2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜயகாந்திற்கு கருணாநிதி திடீர் ஆதரவு

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள் இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதற்கு ஓர் உதாரணம், விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும்- அட்டூழியங்களும்" என்று காட்டமாக பேட்டி கொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்த பேட்டிக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் கட்சியை கடுமையாகவே சாடியிருக்கிறார். பொதுக்குழுவில் பேசிய பெரும்பாலானோர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற கருத்தை முன் வைத்தார்கள். அதை தன் பொதுக்குழு நிறைவுரையில் சுட்டிக்காட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "காங்கிரஸ் உங்கள் மகள் கனிமொழியை திகார் சிறைச்சாலையிலே, கொடுமையான சிறைச்சாலையிலே, வெயிலில் வாட வாட வதக்கி எடுத்தார்களே, அந்த சிறைச்சாலையிலே தம்பி ராஜாவை பூட்டி மகிழ்ந்தார்களே, அந்த காங்கிரஸுக்கா உங்கள் வாக்கு என்று கேட்பீர்களேயானால், இதில் நான் தன்னலத்தை மறந்து விட்டு, நம்முடைய இந்தியத் திருநாட்டினுடைய எதிர்காலத்தை யோசிக்க வேண்டியவனாக இருக்கிறேன். எனக்கு கனிமொழி வேதனை பெரிதல்ல. அதைவிட அதிகமாக இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்கிவிட நான் விரும்பவில்லை. குஜராத் பாணியில் சிறுபான்மைச் சமுதாயத்தை வேட்டையாட அனுமதிக்க மாட்டேன்" என்று கூறி அதனால்தான் காங்கிரஸை மத்தியில் ஆதரித்துக் கொண்டிருக்கிறேன் என்று தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களை சாந்தப்படுத்தினார். அதே நேரத்தில் காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்த அவரே தயங்கவில்லை. "காங்கிரஸுக்குள்ளே இருப்பவர்களில் யார் பிரதமர் என்று கேட்டால் எனக்கே கூட தெரியாது. காங்கிரஸிலே உள்ள தலைவர்களுக்கே கூட தெரியாது. அவர்களுடைய சண்டை எப்போது ஓயுமோ அதுவும் எனக்கு தெரியாது" என்று சாடினார். மொத்தத்தில் பொதுக்குழுவின் முடிவில் "சிறுபான்மையினத்தின் நலனை காக்கவும், பா.ஜ.க. வந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்" என்பதை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சின் பின்னணியில் தி.மு.க.வின் எதிர்கால கூட்டணி திட்டம் இருக்கிறது என்பதே அரசியல்பார்வையாளர்களின் கருத்து. காங்கிரஸ் கட்சிக்குள் யார் பிரதமர் என்று தெரியவில்லை, தமிழக பிரச்சினைகளில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை, இலங்கை தமிழர்களை கைவிட்டு விட்டது, இங்கே இருந்து செல்கின்ற மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டது என்றெல்லாம் தன் பேட்டியிலும் பொதுக்குழு பேச்சிலும் சாடியுள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதேநேரத்தில் சிறுபான்மையினரின் நலன் காக்கவே காங்கிரஸுடன் இருக்கிறேன் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். இதன் பிறகுதான் இப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் விஜயகாந்தை பத்து நாட்கள் சபைக்கு வரக்கூடாது என்று நீக்கம் செய்தது "ஜனநாயகத்தை உடைக்கும் செயல்" என்று கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க.வை பொறுத்தவரை விஜயகாந்தின் மீது காட்டும் இந்த பாசம் காங்கிரஸை தன் அணியிலேயே குறைந்த எம்.பி.க்களை ஆசனங்களைக் கொடுத்து வைத்துக் கொள்வதற்கோ அல்லது காங்கிரஸை விலக்கி வைத்து விட்டு விஜயகாந்த், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் போன்றோரை தன் அணியில் சேர்த்துக் கொள்வதற்கோ போடப்படும் வியூகம் என்பதே உண்மை. விஜயகாந்த் - தி.மு.க. அணிக்கு வரும் சூழ்நிலை உருவானால், காங்கிரஸ் விலகிச் செல்லலாம். அப்படிச் செல்லும் போது சிறுபான்மைச் சமுதாய வாக்குகள் தி.மு.க.விற்கே கிடைக்க வேண்டும் என்று கருதுகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதனால்தான் "உங்கள் நலன் காக்கவே எனக்கு வரும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு காங்கிரஸில் இருக்கிறேன்" என்பதை வெளிப்படையாக சிறுபான்மையின மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.

தமிழக அளவில் இப்படியென்றால், அகில இந்திய அளவில் இடதுசாரிகளின் தலைமையில் ஒரு ஜனநாயக முற்போக்கு அணி உருவாக்கப் போகிறோம் என்று சமீபத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அகில இந்திய அளவில் அப்படியொரு அணிக்கு நானும் தயார் என்பதை அறிவிக்கவே, "எந்த இயக்கம் இந்தியாவின் தலைமையை கையிலே எடுத்துக் கொண்டால் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்லும், இந்தியா கம்யூனிஸ பாதையிலே செல்லும், அல்லது இந்தியா பொதுவுடைமை பாதையிலே செல்லும்... அப்படியொரு இயக்கம் பஞ்சாபிலிருந்து வந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வேன்" என்று கூறியிருக்கிறார். பஞ்சாபிலிருந்து வருபவருடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.விற்கு தமிழகத்தில் எந்த லாபமும் இருக்காது. ஆனாலும் "அப்படியொரு கூட்டணிக்கு கூட நான் தயார். ஆனால் பா.ஜ.க.வை வர விட்டுவிடக்கூடாது" என்ற அரசியல் நோக்கத்துடன் பயணிக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்தே இப்போதே விஜயகாந்திற்கு ஆதரவாக பேசுகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

அ.தி.மு.க.வும் இதற்கு சற்றும் சளைத்த இயக்கமல்ல. ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் விஜயகாந்த் தரப்பிற்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனல் பறக்கும் பேச்சு சட்டமன்றத்தில் எதிரொலித்தது. சட்ட பேரவையில் தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் விஜயகாந்த். அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, "தகுதியற்றவர்களுக்கு (விஜயகாந்த்) ஒரு பெரிய பதவி கிடைத்தால் (எதிர்கட்சி தலைவர் பதவி) அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.க. தேர்தலை சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்" என்று கடுமையாக பேசினார். இதற்கு பதிலளித்து மறுநாள் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "தகுதியில்லாத கட்சியோடு (அ.தி.மு.க.) கூட்டணி வச்சதுக்கு நாங்கள்தான் வருத்தப்படனும், வெட்கப்படனும்" என்று அதேமாதிரி கருத்துச் சொன்னார்.
இரு தலைவர்களும் இப்படி கூட்டணி வைத்த விடயத்தை பகிரங்கமாக போட்டு உடைத்துக் கொண்டதைப் பார்த்தால், முதல்வர் ஜெயலலிதாவும் "இனி விஜயகாந்த் வேண்டாம்" என்ற முடிவிற்கு வந்து விட்டது போன்றே தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே கூட விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற ஆவல் முதல்வருக்கு இல்லை என்பதே அ.தி.மு.க. நெருங்கிய வட்டாரத் தலைவர்களின் கருத்து. அதைத்தான் தற்போது சட்டமன்றத்தில் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அ.தி.மு.க. அணியில் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் விஜயகாந்த் இடம்பெறும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் விஜயகாந்தை ஈடுகட்ட காங்கிரஸ் பக்கம் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா திரும்பிப் பார்ப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை தீர்க்க தமிழக அரசே ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது. உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதான சுப்ரமண்யம்சுவாமியின் புகாரை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு "ஷார்ப்" காமெண்ட் சொல்லாதது எல்லாம் அந்த கேள்விக்கு வலு சேர்க்கிறது. ஏனென்றால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் காங்கிரஸ்தான் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியுள்ள கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. காங்கிரஸை நோக்கி நகர்ந்தால் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வரும் டாக்டர் ராமதாஸும் அந்த அணியில் சேர தயாராக இருப்பார் என்றே தெரிகிறது. விஜயகாந்த் வெளியேற்றத்திற்கு ஆதரவாக பேசி முதல்வர் ஜெயலலிதா மனதில் இடம்பிடித்துள்ளார்கள் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும்!

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்கள் வசம் கூட்டணி கட்சிகளை தள்ளி வைக்க வியூகம் வகுத்து செயல்படுகின்றன. வெற்றிப் பாதையில் இருக்கும் அ.தி.மு.க. தலைமை "தங்களுக்கு பிரச்சினை கொடுக்காத கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம்" என்ற மூடில் இருக்கிறது. தி.மு.க.வோ தன்னிடம் உள்ள தோல்வி கூட்டணியை எப்படி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கூட்டணியாக மாற்றுவது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தங்கள் அரசியல் வியூகங்களில் எந்த அளவிற்கு வெற்றி பெறப் போகிறார்கள் என்பது மற்ற கட்சிகளின் தலைவர்களின் கையில் இருக்கிறது.


You May Also Like

  Comments - 0

  • manzari Wednesday, 08 February 2012 05:20 PM

    தன்னலத்தை மறந்தவர் கருணாநிதி என்பது உலகத்தின் மிகப்பெரிய ஜோக் என்பது அவர் உள்பட அனைவருக்கும் தெரிந்த உண்மை. விஜயகாந்த் இன்னமும் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துகொண்டு சட்டப்பேரவையில் ஆக்சண் ஹீரோ வசனத்தை பேசிவிட்டார் பாவம். அவர் கட்சி உடைய அவரே காரணமாகிவிட்டத்தை எல்லாம் முடிந்த பிறகு புலம்புவார் பாருங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X