2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தீவிரமாகும் தி.மு.க. உள்கட்சி சண்டை

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மதுரை நிகழ்ச்சிகளை புறக்கணித்தவருமான மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கி முத்து கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுவரை இல்லாத புதிய நிபந்தனையாக "அடுத்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் போதும் அவர் உறுப்பினராக சேர்க்க தகுதியற்றவர்" என்ற அந்த நிபந்தனை மதுரை மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கொடிப்பிடிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றே தெரிகிறது. குறிப்பாக மூத்த மாவட்ட செயலாளராக இருக்கும் ஸ்டாலினின் இன்னொரு எதிர்ப்பாளரான சேலம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் எச்சரிக்கையே.

தி.மு.க.விற்குள் ஆரம்பத்திலிருந்தே மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஒவ்வொருவராக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலில் வைகோவிற்கும், ஸ்டாலினுக்கும் பனிப்போர் நடந்தது. பிறகு அது மறைந்த முரசொலி மாறனுக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான போராக மாறியது. முரசொலி மாறன் மறைவிற்கு பிறகு ஸ்டாலினுக்கும், தயாநிதி மாறனுக்கும் (முரசொலி மாறனின் மகன்) ஆங்காங்கே கட்சிக்குள் போட்டி எழுந்தது. இரு தரப்பு ஆதரவாளர்கள் தி.மு.க.வில் உருவானார்கள். அதன் ஒரு கட்டமாக தி.மு.க.விற்குள் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன் ஆகிய மூவரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று ஒரு சர்வே எடுத்து, அதை தயாநிதி மாறன் நடத்தும் தினகரன் பத்திரிகையில் வெளியிட மதுரையில் பெரும் கலவரமே வெடித்தது. தினகரன் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். இதன் பிறகு தயாநிதி மாறன் கட்சியிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார். தயாநிதி மாறனின் போட்டி இல்லாத நேரத்தில் ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் ஏற்கனவே இருந்த பனிப்போர் உச்சத்திற்கு போனது. தமிழகம் முழுவதுமே அழகிரிக்கு ஆதரவாளர்கள் உருவானார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் அழகிரியை கேட்காமல் கட்சி தலைமை எதையும் செய்யமுடியாது என்ற சூழ்நிலை உருவானது. தி.மு.க. ஆட்சியில் இருந்த நேரத்திலேயே தென் மாவட்டங்களில் அமைச்சர் பதவிகளில் இருந்த ஐ.பெரியசாமி, தமிழரசி, பெரியகருப்பன், கீதா ஜீவன், சுரேஷ் ராஜன் போன்ற ஸ்டாலின் ஆதரவாளர்களே அழகிரியின் தயவில்தான் இருக்க வேண்டும் என்ற நிலை வந்தது. எந்த கட்சி நிகழ்ச்சிகள் வந்தாலும், மு.க. அழகிரி படத்தை பெரிதாகப் போட்டை விளம்பரம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டார்கள். ஒரு கட்டத்தில் தென் மாவட்டங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் பிரசாரத்திற்கு ஸ்டாலின் போவார். ஆனால் அழகிரி ஆதரவாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் வட மாவட்டங்களில் நடந்த இடைத் தேர்தல்களுக்கு மு.க. அழகிரி வரவே மாட்டார். இப்படி இரு தரப்பினருக்கும் இடையே பெரும் ஈகோ யுத்தம் நடந்தது. இதனால் ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்ற பிரசாரத்தை அவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் செய்த போது, அழகிரி தரப்போ, "கலைஞர் இருக்கும் போது அதற்கு வேலையில்லை" என்றே பேசினார்கள். மு.க. அழகிரியை மத்திய அமைச்சராக்கி, மாநில அரசியலில் அவரது ஈடுபாட்டை குறைக்க நினைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால் அதுவும் பலிக்கவில்லை. ஏனென்றால் அழகிரிக்கு அளித்த மத்திய அமைச்சர் பதவியே தி.மு.க.விற்குள் அனைத்து பகுதிகளிலும் அழகிரிக்கு ஆதரவாளர்கள் உருவாக காரணமாக அமைந்தது. ஏன் சென்னையிலும், கடலூரிலும் கூட (ஸ்டாலின் ஆதரவாளர்கள் உள்ள பகுதிகள்) அழகிரியின் ஆதிக்கம் கட்சிக்குள் வந்தது. இதன் உச்சகட்டத்தில்தான் "முதலமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் பரவாயில்லை. ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்போம்" என்று நினைத்து அவருக்கு அந்தப் பதவியை வழங்கினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கட்சிக்குள் நிலவிய "அழகிரி - ஸ்டாலின்" யுத்தம், ஆங்காங்கே மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளின் குடும்பங்களுக்கும், மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் நடைபெற்ற பனிப்போர் எல்லாம் சேர்ந்து தி.மு.க.வின் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு வித்திட்டது.

தேர்தல் நடந்த போது தி.மு.க.வை தாக்கிய "2-ஜி அலைக்கற்றை ஊழல் புயல்", அந்த ஊழல் புகாரில் சிக்கிய கனிமொழி தமிழகம் முழுவதும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தது எல்லாம் கூட அக்கட்சியின் சட்டமன்ற தோல்விக்கு காரணமாக அமைந்தது. "தோல்வியில் எந்தக் கட்சியும் பாடம் கற்கும்" என்பதுதான் தமிழக அரசியல் நிலவரம். ஆனால் தி.மு.க.வைப் பொறுத்தவரை அந்த திசையை நோக்கி நகருவதாக தெரியவில்லை. அந்தக் கட்சி இன்னும் ஸ்டாலின்- அழகிரி பனிப்போரில் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது. பால்கட்டண உயர்வு, மின்வெட்டு, பஸ்கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று பல்வேறு பிரச்சினைகளால் அ.தி.மு.க. அரசின் மீது ஒரு விதமான அதிருப்தி பொதுமக்களிடையே மெல்ல உருவாகி வருகிறது. ஆனால் அந்த அதிருப்தி தி.மு.க.விற்கு சாதகமாக மாறவில்லை. அதைத்தான் சமீபத்தில் நடந்து முடிந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது எடுத்துக்காட்டியது. அதுவும் அ.தி.மு.க. 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும், பலமான தொகுதியில் தி.மு.க. டெபாஸிட் தொகையை பறி கொடுத்ததும் இதைத்தான் காட்டியது. "அ.தி.மு.க. நம்மை வாட்டி வதைக்கிறது. ஆனால் தி.மு.க. மட்டும் ஒழுங்கா" என்ற எண்ணமே பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுவரை பலமுறை தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. தோல்வியை சந்தித்துள்ளது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது படுதோல்வி அடைந்து 234 சட்டமன்ற தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதுவும் அக்கட்சியின் தலைவராக இருக்கும் கருணாநிதி சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மறைந்த க.சுப்புவை விட 890 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அப்போது கூட, அ.தி.மு.க.வின் மீது ஏற்படும் அதிருப்தியை தி.மு.க. உடனடியாக அறுவடை செய்தது. ஆனால் இந்த முறை 23 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள தி.மு.க.வால், மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் கட்சிக்குள் தி.மு.க. தலைவரின் மகன்களான ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையில் நடக்கும் "நீயா, நானா" போட்டியே.

இந்த போட்டி தி.மு.க.வின் பொதுக்குழுவிலேயே எதிரொலித்தது. தி.மு.க. தலைவராக கருணாநிதி பதவியேற்ற பிறகு பொதுக்குழுவிற்குள் மூத்த மாவட்டச் செயலாளர் (வீரபாண்டி ஆறுமுகம்) பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், சில பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று ரகளை செய்தது அப்போதுதான் முதல் முறையாக நடந்தது. "தலைவர் கலைஞர் இருக்கும் போது அடுத்த தலைவர் என்பதற்கே அவசியமில்லை" என்று தன் பேச்சை துவங்கிய வீரபாண்டி ஆறுமுகம் மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் பெயரைக்கூட சொல்லாமல் விட்டு விட்டார். இந்த கோபத்தில் "பேசியது போதும் நிறுத்து" என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு, வீரபாண்டி ஆறுமுகம் பாதியிலேயே தன் பேச்சை நிறுத்தி விட்டு அமர்ந்தார். பதினைந்து நிமிடம் பொதுக்குழுக்கூட்டமே ஸ்தம்பித்துப் போய் நின்றது. இதில் அப்செட் ஆன தி.மு.க. தலைவர் கருணாநிதி, "நான் அடுத்த பொதுக்குழுவில் பேசிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டார் என்று பொதுக்குழுவில் கலந்து கொண்ட தி.மு.க.வினரே கூறினார்கள். பிறகு மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து பொதுக்குழுவில் அவரை பேச வைத்தார்கள். இப்படியொரு நிலை தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னின்று வழிநடத்திய பொதுக்குழுவில் ஏற்பட்டது அதுவே முதல் முறை. பொதுக்குழுவில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியது சரி என்று அறிவிப்பது போல் "தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா" என்று பொதுக்குழுவில் பேசிவிட்டு வெளியே வந்த தி.மு.க. தலைவர், வீரபாண்டி ஆறுமுகத்தை தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். அப்போது எதிரில் வந்த ஸ்டாலினிடம், "பதவிதானே வேண்டும். எடுத்துக்க" என்று கோபமாக பேசி விட்டு கிளம்பினார் என்றும் தகவல் உண்டு. மு.க. அழகிரி சொல்லி பொதுக்குழுவில் ஸ்டாலினை விமர்சித்துப் பேசிய வீரபாண்டி ஆறுமுகத்தை அன்று தி.மு.க. தலைவரே ஆதரித்தது இன்று மதுரை ரகளைக்கு வித்திட்டு விட்டது என்றே தி.மு.க. மூத்த தலைவர்கள் மனதில் உள்ள எண்ணமாக இருக்கிறது.

பொதுக்குழு தகராறுக்குப் பிறகு வந்த சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்கள். ஸ்டாலின் எங்கு தங்கியிருக்கிறார், அவருக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்று தன் கட்சி நிர்வாகிகளிடம் கூட விசாரித்தார் அழகிரி. அந்த அளவிற்கு திடீரென்று இணக்கமாக வந்தவர்கள் இப்போது மதுரையில் மீண்டும் விலகி நிற்கிறார்களே என்று தி.மு.க.வினர் வருத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஸ்டாலின். இளைஞரணி பதவிகளுக்கு அதிகபட்ச வயது 30இற்கு மேல் இருக்கக்கூடாது என்று கறாராக உத்தரவிட்டு, அதனடிப்படையில் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் முதலில் நடத்தினார். பிறகு மதுரைக்கு வெளியே இருக்கும் மாவட்டங்களில் நிர்வாகிகள் தேர்வை நடத்தினார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடந்தபோதே அழகிரி ஆதரவாளர்கள் சிலர் ரகளை செய்து நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. அது முடிந்து சென்னை திரும்பிய ஸ்டாலின், அழகிரி வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் மதுரை மாநகர் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்கூட்டத்திற்காக சென்றார். அந்த நிகழ்ச்சிக்கு யாரும் போகக்கூடாது என்று வெளிநாட்டில் இருந்தவாறே தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார் அழகிரி. ஆனால் அதையும் மீறி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஆனால் அவைத் தலைவர் இசக்கி முத்து உள்ளிட்ட 17 பேர் ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். கோபமடைந்த ஸ்டாலின், "மதுரை தமிழகத்தில்தானே இருக்கிறது. நான் கட்சியின் பொருளாளர். மதுரைக்கு வேறு பொருளாளர் இருக்கிறார்களா" என்று ஆவேசப்பட்டார். ஒரு கட்டத்தில் தன் பொருளாளர் பதவியையே ராஜினாமா செய்ய முன் வந்தார். இதற்கு போட்டியாக அழகிரியோ வேறு விதமாக யுத்தம் செய்தார். ஸ்டாலின் நிகழ்ச்சிக்குப் போன மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை முன் வைத்து வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மோதினார். இந்நிலையில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அழகிரியை கேட்காமல் பதில் கொடுக்க மாட்டோம் என்றும், விளக்கம் கேட்டு பொதுச்செயலாளர் அன்பழகன்தான் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், அமைப்புச் செயலாளராக இருக்கும் டி.கே.எஸ். இளங்கோவன் எப்படி நோட்டீஸ் கொடுக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார்கள். தலைமை கொடுத்த நோட்டீஸையே எதிர்த்து பேசினார்கள் அழகிரி ஆதரவாளர்கள். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அழகிரியிடம், "பத்திரிக்கை பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மதுரை விமான நிலையத்தில் இறங்கியவுடன், "கட்சி அறிவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் நிர்வாகிகள் போக வேண்டும் என்பது கறாரான விதி இல்லை" என்று அறிவித்து, ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்காத தன் ஆதரவாளர்களை சப்போர்ட் பண்ணினார் மு.க. அழகிரி. அது தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபப்படுத்தியது. அது மட்டுமின்றி தி.மு.க.வின் தாய்க்கழகமான தி.க.விலிருந்து அதன் தலைவர் கி.வீரமணி "தி.மு.க.வை காப்பாற்றுங்கள்" என்று ஓர் அறிக்கை விட்டார். அதைத்தொடர்ந்தே மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கி முத்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தது மட்டுமின்றி, தலைமைக்கழகம் நோட்டீஸ் கொடுத்ததை எதிர்த்து கேள்வி கேட்டு பதில் கொடுத்தார் என்பதற்காக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. "மதுரை" தி.மு.க.விற்கு தொல்லை தரும் மாநகரமாக மாறிவிட்டது என்பதே தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் உள்ள பேச்சாக இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே வரும் மோதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பெரும்பாலும் ஸ்டாலின் பக்கமே நின்று இருக்கிறார். மு.க. அழகிரிக்கு சில பொறுப்புகளை கொடுத்தாலும், கட்சியில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்கிறார். ஆனாலும் கட்சி தலைவர் நான்தான் என்ற ஸ்தானத்தை அவர் எந்த மாதிரியான நேரத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர் விலக்கப்பட்ட போதும் சரி, வைகோ வெளியேற்றப்பட்ட போதும் சரி, மு.க. அழகிரி முன்பொரு முறை (2000 வருடம் வாக்கில்) நீக்கப்பட்ட போதும் சரி "தலைவர் நான்" என்ற அந்த உரிமையை அவர் விட்டுக் கொடுத்ததில்லை. அதே நிலைப்பாட்டை எடுத்தே பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் மோதல் ஏற்பட்ட போது கூட, "நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எதிர்த்துப் போட்டியிட்டத் தயாரா" என்று பொதுக்குழுவில் சவால் விட்டார் தி.மு.க. தலைவர். "தலைவர் நான்" என்ற உரிமையை அவர் விட்டுக் கொடுக்க முன்வராத நிலையில், மு.க. அழகிரியோ அவரது ஆதரவாளர்களோ தலைமைக்கு எதிராக போர் தொடுப்பது "அதிரடி நடவடிக்கைகளுக்கு" உள்ளாகும் என்றே தெரிகிறது. நம்மிடம் பேசிய தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர், "தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பது அனேகமாக தி.மு.க.வினர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஏனென்றால் தலைவர் பிரசாரத்திற்கு வராமலேயே 2009 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் "கலைஞரின் பிள்ளையாக உங்களிடம் வாக்கு கேட்கிறேன்" என்று கூறி தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்தவர். ஆனால் அழகிரியோ இருந்த சங்கரன்கோவில் இடைத் தேர்தலிலும் தி.மு.க.விற்கு டெபாஸிட்டை பறி போக வைத்தவர். இவர்கள் இருவர் சண்டையில் அ.தி.மு.க.விற்கு எதிராக உருவாகி வரும் இமேஜ் தி.மு.க.விற்கு பாஸிட்டிவாக வராமல் போய்விடக்கூடாது என்பதில் கலைஞர் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால் மாற்று அணிக்கு காங்கிரஸ், தே.மு.தி.க. போன்ற கட்சிகள் சிந்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அழகிரி- ஸ்டாலின் சண்டையால் தி.மு.க. இமேஜ் நொறுங்குவதை கலைஞர் பொறுத்துக் கொள்ளமாட்டார். தி.க. தலைவர் வீரமணி "ஆப்பரேஷன்" செய்து இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு முற்றி இந்த பிரச்சினையில் மு.க. அழகிரியை நீக்கினால்தான் கட்சிக்கு இமேஜ் வரும் என்று தலைவர் நினைத்தாரென்றால் அதற்கும் தயங்க மாட்டார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்களுக்கு எதிராக கலைஞர் எடுத்துள்ள நடவடிக்கைகள் இதையே உறுதி செய்கின்றன" என்றார் அர்த்தம் நிறைந்த வார்த்தைகளில்.

நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அரசியல் களத்தில் தி.மு.க.விற்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றால் அந்த கட்சி முதலில் தனது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இது மு.க. அழகிரிக்கு புரிகிறதோ இல்லையோ, தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினுக்கும், தலைவர் கலைஞருக்கும் புரியும் என்கிறார் மத்திய அமைச்சராக இருக்கும் தி.மு.க. தலைவர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X