2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நடராஜன் பொங்கல் பேச்சு: திவாகரனுக்கு பொலிஸ் வலைவீச்சு

A.P.Mathan   / 2012 ஜனவரி 23 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சசிகலாவிற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்குமான அடுத்தகட்ட போராட்டம் தொடங்கியிருக்கிறது. சசிகலாவின் தம்பி திவாகரன் பொலிஸால் தேடப்படுகிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவில் உள்ள ரிஷியூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி. சமீபத்தில் காவல்துறையில் புகார் செய்த கஸ்தூரி, "கடந்த நவம்பர் மாதம் திவாகரன் என் வீட்டை இடித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் திவாகரன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள திருவாரூர் பொலிஸ் - திவாகரனை தேடுகிறது. தனிப்படை பொலிஸார் இரு குழுக்களாக பிரிந்து ஒரு குழு அவரது வீட்டிலும் இன்னொரு குழு அவரது கல்லூரியிலும் தேடுதல் வேட்டை நடத்தியது. ஆனால் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, அங்கிருந்து மாணவர்கள் செல்லும் பேருந்தில் தப்பி விட்டார் திவாகரன் என்று பொலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, திவாகரனை தீவிரமாக தேடி வருகிறது பொலிஸ்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா உள்ளிட்ட அவரது உறவினர்களுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. "நாங்கள் மீண்டும் வந்து விடுவோம் என்று கட்சியினரை அச்சுறுத்துவதை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்று பேசினார். அதன் பிறகு அ.தி.மு.க.வின் பொதுக்குழுப் பேச்சிற்கு கவுண்டர் கொடுக்கும் விதமாக தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் பேசினார் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். "நான் யாருக்கும் பயப்படமாட்டேன். இருவருக்கு மட்டுமே பயப்படுவேன். அவர்களில் ஒருவர் என் மனைவி சசிகலா. இன்னொருவர் பழ.நெடுமாறன்" என்று அறிவித்தவர், "என்னை முடிவு எடு தலைவா என்று கேட்கிறார்கள். நான் எப்போது முடிவு எடுக்காமல் இருந்தேன். முடிவு எடுத்ததால்தானே அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தது" என்ற ரீதியில் பேசினார் எம்.நடராஜன். "அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வருவதற்கு நான் காரணம்" என்ற நடராஜனின் பேச்சிற்கு பிறகே சசிகலாவின் தம்பி திவாகர் மீது பொலிஸில் கஸ்தூரி என்பவர் புகார் செய்திருக்கிறார். "யாருக்கும் பயப்பட மாட்டோம்" என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரை இப்போது பொலிஸுக்கு பயந்து தலைமறைவாக வைத்துள்ளது இந்த நடவடிக்கை.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், திவாகரன் இனி நிச்சயம் முன் ஜாமின் கோர வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது. அப்படி முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் கிடைத்தாலும், திவாகரன் நிச்சயம் பொலிஸில் விசாரணைக்காக ஆஜராக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இப்படி பொலிஸில் விசாரணைக்காக வந்த நேரங்களில்தான் சமீபத்தில் வந்த பெரும்பாலான வழக்குகளில் (குறிப்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதிர்ஷ்டலாப சீட்டு அதிபர் மார்ட்டின் போன்றோரின் வழக்குகள்) வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள வழக்கு திவாகரன் தலைக்கு மேல் தொங்கும் கத்தி. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் திவாகரன் சசிகலாவிற்கு ரொம்பவும் பிரியமான தம்பி என்பதுதான்.

எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருக்கும்போது அதன் உள்கட்சி விவகாரத்திலும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது அரசு விவகாரங்களிலும் டெல்டா மாவட்டங்களில் கோலோச்சும் சக்தி படைத்தவர் திவாகரன். சென்ற 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் மன்னார்குடியில் நடைபெற்ற சசிகலா உறவினர் ஒருவரின் மணி விழாவின் போது தயார் செய்யப்பட்டதாகக் கூட ஒரு தகவல் உண்டு. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகபட்டினம், கரூர், பெரம்பலூர் போன்ற ஏழு மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க.வினர் திவாகரனை "பாஸ்" என்று அழைத்தே பழக்கப்பட்டவர்கள். தற்போது சசிகலா வெளியேற்றப்பட்ட போது கூட இந்தப் பகுதியில் திவாகரனின் ஆதரவாளர் என்று கருதப்பட்ட அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த பகுதியில் மணல் கான்டிராக்டில் திவாகரனின் கையே ஓங்கியிருந்தது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இந்த மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளை தி.மு.க.வின் பினாமிகளுக்கே வழங்குவதற்கு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளே முணுமுணுத்த சம்பவங்கள் எல்லாம் உண்டு. இப்பகுதியில் வீ்ட்டு வசதித் துறை அமைச்சராக இருக்கும் வைத்தியலிங்கம் தவிர உணவுத்துறை அமைச்சர் காமராஜும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியமும் திவாகரனின் "அருட்கடாட்சத்தால்" அமைச்சர் பதவி பெற்றார்கள் என்ற பேச்சும் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே எழுந்தது. அது மட்டுமின்றி இந்த ஏழு மாவட்டங்களிலும் கலெக்டர்களாக, எஸ்.பி.களாக வர விரும்புவோர் திவாகரனின் பரிந்துரைக்காகவே காத்துக் கிடந்த காலங்கள் எல்லாம் உண்டு. இவ்வளவு "அதிகாரமிக்கவராக" வலம் வந்த திவாகரனை இப்போது பொலிஸ் தேடிக் கொண்டிருப்பது பரபரப்பு செய்தியாகியுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா "கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார். சசிகலா வெளியேற்றப்பட்ட இரண்டு மூன்று தினங்களில் அந்த வழக்கில் அவருக்கு தற்காலிக தடையாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து இப்போது வருகின்ற 25ஆம் திகதிக்கு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலாவின் கோரிக்கையை ஏற்று "கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுங்கள்" என்று நீதிமன்றம் உத்தரவிடுமா அல்லது சசிகலாவின் மனுவினை டிஸ்மிஸ் செய்யுமா என்பது தெரியவரும். இந்த வழக்கு முடிவுக்கு வந்தவுடன் ஜனவரி 30ஆம் திகதியன்று சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சசிகலாவிற்காக இருந்த வழக்கறிஞர் மாற்றப்பட்டு புதிய வழக்கறிஞராக மணிசங்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் நடைபெற்ற தினத்தில் சென்னையிலிருந்து சென்ற இன்னொரு வழக்கறிஞரும் கூடவே இருந்திருக்கிறார். அப்படி கூடவே சென்ற வழக்கறிஞர் சென்றமுறை செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது அவரின் நேர்முக உதவியாளராக இருந்தவர். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடிக்கப்பட்ட நிலையில், சசிகலா மட்டும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கில் ஆஜராகாமல் உயர்நீதிமன்றத்தை நாடி வருகிறார். இப்படியொரு சந்தர்ப்பத்தில் அவருக்கு மிகவும் பிரியமான தம்பியான திவாகரனை கிரிமினல் வழக்கில் பொலிஸ் தேடுகிறது.

 

திவாகரனை பொலிஸ் தேடுவதன் மூலம் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் ஆகியோருக்கு மட்டுமின்றி, உறவினர்களுக்கும் "எச்சரிக்கை மணி" அடிக்கப்பட்டிருக்கிறது. "யாருக்கும் பயப்பட மாட்டோம்" என்று சவால் விட வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா தரப்பில் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி இது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, இப்போது திவாகரனை பொலிஸ் தேடுகின்ற சூழ்நிலையிலும் அமைதி காப்பாரா அல்லது கருத்துச் சொல்வாரா என்பதே இப்போதைக்கு அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0

  • vimal udayar Tuesday, 24 January 2012 07:10 PM

    விநாசகாலே விபரீத புத்தி என்கிற முதுமொழி மீண்டும் உண்மையாகி உள்ளது . பொதுக்குழுவில் அம்மா எச்சரித்தபடி அமைதிகாக்காமல் தஞ்சாவூரில் விட்ட சவாலின் விளைவுகளை சந்தித்துதானே ஆகவேண்டும். யாருக்கும் பயப்படாத வீரர்கள் தலை மறைவாகலாமா ? இது சினிமா அல்ல என்பதை நடராஜன் புரிந்து கொண்டால் தப்பிக்கலாம். கடவுளுக்கு நன்றி. கட்டுரை ஆசிரியருக்கு வணக்கம்.

    Reply : 0       0

    ibnuaboo Wednesday, 25 January 2012 12:53 AM

    மேதாவிகளும், அரசியல் அறிஞசர்களும், கலை இலக்கிய ஜாம்பவான்களும் நிறைந்த புத்திஜீவிகளின் பூமி தான் இத்தமிழகம். ஆனால் அந்தோ பரிதாபம் கேடு கேட்டவர் வசம் தமிழகத்தை தாரை வார்த்து விட்டார்கள். தமிழக வாக்காளர்கள். தமிழக ஆட்சி குரங்கின் கை பூமாளையாயிற்று. ஆயினும் ஜெயலலிதாவுக்கு இப்பொது கருணாநிதியை விட புது சவால்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அரசியலில் இனி புதிய குழப்பங்களை எதிர் பார்க்கலாம். எதிர் அணிக்கு நல்ல காட்சிகள் தான். ilankayaan

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X