Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 ஜனவரி 19 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இங்குள்ள முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும் (அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்), தி.மு.க.வும் (திராவிட முன்னேற்றக் கழகம்) தங்களது பிரசாரக் கணைகளை கூர் தீட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தி.மு.க.வின் சார்பில் வருகின்ற பெப்ரவரி மூன்றாம் திகதி அக்கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனையும் ஓர் அஜெண்டாவாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வோ எம்.ஜி.ஆர் பிறந்த நாளை (ஜனவரி 17) வெகு விமரிசையாக கொண்டாடி, "இந்தக் கட்சியை யாராலும் ஜெயிக்க முடியாது" என்று அறிவித்து இருக்கிறது. தமிழக முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா - கள்ளக்குறிச்சியில் எம்.ஜி.ஆர். சிலையையும் வீடியோ கொன்பரன்ஸிங் மூலம் திறந்து வைத்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்ற ரீதியில் தன் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன்பு நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் 42ஆவது ஆண்டுவிழாவில் பிரபல பத்திரிகையாளரும் துக்ளக் ஆசிரியருமான சோ, "பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க வேண்டும்" என்று பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர்களாக பேசப்படும் அத்வானி மற்றும் நரேந்திர மோடியை வைத்துக் கொண்டே முன்மொழிந்திருக்கிறார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் டெல்லி செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆட்சி என்பது இன்று நேற்றல்ல! பன்னிரெண்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவிலேயே, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே புனித ஜோர்ஜ் கோட்டையை (தமிழ்நாடு) கோலோச்சுவது மட்டுமல்ல - மத்தியிலே செங்கோட்டையிலும் கோலோச்சுவதை நீங்கள் பார்க்க வேண்டும். அது நிச்சயம் ஒருநாள் நடந்தே தீரும்... இது வெறும் வார்த்தைகள் அல்ல. கைதட்டலைப் பெற வேண்டும் என்பதற்காகச் சொல்லும் வார்த்தையும் அல்ல. நான் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசுகிறேன்... அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெயரளவில் மட்டும் அனைந்திந்திய கட்சியல்ல. அது உண்மையாகவே இந்தியாவை எதிர்காலத்தில் ஆளப்போகின்ற கட்சி என்பதை நிரூபித்துக் காட்டுவோம்" என்று ஆணித்தரமாக பேசினார். ஆகவே அ.தி.மு.க. - டெல்லியை ஆள வேண்டும் என்பதும், அங்கே தான் பிரதமராக வேண்டும் என்பதும் ஏறக்குறைய 12 ஆண்டுகாலமாக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதைத்தான் இப்போது துக்ளக் ஆசிரியர் சோ முன்மொழிந்திருக்கிறார். இது எல்லாமே உத்தரபிரதேச தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மத்தியில் மேலும் பலமிழக்கும் என்றும், ஊழல் புகார்களின் ஊர்வலத்திற்கு சொந்தமான அக்கட்சிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியமைக்கும் பலம் கிடைக்காது என்பதையும் அடிப்படையாக வைத்தே பேசப்படுகிறது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது தேசிய அளவில் காங்கிரஸோ அல்லது பா.ஜ.க.வோ தனித்து ஆட்சியமைப்பது இதற்கு முன்பு நடந்து முடிந்த ஏழு நாடாளுமன்ற தேர்தல்களிலும் நடக்கவில்லை. காங்கிரஸ் "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்றும் பா.ஜ.க., "தேசிய ஜனநாய கூட்டணி" என்றும் அமைத்து, கூட்டணி கட்சிகளின் தயவுடனேயே மத்தியில் ஆட்சி அமைத்து வந்துள்ளன. வி.பி.சிங், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்ற காங்கிரஸ், பா.ஜ.க. இல்லாத பிரதமர்கள் மத்தியில் ஆட்சி அமைத்த போதும், அந்த அரசுகள் நீண்ட நாட்கள் நடக்கவில்லை. குறைந்த ஆயுட்காலத்திலேயே ஆட்சியை இழக்க நேர்ந்து விட்டது. ஆகவே இன்று ஊழல் புகார்களின் உச்சகட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ஊழலின் தாக்கம் என்பது உத்தரபிரதேச தேர்தலில் எப்போதுமே மற்ற மாநிலங்களை விட தீவிரமாக இருக்கும். இதைத்தான் கடந்த கால தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஆகவே நடைபெறப் போகின்ற உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்தியில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கோ, பா.ஜ.க.விற்கோ தனித்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படாது என்று நிச்சயமான எதிர்பார்ப்பு உள்ளது.
அதுபோன்ற சூழ்நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத ஒரு பிரதமர் வேட்பாளருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. ஏனென்றால் பா.ஜ.க. வர வேண்டாம் என்று நினைக்கும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஒரு காலத்தில் காங்கிரஸை விரும்பின. அதனால் காங்கிரஸ் பிரதமருக்கு அக்கட்சிகள் 2004 தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளித்தன. ஆனால் இன்று மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இருந்த மாநில ஆட்சிகளையும் இழந்து நிற்கும் கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஒருமுறை காங்கிரஸுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பார்களா என்பது பில்லியன் டொலர் கேள்வி. அதே நேரத்தில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறி வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும் ஆதரவு அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதுமாதிரி சந்தர்ப்பத்தில்தான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இல்லாத வேட்பாளர்களுக்கு வாய்ப்பு உருவாகும். குறிப்பாக காங்கிரஸ் ஆதரிக்காத ஒருவர் பிரதமராகும் வாய்ப்பும் உண்டு. உத்தரபிரதேசத்தில் மாயாவதி அல்லது முலயாம் சிங் யாதவிற்கு இந்த வாய்ப்பு வரும். பீஹாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு இதே வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இந்த வாய்ப்பு காத்திருக்கிறது. மாயாவதி அல்லது முலயாம் சிங் யாதவில் இருவரையுமே பா.ஜ.க.வோ அல்லது காங்கிரஸ் கட்சியோ ஆதரிக்க தயங்கலாம். பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பா.ஜ.க.வின் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறார். அதிலிருந்து அவர் வெளியேறிய பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை அவரது வேட்பாளரை ஆதரிக்க முன் வரும். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே ஆதரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இன்று பா.ஜ.க.வின் தயவிலோ அல்லது அக்கட்சியுடனோ கூட்டணியாக இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஏன் இதர பிற கட்சிகளுமே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க முன்வரலாம். அதனால்தானோ என்னவோ "பா.ஜ.க.வின் இயற்கையான கூட்டாளி அ.தி.மு.க." என்று அத்வானி சென்னையில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
மத்தியில் ஆட்சி அமைப்பதைப் பொறுத்தவரை தி.மு.க.இதுவரை அ.தி.மு.க.விற்கு நேர் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. 1999இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அ.தி.மு.க. வாபஸ் பெற்ற போது, தி.மு.க. வாஜ்பாயை ஆதரித்தது. அதன் பிறகு அக்கட்சியுடன் கூட்டணி கண்டு ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் (1999), ஒரு சட்டமன்ற தேர்தலையும் (2001) சந்தித்தது. அதேபோல் வெளிநாட்டுக்காரர் இந்தியாவின் பிரதமராகக்கூடாது என்ற கோஷத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. எதிர்த்தபோது, காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, "நேருவின் மருமகளே வருக. நிலையான ஆட்சி தருக" என்ற கோஷமிட்டது தி.மு.க. அதேநேரத்தில் முன்பொரு சமயத்தில் (1996) தமிழகத்திலிருந்து பிரதமராகும் வாய்ப்பு மூப்பனாருக்கு வந்தபோது அதை தடுத்த கட்சி தி.மு.க. என்ற குற்றச்சாட்டும் அக்கட்சி மீது சுமத்தப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தமிழகத்திலிருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு அப்படியொரு வாய்ப்பு டெல்லியில் வந்தால் தி.மு.க. என்ன செய்யும் என்பதும் கேள்விக்குறி. காணும் பொங்கல் அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பகுதியில், முதல்வர் ஜெயலலிதா பற்றி முன்பொருமுறை எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி விட்டு, "...அவரைப் போய் பிரதமராக ஆக்குவதாக சோ சொல்கிறாரே என்று தமிழக மக்கள் வருந்தாமல் இருக்கமாட்டார்கள்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் மனதில் வைத்தே, வருகின்ற பெப்ரவரி 3ஆம் திகதி தி.மு.க.வின் பொதுக் குழுவைக் கூட்டியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி.
ஆகவே, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வரும் சூழ்நிலைகள் டெல்லியில் காங்கிரஸுக்கு மேலும் சிக்கலாகும். அதைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் டெல்லியில் ஆட்சி அமைப்பதில் அ.தி.மு.க.விற்கு முக்கிய பங்கை அளிக்கும் என்பதே இப்போது துக்ளக் ஆசிரியர் சோ உள்ளிட்டோரின் கணிப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஆதாரமாக தமிழகத்தில் அமையப்போகும் நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணியும் முக்கிய காரணமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இப்போதைக்கு "காங்கிரஸ் எதிர்ப்பில்" கவனமாக இருக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸோ அல்லது விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வோ வெற்றிக்கு உதவும் வாக்குகளை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் கொடுக்க முடியும். ஆனால் அப்படியொரு பங்களிப்பை பா.ஜ.க. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் செய்ய முடியாது. இன்னும் சொல்லப்போனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சி என்ற இமேஜ் தி.மு.க.விற்கோ, அ.தி.மு.க.விற்கோ வந்தால் அது வெற்றிக்கு தேவைப்படும் வாக்குகள் வருவதை தடுக்கவே செய்யும். காங்கிரஸுடன் கைகோர்ப்பது எந்த அளவிற்கு வெற்றி பெற உதவும் என்பது புலனாகவில்லை. சொல்லப் போனால், 2011 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து தி.மு.க. கையைச் சுட்டுக் கொண்டு விட்டது. ஆகவே இன்றைய தேதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் "பிரச்சினையில்லாமல் வெற்றிக்குத் தேவையான வாக்குகளை" அளிக்கும் கட்சி என்ற அந்தஸ்து தே.மு.தி.க.விற்கே இருக்கிறது. அதை விட ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவற்றையும் சேர்த்து சமாளிக்கும் பலம் தே.மு.தி.க.விற்கு இருக்கிறது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க.வை நாடிச் செல்லும் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ விஜயகாந்திற்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். யார் தே.மு.தி.க.விற்கு அதிக தொகுதிகளைக் கொடுத்து கூட்டணி அமைக்கிறார்களோ அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவார்கள் என்பதே இன்றைய நிலைமை. அதை தவிர்த்து விட்டு, உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மற்ற கட்சிகளை தனியாக விட்டு விட்டு களமிறங்கியது போன்ற "அக்னி பரீட்சையில்" நாடாளுமன்ற தேர்தலிலும் ஈடுபட்டால், இரு கட்சிகளுக்குமே "டெல்லி அதிகாரம்" சிக்கலாகும். ஆகவே, இன்றைய நிலையில் தமிழகத்தில் யார் வெற்றிக் கூட்டணி அமைக்கப் போகிறார்களோ அவர்களுக்கே டெல்லியில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தில் முக்கியப் பங்கு கிடைக்கும்!
PUTTALA MANITHAN Wednesday, 25 January 2012 05:13 AM
அப்படி போடு...
Reply : 0 0
rajkumar Friday, 01 November 2013 06:33 PM
ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்பதே ஓர் இந்திய குடிமகனாக, தமிழனாக, ஒரு மாணவனாக எனது விருப்பம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago