்கையை வரிக்குவரி படித்து நடைமுறைப்படுத்துவதற்கு அது  ஒன்றும் பைபிள் இல்லை என்று கூறியிருந்தார்.

பரிந்துரைகள் அனைத்தும்  நடைமுறைப்படுத்தப்படாது என்பதை இதன் மூலம் நாசூக்காக எடுத்துக் கூறியிருந்தார் அவர். பின்னர் அதை அவர் வெளிப்படையாகவும்  குறிப்பிட்டிருந்தார்.

அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் எல்லாவற்றையும் அவசரமாக நடைமுறைப்படுத்த முடியாது. அதில் சிக்கல்கள் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின்  அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறியிருப்பதை வைத்துக் கொண்டே இது உடனடியாக சாத்தியமாகக் கூடியதொன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அப்படியொன்றும் சர்ச்சைக்குரிய- சிக்கலான பரிந்துரைகள் இல்லாத போதும் அரசாங்கம்  இத்தனை குழப்பமடைந்துள்ளது ஆச்சரியம் தான்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் சில சர்வதேச சமூகத்தினால் வரவேற்கப்பட்டுள்ள போதும், முற்றுமுழுதாக சரியானது என்று  ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதையே அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் என்கிறது .

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற பலமும், இருக்கிறது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியும் இருக்கிறது. இதைவிட வேறெந்த தருணத்திலும் இந்த அறிக்கை மட்டுமன்றி அரசியல்தீர்வைக் கூட எவராலும் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனாலும் அரசாங்கம் அதற்கு இணங்கத் தயாராக இல்லை.

இதற்கும் ஒரு தெரிவுக்குழு அமைக்கலாமா என்றளவில் கருத்துகள் தான் வருகின்றனவே  தவிர, உருப்படியான எந்த முயற்சியும் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று, இதுவரை காலமும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து அரசைக் காப்பாற்றியது இந்த நல்லிணக்க ஆணைக்குழு  தான்.

அடுத்தமுறை இந்த ஆணைக்குழுவினால் கூட அரசாங்கத்தைக் காப்பாற்ற முடியாது.  ஏனென்றால் அதற்காக வரையறுக்கப்பட்ட காலப்பகுதி முடிந்து விட்டது.

இப்போது அரசுக்கு கைகொடுக்கக் கூடிய ஒரே ஒரு விடயம்- இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தான்.

ஆனால், அதைச் செய்வதில் அரசாங்கம் காட்டும் அசமந்தப் போக்கு சர்வதேச சமூகத்தை இன்னும் அவநம்பிக்கை கொள்ளவே செய்கிறது.

போருக்குக் காட்டிய தீவிரத்தை விட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு. ஆனால் அரசாங்கமோ எதிர்மறையாக நடந்து கொள்கிறது.

எவ்வாறாயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தியதோ, இல்லையோ இலங்கை அரசுக்கு ஒரு பொறியாக அமைந்து விட்டது.

இந்த அறிக்கை பொய்யானது போலியானது என்று ஒதுக்கிவிடவும் முடியாது. அதேவேளை இதை நடைமுறைப்படுத்தவும் முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

இந்தச் சிக்கலில் இருந்து அரசாங்கம் விரைவில் விடுபட்டு எதையோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகவே போகிறது.

ஏனென்றால், வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்  கூட்டத்துக்கு முன்னர் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் உறுதியாக செயற்படத் தவறினால் இந்தப் பொறியில் இருந்து  மீளவே முடியாத நிலை உருவாகி விடும்.


You May Also Like

  Comments - 0

  • neethan Thursday, 12 January 2012 01:52 PM

    அரசும் அரசில் அங்கம் வகிப்போரும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் இனப்பிரச்சினை விடயத்தில் இதய சுத்தியுடன் செயட்படவில்லையே? எதிர் தரப்பினர் கூட அரசை கவிழ்த்து ஆட்சியை பிடிப்பதில் காய் நகர்த்தல், இரு தரப்புமே கதிரைக்கு காட்டும் சிரத்தை இனப்பிரச்சினை தீர்வில் இல்லை என்பதே உண்மை.

    Reply : 0       0

    suun Sunday, 22 January 2012 07:57 PM

    MR இடம் திரிசங்கு கதை சரிவராது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X