2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கூட்டமைப்பை குலைக்கும் ஜெனிவா குழப்பங்கள்?

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகின்ற ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கெடுப்பதா, வேண்டாமா என்ற பிரச்சினையில், எங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்துவிடும் சூழல் உருவாகிவிடுமோ என்று பயம் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய சூழலில், பெருவாரியான தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு பிரதிபலிப்பதாக நாட்டின் உள்ளேயும் வெளியேயும் கருதப்படுகிறது. இனப் போர் முடிந்த காலம் தொட்டு, கூட்டமைப்பின் மிதவாத அரசியலை நம்பி, அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிற தமிழ் கட்சிகளை கூட்டமைப்பும் நாட்டின் உள்ளேயே தங்கி விட்ட அவர்களது தமிழ் ஆதரவாளர்களும் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கூட்டமைப்புக்குள் குழப்பம் என்பது அவர்களை கட்சி தலைமை நிராதரவாக விட்டுவிட்டதோ அல்லது அவ்வாறு விட்டுவிடுமோ என்ற கவலை உருவாகிறது.

ஜெனிவா நகரில் நடைபெறும் ஐநா அமைப்பு கூட்ட நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை, பன்னாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை அரசுக்கு எதிரான 'போர் குற்றங்கள்' மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் மீண்டும் வலியுறுத்துவது என்ற கருத்து இடைப்பட்ட காலத்தில் உருவாகி வருவதாக பத்திரிகை செய்திகள் கூறின. ஆனால். அவ்வாறு செய்வதானால், அது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையே பாதிக்கும் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார். அதுவே வீணாக மீண்டும் இன துவேஷத்தையும், தமிழ் மக்கள் மீதான வன்முறையையும் மீண்டும் கட்டவிழ்த்துவிடும் என்றும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளதில் உண்மை இருக்கிறது. எனவே, ஜெனிவாவிற்கு கூட்டமைப்பு, பிரதிநிதி யாரையும் அனுப்பி வைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், சம்மந்தன் கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அதனை கூட்டமைப்பின் 'தேசிய பட்டடியல்' நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மட்டுமே ஆதரிப்பதாகவும் அதன்  பேச்சாளரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளதாக, பின்னர் வந்த பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. சுரேஷின் கூற்றை மற்ற கூட்டமைப்பு தலைவர்கள் ஆதரிக்கிறார்களா, அல்லது சம்மந்தனின் நிலைப்பாட்டை ஒட்டி ஜெனிவாவிற்கு செல்லாமல் இருக்கப் போகிறார்களா, என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்த பிரச்சினையால், கூட்டமைப்பு உடையுமா என்பது அல்ல கேள்வி. இது போன்றே, 'நித்திய கண்டம், பூர்ண ஆயுள்' என்ற நிலையில் கூட்டமைப்பு எத்தனை காலம் தான், உள்கட்சி குழப்பங்களை மூடிமறைத்து, காலம் தள்ள முடியும் என்ற கேள்வியே முன்னிற்கிறது.

ஒருவிதத்தில் சுரேஷ் பிரேமசந்திரனின் கருத்தையே மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அரியநேத்திரனும் பிரதிபலித்துள்ளார். ஜெனிவாவிற்கு பிரதிநிதி குழு ஒன்றை அனுப்பி வைப்பது தான் கூட்டமைப்பின் முடிவாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். எனவே, அந்த முடிவை மாற்றி அமைக்கும் போதும் அதுபோன்றே கூடி பேசி முடிவு எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். மாறாக, சுமந்திரன் கட்சி தலைமை பீடத்தின் முடிவை தனக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாகவும் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

என்றாலும், கட்சி தலைமை பீடம் முடிவு எடுக்கும் போது பல விடயங்களை கருத்தில் கொண்டிருக்கும் என்றும் அரியநேத்திரனே கூறியுள்ளார். ஒரு புறம், தலைமை பீடம் எதனை கண்டாவது பயந்து விட்டதா, அல்லது அழுத்தங்களுக்கு உள்ளாகி விட்டதா என்ற கேள்வியை அவர் எழுப்பி உள்ளார். அதே வேகத்தில், கட்சி தலைமை பீடம் கூறுவது போல், தற்போதுள்ள சூழலில் கூட்டமைப்பு பிரதிநிதி குழு ஜெனிவாவிற்கு சென்றால் அதனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கும் ஒரு படி மேலே போய், ஜெனிவாவில் அரசுக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் நிலைமையை கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்றும் அவரே கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் தற்போதைய முடிவை சம்பந்தன் அறிவித்தபோது, அதன் தலைமை பீடத்தின் பிற உறுப்பினர்கள் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர். இதனை குறிப்பிட்டுள்ள அரியநேத்திரன், அவர்கள் நாடு திரும்பியதும் ஜெனிவா விஜயம் குறித்து கூட்டமைப்புக்குள் பேசப்படும் என்று கூறியுள்ளார். இது, கூட்டமைப்பு தலைமை பீடத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் ஒற்றைப்படுத்தப் பட போகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அல்லது எப்போதும் போலவே, அவர்கள் அனைவரும் கூடி, பேசி பின்னர் கலையப்போகிறார்களா என்பதும் தெரியவில்லை.

ஜெனிவா விஜயம் குறித்து, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கூறியுள்ள கருத்துகள் நிதர்சனமானது. இனப்போர் காலகட்டத்தில் அப்பாவி தமிழர்களின் வேதனை குறித்து அனைவரும் அறிவோம். ஏன், அது குறித்து தான் ஜெனிவா கூட்டத்திலும் உலக நாடுகள் பேசவுள்ளன. அதே சமயம், விடுதலை புலிகள் இயக்கத்தினால் பாதிக்கப்பட்ட, பயமுறுத்தப்பட்ட சிங்கள மக்களின் உணர்வுகள் சரியாக பிரதிபலிக்கப்படவில்லை. மாலையில் தன்னோடு இருந்த நண்பனை சில மணி நேரத்தில் சதையும் பிண்டமுமாக காண நேர்ந்த இராணுவ வீரனோ அல்லது பொலிஸ்காரனோ, தீவிரவாத தாக்குதல்களுக்கு பயந்து வருடக்கணக்காக தனித்தனி பேரூந்துகளில் ஒரே இடத்திற்கு பயணித்து வந்த அப்பாவி குடும்பங்கள், போர் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கான அன்றாட தேவைகளை முறையாக அனுப்பியும் அவற்றை கைப்பற்றி விட்டு அந்த மக்களை ஆண்டாண்டு காலம் பட்டினி போட்ட இயக்க தலைமையை எதிர்கொள்ள முடியாத அரசு அலுவலர்கள், இவர்களும் கூட சிங்கள இனத்தின் பிரதிபலிப்பே.

அது போன்றே, 1983ஆம் ஆண்டின் இனவெறி படுகொலையை மனதளவிலும் விமர்சித்துவிட்டு, அதுபோன்ற விதத்தில் மிதவாத தமிழ் கட்சி தலைமை ஏன் விடுதலை புலிகள் இயக்கத்தை சாடவில்லை என்று மனம் குமைந்த சிங்கள அரசியல் தலைவர்களும் அறிவுஜீவிகளும் கூட இந்த பட்டியலில் அடங்குவர். இப்போதும் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளதை சுட்டிக்காட்டுபவர்கள், ஏனோ இந்த உண்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.

இத்தகைய சராசரி மக்களே இந்த அரசுக்கும், இதற்கு முன்பு பதவியில் இருந்தோருக்கும் அடித்தளமாக இருந்துள்ளது. 'சிங்கள பேரினவாதம்' இவர்களது வாக்குகளை குறிவைத்தே தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அது விடுதலை புலிகள் குறித்த பயம் மற்றும் தொடரும் சந்தேகங்களின் அடிப்படையிலேயே உயிர்த்து நிற்கின்றது. இது தர்க்க வடிவில் அணுகவேண்டிய பிரச்சினை என்றாலும், உணர்வு பூர்வமாக அணுகப்படுத்துவதை தடுத்து நிறுத்த முடியாது. அது தான் நடைமுறை சாத்தியமாக இருக்கிறது.

அண்மை காலங்களில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அதிகார பகிர்வு குறித்து பேசும்போது கூறிவரும் சில கருத்துக்கள் எங்கே 'புலி பசித்தாலும் புல்லை தின்னாது' என்ற கருத்தையே சிங்கள மனதில் தோற்றுவித்துள்ளது. தாங்கள் போர் முகத்தில் விட்டுவிட்டு வந்த அப்பாவி தமிழர்களுக்காக அயல்நாடுகளில் குடியேறிவிட்ட தமிழ் சமூகம் விடும் கண்ணீர், ஜெனிவா ஊர்வலங்களில் அவர்கள் ஏந்தி செல்லும் விடுதலை புலிகள் இயக்கத்தின் கொடி ஆகியவை, இத்தகைய எண்ணங்களுக்கு சிங்கள மக்களின் மனங்களில் வலுச்சேர்க்கிறது. இதுவே அரசின் நிலைபாடுகளுக்கு உரம் சேர்க்கிறது. ஏன், அதற்கு அடிப்படையாக கூட அமைந்துவிடுகிறது.

கூட்டமைப்பை பொறுத்தவரை, இனப்போர் முடிந்த காலகட்டம் முதலே அதன் உள்கட்சி பிரச்சினைகளும், கொள்கை குழப்பங்களும் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு விடிவுகாலமாக அமையவில்லை. மாறாக, தனி மனித தலைமைத்துவ விவகாரங்களுக்கே அவை வடிகாலாக அமைந்துள்ளன. இனப்போர் முடிந்ததை தொடர்ந்து நடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டுமா, அல்லது சரத் ஃபொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமா, என்பதில் தொடங்கி, நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் குறித்த கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்து அடுத்தடுத்து குழப்பங்களே கூடியுள்ளன.

இதில் கொள்கை குழப்பங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு முறையும், இந்த குழப்பங்கள் எல்லாம் கூட்டமைப்பின் பெயர் சொல்லப்படாத தலைமை பீடத்திற்கும், தனிப்பட்ட, தனித்துவிடப்பட்ட ஒரு சில தலைவர்களுக்கும் இடையேயான வேறுபாடாகவே அமைந்தது. ஒவ்வொரு முறையும் தலைமை பீடத்திற்கே வெற்றி என்று ஆன பிறகு, மாற்று கருத்து தெரிவித்த தலைவர்கள் வெளியேறுவதை விட வேறு வழியில்லை என்றாகி போனது. அவர்களில் ஒருசிலர் பின்னாளில் கூட்டமைப்பிற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே அவர்கள் செயல்பட்டு வருவது கண்கூடு.

கூட்டமைப்புக்குள் தலைமை பீடத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இல்லை என்று ஆன பிறகு, அவர்களுக்குள்ளேயே விவாதங்கள், விவகாரங்களாக மாறிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகப் போய்விட்டது. அதே சமயம், இனப்போர் முடிந்த காலம் தொட்டு கூட்டமைப்பின் தேர்தல்கால உத்திகள், தலைமை பீடத்தை அலங்கரிக்கும் ஒருசில தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையிலும் அவர்களது எதிர்கால தலைமைத்துவ ஆவல்களையும் உள்ளடக்கியே வந்துள்ளமை கண்கூடு. 'ஆட்டை கடித்து, மாட்டை கடித்து...' என்ற கதையாக இது நீண்டு கொண்டே போகிறது. இது அடுத்த கட்டத்தை தற்போது அடைந்துள்ளது.

இனப்போர் நடைபெற்ற காலகட்டத்திலும் பின்னரும் சம்பந்தனின் தலைமை மிதவாத அரசியலுக்கு அச்சாரம் கூறிவருகிறது. கொள்கை ரீதியாகவும், உத்தி பூர்வமாகவும் இதனை எதிர்ப்பவர்கள் உண்டு. ஆனால், தலைமைபீட முடிவிற்கு பெருவாரியான கூட்டமைப்பு தலைவர்கள் கட்டுப்பட்டு வருவது, சம்பந்தனின் அணுகுமுறையினால் மட்டுமே. ஆனால், அது ஒருசிலருக்கு மட்டுமே என்றென்றும் ஆதரவாக இருந்துள்ளது என்று கூட்டமைப்பை விட்டுப் போனோர் கூறியதுண்டு. சம்மந்தனும் புரையோடி வந்துள்ள கூட்டமைப்பின் உள்கட்சி பிரச்சினைகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டு, கட்சியை வழி நடத்தி வந்துள்ளார்.

கொள்கை வேறுபாடுகள் என்று கூறும்போது அண்மையில் வவுனியாவில் நடந்தேறிய தமிழ் சமூகத்துடனான சந்திப்பில் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு என்று கூறி, அதனை இணையதளம் ஒன்று விமர்சித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டு நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக, அவர்கள் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் பதின்மூன்றாவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில் அரசுடன் அரசியல் தீர்வு காணலாம் என்று கூட்டமைப்பு தமிழ் சமூக பிரதிநிதிகளிடம் கூறியதாக குறித்த அந்த இணையம் கருத்து வெளியிட்டுள்ளது.

இதன் பின்னணியில் கூட்டமைப்பில் தற்போது தோன்றியுள்ள குழப்பமான செயல்பாடு எந்த திசை நோக்கி பயணிக்கப் போகிறது என்பது முக்கியமாகிறது. ஆனால், கூட்டமைப்பு மேலும் வலுவிழந்தால், அதனால் பொலிவிழந்தால் அதனால் பாதிக்கப்டுவது இலங்கையில் அனாதரவாக விடப்பட்டுள்ள தமிழ் சமூகம் தான். வெளிநாடுவாழ் தமிழர்கள் அல்ல. நிச்சயமாக கூட்டமைப்பின் தலைவர்களும் அல்ல.
 


You May Also Like

  Comments - 0

  • kamran Wednesday, 29 February 2012 12:08 AM

    என்னய்யா சத்திய மூர்த்தி குழப்புறே ?
    நடந்து முடிந்தது இனப்போரா இல்லை பயங்கர வாதமா?

    Reply : 0       0

    jeyarajah Wednesday, 29 February 2012 12:57 AM

    சத்தியமூர்த்தி ஐயாவிற்கு எழுத வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா. தயவு செய்து நீங்கள் குழம்பாமல் இருங்கோ.எங்களையும் குழப்பி, கட்சியையும் குழப்பி, நீங்களும் குழம்பாமல் இருந்தால் நல்லது. ஒரு ஊடகவியலாளரின் பொறுப்பு எத்தகையது என்பதை நன்கு நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுங்கள். பிள்ளையையும் கி....... தொட்டிலையும் ஆட்டும் வேலையை விடுங்கோ. நன்றி.

    Reply : 0       0

    Rubi Wednesday, 29 February 2012 01:45 AM

    metpadi kadduraiyaalar mika sariyave karuththukkalai mun vaiththullaar ...

    Reply : 0       0

    suran Wednesday, 29 February 2012 07:59 AM

    mihayum unmaiyana kaddurai. nanri

    Reply : 0       0

    thivaan Wednesday, 29 February 2012 12:43 PM

    இப்படியான பந்தி எழுத்தாளர் போர் முடிந்ததும் காணாமல் போய்விட்டார்கள். ஒருசிலர் முகத்தை காட்டுகின்றார்கள்.

    Reply : 0       0

    Kumarevel Saturday, 03 March 2012 02:46 AM

    சிங்கள மக்களின் உணர்வுகள் பற்றி இரண்டு பந்தி எழுதிய சத்தியமூர்த்திக்கு விடுதலை புலிகள் உருவாக முன்பே தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவிவிட்ட பல ஆயிரம் தமிழ்க்களை கொலை செய்தவர்களை பற்றி எழுத தோன்றவில்லையா? தமிழ்மக்கள் அதை மறந்து விட்டார்கள் ஏதோ விடுதலை புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையால் தான் எல்லாம் நடைபெற்றது என்று வரலாற்றை மறைக்க முயலும் நடவடிக்கை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X