2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றக் குழுவை புறக்கணிக்கும் திராவிட கட்சிகள்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று இன்று இலங்கை விஜயம் மேற்கொள்கிறது. அந்த வருகை குறித்து இலங்கை வாழ் தமிழ் சமூகமோ, அரசியல் கட்சிகள் கருத்து கூறாத நிலையில், தமிழ் நாட்டில் இது குறித்த கருத்துகளும் விமர்சனங்களும் பரவலாக உள்ளன. முக்கிய இரண்டு திராவிட கட்சிகளான திமுக-வும் அஇஅதிமுக-வும் குழுவில் இடம் பெறுவதாக தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரையும் கொடுத்து விட்டு, பின்னர் அதனை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதுபோன்ற நிலைப்பாடும் சரி, அதன் பின்னால் இருப்பதாக கருதப்படும் 'அரசியலும்' (?) சரி. இதற்கு முந்தைய காலகட்டங்களில், இலங்கை தமிழ் மக்களின் இன்னல்களை தீர்க்க உதவியதில்லை. மாறாக, எரியும் இலங்கை நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலவே அமைந்து வந்துள்ளது. அதற்கு அப்பால் சென்று, தமிழ் நாட்டு அரசியல் சதுரங்கத்திலும் ஒரு காயாகவே, இலங்கை தமிழ் மக்கள் தொடர்ந்து பயன்படுத்தப் படுவதையும் மட்டுமே இது காட்டுகிறது.

ஜெனிவா வாக்களிப்பு பிரச்சினை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடந்த காலகட்டத்தில், இலங்கைக்கு ஓர் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த கட்சிகளில் தமிழ் நாட்டை ஆளும் அஇஅதிமுக, எதிர்கட்சிகளான திமுக, மதிமுக போன்ற திராவிட கட்சிகள் முக்கியமானவை. இலங்கை அரசிற்கு எதிரான இந்திய அரசின் ஜெனிவா வாக்கிற்கு பின்னரும் இந்திய நாடாளுமன்ற குழு ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி, இந்திய குழுவில் மதிமுக அழைக்கப்படவில்லை. முன்னர் குழுவிற்கு தலைமை தாங்கிய திமுக, தற்போது அதனை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னரே, அஇஅதிமுக அந்த குழுவை புறக்கணிப்பதாக அறிவித்ததே அதற்கு ஓரு முக்கிய காரணம்.

இலங்கைக்கு இந்திய நாடாளுமன்ற குழு வருவது இது முதல் தடவை அல்ல என்பது உண்மை. இதுவே கடைசி முறையாகவும் இருந்துவிடக்கூடாது என்பது கவலை. கடந்த 2009ஆம் ஆண்டு, இனப்போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் வேண்டுகோள் அல்லது நிர்ப்பந்தம் காரணமாக, மாநிலத்தை சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று தமிழ் மக்களின் நிலைமை குறித்து ஆய்வு நடத்த அனுப்பப்பட்டனர். அவர்கள் வருகையை பிரச்சினை ஆக்காமல், அவர்கள் இலங்கை அரசின் விருந்தினர்களாக வரவேற்கப்பட்டனர்.

அவர்கள் கண்டது எது? விட்டது எது? என்பதை விட, கடந்த பல தசாப்தங்களில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் அரசியல் குழு என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், அது அவர்களில் பலருக்கும் இனப் பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசி ஆராய கிடைத்த முதல் வாய்ப்பாகவே இருந்தது. அதில் ஒரு சிலராவது தற்போதைய குழுவில் இடம்பெற்றுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதிலும் குறிப்பாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மேலவையான ராஜ்ய சபை உறுப்பினரான சுதர்ஸன் நாச்சியப்பன், இடைப்பட்ட காலத்தில் ஒருமுறையாவது வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களோடு கலந்து பேசியதாக, யாழ்பாணத்தில் இருந்து பத்திரிகை செய்திகள் தெரிவித்தன.

கடந்தமுறை, இந்திய குழுவில் அங்கம் வகித்த அனைவருமே, தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ் நாட்டின் அப்போதைய ஆளும் கட்சியான திமுக-வின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு, அந்த குழுவினருக்கு தலைமை வகித்தார். தற்போது, பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் - குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார். இந்த குழுவில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். முதலில் முன்வைக்கப்பட்ட பதினைந்து உறுப்பினர்களில் ஏழு பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.

தற்போதைய குழுவில் பல உறுப்பினர்களுக்கும், இலங்கை பிரச்சினை குறித்து அறிவு கிடையாது என்ற விதண்டாவாதம் வேண்டுமென்றே, தமிழ் நாட்டில் பரப்பப்படுகிறது. இன்றைய சூழலில், பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களும் அறிவு பெற்று, அது குறித்து மத்திய - மாநில அரசுகளுடன் தங்களது கருத்துக்களை பல்வேறு காலகட்டங்களிலும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை. ஆனால், இலங்கை பிரச்சினை, தேசிய அரசியலில் முக்கியமாக பேசப்பட்டால், எங்கே தங்களது முக்கியத்துவம் குறைந்து, இல்லாமலே கூட போய்விடுமோ என்ற தமிழ் நாட்டில் உள்ள சில கட்சிகளும் குழுக்களும் கருதுகின்றன என்றே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்தமுறை இலங்கை விஜயம் மேற்கொண்ட திமுக உறுப்பினர்கள் தற்போதைய குழுவிலும் இடம் பெற்றிருந்தால், அவர்களால் உருப்படியான சில விடயங்களை, கள நிலைமையை ஒப்புவமை செய்து பார்த்திருக்க முடியும். ஆனால், அஇஅதிமுக, குழுவை புறக்கணிக்கும் செய்தி வெளியான பிறகு, திமுக எடுத்துள்ள இந்த முடிவு, திராவிட கட்சிகளின் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்துகிறதே தவிர, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் செய்துவிடவில்லை.

அண்மை காலத்தில். தமிழ் நாட்டின் அஇஅதிமுக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பத்திரிகை செய்தி ஒன்று இந்த போட்டி அரசியலில்; முக்கியமான ஒன்று. ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய நன்றி அறிவிப்பு கடிதத்தில், அந்த பிரச்சினை குறித்து தான் எடுத்த முயற்சிகளை அடியிட்டு காட்டிய ஜெயலலிதா, போகிற போக்கில், தனது அரசியல் எதிரியான திமுக தலைவர் கருணாநிதியின் முயற்சிகளையும் கோடிட்டு காட்டியிருந்தார். அவரது அரசியல் அகராதியில் இது ஒரு மாறுதல் என்றே கூற வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினை என்று வரும் போது, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்து குரல் எழுப்பும் என்று அவர் பிரதமருக்கு தெரிவித்ததாகவும் இதை கொள்ளலாம். மாறாக, இலங்கை பிரச்சினை போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமிழ் நாட்டில் உள்ள மூத்த திராவிட கட்சிகளும், வேறு யாரையும் அதனால் பெயரை தட்டிக் கொண்டு போகவிடாது என்றும் இதனை புரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து இரு பெரும் திராவிட கட்சிகளும் இலங்கை விஜயத்தை புறக்கணித்தது இதனையே சுட்டிக்காட்டுகிறது. எங்கே, விட்டுப்போன கட்சிகளான வைகோ-வின் மதிமுக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தங்களை வசைபாடி, 'இனப் பிரச்சினை' அரசியலை மீண்டும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுவிடுமோ என்ற அவர்களின் கவலையே இதற்கு முக்கிய காரணம்.

அடுத்த ஆண்டு, இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், திமுக-வும் சரி, அஇஅதிமுக-வும் சரி, மக்களி பிரச்சினைகளை தங்களது ஆட்சி காலத்தில் முறையாக தீhக்கவில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளது. எனவே, மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தாமலே, தங்களுக்கு அதிகமாக கெட்ட பெயர் பெற்று தராத இலங்கை பிரச்சினையை கையில் எடுக்கலாமா? என்று இரு பெரு திராவிட கட்சி தலைமைகளும் சிந்திப்பதாகவே தோன்றுகிறது. எங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் தற்போது இடம்பெற்று விட்டால், தேர்தல் அரசியலில் தங்கள் பெயர் 'ரிப்பேர்' ஆகிவிடுமோ என்ற கவலை ஒரு புறம். அதன் காரணமாக இலங்கை பிரச்சினையை முன்வைத்து தேர்தல் அரசியல் செய்ய வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதன் காரணமாக தங்களது பெயரை 'ரிப்பேர்' ஆக்கும் உள்நாட்டு பிரச்சினைகள் முன் வைக்கப்படுமோ என்ற குழப்பம் மறு புறம். கடந்த காலங்களிலும், திராவிட கட்சிகள், இத்தகைய போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளன. ஆனால், இலங்கை இனப் போரின் உச்சக் கட்டத்தில் நடந்த 2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் கூட அதன் தாக்கம் தெரியவில்லை என்பதும் உண்மை.

கடந்த 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., திராவிட முன்னேற்ற கழகத்தை உடைத்து, அஇஅதிமுக என்ற கட்சியை தோற்றுவித்த காலம் தொட்டே, இந்த இரு பெரும் கட்சிகளும், தமிழ் நாட்டு பிரச்சினைகளில் பிற கட்சிகள் பெயர் தட்டிக் கொண்டு போக விட்டதில்லை. தேர்தல்களில் கூட, தங்கள் இருவரையும் மீறி, மாநில அரசியலில் மூன்றாவது கட்சி முளை விட்டாலும் கூட மரமாக வளர்வதை அவை ரசித்ததில்லை. எழுதப்படாத ஓர் ஒப்பந்தமாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் வௌ;வேறு மூன்றாவது கட்சியை திட்டம் போட்டு கட்டம் கட்டியுள்ளன.

இன்னும் சொல்லப் போனால், அவை இரண்டும் பேச்சுவார்த்தைகள் மூலம் திட்டம் தீட்டியிருந்தால் கூட இவ்வளவு தெளிவாக செயல்பட்டு வெற்றி பெற்றிருக்க முடியாது. தற்போதைய பிரச்சினையில் திமுக-வை பெயர் சொல்லி கருத்து தெரிவித்த ஜெயலலிதா, விஜய்காந்தின் தேமுதிக-வையோ, மாநிலத்தில் உள்ள பிற கட்சிகளையோ பாராட்டி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இது திராவிட கட்சிகளின் தேர்தல் அரசியலின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பாகம் என்றே நாம் கருதவேண்டும்.

கடந்த முறை, தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்ற போது, ஜெயலலிதாவின் உத்தரவின் படி அஇஅதிமுக அதனை புறக்கணித்தது. அப்போது அந்த கட்சி எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் அதன் முடிவில்; உள்நாட்டு அரசியல் கலப்பும் இருந்தது. தற்போது, மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அஇஅதிமுக முதலில் எம்.பி-க்கள் குழுவில் பங்கு பெறுவதாக கூறி விட்டு பின்னர் புறக்கணிப்பதாக தெரிவித்தது, கட்சி தொண்டர்களை குழப்பியுள்ளது. காரணம், புறக்கணிப்பு குறித்து, ஜெயலலிதா கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.

தற்போதைய எம்.பி-க்கள் குழு இலங்கை தமிழ் கட்சிகளை பார்த்து பேச அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. ஆனால், கண்ணால் காண்பதை வைத்தே அவர்களால் பல்வேறு முடிவுகளை எட்டமுடியும் என்பதே உண்மை. அதுவும் குறிப்பாக, இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் இந்திய அரசியல் கட்சிகள் எப்போதும் இருக்கும் என்ற கருத்தை உறுதி செய்வதே இந்த குழுவின் இலட்சியமாக இருக்கும். அவர்கள் அங்கு சென்றவுடன் தமிழ் மக்களுக்குள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றோ, அல்லது புதிய பிரச்சினைகள் தொடங்கிவிடுமோ என்று கருத இடமில்லை.

மாறாக, இந்திய குழு அங்கு சென்ற பிறகு அவர்கள் தமிழ் மக்களையோ அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையோ சந்தித்துப் பேசும் வாய்ப்பு உருவானால், கேட்டது கிடைத்தும் அதனை பயன்படுத்தும் வாய்ப்பு அஇஅதிமுக-விற்கு இல்லாமலே போய்விடும். சென்னையில் இருந்தே தன்னால் தான் அது சாத்தியமாயிற்று என்று ஜெயலலிதா வேண்டுமானால் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால், இலங்கை சென்ற குழு உறுப்பினர்களின் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.

கடந்தமுறை இல்லாமல், இந்தமுறை உள்ள இன்னோரு பிரச்சினை, மத்தியி;ல் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாட்டு கிளைக்குள் இனப் பிரச்சினை குறித்து எழுந்துள்ள புதிய போட்டா போட்டி. இதை 'சிவ கங்கை' போட்டி என்று கூட கூறலாம். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இலங்கை பிரச்சினையில், அந்த கட்சியை சேர்ந்த சுதர்ஸன் நாச்சியப்பன் அதிக அக்கறை காட்டி வருகிறார். கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சி தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து இரண்டு நாள் கலந்துரையாடலுக்கு வழி செய்திருந்தார். அதற்கு வட மாநில எம்.பி-க்களையும் அழைத்து வந்தார். ஆனால், கட்சி கட்டுப்பாடு கருதி, தனது பங்களிப்பை அடக்கியே வாசித்து வந்தார்.

இந்த முறை, ஜெனிவா வாக்கெடுப்புக்கு பின்னர், இந்திய அரசின் முடிவின் பின்னணியில் தான் இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் காட்டி வருகிறார். அது உண்மையும் கூட. பின்னர் தமிழ் நாட்டில் பேசிய சிதம்பரம், ஜெனிவா வாக்களிப்பில் இந்தியாவின் முடிவு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று கூறினார். வெளியுறவு கொள்கை குறித்து உள்துறை அமைச்சர் பேசினார் என்பது ஒரு பக்கம் என்றாலும், சுதர்ஸன் நாச்சியப்பனும் சிதம்பரத்தின் சிவகங்கை பகுதியை சார்ந்தவர் என்பதும் முக்கியமாகும். சிவகங்கை மற்றும் அனைத்திந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினுள் சிதம்பரம் எதிர்ப்பு அரசியலை அடக்கியே செய்யும் சுதர்ஸன் நாச்சியப்பன், கடந்த 1999ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அன்று மூப்பனாரின் தமிழ் மாநில கட்சி வேட்பாளரான சிதம்பரத்தை தோற்கடித்து, மூன்றாவது இடத்திற்கும் தள்ளியது, நிகழ்காலம் கூறும் வரலாறு.

கடந்த ஆண்டு, இலங்கையை சார்ந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமயில், நாடாளுமன்ற குழு ஒன்று, இந்திய தலைநகர் புது டெல்லிக்கு விஜயம் செய்தது. அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் விஜயம் செய்த போது, திமுக, அஇஅதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள், அந்த குழுவை புறக்கணித்து, காரசாரமாக பேசி, பின்னர் வெளிநடப்பு செய்தன. அதுபோன்றே, அந்த குழுவிற்கான விருந்துபசாரங்களையும் புறக்கணித்தன. அவர்கள் அறிந்து கொள்ளாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத விடயம் ஒன்று இருந்தது. அது இது தான். இலங்கை குழுவின் 11 உறுப்பினர்களில் ஐந்து பேர், தமிழ் மொழி பேசும் இனங்களையும் அவற்றை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனோ, இலங்கை தமிழ் இன மக்களின் உரிமைக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர். பின், ஏன் அந்த புறக்கணிப்பு? இப்போது, ஏன் இந்த புறக்கணிப்பு?

You May Also Like

  Comments - 0

  • குமார் Tuesday, 17 April 2012 12:28 AM

    தமிழ் நாட்டிலுள்ள கட்சிகளிடையே உள்ள போட்டி பற்றி நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள்? எதோ இலங்கை பிரச்சனையிலாவது தமிழ் நாட்டிலுள்ள கட்சிகள் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது வரவேற்க கூடிய விடயம்.திரு சத்தியமூர்த்தியை பொறுத்தவரை பேரினவாதிகளுக்கு சார்பாக இங்கு வந்து சென்று உலகுக்கு கருத்து சொல்ல வேண்டியவர்களே குழுவில் இடம்பெற வேண்டும். அவர் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக நன்றாகவே மூளை சலவை செய்கிறார்.

    Reply : 0       0

    Raj Tuesday, 17 April 2012 05:01 PM

    நானும் சிவகங்கையைச் சேர்ந்தவன்தான். சத்தியமூர்த்தியும் சுதர்சன நாச்சியப்பனும் இணைந்து கொண்டு ஈழத் தமிழர் பிரச்சிணையில் செய்கிற பித்தலாட்டங்கள் எப்பகுதி மக்கள் அறியாமல் இல்லை. சத்தியமூர்த்திக்கு பிரச்சிணை இல்லை. சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கைப்பகுதியில் இனி அரசியல் செய்வது கடினம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X