2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திமுக, அதிமுக வராதமை, தாம் கூறும் நிலைமை இலங்கையில் இல்லையென்ற அச்சத்தினாலா?

Super User   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகளைப் பற்றிய விவரங்களை அறிய இலங்கையிலிருந்து நாடாளுமன்ற தூதுக் குழுவொன்று தமிழ் நாட்டுக்குச் செல்கிறது. தூதுக் குழுவிற்கு தலைமை தாங்க ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்து  ஓர் அமைச்சரைப் போல் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப் படுத்தி செயற்படுகிறார்.

தூதுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் தத்தமது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவன்றி இலங்கையின் பிரதிநிதிகளாக செயற்படுகிறார்கள். அவர்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இந்திய மக்கள் முன் தோற்றமளிக்கவில்லை. தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் விடயத்தில் தூதுக் குழுவின் சகல உறுப்பினர்களும் ஒரே கொள்கையுடையவர்களைப் போல் இறுதியில் எதிர்க் கட்சித் தலைவர்; இலங்கை அரசாங்கத்கின் பொதுவான நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடுகிறார்.

- இவ்வாறானதோர் நிலைமை எப்போதாவது ஏற்படுமா? இவ்வாறானதோர் நிலைமை எப்போதாவது இலங்கையில் இருந்ததுண்டா? இவ்வாறானதோர் நிலைமை எப்போதாவது இலங்கையில் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்று அடித்துக் கூறலாம்.

இந்த வகையில் இலங்கைக்கு வந்த இந்திய நாடாளுமன்ற துதுக்குழு இலங்கை தமிழர்களைப் பற்றி முக்கியமான பல தகவல்களை திரட்டிக் கொண்டதைப் போலவே இலங்கையில் அனைவருக்கும் சிறந்ததோர் அரசியல் பாடத்தையும் கற்பித்துவிட்டுச் சென்றது.

இந்திய தூதுக்குழுவின் தலைவியாக வந்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரைப் போல் வெளிநாட்டில் வைத்து தமது நாட்டுக்கு எதிராக கருத்து வெளியிடவில்லையென இப்போது இலங்கையின் அமைச்சர்கள் கூறுகிறார்கள். உண்மை தான்.

ஆனால்; எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும் இலங்கையின் ஜனதிபதியொருவர் எதிர்க்கட்சித் தலைவரை இது போன்றதோர் முக்கிய தூதுக் குழுவின் தலைவராக நியமிப்பாரா என்ற கேள்வியை அந்த  அமைச்சர்கள் எழுப்பவில்லை.

சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு வந்து, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப் படும் வீடமைப்புத் திட்டங்களையும் ரயில் பாதைகளையும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் கையளிக்கும் பணிகளில் ஈடுபட்டார். இலங்கையின் இனப் பிரச்சினை போன்ற முக்கியனானதோர் பிரச்சினையைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் சார்பில் இலங்கையின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஸ்வராஜ், இந்திய அரசாங்கம் ஜெனிவாவில் கடந்த ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தின் போது இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தது என்பதை விளக்கினார். இலங்கை தமிழர்களைப் பற்றி சிந்தித்தே இந்தியா இவ்வாறு நடந்து கொண்டது என அவர் கூறியிருந்தார். அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு விளக்குகிறார் என்றால், அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியதைப் போல் அமைதியாக இருந்தால் அவர் பொறுப்புடன் செயற்படுகிறார் என்பது முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டிருக்க வேண்டும்.  

எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும் இலங்கையில் ஜனாதிபதியொருவர் இவ்வாறான முக்கிய பணிகளை எதிர்க் கட்சித் தலைவரொருவரிடம் ஒப்படைக்கும் அளவிற்கு இலங்கையில் முதிர்ச்சியும் பக்குவமும் இல்லை. அதே போல் இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர் எருவர் இது போன்றதோர் பொறுப்பை ஏற்று வெளிநாடொன்றுக்குச் சென்று தமது கட்சிக்கு அரசியல் இலாபம் தேடாமல் செயற்படும் அளவிற்கும் இலங்கையில் அரசியல் நாகரிகமும் இல்லை.

எனவே, இது இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிய பிரச்சினையல்ல, மாறாக இது நாட்டின் பொதுவான அரசியல் கலாசாரத்தைப் பற்றிய பிரச்சினையாகும்.

இந்தியாவும் பூரணமாக அரசியல் நாகரிகம் கொண்ட நாடு என நாம் இங்கே வாதிடப் போவதில்லை. ஆனால், இந்திய தூதக்குழுவின் இலங்கை விஜயம் இலங்கைக்கு பல பாடங்களை கற்பித்தது என்பது உண்மை.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த விஜயம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்காகவும் நாட்டில் சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்காகவும் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அடிக்கடி பல இந்திய அரசியல்வாதிகள் கூறி வந்த நிலையில், ஏன் நம்மில் சிலர் இங்கைக்குச் சென்று நிலைமையை நேரில் பார்க்கக் கூடாதா என்ற கேள்வி எழுந்தது.

இதன் விளைவாகவே இந்தக் குழுவின் விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே இதில் வேறு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. ஆனால் அது ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னர் இதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமை ஏற்படுமோவென சிலர் நினைத்தனர். இதன் காரணமாக அரம்பத்திலிருந்தே சிலர் இந்த விஜயத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்தனர்.

தமிழ்நாட்டில் இரு பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டும் விஜயத்தின் பின்னர் அதுவரை தாம் செய்த விமர்சனங்களைவ வாபஸ் பெற வேண்டி வருமோவென்ற அச்சத்துடனேயே இருந்தன. எனவே அவர்கள் இந்த பயணத்தை தவிர்த்துக் கொள்ள காரணங்களை தேடிக் கொண்டே இருந்தனர்.

இது போன்ற முன்னைய பயணங்கள் பயனளிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி முதலில் தி.மு.க. தூதுக் குழுவிலிருந்து விலகிக் கொண்டது. ஆனால் அது நியாயமான காரணமாக ஏற்க முடியாது. ஏனெனில் இலங்கையின் உண்மையான நிலைமையை அறிய வேண்டும் என்ற தேவை அக் கட்சியிடம் பாரதூரமாக இருந்திருந்தால் முன்னைய பயணங்கள் பயனில்லாமல் பொனதைப் போல் இந்தப் பயணமும் பயனில்லாமல் போகாதிருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து தாமும் தூதக் குழுவில் சேர்ந்து இலங்கையிலுள்ள நிலைமைகளை அம்பலப் படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தூதுக் குழுவின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தூதுக் குழுவினர் சாதாரண தமிழ் மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு இல்லையெனக் கூறி ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் பின்னர் தூதுக் குழுவில் இருந்து விலகிக் கொண்டது. இதுவும் நியாயமாகத் தெரியவில்லை. இலங்கையின் நிலைமையை அம்பலப்படுத்த உண்மையான தேவை இருந்தால் சாதாரண தமிழ் மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்க ஏன் அக்கட்சி போராடக் கூடாது? ஏன் அவர்கள் அவ்வாறு போராடவில்லை?

தமது கடமையை எவ்வாறோ செய்வதற்கான உத்திகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக இவ்விரு கட்சிகளினதும் தலைவர்கள் கடைமையிலிருந்து தப்பித்துக் கொள்ள காரணம் தேடுவதிலேயே முழுமூச்சாக இருந்தனர்.  இறுதியில் சுஷ்மா ஸ்வராஜ் தமிழ் பொது மக்களையும் சந்தித்தார், அரசியல்வாதிகளையும் சந்தித்தார், ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் வடக்கில் இராணுவம் பிரஜைகளின் வாழ்க்கையில் தலையிடுவதாகவும் தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பக்கூடிய நிலைமை இன்னமும் இன்னமும் உருவாகவில்லை என்றும் பகிரங்கமாக கூறிவட்டுச் சென்றார்.

எனவே, தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் அந்தக் குழுவில் இடம் பெற்று இருந்தால் தூதுக் குழு பூர்த்தியானதாக இருந்திருக்கும். அது நல்லிணக்கத்திற்கு சாதகமாகவே அமைந்து இருக்கும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X