2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொடி சொல்லும் கதை

A.P.Mathan   / 2012 மே 07 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலியோடு சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட மனிதன், அதுகுத்துகிறது, குடைகிறது என்று புலம்பினானாம். அதுபோலவே, தங்களுக்கு என்று தற்போது உள்ள பிரச்சினைகள் போதாது என்பதுபோல், இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடம் இல்லாத ஒரு 'கொடிப் பிரச்சினையை' கொடுத்து, அதன் மூலம் அரசியல் செய்ய சில கூட்டமைப்பு தலைவர்களும் சில பல புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் முயல்வது அவர்களுக்கு தங்களது மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது அக்கறை இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அனைத்து தரப்பினராலும் விலைவாசி உயர்வு ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து பல ஆண்டுகள் ஆகிட்டன. ஆதியில் இனப் போரைக் காரணம் காட்டி அரசாங்கமும், அடுத்தடுத்த இராணுவ வெற்றிகளால் மக்களில் பெரும்பான்மையினரும் தங்களது கவனத்தை சிதறடித்துவிட்டு, அதற்கு தங்களுக்குதானே நியாயமும் கற்பித்துக் கொண்டார்கள். ஆனால், இனப் போர்முடிந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும், விலைவாசி பிரச்சினையோ, அதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்கைப் பிரச்சினைகளோ குறைந்தபாடில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, வாழ்க்கையே தொடர்ந்து பிரச்சினையாகதான் இருந்துவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து 'மேதினம்' அனுஷ்டிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவுசெய்ததில் இருந்தே அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில், கூட்டமைப்பு தனியாக விழா எடுத்து இருக்கலாம். ஆனால், அது கூட்டமைப்பு தனிமையையே விரும்புகிறது, அல்லது தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு வருகிறது என்ற கருத்தையே வெளிப்படுத்தும். அது சரியான உத்திதானா என்று கூட்டமைப்பு தலைமையும் தமிழ் சமூகமும் தங்களை தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.

இனப் போர் முடிந்த பின்னர் 'ஒன்றுபட்ட இலங்கை' என்ற நாட்டினுள் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே கூட்டமைப்பின் குறிக்கோளாக அமைந்தது. அதனை வடிவமைத்துக் கொடுத்ததும் இலங்கையில் வாழும் தமிழ் இனமே. அதற்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல்களில் கூட்டமைப்பிற்கு அடுத்தடுத்த வெற்றிகளை வழங்கிவந்துள்ளது. கூட்டமைப்பை எதிர்த்து தேர்தல்களில் போட்டியிட்ட அரசு ஆதரவுகட்சிகள் தொலைவான இரண்டாவது இடத்திற்கே வரமுடிந்தது. ஆனால், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போர்க்கால அரசியல் நோக்குடன் தேர்தல்களை சந்தித்த 'பிரிவினைவாதி'களுக்கு படுதோல்வியையே தமிழ் மக்கள் பரிசாக கொடுத்தனர்.

இதன் சாராம்சத்தை புரிந்துகொண்டு செயல்பட்டால், தற்போதைய 'கொடிப் பிரச்சினை' தோன்றியே இருக்காது. மாறாக, கடந்த காலத்தில் இருந்துகொண்டு நிகழ்காலத்தை வழி நடத்தினால், தமிழ் சமுதாயத்திற்கு எதிர்காலமே இல்லாமல் போய் விடும். இதுதான் கடந்தகாலம் கூறும் உண்மை. மற்றபடி, தனிப்பட்ட பிரச்சினையாக இதனை பார்க்காமல், இலங்கையில் தொடர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் அடிப்படை கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் மட்டுமே இனப் பிரச்சினையின் எந்தவொரு அலகையும் அணுக பழகிக் கொள்ளவேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தநாள் தொட்டும், அதற்கு முன்னரும் கூட, இனப் பிரச்சினை பல்வேறு வகைகளில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. அதில் ஒருபகுதியாகவே 'தேசியக் கொடி' பிரச்சினையும் எழுந்தது. சுதந்திர இலங்கையின் தேசியக் கொடியில் தமிழ் இனம் சரியானவகையில் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை என்ற குறைபாடு என்றைக்குமே இருந்து வந்துள்ளது. இதுவும் இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். எப்போது இனப் பிரச்சினைக்கு இலங்கையின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறதோ, அப்போதே இத்தகைய பிரச்சினைகளை ஊதிப் பெரியதாக ஆக்கிவிடாமல் இருக்கவேண்டும்.

இனப் பிரச்சினையில் சிங்கள பேரினவாதிகளின் பங்களிப்பை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தற்போதைய 'கொடிப் பிரச்சினை' அவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமையும். இனப் போருக்கு பின்னரும் தமிழ் மக்கள் மனம் மாறி ஒன்றுபட்ட இலங்கையில் கூடி வாழ அவர்கள் விரும்பவில்லை என்ற அவர்களின் பிரசாரத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே இந்த நிகழ்வு அமையும். இது, சிங்கள பேரினவாதிகளின் திட்டப்படியே தமிழ் சமூகம் வாழவேண்டும் என்பதற்கான வாதம் அல்ல. மாறாக, எப்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் இனத்திற்கு அரசியல் தீர்வு தேவை என்று முடிவுசெய்யப்பட்டுவிட்டதோ, அப்போது இருந்தே தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ள முடிவு.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இனப் பிரச்சினையின் அடிப்படையில் போராடிவரும் தமிழ் அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல்களை புறக்கணித்ததில்லை. தாங்கள் உறுப்பினர்களாக பதவி ஏற்கும் போது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக மட்டுமே உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார்கள். இலங்கையின் தேசியக் கொடியை அந்த அரசியல் சட்டம் இனம் காட்டியுள்ளது. எனவே, தற்போது அதுகுறித்து சர்ச்சையை கிளப்புவது, தன்னைத்தானே மீண்டும் மீண்டும் ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.

யாழ்பாணத்தில் 'மேதின' விழாவில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் நாட்டின் தேசியக் கொடியை கையில் ஏந்தியது அல்ல இங்கு பிரச்சினை. இதுபோன்ற நிகழ்வுகளை பிரச்சினையாக்கி, அதன் மூலம் கூட்டமைப்பிற்குள்ளேயே குழப்பங்களை ஏற்படுத்த முயல்வதுதான் இங்கு முக்கிய பிரச்சினை. இதற்கும் வழக்கம்போல இலங்கை அரசையோ, சிங்கள அரசியல் கட்சிகளையோ, பேரினவாதிகளையோ குறை கூறிவிடமுடியாது. இந்த ஒரு பிரச்சினை, 'மேதின' ஊர்வலத்தில் 'விடுதலைப் புலிகள்' இயக்கத்தின் கொடியை ஒருசிலர், ஒருசில வினாடிகளுக்கு உயர்த்திப் பிடித்தார்கள் என்பனபோன்ற செய்திகளில் இருந்து மாறுபட்டது. இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது.

எப்போது, தமிழ் மக்களிடையே, உரிமைகோரும் பெரும்பான்மையினரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக கூட்டமைப்பு அடையாளம் காணப்பட்டுவிட்டதோ, அப்போதே அதன் வழிமுறைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றே கருத இடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆட்சியில் பங்கு என்பன போன்ற கேள்விகள் எழாத சூழ்நிலையில், கூட்டமைப்பின் ஏக குறிக்கோளே தங்களது மக்களின் விருப்பத்தின்படி அரசியல் ரீதியாக இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வை பெற்றுத்தருவதுதான்.

இந்தப் பின்னணியில், தமிழ் சமூகம் என்ற பெயரிலோ அல்லது புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற நிலையிலோ கொடிப் பிரச்சினையிலோ அல்லது அரசுடனான பேச்சுவார்த்தையிலோ அவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதும் அல்லது அவர்கள் தங்களிடையே வந்து நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதோ அமைதித் தீர்விற்கு குந்தகம் விளைவிக்கும். இதுவே கூட்டமைப்பின் மீது நம்பிக்கையின்மை என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கும். அவ்வாறானால், கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் எந்த ஒரு முடிவும் தமிழ் மக்களை கட்டுப்படுத்தும் என்று எவ்வாறு அரசு தரப்பு ஏற்றுக்கொள்ளும்? அதற்குமாறாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகச்சொல்லிவிடலாம். ஆனால். இனப் பிரச்சினைக்கு அதுதான் தீர்வா? என்பதைமட்டும் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்!

You May Also Like

  Comments - 0

  • Guest Monday, 07 May 2012 04:47 PM

    I HOPE ALL OTHER MEMBERS FROM MAJORITY PARTIES AT NOW OPEN THEIR EYES AND FIND JUST SOLUTION ONCE AND FOR ALL AT THIS TIME.NATIONAL FLAG OF LANKA ONLY HAVE COMMERCIAL VALVE AS EVEN SINGALESE USE IT AS A SHOW PIECE AND NOTHING ELSE.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X