2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வியாபாரமாகிவிட்ட மனித உரிமைகளுக்கான போராட்டங்களும் நடவடிக்கைகளும்

Super User   / 2012 பெப்ரவரி 26 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை விடயத்தில் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணையின் உள்ளடக்கம் என்னவென்று இன்னமும் இலங்கையில் ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இப்போதே நாட்டில் ஒரு சிலர் அதனை ஆதரிக்கவும் வேறு சிலர் அதனை எதிர்க்கவும் முற்பட்டு விட்டனர். விந்தையாகவிருப்பினும் அது தான் இலங்கையின் அரசியலின் நிலைமை.

 

பிரேரணையின் உள்ளடக்கத்தைப் பற்றி தெரியாவிட்டாலும் அது மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை (யும் சிலவேளை தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும்) கண்டிக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் அந்த விடயத்தில் இங்கு மக்கள் இப்போதே பிரிந்து செயற்படுகிறார்கள். மேலும் இந்தப் பிரேரணை புலிகளை கண்டித்தாலும் புலிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் சிபாரிசு செய்யாது என்றும் தோன்றுகிறது. எனவே புலிகளின் ஆதரவாளர்களும் பிரேரணையை ஆதரிக்கிறார்கள்.

நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பினராவது உண்மையிலேயே எதிர்க்காலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயற்படுகிறார்களா அல்லது அரசியல் சதுரங்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

பாதுகாப்புப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் காலத்திலேயே மனித உரிமை மீறல்களைப் பற்றி அரச படைகளும் புலிகளும் விமர்சிக்கட்டு வந்தார்கள். ஆனால் அப்போதும் சிலர் புலிகளின் அத்துமீறல்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்க, மற்றும் சிலர் அரச படைகளின் உரிமை மீறல்களை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அது மட்டுமல்லாது பலர் இவ்வாறு பிரிந்து இரு சாராரினதும் உரிமை மீறல்களை நியாயப் படுத்தியும் வந்தார்கள். உரிமை மீறல் என்றால் எவர் செய்தாலும் உரிமை மீறலே என்று அவர்கள் சிந்திக்கவில்லை. இவ்வாறு பிரிந்து மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என அவர்கள் எவரும் சிந்திக்கவில்லை, இன்னமும் சிந்திப்பதாக தெரியவில்லை.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால் போரின் போது படைகளினால் ஒருபோதும் அத்துமீறல்கள் இடம் பெறவில்லை என்றே அரசாங்கம் ஆரம்பத்தில் கூறி வந்தது. ஆனால் போர் முடிந்த கையோடு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-முன் இலங்கைக்கு வந்த போது போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்று இருக்கக்கூடிய அத்து மீறல்களுக்கு பொறுப்புக் கூறல் சம்பந்தமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எழுத்து மூலமாகவே குறிப்பிட்டடு இருந்தார்.

ஒரு வருடம் செல்லும் வரை அரசாங்கம் அவ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஐ.நா சபை ஏதோ நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று விளங்கியபோதுதான் ஜனாதிபதி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை 2010ஆம் ஆண்டு மே மாதம் நியமித்தார். ஆனால் ஒரு விடயத்தில் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும். அது ஆணைக் குழு நடவடிக்கைகளில் தலையிட்டதாக எவருமே குற்றஞ்சாட்டாத வகையில் நடந்து கொண்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தும் அரசாங்கத்திற்கு அது பயனில்லாமல் போயவிட்டது. ஏனெனில் அதே மாதம் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காகவென இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சூகி தருஸ்மன் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழு செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதை ஒருபுறம் வைத்துவிட்டு விசாரணை அறிக்கை ஒன்றையே வெளியிட்டது.

ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் காலத்தில் ஐ.நா. வேறு எதுவும் செய்யவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அரசாங்கம் அக்கறையல்லாததைப் போல் நடந்து கொண்டது. சில அமைச்சர்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை பூரணமாக நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்றும் கூறியிருந்தனர். எனவே தான் அமெரிக்கா ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை விடயத்தில்; பிரேரணையொன்றை கொண்டு வர முற்பட்டது.

அத்துமீறல்கள் இடம்பெறவேயில்லை என்று அரசாஙகம் அரம்பத்தில் கூறிய போதிலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என அரசாங்கமே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. அரசாங்கம் அதனை மறுக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் பிடியை இறுக்கவே அவ்வாறான அத்துமீறல்களைப் பற்றி விசாரிக்கவென இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ நீதிமன்றமொன்றையும் நியமித்துள்ளார்.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் எதிர்க்கட்சிகளும் ஒருவித நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஐக்கிய தேசிய கட்சி போரின் ஒரு கட்டத்தில் அதாவது கிழக்கு மாகாணத்தில் போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் காலத்தில் மனித உரிமை மீறல்களைப் பற்றி அரசாங்கத்தை குறை கூறி வந்தது. போர் அரச படைகளின் வெற்றியில் முடியும் என்று அப்போது தெரியாததால் ஐ.தே.க. மேற்கத்திய நாடுகளின் பக்கம் சார்ந்து நிற்கவே முயற்சித்தது.

ஆனால், படையினர் கிழக்கை கைப்பற்றிக் கொண்டு, வடக்கே கிளிநொச்சியை கடக்கும் போது வெற்றி யாருக்கு என்பது தெளிவாகியது. சில தமிழ் 'ஆய்வாளர்களுக்கு' மட்டுமே அது விளங்கவில்லை. அந்த நிலையில் ஐ.தே.க. தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஆரம்பத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறிய ஐ.தே.க. போரின்  உச்சக் கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறுவதில்லை.

போரின் பின்னர் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போதும் அக்கட்சிகள் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்பட்ட போதும் அரசாங்கம் அவற்றை அடக்கும் வகையில் நடந்து கொண்டது. அண்மையில் ஆர்ப்பாட்டஙகளின் போது கட்டுநாயக்கவில் வைத்து ஒரு தொழிலாளரும் சிலாபத்தில் வைத்து ஒரு மீனவரும் கொல்லப்பட்டமை உதாரணங்களாகும். அந்தச் சம்பவங்களை மனித உரிமை மீறல்களாக வர்ணிக்கும் ஐ.தே.க, போரின் இறுதிக் கட்டத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறத் தயங்குகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் நிலைமையும் வித்தியாசமானதாக இல்லை. அக்கட்சி போரின் போது அரச படைகளை பூரணமாக ஆதரித்தது. மனித உரிமைகளை மீறியதாக படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்த போதெல்லாம் அக்கட்சி படையினரை பாதுகாத்தே வந்துள்ளது. ஆயினும் போரின் பின்னர் அக்கட்சி விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது அரசாங்கம் அவற்றை அதே படை பலத்தைக் கொண்டு அடக்கியது. வடக்கே சென்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படையினரால் தடுத்தும் வைக்கப்பட்டனர்.

இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பங்களினாலேயே உலக நாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அக்கட்சி சில மாதங்களுக்கு முன் கூறியது. சாதாரண நிலைமையின் கீழ் அவ்வாறு மனித உரிமைகள் மீறப்படுவதாக இருந்தால் போரொன்றின் போது அவ்வாறான எதுவுமே நடக்காதிருந்திருக்குமா என்ற கேள்வியும் எழலாம் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை போலும்.

போரின் பின்னர் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறும் அக்கட்சி அண்மையில் வடக்கில் மனித உரிமைகள் தொடர்பாக குரலெழுப்பிய தம்மிடமிருந்து பிரிந்து சென்ற குழுவின் ஆதரவாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர்; காணாமற் போன போது அவர்களுக்காக குரல் எழுப்பவில்லை.

தமிழ் தேசிய கூட்டணியை எடுத்துக் கொள்ளுங்கள். போர் காலத்தில் அக்கட்சி புலிகளை பூரணமாக ஆதரித்தது. புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாகவும் ஏற்றுக் கோண்டது. புலிகள் வட மாகாணத்தில் பின் வாங்கிச் செல்லும் போது பலாத்காரமாக மக்களையும் தம்மோடு அழைத்துச் சேன்றனர். கிழக்கு மாகாணத்தில் மக்களை விட்டு விட்டு, தாம் மட்டும் பின் வாங்கியதைப் போல் வடக்கிலும் புலிகள் நடந்து கொண்டிருந்தால் வட மாகாணத்தில் மக்கள் கொல்லப்படுவதை நிச்சயமாக குறைத்திருக்கலாம். ஆனால் புலிகள் மக்களை கேடயமாக பாவித்ததை தமிழ் கட்சிகள் இன்னமும் கண்டு கொள்ளவில்லை.

போரின் போது புலிகள் மக்கள் மத்தியில் இருந்து படையினரை நோக்கி ஏவுகணை தாக்ககுதல்களை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அரச படைகள் இனப் படுகொலைகளை மேற்கொள்வதாக இதே புலிகள் தான் குற்றஞ்சாட்டினார்கள். அரச படைகள் இனப் படுகொலைகளை மேற்கொள்வதாக இருந்தால் அதே படைகள் மக்களைப் பற்றி சிந்திக்காது திருப்பித் தாக்க மாட்டா என்று புலிகள் ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்? சர்வதேச சமூகமும் இவ் விடயத்தில் புலிகளை விமர்சிக்கிறது. ஆனால் தமிழ் கட்சிகள் இதனை கண்டு கொள்வதில்லை. 

இராணுவ அத்துமீறல்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் நல்லாட்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தாம் எதிர்ப்பார்க்கும் சில விடயங்கள் இல்லை என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆணைக்குழுவின் அறிக்கையை ஒட்டுமொத்தமாக தூக்கியெறிந்துள்ளது. அக் கட்சி அறிக்கையில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான நல்ல அம்சங்களை தனியாக எடுத்து ஆதரிக்கவில்லை, ஊக்குவிக்கவில்லை, முன்னெடுத்துச் செல்ல நெருக்குதலை கொடுக்கவில்லை.

சர்வதேச சமூகம் என கூறிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளும் இதே போல் ஒருசில நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக மட்டுமே மனித உரிமை மீறல் தொடர்பாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இஸ்ரேல் என்ன செய்தாலும் அவர்கள் ஏனென்று கேட்பதில்லை. பஹ்ரைன் யேமன் போன்ற நாடுகளில் தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பற்றி அந்நாடுகளும் மேற்கத்திய ஊடகங்களும் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை.

தாமும் தம்மை சார்ந்தவர்களும் மனித உரிமைகளை மீறலாம், மற்றவர்கள் மீறக்கூடாது என்பதே எல்லோருக்கும் பொதுவான நியதியாக இருக்கிறது. ஒருவகையில் மனித உரிமைகள் அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக பாவிக்கப்படும் கருவியாகவே இருக்கிறது. எனவே தான் மனித உரிமை மீறல்கள் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கிறது. 


You May Also Like

  Comments - 0

  • jeyarajah@activj.net Monday, 27 February 2012 12:41 PM

    ஐயூப் அவர்களே,உங்கள் கட்டுரை பலரது கண்களைத் திறக்கும் என நம்புகின்றேன். நன்றி . ஆனால் அரசின் மனித உரிமை மீறல்களுக்கும் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதே அரசின் போரின் நோக்கம். இடத்தைப் பிடிப்பது அல்ல. போரில் ஓரளவு உயிர் சேதங்கள் ஏற்படும் அது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் அரசு மனித உயிர்களைப் பற்றி யோசித்ததாகவே தெரியவில்லை.

    Reply : 0       0

    Juz Monday, 27 February 2012 06:11 PM

    இது நடு நிலைமை கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள ஒரு நல்ல கட்டுரை. இலங்கையின் அண்மைக்கால வாரலாற்றை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. நல்ல முயற்சி.

    Reply : 0       0

    Pease Monday, 27 February 2012 07:35 PM

    உங்கள் கட்டுரை வரவேற்கத்தக்கது, கடந்தகால மற்றும் நடைமுறை விடயங்களை அப்படியே எடுத்துகாட்டியுள்ளீர்கள் நன்றி.

    Reply : 0       0

    குமார் Tuesday, 28 February 2012 01:08 AM

    அயூப் அவர்களே ! அமெரிக்காவையும் மத்திய கிழக்கு நாட்டு பிரச்சனைகளையும் மாத்திரம் வைத்து பிரச்சனைகளை அணுக வேண்டாம். அமெரிக்காவும் இஸ்ரேலும் எது செய்தாலும் மனித உரிமை மீறல் ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்லபட்டால் அது மனித உரிமை மீறல் இல்லை.

    Reply : 0       0

    rizam Tuesday, 28 February 2012 02:17 AM

    நடு நிலைமையான ஒரு ஆக்கம் நிலமையை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு ஆக்கம்.

    Reply : 0       0

    sarithan Tuesday, 28 February 2012 07:59 AM

    மிக நல்ல ஆக்கம். எல்லோரும் படிக்க வேண்டியது. ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள்- இப்போது ககூட பாதிக்கபட்ட மக்கள் பயத்துடன்தான் வாழ்கிறார்கள் ஏற்படுத்தபட்ட காயங்களுக்கு மருந்து கொடுக்கப்படவில்லை.

    Reply : 0       0

    Rathnayaka Tuesday, 28 February 2012 12:06 PM

    இந்த கட்டுரைக்கு 60 மார்க்ஸ் கொடுக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X