2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சங்கரன்கோயில் இடைத் தேர்தல்: சொந்த பலத்தை நிரூபிக்கும் முதல்வர் ஜெயலலிதா

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேர்தல் திகதி அறிவிக்கப்படும் முன்பே வேட்பாளரை களத்தில் இறக்கி வேலை செய்யும் வித்தியாசமான தேர்தல் - சங்கரன்கோயில் இடைத்தேர்தல். 1996இலிருந்து தொடர்ந்து 2011 வரை தொடர்ந்து இங்கு வெற்றிபெற்று வந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி மறைந்ததால் இடைத்தேர்தல் வருகிறது. அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு சந்திக்கப்போகும் இரண்டாவது இடைத்தேர்தல் இது. அ.தி.மு.க. சார்பில் இப்போதே தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுவிட்டது. 34 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில் 26 அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சங்கரன்கோயில் முனிஸிபாலிட்டி தலைவராக வெற்றி பெற்ற முத்துச்செல்வியை அ.தி.மு.க. வேட்பாளராக அறிவித்து, தேர்தல் பிரசாரத்திலும் இறங்கி விட்டார் அவர். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, தொடரும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் அ.தி.மு.க. அரசை இந்த இடைத் தேர்தலில் மிரட்டிக் கொண்டிருந்தாலும், இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே ஜெயிக்கும் என்பது தமிழகத்தில் தொடரும் நிலைமை இருக்கிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துச்செல்வி மீதும் உள்ளூர் அ.தி.மு.க.வினர் மத்தியில் முணுமுணுப்பு இருக்கிறது. உள்ளூர் அமைச்சராக இருந்தவரும், நெல்லை மாவட்டத்தில் உள்ள தேவர் சமுதாயத்தில் முன்னணி பிரமுகருமான நைனார் நாகேந்திரன் முற்றிலும் தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தேவர் சமுதாய வாக்குகளும், தாழ்த்தப்பட்டோர் வாக்குகளுமே பிரதானமானவை. அதேமாதிரி தாழ்த்தப்பட்டோர் சமுதாய வாக்குகளை அ.தி.மு.க.விற்கு கொண்டு வந்து சேர்க்கும் புதிய தமிழக தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் அ.தி.மு.க.விடமிருந்து விலகிச் சென்றார். ஆனால் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டது, டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆறுதலான விடயம். ஏனென்றால் சசிகலாவின் உறவினரான பன்னீர்செல்வம் என்பவர் கலெக்டராக இருந்த போதுதான் தாழ்த்தப்பட்டவர்கள் மீது "கொடியன்குளம் தாக்குதல்" நடந்தது. அதை வைத்துப் பார்க்கும் போது, அ.தி.மு.க.விற்கு எதிராக பிரசாரம் பண்ணும் அளவிற்கு டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சங்கரன்கோயிலில் காரணங்கள் இல்லை. இது தவிர, இந்த தேர்தல் உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் முக்கிய கூட்டணிக் கட்சிகளாக இருந்த தே.மு.தி.க. (விஜயகாந்த் தலைமையிலான கட்சி), கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் இப்போது அந்த அணியில் இல்லை என்ற சூழ்நிலையில் தன்னந்தனியாக இடைத் தேர்தல் களத்தில் குதித்துள்ளது அ.தி.மு.க. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ "பஸ்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இருந்தாலும் சங்கரன் கோயிலில் அ.தி.மு.க.வே ஜெயிக்கும்" என்று தமிழக சட்டமன்றத்திலேயே உறுதிபடப் பேசியுள்ளார். சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், "எந்த கூட்டணி கட்சியும் இல்லாமல் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம். இவர்களால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. அ.தி.மு.க.வின் சொந்த பலத்திலேயே ஆட்சிக்கு வந்தோம்" என்பதை பகிரங்கமாக அறிவிப்பார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

எதிர்க்கட்சி வரிசையில் யார் அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்கப்போகிறார்கள் என்பது கேள்வி. தி.மு.க.வின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் அறிவித்துள்ளார் முன்னால் முதல்வர் கருணாநிதி. ஆனால் சங்கரன்கோயில் தென் மண்டல அமைப்பாளராக இருக்கும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் அந்த தொகுதியின் மீது பெரிதாக கவனம் செலுத்தவில்லை. சங்கரன்கோயில் தொகுதி வரும் திருநெல்வேலி மாவட்டத்தின் தி.மு.க. செயலாளராக இருப்பவர் கருப்புசாமி பாண்டியன். அவர் ஸ்டாலினின் ஆதரவாளர். இதனால் மு.க. அழகிரி தரப்பிற்கும், ஸ்டாலின் தரப்பிற்கும் அங்கே யாரை வேட்பாளராக நிற்க வைப்பது என்ற சர்ச்சை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கே மு.க. ஸ்டாலின் சங்கரன்கோயிலுக்குப் போவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்ற 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே 61,000 வாக்குகளை பெற்ற தி.மு.க. அதே வாக்கு வங்கியை வருகின்ற இடைத் தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற மனப்போராட்டத்தில் இருக்கிறார்கள் தி.மு.க. தலைவர்கள். அ.தி.மு.க.விற்கு போட்டியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் ஃபைட் கொடுக்க வேண்டும். ஜெயிக்க முடியவில்லை என்றாலும், சென்ற சட்டமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளுக்கு குறைவாக வாங்கி விடக்கூடாது என்ற நிர்ப்பந்தம் அக்கட்சியை மிரட்டுகிறது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி இது. இங்குதான் அவர் பிறந்த ஊர் இருக்கிறது. இளம் வயதில் யூனியன் சேர்மனாகவும் இங்கே ஜெயித்து பணி புரிந்திருக்கிறார். 1996இல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கூட்டணி வைத்து இங்கே போட்டியிட்ட போது ம.தி.மு.க. வேட்பாளர் சுமார் 30,000 வாக்குகளை பெற்றார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அடுத்து 2001 தேர்தலில் இங்கே தனியாக போட்டியிட்ட போது ம.தி.மு.க. வேட்பாளர் சுமார் 20,000 வாக்குகளை பெற்றார். அப்போதும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ம.தி.மு.க. அதிக வாக்குகளை பெறும் கட்சியாக சங்கரன்கோயிலைப் பொறுத்தமட்டில் இருக்கிறது. வைகோவின் சொந்த சமுதாயத்தினர் இங்கு முதன்மை வாக்கு வங்கியாக இல்லை என்பது வைகோவிற்கு பலவீனம். அதேநேரத்தில் தொகுதியில் உள்ள அனைத்து சமுதாய வாக்காளர்கள் மத்தியிலும் பிரபலமானவர் வைகோ. அதனால்தான் சமீபத்தில் ம.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய வைகோ, "நான் இந்த தொகுதியின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கிறேன். அனைத்து சமுதாய மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள். நாம் இரண்டாவது இடம், மூன்றாவது இடம் போவோம் என்றெல்லாம் யாரும் நினைத்துக் கொண்டு தேர்தல் வேலை செய்யாதீர்கள். நாம்தான் சங்கரன்கோயிலில் ஜெயிக்கப் போகிறோம். அந்த மன உறுதியுடன் தேர்தல் வேலை பாருங்கள்" என்று ஆவேசப்பட்டுள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு ஒரு மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் இங்கு ஜெயிக்க வேண்டும். இல்லையென்றால் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் வைகோ. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த தொகுதிக்குட்பட்ட இடங்களில் சுமார் 25,000 வாக்குகள் வரை வைகோவின் வேட்பாளர்கள் வாங்கியிருப்பது அவருக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்.

சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் விஜயகாந்தை பார்த்து, "உங்களுக்கு சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் போட்டியிடும் திராணி இருக்கிறதா" என்று கேட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக அவசரமாக தன் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ.வான பாண்டியராஜனை சங்கரன்கோயில் தொகுதிக்கே அனுப்பி கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வரச் சொன்னார். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் ஆலோசனை செய்தார். ஆனால் போட்டியிட்டால் 5000 வாக்குகள் கூட வராது என்ற நிலைமை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அது மட்டுமின்றி, அவர் கட்சி தொடங்கியதிலிருந்தே அவருக்கும் வைகோவிற்குமே போட்டியிருக்கிறது. சென்ற சட்டமன்ற தேர்தலில் கூட விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றதாலேயே வைகோ வெளியேறினார். இந்நிலையில் வைகோவின் சொந்த தொகுதியில் போய் நாமும் வேட்பாளரை போட்டு, வைகோவின் வேட்பாளரை விட குறைவான வாக்குகளை பெற்று விடுவோம் என்ற அச்சம் விஜயகாந்திற்கு இருக்கிறது. அப்படி குறைந்த வாக்குகளை வாங்கி விட்டால், "என்னால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது" என்ற விஜயகாந்தின் பிரசாரம் புஷ்வாணம் ஆகிப்போகும் என்ற எண்ணம் விஜயகாந்த் மனதை போட்டு உலுக்குகிறது. அதனால் அவர் போட்டியிடுவதோ, வேறு வேட்பாளருக்கு ஆதரவளிப்பதோ இன்றைய திகதியில் தே.மு.தி.க.விற்கு ஏற்ற முடிவு அல்ல என்பதே விஜயகாந்தின் நினைப்பு. அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் மாற்று தே.மு.தி.க.தான் என்பதை அறிவிக்க சங்கரன்கோயில் இடைத்தேர்தல் சரியான களம் இல்லாமல் போய்விட்டதே என்ற பதற்றத்தில் இருக்கிறார் விஜயகாந்த். இருந்தாலும் அ.தி.மு.க. எதிர்ப்பு முனையை கூர் தீட்டும் விதத்திலேயே பேசி வருகிறார். அருப்புக்கோட்டையில் ஒரு திருமண விழாவில் பேசிய விஜயகாந்த், "அ.தி.மு.க.விற்கு கைகட்டி பணிந்து போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றே ஆவேசமாக பேசியிருக்கிறார்.

முக்கிய கட்சிகளின் களம் இப்படியென்றால், கூட்டணி யாருடன் என்பது முடிவு ஆகாமல் சில கட்சிகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கம் போல் தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளன. வைகோவை ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறி. திருச்சி இடைத் தேர்தலில் அமைதி காத்தது போல் இந்த தேர்தலிலும் கம்யூனிஸ்டுகள் அமைதியாக இருக்கவே விரும்பலாம். இங்கு வாக்கு வங்கியுள்ள கட்சியான டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் தனியாக வேட்பாளர் போடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க.விலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதை காரணம் காட்டி அ.தி.மு.க. வேட்பாளரையே கூட அவர் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகலாம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இது தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்று கூறிவிட்டு, திருச்சி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு பிரசாரமே செய்யாமல் ஒதுங்கிக் கொண்டது போல், சங்கரன்கோயில் தேர்தலிலும் சற்று தள்ளி நிற்கலாம். அந்தக் கட்சிக்கும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் இருப்பதால் சங்கரன்கோயிலில் சங்கடத்தை சந்திக்கிறது.

சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் வழக்கம் போல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக சூழ்நிலை நிலவுகிறது. யார் கூட்டணியும் இல்லாமல் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்கட்சிகளுக்குள் "பொது வேட்பாளரை" நிறுத்தும் வாய்ப்பும் பிரகாசமாக இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை விட சொந்த தொகுதி என்பதால் சங்கரன்கோயில் இடைத் தேர்தல் முடிவுகள் வைகோவின் அரசியல் எதிர்காலத்தை முடிவு பண்ணும் தேர்தலாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0

  • manzari Wednesday, 15 February 2012 04:25 PM

    கட்டுரை ஆசிரியர் கற்பனை இன்றி உண்மையை கூறியதற்கு பாராட்டுக்கள் . நடிகர் விஜயகாந்த் அதிமுகவை மிரட்டியதன் மூலம் தனக்கு தானே சூடிக்கொண்ட கருப்பு எம்ஜியார் என்ற வேஷத்தை இழந்து விட்டார். எனவே பாலிடிக்ஸ் படம் சூப்பர் பிளாப். உலகத்தலைவர் வாஜ்பாய் கொடுத்த அமைச்சர் பதவி என்ற அருமையான சந்தர்ப்பத்தை இழந்தபோதே வைகோ வின் அரசியல் இறங்கு முகம் தொடங்கிவிட்டது . கருணாநிதிக்கு பிறகு திமுக 3 பீசாகும் சமயம் வரை வைகோ காத்திருக்க வேண்டும் . காங்கிரஸ் தமிழகத்தில் ஜீரோ. எனவே ஜெயா அம்மாவை யாரும் அசைக்க முடியாது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X