2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விடுதலை புலிகள் மக்கள் முன்னணி; விடுபட்டுப் போன பொன்னான சந்தர்ப்பம்

Super User   / 2012 பெப்ரவரி 04 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தமிழ் பேசும் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளை சில தினங்களுக்கு முன் இரத்துச் செய்துள்ளார். இவற்றில் இரண்டு தமிழ் ஆயுதக் குழுக்களால் உருவாக்கப்பட்டவையாகும்.
 
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் பல தமிழ் இயக்கங்களின் மூத்த உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகியனவே அவையாகும். மற்றையது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் ஆஷ்ரப், அவரது இறுதிக் காலத்தில் உருவாக்கிய தேசிய ஐக்கிய முன்னணியே.
 
புலிகள் அமைப்பின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கை முறைகளை யார் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்; அவ் வியக்கம் தான் தமிழ் மக்களிடம் இருந்த மிகப் பலமான பேரம் பேசும் ஆயுதம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இப்போது தமிழ் மக்கள் அந்த ஆயுதத்தை இழந்து விட்டார்கள். இந்த நிலையில் கூடுதல் அதிகாரத்துடன் அதிகார பரவலாக்கலை வென்றெடுக்க கிடைத்து விடுபட்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

இப்போது மாகாண சபைகளுக்கு இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களுடன் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் பதவிக்கு வர 1989-90 ஆண்டுகளில் கிடைத்த சந்தர்ப்பமும் அவற்றில் ஒன்றாகும்.
 
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்திலேயே உருவாக்கப்பட்டது. தாம் உன்மையிலேயே ஜனநாயக அரசியலுக்கு வரப் போவதாக ஜனாதிபதி பிரேமதாசவை நம்ப வைப்பதற்காகவே புலிகள் அப்போது அக்கட்சியை உருவாக்கினார்கள் என்பது பின்னர் புலனாகியது.  ஆனால், அப்போது இருந்த சாதகமான நிலைமையை புலிகள் பாவித்து இருந்தால் பிற்காலத்தில் ஏற்பட்ட அழிவுகளை தவிர்க்கும் வகையில் அப்போதே பதவிக்கு வந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
 
1980களின் ஆரம்பத்தில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழ் ஆயுதக்குழுக்களில் 1989 ஆம் ஆண்டளவில் புலிகள் மட்டுமே போர் களத்தில் இருந்தனர். அவர்கள் அப்போது பலனாகவும் இருந்தனர். ஏனைய குழுக்கள் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று தமிழ் ஈழக் கோரிக்கையையும் அதற்கான ஆயுதப் போராட்டத்தையும் கைவிட்டிருந்தன.
 
இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் காரணமாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்பதாக புலிகள் அது கைச்சாத்திடப்பட்ட உடன் கூறிய போதிலும், சில வாரங்களில் அவர்கள் இலங்கை படையினருக்கு எதிராக மட்டுமன்றி இந்திய படையினருக்கு எதிராகவும் போர் தொடுத்தனர். இந்த நிலையிலேயே 1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றார்.
 
அவர் புலிகளுக்கும் அப்போது தென் பகுதிகளில் தேசபக்த மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஆயுதம் ஏந்தி வன்முறைகளில் ஈடுபட்டு வந்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்காக அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி பிரேமதாசவிற்கும் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் அப்போது இருந்த பொதுத் தன்மை என்னவென்றால் மூன்று சாராரும் இந்திய படையினர் இலங்கையில் இருப்பதை விரும்பாததே.
 
இந்திய படையினரின் தொடர்ச்சியான பலத்த தாக்குதல்களினால் பெரும் நெருக்குதலுக்குள்ளாகி இருந்த புலிகள் மட்டும் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று 1989 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கமென கூறப்பட்ட போதிலும் புலிகள் இந்திய படையினரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதையே குறிக்கோளாக கொண்டு இருந்தனர்.
 
போர் நெருக்குதல் இருந்த போதிலும் எவ்வித வெளி சக்திகளின் நேரடி வற்புறுத்தலுமின்றி அரசாங்கத்தின் அழைப்பை தாமாகவே ஏற்று புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வந்த முதலாவது முறை இதுவே. எனவே இந்தப் பேச்சுவார்த்தைகள் நாட்டு மக்களிடையே சமாதானத்தைப் பற்றிய நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியிருந்தது. எதிர்க்கால தேர்தல்களில் கலந்து கொள்வதற்கு போல் புலிகள் இந்தப் பின்னணியிலேயே விடுதலை புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்தனர்.
 
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து முதலாவது மாகாண சபைத் தேரர்தல்களுக்காக முன்னாள் போராளிக் குழுக்கள் அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட போது சில குழுக்கள் தமது இயக்கப் பெயர்களில் இருந்த 'ஈழம்'; மற்றும் 'தமிழ் ஈழம்'; ஆகிய பதங்களுடனேயே அவற்றை பதிவு செய்தன. ஆனால் புலிகளின் கட்சிப் பெயரில் பிரிவினைவாத சாயல் இருக்காததும் சிலருக்குள் மேலும் நம்பிக்கையை ஊட்டியது.  
 
அப்போது புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது தலைவராகவும் அவ்வியக்கத்ததின் வன்னி பிராந்தியத் தளபதியுமாக இருந்த மஹத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலசுவாமி மஹேந்திரராஜாவே சமாதான பேச்சுவார்த்தைகளின் போது புலிகளின் தரப்புக்கு தலைமை தாங்கினார்.

அவரது தலைமையிலேயே புலிகளின் அரசியல் கட்சியான விடுதலை புலிகள் மக்கள் முன்னணியும் ஆரம்பிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகளின் மற்றொரு பிரபல்யம் வாய்ந்த தலைவரான யோகரட்ணம் யோகி புதிய கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். யோகி சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
 
புலிகளின் கண்ணோட்டத்தில் இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமானவை என்றே கூற வேண்டும். ஏனெனில் பிரேமதாச தமிழ் ஈழத்தைத் தவிர புலிகள் அப்போது கேட்ட அனைத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாகவே தோன்றியது. தமக்கு கொழும்புக்கு வருவதற்காக வன்னிக் காட்டுக்கு ஹெலிகொப்டர் அனுப்புமாறு புலிகள் கோரிய போது பிரேமதாச அங்கு ஹெலிகொப்டர் அனுப்பினார்.
 
அக் காலத்தில் புதிய வாகனங்களின் இலக்கத் தகடுகளில் அது வரை பாவனையில் இருந்த சிங்கள 'ஸ்ரீ' எழுத்துக்கு பதிலாக சிறியதோர் கோடு போடுவதை அரசாங்கம் அரம்பித்தது. அப்போது அதுவும் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் விளைவென கூறப்பட்டது. சிங்கள ஸ்ரீ எடுத்து 1958ஆம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்திற்கும் உந்து சக்pயாக இருந்தமை தெரிந்ததே.
 
சமாதான பேச்சு வார்த்தையோடு படையினர் தங்கியிருந்த யாழ்ப்பாண கோட்டையின் வாயிலில் புலிகள் 'பங்கர்' அமைத்து அதன் மேல் வெங்காயம் நட்டதாகவும் செய்திகள் வந்தன. இறுதியில் புலிகளின் கோரிக்கைக்கு இணங்க பிரேமதாச புலிகளுக்கு லொரி கணக்கில் ஆயதம், சீமெந்து, பணம் மற்றும் போருக்கான ஏனைய பொருட்களையும் அனுப்பி வைத்தார். இந்திய படையினரை வெளியேற்றுமாறு புலிகள் வற்புறுத்திய போது பிரேமதாச தமது பாரிய அயல் நாட்டை பகைத்துக் கொள்ளும் வகையில் இந்திய படையினர் வெளியேற வேண்டும் என விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது பகிரங்கமாக கூறினார்.
 
ஆனால், இந்திய படையினர் இலங்கையில் இருந்து வெளியேறியவுடன் 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி புலிகள் மீண்டும் போரை ஆரம்பித்தனர். அப்போதும் பிரேமதாச சமாதானத் திட்டத்தை பாதுகாத்துக் கொள்ளவே முயற்சித்தார். புலிகள் தாக்கும் போது திருப்பித் தாக்க வேண்டாம் எனவும் புலிகளிடம் சரணடையுமாறும் கிழக்கு மாகாண பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அவ்வாறு தம்மிடம் சரணடைந்த 600 இற்கு மேற்பட்ட பொலிஸாரை புலிகள் காட்டுக்குள் அழைத்துச் சென்று கொன்றுவிட்டனர்.
 
தற்போதைய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனே அப்போது கிழக்கு மாகாண புலிகளுக்கு தலைமை தாங்கியதனால் இன்னமும் அவர் அக் கொலைகளுக்கு குற்றஞ் சாட்டப்பட்டு வருகிறார்.  
 
எவ்வாறாயினும் பிரேமதாசவின் பொறுமை சமாதானத்தை பற்றிய அவரது தேவையின் எடுத்துக்காட்டாகவே விளங்கியது. தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவது தான் அவரது நோக்கமாக இருந்திருக்காவிட்டாலும் இந்திய நெருக்குதல் மற்றும் தென் பகுதியில் நிலவிய பதற்ற நிலைமை போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் புலிகள் கேட்டவை எல்லாவற்றையும் வழங்கிக் கொண்டிருந்தார்.
 
எனவே, புலிகள் உண்மையிலேயே நிலைமையை சாதகமாக பாவித்து கூடுதல் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கலை வற்புறுத்தியிருந்தால் பிரேமதாச இணங்கியிருக்க மாட்டாரா என்ற கேள்வியும்; இங்கே எழுகிறது. அந்த வகையில் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி தோன்றிய காலமானது கைவிடுபட்ட பொன்னானதோர் சந்தர்ப்பம் என்றே கூற வேண்டும்.


You May Also Like

  Comments - 0

  • Callistus Sunday, 05 February 2012 04:11 PM

    இது முற்றிலும் உண்மை. இது போல் பல சந்தர்ப்பங்களை புலிகள் தவறவிட்டனர்.

    Reply : 0       0

    Nishat Monday, 06 February 2012 11:27 PM

    பல அரிய சந்தர்ப்பங்களை புலிகள் தவறவிட்டார்கள். ஆனால் அதை புலிகள் பயன்படுத்தியிருந்தாலும் சிறிது காலம் செல்ல தங்கள் போர் வெறியை காட்டியிருப்பார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X