2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மயிலிறகுகளை ரசிக்க முடியவில்லை!

A.P.Mathan   / 2012 மே 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(காயப்பட்ட இரண்டு கிராமங்களின் கதை)


அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள தாண்டியடிப் பிரதேசத்திலிருந்து மேற்குப் புறமாக நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். மனதுக்குள் ஓர் இனம் புரியாத உணர்வு. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும், புலிகளின் மிகப் பெரும் முகாம் அமைந்திருந்ததாகவும் பேசப்பட்ட கஞ்சிகுடியாறு பிரதேசம் நோக்கிய பயணமாக அது இருந்தது!

தாண்டியடி பிரதான வீதியிலிருந்து கஞ்சிகுடியாறுக்கு சுமார் 11 கிலோமீற்றர் செல்ல வேண்டியிருந்தது. மோட்டார் சைக்கிளில்தான் சென்றோம். நாங்கள் பயணித்த பாதை புதிதாக இருந்தது. அது யுத்தத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வீதி என்றும், அதற்கு முன்னர் இந்தப் பகுதி எப்படியிருந்தது எனவும், எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்த தாண்டியடியைச் சேர்ந்த நண்பர்கள் தர்மராஜா மற்றும் குணம் ஆகியோர் விபரித்தனர்.

யுத்தத்தின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் அதன் அயலிலுள்ள தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களின் நிலைவரம் மற்றும் அங்குள்ள மக்களின் தற்போதைய வாழ்நிலை குறித்து ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதே எங்கள் பயணத்தின் நோக்கமாக இருந்தது.

சுமார் 08 கிலோமீற்றர் பயணித்தபோது - தங்கவேலாயுதபுரம் வந்தது. யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில் காணப்பட்டது அந்தக் கிராமம்! திரும்பி வரும் போது அந்தக் கிராமத்துக்குள் நுழைவது என்கிற முடிவோடு – எங்கள் பயணம் கஞ்சிகுடியாறை நோக்கி நகர்ந்து!

தங்கவேலாயுதபுரத்திலிருந்து கிட்டத்தட்ட மேலும் 03 கிலோமீற்றர் பயணித்த பிறகுதான் கஞ்சிகுடியாறினை அடைந்தோம். அந்த கிராமம் ஒரு பிரமிப்பைத் தந்தது. காடு, குளம், விவசாயத்தைக் கண்டு கனநாட்களான நெற்காணிகள் என - இயற்கையின் எல்லா வளங்களும் அந்தப் பிரதேசத்தில் இருந்தன. ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்க்கையோ வரண்டு போய்க் கிடந்தன.

அந்தக் கிராமம் முழுக்க - ஏராளமான மயில்கள் உலாவித் திரிந்தன. அவற்றில் சில தோகை விரித்து ஆடின. அதன்போது உதிர்ந்து கிடந்த இறகுகளை – பயணம் முழுவதும் காணக்கிடைத்தது. ஆனால், அங்குள்ள மக்களின் வலி நிறைந்த வாழ்க்கைக்கிடையில் - இவற்றையெல்லாம் அவர்களால் திரும்பிப் பார்க்க முடியாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது. 

கஞ்சிகுடியாறில் 406 குடும்பங்கள் வாழ்ததாகக் கூறுகிறார் அந்தக் கிராமத்தின் அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.கமலேஸ்வரன். முதன் முதலாக 1990ஆம் ஆண்டு இங்கிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனர். நீண்ட அலைச்சலான வாழ்க்கையின் பிறகு - இடம்பெயர்ந்த மக்கள் 2003ஆம் ஆண்டு மீளவும் தங்கள் இருப்பிடங்களுக்கு வந்தனர். பின்னர் 2006ஆம் ஆண்டு இன்னுமொரு யுத்தம், இன்னுமொரு இடப்பெயர்வு!

2006ஆம் ஆண்டு கஞ்சிடியாறிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் திருக்கோவில், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிமாக வசித்து வருகின்றார்கள். இவர்கள் இன்னும் அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்களுக்கு இன்று செல்லலாம், நாளை செல்லலாம் என்று காத்திருந்த இப்பிரதேச மக்கள் - கடைசியில் 2010ஆம் ஆண்டு தங்கள் இருப்பிடங்களுக்கு சுயவிருப்பின் பேரில் திரும்பத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில், தமது தற்போதைய வாழ்நிலையை கஞ்சிகுடியாறு வாசியான பெண்ணொருவர் இவ்வாறு விபரித்தார். 'சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்த - அகதி வாழ்க்கை அலுத்துப் போய் விட்டது. எங்கள் நிலம், விவசாயம் எல்லாமே இங்குதான் இருக்கின்றன. எங்களுடைய நிலத்தில் கச்சான் பயிரிட்டால் கூட ஓரளவு வருமானத்தினைப் பெறமுடியும். எங்களை மீற்குடியேற்றுமாறு பலமுறை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், கடைசிவரை அரசாங்கம் அதைச் செய்யவேயில்லை. அதனால், நாங்களே சுயமாக எங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி வந்துள்ளோம்' என்றார்.

இந்த மக்களின் வாழ்விடங்கள் மிகச் சிறிய குடிசைகளாகும். நமது பாசையில் சொன்னால் 'கோழிக்கூடு'கள் போல காணப்படுகின்றன. இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த நிலை குறித்து இன்னொரு பெண் இப்படிக் கூறினார்ளூ 'குடிநீரைப் பெறுவதே எமக்குக் கஷ்டமானதொரு காரியமாகப் போய்விட்டது. நீண்ட தூரம் பயணித்து இங்குள்ள பாடசாலைக் கிணற்றிலிருந்தே நாங்கள் நீரைப் பெறுகிறோம். இந்த நீரும் சுத்தமானதாக இல்லை. கிணற்றினைச் சுத்தம் செய்து தருவதற்கும் யாருமில்லை'!

இங்கு அதிக இடங்களில் புதிய மலசல கூடங்களைக் காணக் கூடியதாக இருந்தது. அவற்றினை தொண்டு நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்ததாக பிரதேச வாசிகள் கூறினார்கள். இந்த மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் இல்லை, மின்சாரமில்லை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் இல்லை, போதிய வருமானமில்லை, மலசல கூடங்களில் பாவிப்பதற்குக் கூட நீர் இல்லை எனும் நிலையில் - இந்த மக்களுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட 'கக்கூஸ்'களில் அதிகமானவை பாவிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன.

ஒரு விடயத்தைச் சொல்கிறேன். நீங்கள் நம்பியே ஆகவேண்டும்! கஞ்சிகுடியாறில் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய மலசல கூடங்களை இங்குள்ள மக்கள் - தமது வீட்டுப் பொருட்களை வைப்பதற்குரிய 'பாதுகாப்பான அறை'களாகவே பயன்படுத்துகின்றார்கள்.

ஏன் இப்படி என்று ஒரு பெண்ணிடம் கேட்டோம். 'இங்குள்ள மிகப்பெரும் பிரச்சினை யானைகளின் அச்சுறுத்தலாகும். இரவானால், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வாழ்கின்றோம். சிலவேளை, யானை வந்தால் எங்கள் குடிசைகளை விட்டும் நாங்கள் ஓடிவிடுவோம். ஆனால், வரும் யானை குடிசைகளையும், அதற்குள் இருக்கும் வீட்டுப் பொருட்களையும் பல தடவை நாசமாக்கியிருக்கின்றன. அதனால்தான், பொருட்களை பாதுகாப்புக்காக மலசல கூடங்களில் வைத்துள்ளோம்' என்று பதிலளித்தார். 

கஞ்சிகுடியாறில் தற்போது 150 குடும்பங்களே உள்ளன. இந்த மக்கள் சொந்த விருப்பத்தின் பேரில் குடியேறியவர்கள். இவர்கள் தற்போது சிறிய குடிசைகளை அமைத்துக் கொண்டு, அருகிலுள்ள தமது காணிகளில் உப உணவுப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமானோர் கச்சானையே பயிரிட்டுள்ளனர்.

'இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிப்போரில் அதிகமானோர் - மாரி காலம் வரும்போது இங்குள்ள தமது இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்குவார்கள். தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபடுவதற்காவே அவர்கள் அவ்வாறு வருகின்றனர். அறுவடை முடிந்த பிறகு - மீளவும் தமது தற்காலிக இடங்களுக்கு அவர்கள் சென்று விடுவார்கள்' என்கிறார் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலேஸ்வரன்.

கிட்டத்தட்ட, யுத்தம் - இந்த மக்களை நாடோடிகளாக ஆக்கிவிட்டது!!

'கஞ்சிகுடியாறிலிருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 2003ஆம் ஆண்டு மீள்குடியேறிய போது அரசாங்கத்தினால் 375 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 34 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன. இதுவரையில் இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசிடமிருந்து கிடைத்த உதவிகள் இவை மட்டும்தான்' என்று கூறுகின்றார் கமலேஸ்வரன். 

கஞ்சிகுடியாறு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பல அரசியல்வாதிகள் பல்வேறான வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றுள்ள போதிலும் - எதுவும் இதுவரை உருப்படியாக நடந்தபாடில்லை என்று அங்குள்ள மக்கள் ஆதங்கத்தோடு குறைபட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), கிழக்கு மகாண அமைச்சர் நவரட்ணராஜா மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன என்று நிறைய அரசியல்வாதிகள் இங்கு வந்து மீள்குடியேற்றம் தொடர்பான பல வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றுள்ள போதிலும் - அவர்கள் சொன்னவை எவையும் இதுவரை நிறைவேறவில்லை என்பதை - அந்த அரசியல்வாதிகளுக்கு இந்த மக்கள் ஞாபகமூட்ட விரும்புகின்றார்கள்!

மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான விடயம் ஒருபுறமிருக்க, சுய விருப்பத்தின் பேரில் மீளக்குடியேறியுள்ள மக்களின் தேவைகளையாவது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக, கஞ்சிகுடியாறிலிருந்து அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதிக்குச் செல்வதாயின் இங்குள்ள மக்கள் 11 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டும். இதற்கான போக்குவரத்து வசதிகள் இன்னுமில்லை. அதோபோன்று தமது வாழ்வாதரத்தினை உயர்த்துவதற்கான உதவிகளையும் இங்குள்ள மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பாக்கின்றார்கள்.

இதேவேளை, இங்குள்ள மக்கள் குறிப்பிட்டுக் கூறிய இன்னுமொரு விடயம் அவர்களுக்கான நீர்ப்பாசன வசதி பற்றியதாகும். கஞ்சிகுடியாறு பகுதியில் பெரியதொரு குளமிருக்கிறது. அந்தக் குளத்திலிருந்து இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வலதுகரை வாய்க்காலினூடாக நீரினைக் கொண்டு வரும்போது, இங்குள்ள மக்களின் விவசாயத்துக்குத் தேவையான நீரினை மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதை யாரும் செய்து தருவதாக இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றனர் பிரதேசவாசிகள். குறித்த குளத்திலிருந்து வலதுகரை வாய்க்காலினூடாக நீர்ப்பாசனம் இடம்பெற்றால், இங்குள்ள விவசாய பூமிகள் செழிக்கும் என்கிறார்கள்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் மிகப் பெரிய அபிவிருத்திகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், கஞ்சிகுடியாறு பகுதியில் - அபிவிருத்தியின் காற்றுக் கூடப் பட்டதாகத் தெரியவில்லை!

கஞ்சிகுடியாறிலிருந்து திரும்புகின்ற வழியில், தங்கவேலாயுதபுரம் கிராமத்துக்குள் நுழைந்தோம். அங்கும் இதே வகையான பிரச்சினைகளே உள்ளதாக அங்குள்ள மக்கள் கூறினார்கள்.

தங்கவேலாயுதபுரத்தில் - இறுதி இடம்பெயர்வுக்கு முன்னர் 427 குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. அவர்களில் தற்போது சுமார் 150 குடும்பத்தவர்கள் மாத்திரம் தமது சுயவிருப்பின் பேரில் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளார்கள். கஞ்சிகுடியாறில் கண்ட அத்தனை அடிப்படைப் பிரச்சினைகளும் இங்கும் உள்ளன.

குறிப்பாக, தங்கவேலாயுதபுரத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அருளானந்தம் நம்மிடம் தெரிவித்த விடயமொன்றினை இங்கு அடிக்கோடிட்டுக் கூறவேண்டியுள்ளது.

அதாவது, 'இந்தப் பிரதேங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக மீள்குடியமர்த்தவில்லை. இங்குள்ளவர்கள் தமது சுயவிருப்பின் பேரில் சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்கள். இதனால், இந்த மக்களுக்கு அரசாங்கம் இதுவரை எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை. இந்த நிலையில், சில தொண்டு நிறுவனங்கள் எமக்கு உதவிகளைச் செய்வதற்கு விரும்புகின்றன. அவ்வாறான உதவிகளைச் செய்வதாயின் அரசாங்கத்தின் அனுமதியினை குறித்த தொண்டு நிறுவனங்கள் பெறவேண்டும். ஆனால், நாங்கள் உத்தியோகபூர்வமாகக் குடியமர்த்தப்படாதவர்கள் என்பதைக் காரணமாகக் கூறி, எமக்கு உதவி செய்வதற்கு முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என்கிறார் அருளானந்தம்!

சொந்த மண்ணை இழத்தல் என்பது மிகப் பெரும் வலியாகும். அந்த வலியினை இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் - மிக நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றார்கள்.

கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களிலிருந்து நாம் விடைபெறும் போது, அங்கு சந்தித்தவர்களில் சிலர் - மயில் இறகுகளை எமக்கு புன்னகையோடு அன்பளித்தார்கள்!

அவர்களின் வாழ்க்கையை அருகில் நின்று பார்த்த பிறகு – அந்த மயிலிறகுகளை ரசிக்க முடியவில்லை!!!

குறிப்பு: இந்த பயணத்தின் போது என்னுடன் இணைந்திருந்த தாண்டியடியைச் சேர்ந்த நண்பர்கள் தர்மராஜ் மற்றும் குணம் ஆகியோருக்கு அன்புகலந்த நன்றிகள்! 















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X