2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு 'வழக்கு'

A.P.Mathan   / 2012 மே 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

•    தம்புள்ளயில் பௌத்த மதத்தவரின் 'புனித தலம்' என்று கூறப்படும் பகுதியில் உள்ள மசூதி குறித்து திடீரென வெடித்த சர்ச்சை அனைத்து தரப்பினராலும் கண்டிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 'கிரீஸ் மனிதன்' சர்ச்சைக்குப் பின்னர் (அரசில் அங்கம் வகிக்கும்) அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒருமித்த, 'ஒற்றுமையான' (?) நிலைப்பாடு எடுக்கின்றன.

•    முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் தனி தென்கிழக்கு மாகாணம் கேட்பதற்கு, சுதந்திர கட்சியின் மட்டகளப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தம்பிமுத்து எதிர்ப்பு.

•    திருகோணமலையில் ஈபிடிபி உறுப்பினர் கொலைக்குப் பின்னர், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் கோரிக்கை.

•    அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய கிழக்கு பிராந்திய தேர்தலை இந்த ஆண்டே நடத்த, ஜனாதிபதி ராஜபக்ஷ, முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) பேசவுள்ளார் (செய்தி).


இந்த நான்கு செய்திகளுக்கும் இடையில் அதிக தொடர்பு இல்லை என்றாலும் (அவ்வாறே நாம் நம்புவோமாக!), அவை அனைத்துமே கிழக்கு மாகாணத்தோடும் அங்கு வாழும் மக்களோடும், அங்கு நடைபெற்று வரும் ஆட்சியோடும், அரசு அமைப்போடும் தொடர்ப்பு உடையவை. இந்த வருடமோ, அடுத்த வருடமோ, மாகாண சபை தேர்தல் எப்போது நடைபெற்றாலும், இவை குறித்த பேச்சுகளும், அவற்றில் சில குறித்த சர்ச்சைகளும் எழும். இன்னும் சொல்லப் போனால், அந்த தேர்தல்களுக்கு கட்டியம் கூறுவது போல் இந்த பிரச்சினைகளும் செயல்படும்.

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னரே, கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றால், அதில் போட்டியிடுவது குறித்து கூட்டமைப்பு முடிவு எடுக்கும் கட்டாயம் ஏற்படும். இனப் போருக்கு பிந்திய காலகட்டத்தில், வடக்கு மாகாண சபை தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதில் பங்கேற்கப் போவதாக, கூட்டமைப்பு தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே, அதே நிலைப்பாடு கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கலாம். என்றாலும், கள நிலைகளும், கட்சியின் நிலைபாடும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிடையே வெகுவாக வேறுபடுகிறது. இதனால், கிழக்கு மாகாண தேர்தல் குறித்து, கூட்டமைப்பிற்குள்ளேயே குழப்பங்கங்கள் தோன்றலாம். அல்லது, அரசினாலோ உட்கட்சி குழப்பங்களினாலோ தோற்றுவிக்கப்படலாம்.

கடந்த 2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணப் பகுதியில் போர் முடிவடைந்த கையோடு, அடுத்த ஆண்டிலேயே அரசாங்கம் அங்கு மாகாணசபை தேர்தலை நடத்தி முடித்தது. விடுதலை புலிகள் இயக்கதின் பிடியில் சிக்கியிருந்த அந்த பகுதி மக்களுக்கு, நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ், பிரதிநிதித்துவ ஆட்சி மீண்டும் அமைய தேர்தல் வகை செய்தது. இப்போது வடக்கு மாகாணத்தில் இருப்பது போலில்லாமல், கிழக்கில் அரசு ஆதரவு கட்சிகளால் தேர்தலில் வென்று, ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம்.

கிழக்கு மாகாணத்தில் சகஜ நிலைமை திரும்பி விட்டதாகவும், அங்கு விடுதலை புலிகள் இயக்கத்திற்கு அதிக அளவில் ஆதரவு இருக்கவில்லை என்பதாகவும் தன்னையும் வெளி உலகையும் நம்ப வைக்கவும், அரசுக்கு அந்த தேர்தல் ஒரு கருவியாகவும் அமைந்தது. கூட்டமைப்பு அந்த தேர்தலை புறக்கணித்தது.
ஆனால், பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும், ஏன் பிரதேச சபை தேர்தல்களிலும் கூட கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதிகளில் கூட்டமைப்போ அல்லது அதன் ஆதரவு பெற்ற வேட்பாளரோ (சரத் பொன்சேகா போன்றோர்) வெற்றி பெற வேண்டிய இடத்தில் வெற்றியும், அதிக வாக்கு பெற வேண்டிய இடத்தில் வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் எப்போது மாகாண சபை தேர்தல் நடைபெற்றாலும், கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.

ஆனால். கட்சி கொள்கையும் சரி, களநிலையும் சரி, என்ன கூறுகின்றன? கடந்த ஆண்டு அரசுடனான பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின்னர், வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து கூட்டமைப்பு மீண்டும் தனது கோரிக்கையை தெளிவுபடுத்தியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவிலும், 'இணைப்பு' இடம் பெற்றிருந்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடந்து இருக்குமேயானால், 'இணைப்பு' குறித்த கருத்து பரிமாற்றத்தின் போது, பேச்சுவார்த்தைகள் முன்னேறுவதில் தடங்கல்கள் தோன்ற இருக்கும். இன்றைய நிலைபாடும் அதுவே.

இந்த பின்னணியில், கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டால், 'இணைப்பு' குறித்த தனது நிலைப்பாட்டை கட்சி மாற்றிக்கொண்டு விட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். அல்லது தோற்றுவிக்கப்படும். அதே சமயம், அந்த தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் அதனையே அரசு, சர்வதேச சமூகத்தில் தனது பிரசார உத்திக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஜெனிவா வாக்களிப்பிற்கு பிற்பட்ட காலகட்டத்தில் தமிழ் பகுதிகளில் அரசியல் சகஜநிலை திரும்புவதில் கூட்டமைப்பிற்கு விருப்பம் இல்லை என்று கூட பிரசாரம் செய்யப்படலாம்.

ஆனால், வடக்கு மாகாண சபை தேர்தலை போல் அல்லாமல், கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு, பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று விடுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. முன்பு நடந்த தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதிகளில் அதற்கு அதிகான வாக்குகளும் இடங்களும் கிடைத்தது என்னவோ உண்மை. ஆனால், தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்கள-பௌத்தர்கள் மற்றும் மலையக தமிழர்களும் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில், அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே அணியாக செயல்பட்டாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த நிதர்சனமான உண்மையும், கடந்த 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலை கூட்டமைப்பு புறக்கணிப்பதற்கு ஒரு காரணம்.

இதற்கு மாற்று வழி என்ன? கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஒன்று அல்லது பல கட்சிகளும் சிங்கள - பௌத்த கட்சிகளின் துணை இல்லாமல் ஓர் அணியாக தேர்தலை சந்திக்கலாம். அல்லது கூட்டமைப்பு, தேசிய அளவில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படலாம். தற்போது யாழ்பாணத்தில் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்திய 'மே தின' பேரணி அத்தகைய கூட்டணி அமைவதற்கு முதல் முயற்சியாக கூட அமையலாம்.

ஆனால். அத்தகைய கூட்டணி அமைவதிலும் இரு கட்சிகளுமே உள்கட்சி பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. கூட்டமைப்பு உறுப்பு கட்சிகள் என்று கருதப்படும் ஆனந்த சங்கரியின் தமிழ் தேசிய விடுதலை கூட்டணி, 'புளொட்' மற்றும் 'டெலோ' ஆகிய அமைப்புகள், ஐக்கிய தேசிய கட்சியுடனான 'மே தின' பேரணியை புறக்கணித்திருக்கிறது. அந்த கட்சியிலும் சஜீத் பிரேமதாச தலைமையிலான அணி, 'மே தின' அணிவகுப்பு என்ற பெயரில் கொழும்பில் தனியாவர்த்தனம் வாசிக்கிறது.

கூட்டமைப்பின் பிரச்சினைகள் இவ்வாறு என்றால் அரசு கூட்டணியின் பிரச்சினைகளும் பலவாறாகவே உள்ளன. ஒன்று முதலமைச்சரான பிறகு சந்திரகாந்தன் தலைமை ஏற்றுள்ள 'தமிழ் தேசிய விடுதலை புலிகள் கட்சி' என்ற ஒரு தேர்தலிலும் சொல்லிக் கொள்ளும் படியான வாக்குகளையோ இடங்களையோ பெறவில்லை. அதே சமயம், 'அதிகார பரவல்' குறித்த பிரச்சினைகளிலும் சரி, மற்றபடி தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் சரி, கூட்டமைப்பின் பக்கமே பிள்ளையான் சாய்ந்து இருந்தார் என்ற ஒரு எண்ணம் தோன்றியது. அடுத்த தேர்தல் எப்போது நடைபெற்றாலும் பிள்ளையான் தனது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்வார் என்ற கருத்தும் நிலவுகிறது.

அது மட்டுமல்ல. கடந்த தேர்தலுக்கு பின்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ - தமிழ் சமூகத்திற்கும் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகத்திற்கும் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதாக கொடுத்த வாக்குறுதி காரணமாகவே, பிள்ளையான் முதல்வராக முடிந்தது என்ற கருத்து தோன்றியது. மொத்தமுள்ள இடங்களிலும் சரி, ஆளும் கூட்டணியின் அறுதிப் பெரும்பான்மையான எண்ணிக்கையிலும் சரி, முஸ்லிம் உறுப்பினர்களே அதிகமாக வெற்றி பெற்றிருந்தனர். அதனால், முஸ்லிம் ஒருவரே மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அந்த பிரச்சினையை, ஜனாதிபதி ராஜபக்ஷ அப்போது கையாண்டது போல் மீண்டும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ், தற்போது ராஜபக்ஷ அரசில் அங்கம் வகிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் மலையக தமிழ் மக்களின் பெரும்பாலான கட்சிகளும் அரசு சார்ந்தே செயல்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் தனியான தேர்தல் களம் இறங்கிய முஸ்லிம் காங்கிரஸும் அரசு சார்பில் போட்டியிட்ட பிற முஸ்லிம் கட்சிகளும் தங்களது வழமையான வாக்கு வங்கிகள் சேதாரம் அடைந்துள்ளதை உணர்ந்தே உள்ளன.

தற்போது, அவர்கள் முன்னால் உள்ள வழிமுறைகள் மூன்று. ஒன்று, வழக்கம் போலவே தாங்கள் சார்ந்திருக்கும் அரசுடன் சேர்ந்தோ தனித்தோ தேர்தலை சந்திக்கலாம். அவர்களில் ஒருவரோ, பலரோ தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது ஐக்கிய தேசிய கட்சி, அல்லது அந்த இரு கட்சிகளுடனும் சேர்ந்தே தேர்தலை சந்திக்கலாம். இதிலும், எந்தவித அரசியல் புதுமையும் இல்லை. மாறாக, முன் எப்போதும் இல்லாத விதத்தில் பிற கட்சிகள் மற்றும் அவை சார்ந்திருக்கும் சமுதாயங்கள் ஆகியவற்றிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல், அனைத்து முஸ்லிம் கட்சிகளுமே இணைந்து எதிர்வரும் தேர்தலை அல்லது தேர்தல்களை சந்திக்கலாம்.

இனப் பிரச்சினை குறித்து முஸ்லிம் கட்சிகளின் முன்னர் இருக்கும் கேள்வி இது தான். அல்லது, அவர்கள் முன்னால் இருக்கும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்த கேள்விகள் இவை தான்:
•    இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கான 'அலகு' எதுவாக இருக்கும் - இருக்க வேண்டும்?
•    வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற தீர்வு எட்டப்படவில்லை என்றால், அல்லது முஸ்லிம் இனத்திற்கு என்று தனி அலகு கேட்க வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் ஏற்படவில்லை என்றால், தற்போதைய கிழக்கு மாகாண முதல்வர் பதவி, கட்சி பாகுபாடு இன்றி, இன்று தொடங்கி, தங்கள் சமூதத்தை சேர்ந்த ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்ற கருத்து சரியானதா? அப்படி என்றால், அதனை செயல்படுத்துவதற்கு, முஸ்லிம் சமுகத்தவரும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளும் என்ன செய்ய வேண்டும்?

இந்த கேள்விகளுக்கிடையே தான், அருண் தம்பிமுத்து எதிர்ப்பு தெரிவித்த 'தென் கிழக்கு மாகாண சபை' குறித்த எண்ணம் இடம் பெறுகிறது. அவர் கூறியுள்ளது போல் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து கருதுமேயானால், இனப் பிரச்சினை குறித்த தீர்வு நோக்கி அந்த கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்தே பயணிக்கும் என்ற எண்ணம் உருவாகிறது. அதாவது, கடந்த தசாம்சங்களில் 'சந்திரிகா தீர்வு' அடிப்படையில், கிழக்கு மாகாணம் மூன்றாக பிரிக்கப்பட்டு, இணைந்த வட - கிழக்கு, முஸ்லிம் இனத்தவர்களுக்காக 'தென் - கிழக்கு மாகாணம்' ஆகிய இரண்டோடும், மீதமுள்ள சிங்கள பகுதிகள் அடுத்துள்ள பிற மாகாணங்களோடு இணைக்கப்பட வேண்டும்.

ஆனால், இது குறித்த தங்களது நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸும் பிற முஸ்லிம் கட்சிகளுமே முடிவு செய்ய வேண்டும். அதே சமயம், இது குறித்த இறுதி முடிவு நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள சிங்கள கட்சிகளின் கையில் இருப்பது என்பதே உண்மை. காரணம் எதுவாக இருந்தாலும், 30 ஆண்டுகளாக நடந்த இனப் போருக்கு பிந்திய கால கட்டத்தில் புதிதாக, இன அடிப்படையில் புதிய மாகாணங்கள், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்று உருவாவதை அவர்களால் ஜீரணிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. அதோடு, அத்தகைய முடிவை சிங்கள அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இலங்கை அரசு இயந்திரம் என்ற கேள்வியும் எழுகிறது.

அவ்வாறில்லை என்றால், இனப் போர் முடிந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், அரசியல் தீர்வு என்று தமிழ் மக்களுக்கு அரசும், சிங்கள அரசியல் தலைமைகளும் என்ன வழங்கப் போகிறது? அதை ஒட்டி எழும்பும். எழுப்பப்படும் முஸ்லிம் இன மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு, அரசு வைத்திருக்கும் மாற்று தீர்வு தான் என்ன?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X