2025 மே 20, செவ்வாய்க்கிழமை

த.தே. கூட்டமைப்பு மீதான கோபம் நியாயமானதா?

Super User   / 2012 ஜனவரி 20 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே. சஞ்சயன்

ல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து, அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி,  பதிலளிக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்தவாரம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது.

இதையிட்டு அரசாங்கம் வெளிப்படையாக எதையும் கூறாது போனாலும், சஜின் வாஸ் குணவர்த்தன போன்ற அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளை தீர்மானிக்கும் வல்லமைபெற்ற சிலர் இதுபற்றிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.  இதிலிருந்து இந்த அறிக்கையை அரசாங்கம் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதும் அதனை நிராகரித்து கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனை அரசாங்கம் கண்டிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டது.

ஆனால் இம்முறை அப்படிக் கண்டிக்காது போனாலும், அந்தக் கோபத்தை வேறு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் விதத்தில் இந்த அறிக்கை அமையவில்லை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதானமான குற்றச்சாட்டு. இதையே தான் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற பல நாடுகளும் கூறியுள்ளன. அதையே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு இரண்டொரு நாட்கள் முன்னதாக இதை வெளியிட்டது தான் அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த இந்தியா, குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுவதற்கு காலவரம்பு ஒன்றை நிர்ணயிக்குமாறும் கூறியிருந்தது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவின் அழுத்தங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காய்களை நகர்த்துவதாக அரசுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

அதைவிட, ஜெனிவாவில் அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கப் போகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரையும் அரசாங்கம் கவலையோடு தான் நோக்கத் தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரை இலக்கு வைத்து அரசாங்கம் மீது தாக்குதல் தொடுக்க கூட்டமைப்புத் தயாராகி வருவதாக சஜின் வாஸ் குணவர்தன கூறியிருந்த கருத்து இதனை உறுதி செய்கிறது.

சஜின் வாஸ் குணவர்த்தன ஒன்றும் சாதாரணமான நபரில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எல்லா வெளிநாட்டுப் பயணங்களின் போதும்  ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட முக்கியமான சர்வதேச கூட்டங்களிலும் பங்கேற்ற ஒருவர். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களிலும் அவர் பங்கேற்கின்றார்.

ஆக, உள்ளக ரீதியான அரசியல் நகர்வுகளிலும் வெளியக இராஜதந்திர நகர்வுகளிலும் பரிச்சயமுள்ள அவர், த.தே கூட்டமைப்பு மேற்கொள்ளும் நகர்வுகளை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.

இவர் தான் த.தே கூட்டமைப்பின் அறிக்கையை அரசாங்கம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.  இந்தக் கட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் குறைபாடுகளை கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது தவறான காரியமா  என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கதத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, ஈபிடிபி போன்ற கட்சிகள் கூட இந்த அறிக்கையின் பல விடயங்கள் குறித்து தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டதாக அரசாங்கமும் அறிவிக்கவில்லை. அதில் உள்ள கட்சிகளும் அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை.

வரிக்கு வரி ஏற்றுக் கொண்டு முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அறிக்கை ஒன்றும் பைபிள் அல்ல என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவே கூறியுள்ளார்.

ஆக, அரசாங்கம் இந்த அறிக்கையை முழுமையாக ஏற்கவும் இல்லை, முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதும் இல்லை என்று எண்ணத் தேனர்றுகிறது.

அரசாங்கமோ அதிலுள்ள கட்சிகளோ கூட இந்த அறிக்கையை முழுமையானதாக - எதிர்ப்புகளின்றி ஏற்றுக்கொள்ளாத போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் அதனை நிராகரிக்கக் கூடாது என்று கருதுவது எந்த வகையிலும் நியாயமற்றது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளும் இதே கருத்தை  கூறின. இந்நிலையில் அரசாங்கம் கூட்டமைப்பு விடயத்தில் மட்டும் எதற்காக கோபப்படுகிறது?

இந்தச் சீற்றத்தை அடிப்படையாக வைத்துத்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தி வந்த பேச்சுக்களை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதா?

கடந்த 17, 18, 19ம் திகதிகளில் பேச்சுக்களை  நடத்துவதற்கு திகதி குறித்ததும் அரசாங்கம் தான். ஆனால் எந்தக் காரணமும் கூறாமல் பேச்சில் பங்கேற்காமல் ஒதுங்கியதும்  அரசாங்கம் தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரும் வரை அவர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டது.  இதேபோன்று தான் சஜின் வாஸ் குணவர்தனவும் கூறியுள்ளார்.

ஆக, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பு வரும் வரை அதனுடன் பேச்சுக்களை நடத்தப் போவதில்லை என்ற ஒரு முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

ஆனால் கடந்த 17ஆம் திகதி, அதாவது பேச்சுக்கள் தொடங்குவதாக இருந்த அன்று மதியத்துக்கு மேல்,  இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி  வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எதுவுமே கூறவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்கள் தொடரும் என்று தான் அவர் கூறியிருந்தார்.

ஆனாலும், அரசாங்கம் கூட்டமைப்புடனான பேச்சுக்களை சந்தடியின்றி நிறுத்தி விட்டது.  இதுபற்றி பெரும்பாலான ஊடகங்கள் அவ்வளவாக கண்டு கொள்ளாதது ஆச்சரியமான விடயம் தான்.

முன்னர் கூட்டமைப்பு இப்படி பேச்சுக்களில் இருந்து விலகிய போது, அதைப் பெரிதாக எடுத்துக் கொண்ட ஊடகங்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த நாட்களில் அதை நடத்தாமல் போன பல சந்தர்ப்பங்கள் உள்ளன.  ஆனால் ஒரு அறிவிப்பும் இல்லாமல், பேச்சுக்களில் பங்கேற்காமல் ஒதுங்கியது இது தான் முதல்முறை. இது கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கான பதிலடியாகவே கொள்ளப்படுகிறது.

இதிலிருந்தே த.தே. கூட்டமைப்பின் அறிக்கை எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் என்ன அணுகுமுறையை கடைப்பிடிக்கப் போகிறது என்றே அறிவிக்கவில்லை.

அதற்கிடையில்இ த.தே. கூட்டமைப்பு இந்த அறிக்கையை முழுமையாக ஏற்க வேண்டும் என்று அரசாங்கம் நினைப்பது  நியாயமற்றது.

அதைவிட, தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு த.தே. கூட்டமைப்பு மட்டும் மறுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எதுவுமே அதற்குப் பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.

ஆனாலும் ஐதேகவையோ அல்லது ஜனநாயக தேசிய முன்னணியையோ அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் தான் அது பொறிக்குள் சிக்க வைக்க முனைகிறது. தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் பேச்சுக்களை தொடங்கலாம் என்கிறது அரசாங்கம்.

அதேவேளை பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டுடன் தான் தெரிவுக்குழுவுக்குள் வரமுடியும் என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இந்தநிலையில் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.  தெரிவுக்குழுவும் சரி, அரசியல் பேச்சுக்களும் சரி முன்னோக்கி நகரப் போவதில்லை என்பதே அது.


You May Also Like

  Comments - 0

  • neethan Saturday, 21 January 2012 10:49 AM

    திரு.கே.சஞ்சயனின் தெரிவுக்குழு, அரசியல் பேசுக்கள் முன்னோக்கி நகரப்போவதில்லை என்பதை விட, காலம் கடத்தும் நிலைப்பாடு பொருத்தமானது. இராணுவ மோதல் முடிந்து மூன்று வருடங்களை நெருங்கும் நிலையில், தீர்வு விடயத்தில் முனேற்றம் பூச்சியமே.

    Reply : 0       0

    kuru Sunday, 22 January 2012 02:34 AM

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் கருணா போன்றவர்களின் வழியில் மற்றைய புனர்வாழ்வு பெற்ற புத்திஜிவிகளையும் அரசியலில் இணைத்தால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டும்....... இதுதான் சிறந்த தீர்வுப்பாதை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X