2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சசிகலா வெளியேற்றமும் தமிழக சட்டமன்ற தொடரும்

A.P.Mathan   / 2012 ஜனவரி 30 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கூடியிருக்கிறது. 2012ஆம் வருடத்தின் ஆளுநர் உரைக்காக கூடியிருக்கும் இந்த சட்டமன்ற தொடரில் ஆளுநர் ரோசய்யா முதல் முறையாக உரை நிகழ்த்துகிறார். இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக இருந்த முக்கிய கட்சிகள் என்றால் அவற்றில் முதல் கட்சி தே.மு.தி.க. - அதாவது விஜயகாந்த் தலைமையிலான கட்சி சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றே 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. விஜயகாந்தும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆனார். அது தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவையும் கூட்டணியாக இருந்தன. சிறிய கட்சிகளான புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி), மனித நேய மக்கள் கட்சி (டாக்டர் ஜவஹிருல்லா), அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (நடிகர் சரத்குமார்), இந்திய குடியரசு கட்சி (செ.கு. தமிழரசன்) உள்ளிட்டோரின் கட்சிகளும் கூட்டணியாக இருந்தன. ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக இருக்கிறோம் என்று உறுதியாக நிற்பவர்கள் சரத்குமார், செ.கு.தமிழரசன் ஆகியோர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் தங்களை அ.தி.மு.க. புறக்கணித்து விட்டது என்ற கோபத்திலேயே இருக்கிறார்கள்.

குறிப்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தன்னை அ.தி.மு.க. புறக்கணித்ததற்கு சசிகலாவும் அவரது குடும்ப உறுப்பினர்களுமே காரணம் என்று நினைக்கிறார். அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் அவரை கழற்றி விட்டபோது ஆவேசப்பட்டார். "குடும்ப ஆட்சியை அகற்ற (சென்ற முறை நடந்த தி.மு.க. ஆட்சி) கூட்டணி வைத்தேன். ஆனால் இப்போது கும்பல் ஆட்சி (சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்) நடக்கிறது" என்று கடுமையாக சாடினார். இந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இப்படியொரு கருத்தை பளிச்சென முதலில் சொன்னவர் விஜயகாந்த் மட்டுமே! அதற்கும் முன்பே நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு சசிகலாவே காரணம் என்ற எண்ணம் வைகோவிற்கு ஏற்பட்டது. இப்படி கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் அ.தி.மு.க.வில் தங்களுக்கு நேர்ந்த பிரச்சினைகளுக்கு சசிகலாவும் அவரது உறவினர்களுமே காரணம் என்று கருதிய நேரத்தில் "சசிகலா அன்ட் கோ" வெளியேற்றப்பட்டிருக்கிறது. அவரது தம்பி திவாகரன் ஒரு வழக்கில் முன் ஜாமின் கேட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். சசிகலாவின் தாய்மாமனார் மாப்பிள்ளை இராவணன் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் "கொங்கு பெல்ட்" என்று கூறப்படும் கோவை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் அதிகார மையமாக செயல்பட்டவர் இந்த இராவணன்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரை அ.தி.மு.க.வுடன் இருந்த கூட்டணி கட்சிகள் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர) எதுவும் கேள்வி எழுப்பவில்லை. அ.தி.மு.க. கூட்டணியை விட்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவோ சசிகலா நீக்கம் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. "அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை" என்ற ரீதியிலேயே இருக்கிறார்கள் என்றாலும், அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சசிகலா இல்லாத அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் தெரிவினை இந்த கட்சிகள் எல்லாமே மனதில் வைத்தே அமைதி காக்கின்றன. இன்றைய திகதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அதிக சீட்டுகளில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும் "வாக்கு வங்கி சக்தி" விஜயகாந்திடம் இருக்கிறது. அதனால் சசிகலா இல்லாத அ.தி.மு.க.வில் தனக்கு அதிகமான சீட்டுகளும் உரிய மரியாதையும் கிடைக்கலாம் என்று அவர் நினைக்கலாம். அதேபோல் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியை தி.மு.க. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கழற்றி விடவில்லையென்றால், காங்கிரஸ் இருக்கும் தி.மு.க. அணியில் சேர முடியாது என்று வைகோ கருதலாம்.

தேவர் கட்சி என்ற இமேஜ் இருந்ததுதான் தலித்கள் மீதான பரமக்குடி துப்பாக்கி சூடு நடந்த பிறகு புதிய தமிழகம் கட்சி அங்கே இருக்க முடியாத சூழ்நிலை உருவானது. அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் விமர்ச்சித்து விட்டு வெளியேறினார். இன்று சசிகலா அ.தி.மு.க.வில் இல்லை என்பது தனக்கு அ.தி.மு.க.வுடன் "பிரச்சினையில்லாத கூட்டணி" அமைக்க உதவும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி எண்ணுகிறார். அதனால்தான் மற்ற கட்சிகள் எல்லாம் அமைதி காக்க, டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் சசிகலா வெளியேற்றத்தை பாராட்டும் வகையிலேயே கருத்து தெரிவித்தார். விஜயகாந்த் எங்கு போகிறாரோ, அதன் பிறகுதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறு கட்சிகளில் மவுசு கிடைக்கும். அதனால் அ.தி.மு.க.வுடனும் கூட கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத் தேர்தலில் வரலாம் என்று டாக்டர் ராமதாஸ் கருதுகிறார். இந்நிலையில் இனிமேல் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று கருதி சரத்குமார், செ.கு.தமிழரசன், ஜவஹிருல்லா போன்றவர்கள் காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து "ஆக்கபூர்வமான கருத்துக்களை" மட்டும், சட்டமன்றத்தில் எடுத்து வைக்கலாம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வெளியேறிய கட்சிகளும், எதிர்காலத்தில் கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சிகளும் இந்த மனப்பான்மையிலேயே இருப்பதாக தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் சசிகலாவின் வெளியேற்றம் மற்றும் அவரது உறவினர்களை பாராட்டும் விதத்தில் கூட சட்டமன்றத்தில் இந்த கட்சிகள் பேசலாம்.

தி.மு.க.வை பொறுத்தமட்டில் பொதுக்குழுக்கூட்டத்தை பெப்ரவரி மூன்றாம் திகதியும், அதற்கு முன் அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை பெப்ரவரி இரண்டாம் திகதியும் வைத்து விட்டு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கிறது. மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து தி.மு.க. சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. அதே நேரத்தில் உள்கட்சி பிரச்சினைகள், கூட்டணி பற்றியெல்லாம் அக்கட்சியின் பொதுக்குழுவில் விவாதித்து விட்டு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளில் மேலும் தீவிரமாக கவனம் செலுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களும் சசிகலா வெளியேற்றம் பற்றி பேசுவார்களா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் இப்போதே இலை மறை காய் மறைவாகத்தான் இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் அக்கட்சி தலைவர்கள். அதை விட, சசிகலா வெளியேற்றத்திற்கு ஆதரவாகவே "பொதுமக்கள் அபிப்பிராயம்" இருக்கிறது. இந்த பொதுமக்கள் மனநிலைக்கு எதிராக தி.மு.க. சசிகலா விடயத்தில் அ.தி.மு.க.வுடன் நேரடி தாக்குதலுக்கு தயாராக இருக்காது. அதையும் விட தி.மு.க.விற்குள்ளேயே ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று பனிப்போர் தொடருகிறது. ஜனவரி 30ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாடிய தி.மு.க. தலைவரின் மகன் மு.க. அழகிரிக்கு சென்ற வருடம் போல் தி.மு.க.வின் அதிகார பூர்வ பத்திரிகையான முரசொலியில் விளம்பரங்கள் இல்லை. மு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து ஒன்பது விளம்பரங்கள் மட்டுமே வந்திருக்கிறது. அவற்றில் கூட தென் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தது ஆறு விளம்பரம். அதில் ஒருவர் மட்டுமே முன்னாள் அமைச்சர். அவர் கூட ஸ்டாலினின் படத்தையும் போட்டே அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் கொடுத்தது மூன்றே விளம்பரங்கள் மட்டுமே. ஆகவே உள்கட்சி பிரச்சினையில் தி.மு.க.வும் பதற்றம் ஆகிக் கொண்டிருப்பதால் சசிகலாவின் விவகாரத்தை தவிர்த்து விட்டு, மக்கள் பிரச்சினைகளை முன் வைத்தே சட்டமன்றத்தில் செயல்படும். அதை வெளிப்படுத்தும் விதமாகவே ஆளுநரின் உரை வாசிக்கும் முன்பே வெளிநடப்பு செய்திருக்கிறது தி.மு.க.

ஆகவே, சசிகலா இல்லாத அ.தி.மு.க. ஆட்சியின் இந்த சட்டமன்ற தொடரில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளும், கூட்டணிக்கு காத்திருக்கும் கட்சிகளும் ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லலாம். அது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் அணி அமைவதற்கு முதல் படிக்கட்டாக அமையலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X