Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 ஜனவரி 26 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரச்சினைகளை அதிகாரிகளிடம் கொடுங்கள், அவர்கள் உலகம் அழியும் நாள்வரை பேச்சுவார்த்தை நடத்துவார்கள்: நேரு
• தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை சி.பி.ஐ கண்டிக்கிறது.
• மீன்பிடி சர்ச்சை: கூட்டு ரோந்து சேவைக்கு இந்தியா தயாரில்லை.
• விடுதலையான புதுக்கோட்டை மீனவர்கள் நாடு திரும்பினர்.
• அந்தமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை.
• திருட்டுத்தனமாக மீன் பிடித்தல்: சிக்கலான பிரச்சினை.
• இந்திய மீனவர்கள் இலங்கையின் கிழக்கை நோக்கி வருகிறார்கள்.
• மீனவர்கள் மீதான தாக்குதல்களைப் பற்றி தி.மு.க. - மத்திய அரசை எச்சரிக்கிறது.
• இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை நிராகரிக்கிறது.
• இந்திய சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கச்சதீவில்; தேசிய கொடியை ஏற்றுமாறு இந்து மக்கள் கட்சி அரசை கோருகிறது.
• 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
கடந்த 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் சிலவற்றின் தலைப்புகளே மேலே தரப்பட்டுள்ளன. தீர்க்கப்பட வேண்டிய சிக்கலான ஒரு பிரச்சினை இருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இது திடீரென உருவான பிரச்சினை அல்ல. அடிக்கடி இதுபோன்ற நிலைமை உருவாகும். பாக்கு நீரிணையில் வைத்து இந்திய மீனவர்கள் - இலங்கை கடற் படையினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வரும்போதெல்லாம் தொடர்ந்து வாரக் கணக்கில் இதுபோன்று செய்திகள் வெளிவரும்.
இந்தச் செய்தியைப் பாருங்கள். இது எப்போது வெளிவந்த செய்தி என்று கூற முடியுமா?
'பாக்கு நீரிணையில் இறால் இருப்பதால் இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குச் செல்ல முடியாது - இந்திய அரச அதிகாரி விளக்கம்'
'பாக்கு நீரிணையில் இலங்கையைச் சேர்ந்த பகுதியில் இறால் வகைகள் நிறைய இருந்தாலும் ராமேஸ்வரம் மீனவர்கள் கரையோரக் கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குச் செல்ல அது காரணமாகாது என இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு இணைச் செயலாளரான ஜனாப் எஸ்.சஹாப்தீன் இந்திய மீனனவர்களிடம் கூறினார்.........
......இலங்கை கடற்படை - இந்திய கடற்பகுதிக்குள் புகுந்து இந்திய மீனவர்களுக்கு தொல்லை கொடுக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்...'
இது இன்று நேற்று வெளியான செய்தியல்ல. 1976ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றில் வந்த செய்தியொன்றின் முதலாவது மற்றும் கடைசி பந்திகளே மேலே தரப்பட்டுள்ளன. இந்த மீனவர் பிரச்சினைக்கு வயது எத்தனை என்பதை இதைக் கொண்டு ஊகிக்கலாம். 1974ஆம் ஆண்டே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இலங்கையிடம் கச்சதீவு கையளிக்கப்பட்டது. அப்போதும் இந்தப் பிரச்சினை இருந்துள்ளது. இன்றுவரை அது தீர்க்கப்படாமல் வந்துள்ளமையே வரலாறாக இருக்கிறது.
ஆனால் இதுவரை இலங்கை - இந்திய அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்க எதுவுமே செய்யாமல் இருக்கவில்லை. அவ் அரசாங்கங்கள், அமைச்சர்கள் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் இதைப்பற்றி பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளன. பேச்சுவார்த்தையே பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மிகவும் நாகரிகமான வழிமுறையாகும். ஆயினும் பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் இரு நாடுகளுக்கும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்பதே இங்கே கேள்வியாக இருக்கிறது.
ஜே.ஆர்.ஜயவர்தன அசசாங்கத்தின் ராஜாங்க அமைச்சராகவிருந்த கலாநிதி ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஒருமுறை அமைச்சரவை தீர்மானங்களை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்து விட்டு ஒரு கதையைச் சொன்னார். இது தான் அந்தக் கதை.
இலங்கையில் அப்போது இருந்த நாடற்றவர்களின் பிரச்சினையைப் பற்றி; இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஜோன் கெத்தலாவல 1950களின் முற்பகுதியில் புதுடில்லிக்குச் சேன்றிருந்தார். கலாநிதி அல்விஸும் கொத்தலாவலவின் செயலாளராக கொத்தலாவலவுடன் சென்றிருந்தார். அப்போது நேரு இவ்வாறு கூறினாராம்.
'உங்கள் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தப் பத்து லட்சம் மக்களை இதுவரை வைத்திருந்ததைப் போல் வைத்திருப்பது உங்களுக்கு பாரிய பிரச்சினையாகாது. ஆனால் உங்கள் எதிர்க்கட்சிகள் அதற்கு உங்களுக்கு இடமளிக்கமாட்டா. அதேபோல் அம் மக்களை ஏற்றுக் கொள்வது எங்கள் நாட்டுக்கும் எவ்வகையிலும் பிரச்சினையல்ல. ஆனால் எமது எதிர்க்கட்சிகள் அதற்கு இடம் கொடா. எனவே இதற்கு சிறந்த தீர்வு என்னவென்றால் இப் பிரச்சினையை அதிகாரிகளிடம் கொடுப்பதே. அவர்கள் இதனைப் பற்றி உலகம் அழியும் நாள் வரை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பார்கள்...'
நாடற்றவர்களின் பிரச்சினை நேருவின் மகள் இந்திராவின் காலத்தில் தீர்க்கப்பட்டாலும் நேருவின் இந்த ஆலோசனை மீனவர்களின் பிரச்சினை விடயத்திலும் இனப் பிரச்சினை விடயத்திலும் கடைப் பிடிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால் இப்போது அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் உலகம் அழியும் நாள் வரை பேச்சுவார்த்தை நடத்த பழகிவிட்டார்கள் போலும்.
சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் பாக்கு நீரிணையில் மீனவர் பிரச்சினை என்பது இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் அத்து மீறி மீன் பிடிப்பதனால் ஏற்படும் பிரச்சினையே தவிர வட இலங்கை மீனவர்கள் - இந்திய கடலில் மீன் பிடிப்பதனால் உருவானதொன்றல்ல. இலங்கை மீனவர்களும் எல்லையை கடந்து செல்வதுண்டு. ஆனால் பிரதான பிச்சினை அதுவல்ல.
முதலில் குறிப்பிட்ட 1976ஆம் ஆண்டு வெளியான மேற்படி செய்தியும் அதனையே எடுத்துக் காட்டுகிறது. 2008ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி இந்திய தென் கடலில் விஷேட ரோந்தில் ஈடுபட்ட இந்திய தென் கடலுக்குப் பொறுப்பான இந்திய கடற்படை அதிகாரியான கொமடோர் வான் ஹோல்டரன் அந்த ரோந்துக்குப் பின் இந்திய மீனவர்களையே குறை கூறினாhர். இலங்கை கடற்படை ஒருபோதும் இந்திய கடல் எல்லையைத் தாண்டவில்லை என்றும் இந்திய மீனவர்கள் கூடுதலாக மீன் பிடிப்பதற்காக இலங்கைக் கடற்கரையை நெருங்கிச் செல்வதே பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் ஒன்றும் இவ்வாறு கூறியது. கடந்த வருடம் இலங்கை, இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடலில் மீன் பிடிக்க எத்தனை நாட்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றே ஆராயப்பட்டது.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல்வாதிகள் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டிவருமே என்று இதைப் பற்றிப் பேச தயங்குகிறார்கள் போலும். அதன் மூலம் அவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண மீனவர்களின் உரிமைகளையே உதாசீனம் செய்கிறார்கள்.
அதேவேளை, அவ்வரசியல்வாதிகளில் பலர் இந்தப்பிரச்சினை தொடர்வதையே விரும்புகிறார்கள் போலும். ஏனெனில் இந்தப் பிரச்சினை தமிழ்நாடு - இலங்கைக்கு எதிராக கிளர்ந்தெழ அடிக்கடி உதவுகிறது. அது தமக்கு சாதகமான நிலைமை என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது பயங்கரமான விளையாட்டாகவே இருக்கிறது.
இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்திய அரசுக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. ஆனால் அடுத்த தேர்தலில் மீனவர்களின் வாக்கை இழக்க வேண்டி வரும் என்பதனால் அவர்களும் கண்டிப்பாக இருப்பதில்லை. எனவே நேருவின் கூற்றை மெய்ப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago