2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதல்வர் ஜெயலலிதா பதவிக்கு குறி: சசிகலாவின் கணவர் நடராஜன் கைது

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சசிகலாவின் கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட இரு மாதங்கள் கழித்து கைது செய்யப்பட்டிருக்கும் இவரை தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அணி அமைத்தாலும் சரி, ஆட்சி அமைத்தாலும் சரி "நான் தான் வியூகம் அமைத்துக் கொடுத்தேன்" என்று கூறி வந்தவர் எம்.நடராஜன். இவரது சொந்த ஊர் விளார் என்ற கிராமம். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரிலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது. நடராஜனின் தந்தை மருதப்ப தேவரின் நினைவிடத்திற்காக 15,000 சதுர அடி நிலத்தை அபகரித்தார் நடராஜன் என்ற குற்றச்சாட்டை அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரே புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் எம்.நடராஜன் மீது "நில அபகரிப்பு வழக்கு" பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச் சதி செய்தார் என்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐந்து பிரிவுகளில் வழக்கு போட்டு நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.நடராஜன் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக தன் அரசு பணியை தொடங்கியவர். இவருக்கும் சசிகலாவிற்கும் இடையேயான திருமணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலேயே நடைபெற்றது. பிறகு ஏன் அவரிடமிருந்து விலகினார் என்பதற்கு நடராஜனே குமுதம் வாரப்பத்திரிகைக்கு 14 வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் காரணம் கூறியிருக்கிறார். அதில் "எங்களுக்கு எல்லாம் கிடைக்காத மரியாதையை அவருடையை (கருணாநிதி) இனத்தைச் சேர்ந்த நாகராஜனுக்கு (ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மனாபா சென்னையில் கொல்லப்பட்ட போது உள்துறை செயலாளராக இருந்தவர்) கொடுத்த போதுதான் நாங்கள் எல்லாம் வருத்தப்பட்டோம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்கள் குடும்பச் சொத்துக்களை எல்லாம் இழந்த எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியிருக்கிறார் நடராஜன். இதன் பிறகு தனக்கு எம்.ஜி.ஆருடனும், முதல்வர் ஜெயலலிதாவுடனும் அரசியல் ரீதியாக நெருக்கம் எப்போது வந்தது என்பது பற்றி அதே பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "நான் மெட்ரோ வோட்டர் துறையில் பி.ஆர்.ஓ.வாக இருந்த நேரத்தில் என்கிட்டே எம்.ஜி.ஆர். நேரடியாக பேசினார்" என்று கூறியுள்ள நடராஜன், 1981இல் எட்டயபுரத்தில் பாரதியாரின் நூற்றாண்டு விழாவை நேரடியாக நின்று கவனித்த போது இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு அவர் ஏன் போயஸ் கார்டனிலிருந்து ஒரு கட்டத்தில் வெளியேறினேன் என்பது பற்றியும் அதே பேட்டியில் கூறியுள்ள நடராஜன், "அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை திருநாவுக்கரசர் போன்றோர் கைப்பற்ற முயற்சி செய்த போது நான்தான் முன்கூட்டியே சொன்னேன். இதற்காக என்னைப் பாராட்டினார். ஆனால் நான் ஏதோ அரசியல்வாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி சந்தேகப்பட்டார். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன்" என்று விளக்கியிருக்கியிருக்கிறார்.

இப்படி அ.தி.மு.க.வின் அதிகாரத்திற்கு அருகில் இருந்த போதும் சரி, வெளியே இருந்த போதும் சரி, "எல்லாம் என்னால் நடக்கிறது" என்ற இமேஜை வெளியுலகத்தில் வெற்றிகரமாக உருவாக்கி வந்தவர் நடராஜன். இந்தமுறை அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தன் உறவினரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பன்னீர்செல்வத்தை "ஆபிஷர் ஆன் ஸ்பெஷல் டூட்டி”யாக முதல்வரின் அலுவலகத்தில் நியமிக்குமாறு பார்த்துக் கொண்டார் நடராஜன். அவர் மூலம்தான் அரசு இயந்திரத்தை தனக்கு வேண்டியவாறு இயக்குகிறார் நடராஜன் என்று ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் திபேந்திரநாத் சாரங்கியே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடத்தில் பேசும் போது "இங்கு எல்லாமே பன்னீர்செல்வம் (நடராஜனின் உறவினர்) சொல்லும்படிதான் நடக்கிறது" என்றே மனம் வருந்திய சம்பவங்கள் உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அரசிலிருந்து முதலில் பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. திடீரென்று ஒருநாள் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை இழுத்து மூடி "சீல்" வைக்கப்பட்டது. அதன்பிறகுதான் சசிகலா உள்ளிட்ட அவரது உறவினர்கள் அனைவரும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்கள். கைது நடவடிக்கை முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது பாய்ந்தது. அடுத்து அவரது உறவினர் இராவணன் கைது செய்யப்பட்டார். இப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடராஜனின் தந்தை மருதப்பர். மறைந்த இவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஒவ்வொரு வருடமும் தஞ்சாவூரில் பொங்கல் விழா நடத்தி கலக்குவார் நடராஜன். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் விழாவின் போது மதுரை ஆதீனம், பிரபல சினிமா இயக்குநர்கள், முன்பு எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோ மானேஜராகவும், எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பன் போன்றோரை அழைத்து பேச வைப்பார். இந்நிலையில் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூரில் பொங்கல் விழா நடக்க வேண்டும். நடராஜன் வெளியே வருவாரா, மாட்டாரா என்று கேள்வி எழுந்தது. தன் சொந்தங்களுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பி தஞ்சாவூரில் பொங்கல் விழாவை நடத்தினார் நடராஜன். அங்கு "அ.தி.மு.க. ஆட்சி அமைய நானும் காரணம்" என்ற ரீதியில் பேசிய எம்.நடராஜன், "முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தன் மனைவி சசிகலாவிற்கும் ஏற்பட்ட பிரச்சினை இரு நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை. அதை ஏன் பத்திரிகைகள் பெரிது படுத்துகின்றன என்று தெரியவில்லை" என்று சமாளித்தார். அ.தி.மு.க. ஆட்சி அமைய நானே காரணம் என்று நடராஜன் பேசியது அ.தி.மு.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பொங்கல் விழாவை நடத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன். அதை மனதில் வைத்தே திவாகரன் மீது பொங்கல் விழா முடிந்த கையோடு பொலிஸ் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அதே பொங்கல் விழா முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போது நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் அவரது மனைவி சசிகலா பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் வாக்குமூலம் அளித்த தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், "ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைஸஸ் போன்ற நிறுவனங்களின் முழு நிர்வாகப் பொறுப்புகளையும் நான் தான் கவனித்தேன். முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதில் சம்பந்தமில்லை" என்று நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார் சசிகலா. இதை இப்போது மட்டும் சசிகலா சொல்லவில்லை. முன்பு டான்சி நில வழக்கு நடைபெற்ற போதும் இதே கருத்தைத்தான் சிறப்பு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு கூறியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த கருத்தை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு எழுத்து பூர்வமான ஸ்டேட்மென்டையே கொடுத்திருக்கிறார்.

சசிகலா இன்னும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இராவணன் கைது செய்தவுடனேயே நடராஜன் மீது பொலிஸ் இலாகா குறி வைத்து விட்டது. ஆனால் ஒரு சில புகார்கள் வந்தும், அவை சரியாக இல்லை என்பதால் அந்த புகார்கள் மீது பொலிஸ் துறை நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தது. இப்போது வந்துள்ள நில அபகரிப்புப் புகார் அவர் பிறந்த ஊரிலிருந்தே வந்திருக்கிறது. அதை விசாரித்து நடராஜனை கைது செய்துள்ள தஞ்சாவூர் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி.மணி வாசகம் நடராஜனின் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. "என் பின்னால் தேவர் சமுதாயம் நிற்கிறது. என்னால்தான் அ.தி.மு.க.விற்கு தேவரின வாக்கு" என்று ஒரு தோற்றத்தை இதுவரை நடராஜன் ஏற்படுத்தி வந்தார். தமிழகத்தில் சங்கரன்கோயில் இடைத் தேர்தல் நடக்கிறது. அங்குள்ள வாக்கு வங்கியில் தேவரின வாக்கு வங்கி முக்கியமானது. இந்நிலையில், சங்கரன்கோயிலைச் சேர்ந்த ராஜமறவன் என்பவர் அ.தி.மு.க.விற்கு வெற்றிக் கூட்டணி அமைத்துக் கொடுத்தவரும், ஜாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்தவரும் சசிகலாவே என்ற ரீதியில் பேட்டி கொடுத்தார். இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு இடைஞ்சல் கொடுக்கும் நடராஜனின் முயற்சி இது என்ற ரீதியில் அ.தி.மு.க. தலைமை யோசித்தது. அதை விட முக்கியமாக, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்கு பிறகு நம்மவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ரீதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் "தந்திரத்திற்கு" நடராஜனே கதாநாயகன் என்ற கோபமும் அ.தி.மு.க. தலைமைக்கு உண்டு. ஏனென்றால் 2001இல் நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு (அப்போது இதே முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டனை பெற்று அப்பீல் செய்திருந்த சமயம்) அப்படியொரு முயற்சியை மேற்கொண்டவர் நடராஜன் என்பது அ.தி.மு.க. தலைமைக்கு தெரியும். இதையெல்லாம் மனதில் வைத்தே நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதில் நடராஜன் உருவாக்கியிருந்த "மாயை" நொருங்கிப் போயிருக்கிறது.

சிறையில் அடைக்கப்படும் முன்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சசிகலா கணவர் நடராஜன், " என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு போடப்படுகிறது. ஓராண்டு சிறையில் இருந்தாலும் இதை அமைதியாக சந்திப்பேன். என் கைது முதல்வருக்கு பிறந்த நாள் பரிசு" என்று பேட்டி கொடுத்திருக்கிறார். உடனே ஜாமினில் வர முடியாது என்பதை நடராஜன் உணர்ந்திருக்கிறார் என்பதையே இந்த பேட்டி காட்டுகிறது. மேலும் சில புகார்கள் நடராஜன் மீது இனி வருவதற்கு வாய்ப்பு உண்டு.

வழக்கம் போல் "நடராஜனின் கைது வருந்தத்தக்கது" என்று பேட்டி கொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மற்ற எந்த கட்சிகளும் நடராஜன் கைது பற்றி கருத்துச் சொல்லவில்லை. ஏன் வருடா வருடம் பொங்கல் விழா நடத்தி, அக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் கூட யாரும் இதுவரை நடராஜன் கைது பற்றி கருத்துச் சொல்லவில்லை. நடராஜனின் கைதிற்கு பிறகு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலாவின் வாக்குமூலம் எப்படியிருக்கும் என்பதையே இப்போது அனைத்து அரசியல் பார்வையாளர்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X