Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 ஜனவரி 30 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசுடனான அதிகார பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு சர்வதேச சமூகம் ஒருங்கிணைப்பாளராக (facilitator) செயல்படவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. இதில், அமெரிக்கா போன்ற (வல்லரசு) நாடோ அல்லது ஐ.நா. சபை போன்ற அமைப்போ பங்காற்ற வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது. அதாவது, தமிழ் அரசியல் தலைமை மற்றும் புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட தமிழ் சமூகத்தினரால் சாதிக்கமுடியாததை, சர்வதேசம் தங்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட்டமைப்பின் கோரிக்கையின் பின்னர் தொக்கியுள்ளது. இது நடைமுறைக்கு ஒவ்வாத விடயம். கடந்த காலங்களில், இந்தியா, ஜப்பான், ஐரேபாப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் முயன்று தோற்ற விடயத்தை தொட்டுப் பார்க்கவே பிறநாட்டுத் தலைமைகள் சங்கடப்படும்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள இந்த ஆண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்கிற்காக ஏதாவது அரசியல் அறிக்கைகள் முன்வைக்கப் படலாம். அது கூட சந்தேகம் தான். ஆனால்,அதற்காக மட்டுமே, இலங்கை அரசுடனான நல்லுறவை பாதிக்கும் விதத்தில் அமெரிக்கா செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. தேசிய அளவிலான ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே திருப்திப்படுத்தும் அரசியலை அந்த நாட்டின் அரசியல் கட்சி தலைமைகள் ஓர் அளவிற்கு அப்பால் சென்று தங்களது கொள்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள, இலங்கை பிரச்சினை ஒன்றும் இஸ்ரேலிய பிரச்சினையும் அல்ல.
கடந்த வருடத்தின் பெரும் பகுதியும், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் பலரும் போர்க்குற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசை சாடி வந்தனர். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்த குழுவின் பின்னும், ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் முன்னேயான தீர்மானத்திலும், அமெரிக்கா இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏன், புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கானடா போன்ற நாடுகளுக்கு கூட அமெரிக்கா மேலும் அழுத்தம் கொடுத்து அந்த நாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மேலும் திருப்புவதாக கூறப்பட்டது.
ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக இலங்கை அரசின் எதிரேயான போர்க் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடக்கிவாசிக்கிறது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பர்pந்துரைகளில் சிறந்த கருத்துகள் உள்ளதாக அமெரிக்க அரசு எண்ணத் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. இது ஆணைக்குழு அறிக்கை குறித்த அமெரிக்காவின் முந்தைய எதிர்பார்ப்புகளில் இருந்து சிறிது மாறுபட்டு உள்ளது.
அமெரிக்கா சொன்னதைவிட தற்போது சொல்லாமல் விட்டுள்ளது முக்கியமானதாகும். ஏன், ஐ.நா. பாதுகாப்புப்படையின் ஆலோசனை குழுவில் தமிழ் மக்களால் போர்க் குற்றங்களுக்காக அமெரிக்காவில் வழக்குதொடரப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது அங்கம் வகிப்பதும் இதனையே குறிக்கிறது.
இது போன்றே ஐரோப்பிய ஒன்றியமும் ஆணைக்குழு அறிக்கை குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது என்ற எண்ணம் உருவாகி வருகிறது. ஆனால், இதே நிலைப்பாடு தொடருமா? அல்லது பெப்ரவரி மாத கடைசியில் ஜெனிவா நகரில் கூட உள்ள மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்திற்கு முன் மீண்டும் மாறுமா என்று கூற இயலாது. எது எப்படியோ, இலங்கை பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு, புலம்பெயர்ந்தோர் நம்பவைக்க முயல்வதுபோல், மனித உரிமை குறித்த கரிசனத்தால் முடிவுசெய்யப்பட மாட்டாது. மாறாக உலக அரங்கிலோ, இந்திய பெருங்கடல் பகுதியிலோ, மேலை நாடுகளின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதை ஒட்டியே அமையும். இதில், இலங்கை அரசை பயமுறுத்துவதற்கு மட்டுமே தமிழர் பிரச்சினையும் போர்க்குற்றம் குறித்த அறிக்கைகளும் உதவும்.
அரசுடனான கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைக்கு ஒருங்கிணைப்பாளராக, சர்வதேச சமூகத்தின் உறுப்பு நாடு எதுவானாலும், இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பவங்களை வைத்து பார்க்கும் பொழுது. ஐ.நா. சபை உட்பட்ட எவருமே இலங்கை அரசினால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு யாராவது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கடந்தகால சரித்திரத்தை புரட்டிப் பார்க்காமல் அவர்களால் இருக்கமுடியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வழிமுறைகளை கூட்டமைப்பு பின்பற்றாது என்ற ஆணித்தரமான எண்ணம் இருந்தால் மட்டுமே எந்தவொரு நாடும் இத்தகைய அர்ப்பணிப்பில் துணிந்து கால் வைக்கும். இதுவே நடைமுறை சாத்தியமா என்பது கேள்விக்குறி.
கூட்டமைப்பு தற்போது முயல்வதுபோல் கிழக்கில் ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது நல்ல அறிகுறி. பொலிஸ், நிலம் குறித்த அதிகாரங்களுக்கு அப்பால், கிழக்கு - வடக்கு இணைப்பு குறித்து இரு தரப்பினருக்கும் இடையே உள்ள வேறுபாடு உலகம் அறிந்ததே. இதனையே பின்னர் காரணம் காட்டி, பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்வது தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றுவதற்கு ஒப்பானதாகும். எனவே, எப்போது தம்முள் பேச்சுவார்த்தை தொடங்கினாலும், இந்த இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட்ட பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். இதுவே கூட்டமைப்பு, முஸ்லிம் மற்றும் பிற வட தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினால் மனதில் கொள்ள வேண்டிய விடயமும் ஆகும்.
இப்பொழுது சர்வதேச சமூகத்தை நம்பி அரசியல் செய்துவரும் கூட்டமைப்பு, இது குறித்து இந்தியா போன்ற நட்பு நாடுகளிடம் கூறியுள்ளதா என்று தெரியவில்லை. அதேசமயம், தங்களை அந்த நாடுகள் தங்களது உலக அரசியலில் கறிவேப்பிலையாக பயன்படுத்தி, தூக்கி எறிந்துவிடுமோ என்ற உண்மை உறைத்துள்ளதா என்றும் தெரியவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றவகையில் கடந்த காலங்களில் அதிகார பகிர்வு குறித்து அரசியல் செய்துவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த வெளிநாட்டினை குற்றம் சாட்டுவது இலங்கை அரசுக்கும் தமிழ் தலைமைக்கும் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. இந்த பின்னணியில், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தமிழ் சமூகத்தின் எதிர்காலம் அமைந்துவிடக்கூடாது என்பதே கவலை. ஆனால், இதுவே தான் கடந்தகாலமும் காட்டும் படிப்பினை.
ummpa Monday, 30 January 2012 11:21 PM
கடந்த 19 திகதி எழுதிய கட்டுரையுடன் இன்றைய சனாதிபதி அவர்களின் கருத்தும் ஒப்பிடுப்பார்தவுடன் உங்களின் திறமை வெளிப்படுகிறது. நிட்சயமாக கறிவேப்பிலை தூக்கி விசப்படாமல் இருக்கவேண்டுமானால் இப்போதே பாராளுமன்ற குழுவில் இடம்பெறுவது காலத்தின் தேவை. உங்களின் கட்டுரை இல் இருந்து "கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதின்மூன்றாவது சட்டதிருத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றவர்கள் தற்போது பொலிஸ் மற்றும் காணி குறித்த அதிகாரங்களுக்கு மட்டும் அதனை ஏற்றுக் கொள்வோம் என்று கூறுவது ஏற்புடையதா!"
Reply : 0 0
THIVAAN Tuesday, 31 January 2012 02:52 AM
கறிவேப்பிலை முக்கியமான ஒன்றல்ல , உப்பு இல்லாமல் இருக்கிறது உங்கள் கட்டுரை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago