Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 ஜனவரி 20 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு முறை கூறியிருக்கிறார். மீண்டும் ஒரு முறை என்று ஏன் நாம் கூறுகிறோம் என்றால் இதற்கு முன்னரும் அவர் இதனை பல முறை கூறியிருக்கிறார்.
தாம் ஜனாதிபதியை சந்தித்த போது பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப் போவதாக அவர் தம்மிடம் கூறியதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ் எம் கிருஷ்ணா ஓரிரு நாட்களுக்கு முன் கொழும்பில் வைத்து தெரிவித்திருந்தார். இதனை ஜனதிபதி அலுவலகம் உறுதிப் படுத்தாவிட்டாலும் அதனை மறுக்காததால் நாமும் அதனை ஏற்கத்தான் வேண்டும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு தேடுவதாகக் பல முறை கூறிய அரசாங்கம் அதனை எவ்வாறு செய்யப்போகிறது என்பதை ஒருபோதும் விளக்கவில்லை. அதற்கு பதிலாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென ஒன்றுக்கொன்று முரனான உத்திகளை கையாண்டு வருகிறது. ஒரு புறம் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தையை அரம்பித்துள்ளது. அப்பேச்சுவார்தைகள் இழுபறி நிலையில் இருப்பது வேறு விடயம்.
மறு புறம் அரசாங்கம் இதே விடயத்திற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்கப் போகிறது. அதேவேளை, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழவும் சில சிபார்சுகளை முன் வைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தைகளின் போது எட்டப்டபடும் இணக்கங்களை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலுள்ள ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே நிராகரித்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நிராகரித்துள்ளதால் அக்குழு நியமிக்கப்படுவதும் நிச்சயமற்றதாக உள்ளது.
இந்த நிலையில்தான் ஜனாதிபதி 13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் செல்வதாகக் கூறியிருக்கிறார். அதேவேளை அரசாங்கம் அவ்வாறு பலமுறை கூறியிருப்பதாலும் அக் கூற்றுக்கள் நிறைவேற்றப்படாததினாலும் எவரும் அக்கூற்றை அவ்வளவு பெரிதாக கருத்திலெடுத்ததாக தெரியவில்லை. அரசாங்கத்திலுள்ள தேசியவாதக் கட்சிகளும் அதனை கண்டும் காணாததைப் போல் இருக்கின்றன.
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டு இருக்கும் காலத்திலும் அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் செல்வதைப் பற்றி கூறியிருக்கிறது. உண்மையிலேயே அக்காலத்தில் தான் அக்கருத்து முளையிட்டது. ஜனாதிபதி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுடன் 2010 ஆம் ஆண்டு நடத்திய பேட்டியொன்றின் போதும் இதனை கூறியிருக்கிறார்.
அதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி இந்திய என்.டீ.ரி.வி. தொலைக்காட்சி நிருபர் ஒருவருடன் நடத்திய பேட்டியொன்றின் போதும் தாம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுல் செய்யப்போவதாக கூறினார். ஆனால் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுல் செய்வதென்பதோ அல்லது அதற்கு அப்பால் செல்வதென்பதோ என்ன என்று அரசாங்கம் ஒருபோதும் விளக்கவில்லை.
இந்த நிலையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதைப் பற்றிய பிரச்சினை வரும் போது அரச தலைவர்கள் அது முடியாத காரியம் என்கிறார்கள். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுல் செய்வதாகவிருந்தால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கியே ஆக வேண்டும். ஏனெனில் அவை மாகாணங்களுக்கு பரவலாக்கப்பட்ட விடயங்களாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜுன் மாதம் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், பாதுகாப்புச் செயலாளர் பிரதிப் குமார் மற்றும் தேசிய பாதகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்த போது அவ் அதிகாரங்களை வழங்க முடியாது என ஜனாதிபதி அவர்களிடம் கூறினார். பின்னர் கடந்த நவம்பர் மாதம் பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்றின் போதும் அவர் அக்கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால், ஏதோ நடந்து விட்டது போலும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதைப் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச முடியும் என கடந்த மாதம் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா திடீரென கூறினார். மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் மேலும் ஒரு படி முன் சென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைப்பதைப் பற்றியும் பேசலாம் என்றார். அரசாங்கம் மாகாண மீளிணைப்பைப் பற்றிப் பேசுவதே ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போது ஜனாதிபதி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் செல்ல முடியும் என்கிறார். அதாவது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும் என அவர் கூறுகிறாரரா? முன்னரும் பல முறை இவ்வாறு கூறிவிட்டு பல முறை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என அரசாங்கம் கூறியிருக்கிறது. அதனாலோ என்னவோ அரசாங்கத்தில் உள்ள பேரினவாதிகள் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்;.
செய்வதாக இருந்தால் இதற்கு இவ்வளவு கொக்கரித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பலம் இருக்கிறது. எனவே 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் செல்ல முடியும். ஆரசாங்கத்தில் இருக்கும் தேசியவாதிகளால் அதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. அப்படி ஏதும் செய்ய அவர்களுக்கு தேவை இருப்பதாகவும் தெரியவில்லை. அரசாங்கம் தாம் கொடுத்த வாக்குறுதியை உதறித் தள்ளிவிட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீடித்த போதும் அதை சட்டபூர்வமாக்கிய போதும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லையே. அப்போது அவர்கள் அவற்றை எதிர்ப்பதற்கு பதிலாக அவற்றை நியாயப்படத்தினார்கள்.
எனவே பிரச்சினை அவர்கள் அல்ல. இனப் பிரச்சினைக்கு தீர்வு அதிகாரப் பரவலாக்கலே என அரசாங்கம் இடையிடையே கூறிய போதிலும் அதனை அரசாங்கமே நம்புவதில்லை போலும்.
இந்திய தலைவர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம் இலங்கையின் இனப்பிரச்சினையை இரு நாட்டு தலைவர்களும் ஆராய்கிறார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் அவசியத்தை இந்திய தலைவர்கள் வலியுறுத்தியதாகவும் இலங்கைத் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் அப்போதெல்லாம் செய்திகள் வெளிவரும். முPண்டும் சில நாட்களில் இலங்கைத் தலைவர்கள் அது முடியாது. இது முடியாது என்பார்கள். இந்திய தலைவர்கள் கேட்காதவர்களைப் போல் இருப்பார்கள்.
ந்திய தலைவர்களின் மற்றுமொரு இலங்கை விஜயமொன்றின் போது அல்லது இலங்கை தலைவர்களின் இந்திய விஜயமொன்றின் போது மீண்டும் இப்பிரச்சினை ஏதோ புதிய பிரச்சினையைப் போல் மீண்டும் ஆராயப்படும். இருநாட்டு தலைவர்களும் மீண்டும் தீர்வை வலியுறுத்துவார்கள். இது 1980களில் இருந்து நடந்து வரும் கதையாகி விட்டது.
இந்த நிலையில் மனோ கனேசன் கோருவதைப் போல் தமிழ் தலைவர்கள் தமது கொள்கைகள் எவ்வாறு இருப்பினும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்துவது ஒரு வகையில் புத்திசாலித்தனமகத் தெரிகிறது. ஏனெனில் அக் கோரிக்கையை தட்டிக் கழிக்க அரசாங்கத்திற்கு எவ்வித காரணமும் இல்லை. ஜாதிக ஹெல உருமயவும் அத் தேர்தலை நியாயமாக நடத்துமாறு தான் அன்மையில் கூறியிருந்தது.
மறு புறத்தில் வட மாகாண மக்களுக்கும் பிரதேச நிர்வாகத்தின் பயன்களை அனுபவிக்க இடமளிக்க வேண்டும். போரின் பின்னாலான நிலைமையின் கீழ் வட மாகாண சபைக்கு பாரிய பங்கினை ஆற்ற முடியும். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற பயத்தினாலோ என்னவோ அரசாங்கம் அத் தேர்தலை நடத்த பின் வாங்குகிறது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago