Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 10 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் தேர்தல் ஆணையாளரால் இரத்துச் செய்யப்பட்ட மூன்று அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலை புலிகள் மக்கள் முன்னணியைப் பற்றி கடந்த வாரம் தமிழ்மிரருக்கு எழுதியிருந்தேன். இவ்வாரம் நாம் இரத்துச் செய்யப்பட்ட மற்றொரு கட்சியான தேசி;ய ஐக்கிய முன்னணியை (நுஆ) பற்றி சற்று ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன்.
'தேசிய ஐக்கிய முன்னணி' தேசிய கட்சியா அல்லது இன ரீதியிலான கட்சியா என்று கேட்டால் உடனடியாக அதற்கு பதிலளிப்பது பலருக்கு சற்று கஷ்டமாகவே இருக்கும். ஏனெனில் அதன் பெயர் தேசிய கட்சிப் பெயரைப் போல் இருக்கின்ற போதிலும் அதுவும் அநேகமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றியே கவனம் செலுத்தி வந்தது. அதன் தலைவர்களும் முஸ்லிம்களாகவே இருந்தனர்.
இது முஸ்லிம்களுக்கான கட்சியாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்போதே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஏன் இக் கட்சியை உருவாக்கினார் என்ற கேள்வி எழுகிறது. இது தேசிய கட்சியாக இருந்தால் அது ஏன் தேசிய கட்சியாக இயங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரே காலத்தில் கூட்டணியாக அல்லாது இரண்டு அரசியல் கட்சிகளை உருவாக்கி இரண்டையும் தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்து, இரண்டுக்கும் தலைமை தாங்கி இரண்டையும் நியாயப் படுத்திய ஒரே அரசியல்வாதி அஷ்ரப் மட்டுமே. ஆயினும் அவர் நுஆவை ஆரம்பித்த உண்மையான காரணம் இன்னமும் புதிராகவே உள்ளது.
இனத்துவ அரசியலை கைவிட்டு அவர் தேசிய அரசியலில் குதிக்கப் போகிறார் என அப்போது பலர் கூறினர். அவர் தேசிய அரசியலில் புகுந்து நாட்டைக் கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கிறார் என ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த காலஞ்சென்ற கங்கொடவில சோம தேரர் கூறியிருந்தார். ஆனால் அஷ்ரப்; ஒருபோதும் தேசிய கட்சியொன்றின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நுஆவும் இறுதிவரை முஸ்லிம் கட்சியாகவே நடைமுறையில் செயற்பட்டது. இரண்டாவது முஸ்லிம் கட்சியொன்றை எவருமே ஆரம்பிக்கக் கூடாது என 1986ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மருதானை பாஷா விலாவில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பிரகடனப் படுத்திய கூட்டத்தில் வைத்து கூறியவரும் அஷ்ரபே. ஆனால் அவரது இறுதி காலத்தில் அவரே இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கு தலைமை தாங்கி நடத்தி வந்தமை புரிந்து கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சியென பேரினக் கட்சிகளின் தலைவர்களும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தனர். இன்னமும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வாறு கூறி வருகின்றனர். எனவே இனவாரி அரசியலை கைவிட்டு தேசிய அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என அஷ்ரப் நினைத்திருக்கலாம். அவரது மனைவி திருமதி பேரியல் உட்பட பலர் அஷ்ரப் உயிருடன் இருக்கும் காலத்திலும் அதற்குப் பின்னரும் அவ்வாறு முஸ்லிம் கட்சிகளில் இருந்து தேசிய கட்சிகளில் இணைந்து கொண்டனர்.
ஆனால் ஏற்கனவே பெரும்பான்மையினத்தவர்கள் ஆரம்பித்த கட்சிகளில் சேர்ந்தால் தாம் அரசியல் ரீதியாக இரண்டாவது அல்லது மூன்றாவது மட்டத்துக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பதை அஷ்ரப் நன்றாக உணர்ந்து இருந்தார். அதன் காரணமாக செல்வாக்கையும் மதிப்பையும் இழக்க வேண்டி வரும் என்பதையும் அவர் அறிந்து இருந்தார்.
1980களின் ஆரம்பத்தில் திம்புப் பேச்சுவார்த்தை போன்ற இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் பிரதிநிதித்துவம் வேண்டும் என முஸ்லிம்கள் கோரினார்கள். அப்போது யார் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கேள்வி எழுப்பியிருந்தார். 1984ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகத்தில் இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போதும் 1985ஆம் ஆண்டு புலிகளால் கல்முனை, சாய்ந்தமருது போன்ற பகுதிகளில் 500இற்கு மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்ட போதும் பிரதான கட்சிகளில் இருந்த முஸ்லிம்கள் குரலெழுப்ப முடியாமல் இருந்தார்கள்.
அதுபோன்ற காரணங்களால் ஏற்பட்ட வரலாற்றுத் தேவை காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் தேவை தொடர்ந்து இருப்பதையும் அஷ்ரப் கவனத்தில் கொண்டு இருக்கலாம்.
எனவே தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட தேவை இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸை கைவிட முடியாத நிலைமையும் அவருக்கு இருந்தது. எனவே தேசிய அரசிலில் குதிப்போம், முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கைப் பாதுகாத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல முடியும் என்றால் தேசிய அரசியலை தொடர்வோம், அவ்விடயத்தில் தோல்வி கண்டால் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலையே தொடர்வோம் என்று அஷ்ரப் நினைத்திருக்கலாம்.
ஆனால், அவரது இறுதிக்காலம் வரை பெரும்பான்மை சமூகம் அவரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதான தேசிய கட்சிகள் விடயத்தில் அவரது அனுபவங்களும் நாளுக்கு நாள் கசப்படைந்தே வந்தன. இது அவரை மேலும் முஸ்லிம் காங்கிரஸின் பக்கத்திற்கே தள்ளியது. முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் தேவை மேலும் வலியுறுத்தப்பட்ட போதிலும் நுஆவின் தேவை இருப்பதாக தெரியவில்லை.
அஷ்ரபின் மரணத்தின் பின்னர் மற்றொரு நிலைமை ஏற்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் அவரது குடும்பத்தினர் உட்பட சிலர் மு.கா.வினுள் செல்வாக்கோடு இருந்தனர். இது எந்தக் கட்சியிலும் இயல்பு தான். அஷ்ரப் மரணித்த போது தாம் அந்த செல்வாக்கை இழந்து விடுவோமோ என்று அவர்கள் அச்சமடைந்தனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. நுஆ அவ்வாறு பிளவுபட்டவர்களின் அரசியல் வெளிப்பாடாக அதன் பின்னர் செயற்படலாயிற்று.
அதே காலகட்டத்தில், அதாவது 2001ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டு சந்திரிகா ஹக்கீமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். மு.கா. அரசாங்கத்திலிருந்து விலகியது. பேரியல் அஷ்ரப் விலகவில்லை. அரசாங்க உயர் பதவிகளில் இருந்த பல மூத்த மு.கா. உறுப்பினர்களுக்கு இது ஒரு சோதனையாக அமைந்தது. இவர்களில் சிலர் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக நுஆவிடம் சென்றனர். வேறு சிலர் இந்த விடயத்தில் உண்மையிலேயே நுஆவின் போக்கு சரியென நினைத்தும் அதனோடு இணைந்திருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்த போதிலும் நுஆவின் அரசியல் அதன் பின்னரும் முஸ்லிம்கள் மத்தியில் ஜொலிக்கவில்லை. பெரும்பான்மை சமூகமும் அதனை தேசிய கட்சியாக ஏற்கவில்லை. எனவே நுஆ தலைவி பேரியல் அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்திலேயே அதாவது 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து கொண்டார். அதன் பின்னர் அக்கட்சி பெயரளவிலேயே இருந்தது.
நுஆ போன்றதோர் கட்சி வரலாற்றுத் தேவையின் காரணமாக தோன்றியதாக கருத முடியாது. அதேவேளை அவ்வாறானதோர் கட்சி 2001ஆம் ஆண்டு இல்லாமல் இருந்தால் அன்று முஸ்லிம் காங்கிரஸ் பிளவு பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே. பின்னர் கபினெட் அமைச்சர் பதவிகள், தேசிய பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளின் போது மு.கா. பிளவு பட்டுச் சென்றமையை பார்க்கும் போது 2001ஆம் ஆண்டிலும் மு.கா. பிளவுபட்டே இருக்கும் என சிலர் வாதிடலாம். ஆனால் நுஆ என்ற கட்சி 2001ஆம் ஆண்டு பிளவை தூண்டியது அல்லது இலேசாக்கியது. அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகளுக்கும் அந்தப் பிளவு உதவியாக அமைந்தது. முஸ்லிம்களின் ஐக்கியம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு அஷ்ரப் தான் உருவாக்கினாலும் நுஆவானது ஒரு வரலாற்றுப் பிழையே.
SMT Saturday, 11 February 2012 02:59 AM
அலசல் போதாது என்றே தோன்றுகிறது. தலைவர் உயிரோடு இருக்கும் போது அவரது குடும்பத்தார் எவரும் அரசியலில் புகுவதை அவர் வரவேற்கவில்லை. அவரது மரணத்தின் பின்னர் பேரினவாத சதியின் காரணமாக அம்மையார் அரசியலில் வருவதற்கு தூண்டப்பட்டர். பின்னர் பேரினாவாத கட்சிகளின் ஆதரவோடு அரசியல் செய்வதற்கு முற்பட்டும் அது கடைசியில் அம்மையாருக்கு தோல்வியையே கொடுத்தது. இதனால் பதவியை மட்டும் தக்க வைக்க வேண்டும் என்ற நிட்பந்ததின் காரணமாக பேரினவாத கட்சிகளுடன் சங்கமித்து நுஅவுக்கு மூடு விழா நடாத்தினார் என்பதே யதார்த்தமாகும்.
Reply : 0 0
m s m zulfikar Saturday, 11 February 2012 05:10 AM
நுவா கட்சி தொடங்கிய காரணத்தையும் அதன் எதிர்கால நோக்கங்களையும் அறிந்த பலர் இன்னும் இருக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை அறிந்துகொண்டு கட்டுரையாளர் எழுதி இருக்கலாம். .....
Reply : 0 0
AKP Saturday, 11 February 2012 06:13 AM
இது ஒரு வரலாற்று பிழையா ????...
ஐயா .... ரோட்டில கெடக்கிற கல்லை எடுத்து மாங்காய் மரத்துக்கும் எறியலாம் .....சிற்பமும் செதுக்கலாம் ....., இது அவர் அவர் அறிவையும் சிந்தனையையும் பொருத்தது .
Reply : 0 0
UMMPA Saturday, 11 February 2012 04:16 PM
SMT அவர்களின் கருத்து சரியானது. உண்மையும் அதுதான். அப்படி அவர் நினைத்து இருந்தால் அவரின் குடும்பத்தை எல்லா ஆசனத்தையும் நிரப்பி இருக்கலாம். ஏன் இன்றைய தலைவார் கூட இருந்திருக்க முடியாது. ஒரு கட்டுரை எழுத எத்தனிக்கும்போது அதக்கு பல பக்கங்கள் இருந்தால் போதாது மக்களால் பெசப்படுகின்றதாக ஏன் மற்றைய கட்டுரையாளர்களுக்கு உங்கள் கட்டுரை மேலதிக தகவலாக இருக்கவேண்டும். அது இங்கு இல்லை. எனவே வருங்கால கட்டுரைகள் SMT / zulfikar / மற்றும் AKP சொன்னபடி அலசல் பலமுனைகளில் இருக்கவேண்டும். முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Reply : 0 0
abu sama Sunday, 12 February 2012 01:24 AM
கட்டுரையாளரின் முயற்சி பாராட்டத்தக்கது. பல வரலாற்றுப் பிழைகள் காங்கிரசின் வருகையின் மூலம் நடந்துள்ளது. அஷ்ரப் அவர்களின் நோக்கு புனிதமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிகழ்பவைகளை நினைக்கும் போது அவர் எண்ணியவை எல்லாம் வீணாகி விட்டது போல் தோன்றுகின்றது.
தங்களின் சுக போகங்கள் குடும்ப ஆதிக்கங்கள் என்பவைக்காக தனித்தனிக் கட்சிகள் சில தானத் தலைவர்கள் ..... ஒன்றுக்கும் உதவாத புண்ணாக்குகள். யாரிடம் போய் இதனை சொல்ல ஆண்டவனை தவிர.
Reply : 0 0
pasha Sunday, 12 February 2012 05:20 AM
நல்லதொரு அலசல். தலைவர் நுஆ தொடங்கியது எதற்கு என்பது சகலரும் அறிந்தது. தலைவர் தேசிய அரசியலில் குதித்து பிரதமர் பதவி மட்டத்திற்கு செல்வதே பிரதான நோக்கம். ஆனால் இறைவன் நாட்டம் வேறு என்பதை உணரவில்லை. இந்த நுஆ இருந்தமையே தலைவரின் மனைவி பிரிந்து சென்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்நிலை அடைய காரணம் .
Reply : 0 0
asm nisthar Sunday, 12 February 2012 12:52 PM
இந்த கட்டுரை உண்மை என சொல்ல முடியும். மேலும் சற்று குறைந்த தகவல்களை வைத்து கொண்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை மட்டுமே. ஆனா மு.கா. வை பற்றி மேலும் தெரிந்து கொண்டால் மட்டுமே முஸ்லிம் அரசியல் பற்றி என்னும் அறவு வளரும். இலங்கையில் எந்த ஒரு பாகத்திலும் ஒரு முஸ்லிமுக்கு ஒரு பிரச்சினை என்றால் யாரும் முதலில் அழைப்பது மு.கா வை தான். ஏன் எனில் முகா மட்டுமே முஸ்லிம்களின் ஒரே அரசியல் தலைமை என்ற நிலைப்பாடு எல்லா சமூகத்திடமும் இருப்பதால் அதனை இன்னும் வளர சகல முஸ்லிம் மக்களும் ஒன்று பட வேண்டும்
Reply : 0 0
MUHAMMATH RANOOS Monday, 13 February 2012 09:34 PM
கட்டுரையாளரின் கருத்துக்கள் இன்னும் அதிக விளக்கங்களை தேவை படுத்துகின்றது. தேசிய,இனத்துவ கட்சிகளின் பண்புகள் குறித்து கட்டுரையாளர் மேலும் விளக்கம் பெற வேண்டும். மேலும் தலைவர் அஷ்ரபின் அரசியல் பரிமாண வளர்சிகளை பற்றி அறியாது உள்ளீர்கள். இரண்டு தசாப்தம் இந்த நாட்டில் சிறுபான்மை அரசியலில் பாரிய மாற்றங்களை உண்டாக்கிய ஒரு அரசியல் தலைவரின் செயல்வினையை பொறுப்புணர்ச்சியோடு ஆய்வு செய்வது ஆய்வாளனின் கடமை. உங்கள் ஆய்வில் தலைவர் அஷ்ரப் இன் அரசியல் பலத்தின் தாக்கம், அவரது இலக்குகளின் சாத்தியம் குறித்து முரண்.
Reply : 0 0
faris Monday, 20 February 2012 07:38 AM
இவரின் விளக்கம் போதாது!கட்டுரையாளர் எப்படி செயல்பட்டு இருக்கின்றார் என்றால் முழு பூசணிக்காயை ஒரு பிடி சோத்துக்குள்
மறைக்க முயல்கின்றார். இப்போதுள்ள அரசியல் வாதிகள் சில பேர் தன் வாசிக்குத்தான் நடந்து கொள்கின்றார்கள். அவர்களை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை... அஷ்ரப் என்ற மனிதர் எங்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்...
Reply : 0 0
A.J.Elmy Friday, 16 March 2012 04:53 PM
அஷ்ரப் அவர்களுடைய அரசியல் பயணத்தில் பல தவறுகளை அவர் விட்டுள்ளார். அந்த வகை இல் நுஆ ஒரு தவறு என்பதில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால் துரதிஷ்ட வசமாக அவரது பிழைகள் உணரப்படவில்லை. இன்று அவர் தலைமை வழங்கிவந்த இயக்கத்தின் செயற்பாடும் அதன் கையாலாகாத தனத்தையும் பார்க்கும் எவருக்கும் அதை உணர்துகொள்ளமுடியும். தனக்குப்பிறகு ஒரு தலைமையை அவர் அடையாளப்படுத்தவில்லை அல்லது தலைமையை வளரவிடவில்லை சர்வமும் நானே என்ற தோரணையான அரசியலின் விளைவு இன்று அவரால் வளர்க்கப்பட்டவர்களால் அவர் நிராகரிக்கப்பட்டு வருகின்றார் .
Reply : 0 0
vvvvv Friday, 16 March 2012 05:20 PM
உதயன் சரவணபவன் பட்டி எல்லுதவும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago